ஞாயிறு, 4 ஜூலை, 2010

சன்மார்க்க சபை- கணேசர் செந்தமிழ் கல்லூரி

சன்மார்க்க சபையின் வரலாறு


உலகில் மானிடராய்ப் பிறந்தோர் பண்புடையோராய் இருத்தல் வேண்டும். பண்பில்லாதவர் அறிவுடையோரால் மதிக்கப் பெறார். பண்புடையோராய்த் திகழ்தற்குக் கல்வியறிவும், நல்லொழுக்கமும், இறைப்பற்றும் இன்றியமையாதன. இவையில்லையேல் இவ்வுலக வாழ்வில் செய்ய வேண்டுவன எவை? தவிர்க்க வேண்டுவன எவை? என்பனவற்றை அறியாது மயங்கி, இடர்ப்பட நேரிடும் இவ்விடர்பாடு நேராது, உயர்ந்த வாழ்வினை வாழ கல்வி மிக இன்றியமையாததாகின்றது. வாழ்வினை வாழ்வதற்குரிய கல்வியை முறையாகக் கற்றல் வேண்டும்.

இம்முறையான கல்வியைக் கற்பிக்க ஏராளமான நிறுவனங்கள் தற்காலத்தில் உள்ளன. ஆனால் ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய காலத்தில் இக்கல்வியைக் கற்க ஒரு சில நிறுவனங்களே இருந்தன. அவற்றிலும் செம்மையான நிறுவனங்கள் மிகக் குறைவே. சன்மார்க்க சபை என்ற நிறுவனம் நூறாண்டுகளுக்கு முந்தைய நாளில் மக்கள் வாழ்க்கைக்கான கல்வியைத் தரத் தொடங்கப் பெற்றுள்ளது. இன்னமும் இந்நிலையில் இருந்து தாழாது இந்நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இச்சபையின் வரலாற்றை எடுத்துரைப்பதாக இவ்வியல் விளங்குகிறது.
சபை தோன்றிய காலச்சூழல்
பண்டை நாளில் முடியுடை வேந்தர்கள் முவராலும், பின்னர் சமயத் தலைவர்களாலும் தமிழர் பண்பாடு போற்றப்பெற்றது. காலப்போக்கில் இன்னிலை மாறி மக்கள் பெரிதும் அல்லலுற்றனர். வேற்று மதங்களின் வரவினாலும், வேற்று மன்னர்களின் ஆட்சியாலும் தமிழர் பண்பாடு புறக்கணிக்கப்பெற்று, கலப்புப் பண்பாடு உருவாகியது. வழிபாட்டு இடங்களிலும், படிப்பிடங்களிலும் பொருந்தா ஒழுக்கங்கள் புகுந்தன. தாய்மொழிப்பற்றும், நாட்டுப்பற்றும் குறைந்தன. பிழைமலிந்த கொள்கைகளாலும், பிற நாட்டார் தலையீட்டாலும் தீமைகள் பல விளைந்தன.

இத்தீய விளைவுகளை நீக்கி, நல்லொழுக்கமும், பண்பாடும் வளர்வதற்குரிய வழிமுறைகள் ஆராயப்பெற்றன. மேலை நாட்டார் சமயத்தையும் கல்வியையும் பரப்புவதற்குரிய நிறுவனங்களை உருவாக்கியது போல தமிழர் சமயத்தையும் கல்வியையும் வளர்ப்பதற்கு நிறுவனங்களைத் தோற்றுவித்தால் இத்தீமைகள் விலக வாய்ப்புண்டு எனச் சான்றோர்கள் கருதினர்.

அவ்வகையில் சான்றோர் சிலர் கூடி அக்கால புதுக்கோட்டைத் தனியரசின் கீழ் இருந்த மேலைச்சிவபுரியில் சன்மார்க்க சபை ஒன்றினைத் தோற்றுவித்தனர்.

மேலைச்சிவபுரி ஊர் அறிமுகம்
கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரி ஆண்ட பறம்பு மலைச் சாரலில் அமைந்துள்ள ஊர் மேலைச்சிவபுரி ஆகும். புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய இரு மாவட்டங்களிலும் பரவியுள்ள செட்டிநாட்டுப் பகுதியில் இவ்வூர் உள்ளது. இவ்வூரில் நகரத்தார்களும், நாட்டார்களும் வாழ்கின்றனர்.

இவ்வூரில் தற்போது மழலையர்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, கலைக் கல்லூரி போன்றன உள்ளன. மேலும் நகரக்கோயில் ஒன்றும் சாமிநாதப் பிள்ளையார்கோயில் ஒன்றும், அனுமன் கோயில் ஒன்றும், இராமாயணக் கூடம் ஒன்றும், வேல் கோயில் ஒன்றும் உள்ளன. மேலும் இவ்வூரில் பல குளங்களும் உள்ளன. அரசின் சார்பில் ஒரு மருத்துவமனையும் இவ்வூரில் இயங்கி வருகிறது. ஓர் அஞ்சலகமும், வங்கி ஒன்றும் இவ்வுரில் அமைந்துள்ளன. இவ்வகையில் மழலையர்பள்ளி முதல் ஆராய்ச்சி வரை படிக்கக் கூடிய அளவிற்குக் கல்வி பெருமை பெற்ற ஊராக இவ்வூர் விளங்குகிறது. இதற்கு அடிப்படை காரணம் இவ்வூரில் அமைக்கப் பெற்ற சன்மார்க்க சபை என்றால் அது மிகையாகாது.

இவ்வுர் ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் அமைந்து சிறந்து வருகின்றது. இவ்வூரின் அருகிலேயே வேந்தன்பட்டி என்ற மற்றொரு ஊரும் உள்ளது. இவ்விரு ஊர்களும் கூப்பிடு தூரத்தில் அமைந்து இருப்பதால் இவ்விரு ஊர்களும் தொழில் அளவிலும், வசதிகள் நிலையிலும் ஒன்றை ஒன்று சார்ந்து விளங்கி வருகின்றன.

வ. பழ. சா குடும்பம்
மிகச்சிறிய கிராமமான மேலைச்சிவபுரியில் பல நகரத்தார் இனம் சார்ந்த குடும்பங்கள் பெருமையுடன் வாழ்ந்து வருகின்றன. அக்குடும்பங்களுள் வ. பழ. சா. மரபில் அமைந்த குடும்பம் சீரும் சிறப்பும் பெற்று விளங்கி வருகிறது.

வ. பழ. மரபில் தோன்றிய பெருந்தகை சாமிநாதன் செட்டியார் ஆவார். இவரது புதல்வர்கள் அண்ணல் பழநியப்பரும், இளவல் அண்ணாமலையாரும் ஆவர்.

இவ்விருவரும் இராம இலட்சுமணரைப் போன்று இணை பிரியாது, ஒருமித்த கருத்துடையவராய் வாழ்ந்து வந்தனர். இவர்கள் இறைபக்தியில் சிறந்தும், வள்ளல் தன்மையில் உயர்ந்தும், தமிழ்ப்புலவர்கள்பால் பேரன்பும் கொண்டு வாழ்ந்தனர்.

இவர்கள் நல்ல நண்பர்களை நாடித் தேடி அவர்களுடன் பழகி நன்மதிப்புப் பெற்று விளங்கினர். மகிபாலன்பட்டியைச் சேர்ந்த பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார் என்ற பைந்தமிழ்ப் புலவர் இவர்களுக்குச் சிறந்த நண்பராக திகழ்ந்தார். இம்முவரின் நட்பு சன்மார்க்க சபைத் தோற்றத்திற்கு அடிகோலியது.

கதிரேசனாரின் நட்பு
மேலைச்சிவபுரியிலிருந்து ஏழு கல் தொலைவில் மகிபாலன்பட்டி என்ற ஊர் உள்ளது. இவ்வூரில் பிறந்தவர் பண்டிதமணி கதிரேசன் செட்டியார் ஆவார். இவர் தமிழ்ப் புலமையும், வடமொழிப் புலமையும் ஒருசேர அமையப் பெற்றவர்.

கதிரேசனர் பிறந்ததால் சிறப்புற்ற இவ்வூர் சங்ககாலம் முதலே சிறப்புப் பெற்றுத் திகழ்ந்துள்ளது. "யாதும் ஊரே யாவரும் கேளிர்'' என்ற உலகப் பொதுத் தத்துவத்தைப் பாடிய சங்கப் புலவர் கணியன் பூங்குன்றனாரின் ஊர் என்பதால் இவ்வூர் சங்கச் சிறப்புடையதாக விளங்குகிறது. இப்புலவரின் இப்பாடல் இவ்வூரில் கல்வெட்டாக வடிக்கப் பெற்றுப் பெருமைப்படுத்தப் பெற்றுள்ளது.

பக்தியில் சிறந்த பண்பாளர் கதிரேசனார் ஆவார். இவரின் தமக்கையர் மேலைச்சிவபுரியில் வாழ்க்கை பெற்றவர். கதிரேசனார் தம் தமக்கையார் வீட்டிற்கு வரும் போதெல்லாம் வ. பழ. சா குடும்பத்தாருடனும், மேலைச்சிவபுரி பெருமக்களுடன் மகிழ்ந்து உரையாடுவர். இவர்களின் உரையாடல் வ. பழ. சா இல்லத்தில் நடைபெறுவது வழக்கம்.

தமிழ் இலக்கியங்கள், இறைபக்தி, நாட்டு நடப்பு ஆகியவை குறித்த செய்திகள் கதிரேசனாரின் உரையாடலில் மிகுதியாக இடம்பெற்றிருக்கும். வெறும் பேச்சாக அன்றி பயனுடைய பேச்சாக நண்பர்கள் முவரின் பேச்சும் அமைந்திருக்கும். கல்வி, ஒழுக்கம், சமயம், சமுக சீர்திருத்தம் போன்றவை சங்கங்கள் வாயிலாக வலுப்பெறும் என்பதை பல சான்றுகளுடன் கதிரேசனார் எடுத்துக் கூறுவார .

பாண்டியர்கள் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்ததையும் மதுரை, நாகை போன்ற இடங்களில் தோன்றிய சங்கங்களின் செயல்பாட்டையும் கதிரேசனார் அவ்வப்போது இவர்களிடத்தில் சுட்டிக்காட்டுவார்.

`எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' என்ற நிலை மாறி `எங்கே தமிழ்? ' என்ற நிலை உருவானதை அறிந்த முவரும் தாய் மொழியை மீண்டும் தழைக்கச் செய்வதற்குச் சங்கம் ஒன்றை நிறுவ வேண்டும் என எண்ணினர். அச்சங்கத்தின் வாயிலாக, சொற்பொழிவுகள் நிகழ்த்தி தமிழ் மொழியின் சிறப்பையும், சமயக்கருத்துக்களையும் பரப்புவதற்கு இவர்கள் முடிவு செய்தனர்.

சன்மார்க்கசபை தொடக்கம்
சங்கம் தொடங்குவதற்குத் திட்டமிட்டவாறே விரைவில் செயல்படுதல் வேண்டும் என்று கதிரேசனார் கருதினார். அச்சங்கத்தையும் நல்ல நாளில் துவங்குதல் நன்று என்று சங்கம் தொடங்க நல்ல நாளை இவர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

அப்போது திருநாவுக்கரசு நாயனார் முக்தி அடைந்த திருநாள் நெருங்கி வந்தது. அத்திருநாளில் அச்செயலைத் தொடங்கினால் நலம் பயக்கும் என இவர்கள் திட்டமிட்டனர்.

தமிழ்மொழி வளர்ச்சியையும், சைவ சமய வளர்ச்சியையும் அடிப்படையாகக் கொண்டு உருவாகும் சங்கம், `தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்' என்று பாடிய திருநாவுக்கரசு நாயனார் குருபூசை நாளில் துவங்குதல் பொருத்தமுடையதாக அமையும் என்பதில் இவர்கள் உறுதியுடன் இருந்தனர்.

சமண சமயத்திலிருந்து விலகிச் சைவ சமயம் சேர்ந்து சிவ உண்மையை அறிந்து போற்றியவர் திருநாவுக்கரசர். எனவே அவர் முக்தி பெற்ற நாளிலேயே சங்கத்தைத் தொடங்கலாம் என அண்ணாமலையாரிடம் கதிரேசனார் கூறினார்.

அண்ணாமலையார், கதிரேசனார் கூறியதைக்கேட்டு மகிழ்ந்தார். எனினும் `அண்ணன் பழநியப்பர் தற்பொழுது இங்கு இல்லையே கொழும்பில் உள்ளாரே ' என அவர் கவலை கொண்டார்.

இருப்பினும் `அண்ணன் வரக்கூடிய காலம் அண்மையிலுள்ளது. திருவருட்பாங்கால் அவர்கள் வரவு குறிப்பிட்ட நாளில் நேரின் நன்று. ஒருவாறு அவ்வமயம் அவர்கள் இங்கு வராவிட்டாலும் இச்செயலில் அவர்களுக்கு மிக விருப்பம் இருப்பதால் பின்னர் தக்கபடி ஆதரவளித்துப் போற்றுவார்கள். ஆதலால் குறித்தபடியே சங்கத்தைத் தொடங்குவோம் ' என்று கதிரேசனாரிடம் அண்ணாமலையார் கூறினார்.

இச்செய்தியை அறிந்த மேலைச்சிவபுரி ஏ. இராமநாதச் செட்டியாரும், மு. குமரப்பச் செட்டியாரும், பொன்னமராவதியில் அரசு மருத்துவராக இருந்த ஆ. வேணுகோபால நாயுடுவும் இப்பணியைத் தொடங்க உடனிருந்து வேண்டுவன செய்ய முன்வந்தனர்.


விழா ஏற்பாடு
சங்கத்தைத் துவக்கி தலைமையுரை ஆற்றுவதற்கு தக்கவரை அழைக்க கதிரேசனாரும் வேணுகோபால் நாயுடுவும் கலந்துபேசி, இலக்கண வல்லுநராகிய சோழவந்தானூர் அரசஞ்சண்முகனாரைத் தேர்வு செய்தனர். அவருக்கு அழைப்பு அனுப்பப்பெற்றது. சங்கத் துவக்க விழாவை மேலைச்சிவபுரியின் வடக்குத் திசையில், பழைய ஊருணியின் தென்கரையில் அமைந்துள்ள விநாயகரின் திருவுரு முன்னர் நடத்துவது என முடிவு செய்யப்பெற்றது. சங்கத்தின் துவக்கவிழா, திருநாவுக்கரசு நாயனார் குருபூசை விழா ஆகிய விழாக்கள் குறித்து மேலைச்சிவபுரியலும், அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலும் உள்ளவர்களுக்குத் தெரிவிக்கப்பெற்றது.

விழா தொடங்குவதற்கு உரிய வகையில் கீற்றுக் கொட்டகை அமைக்கப்பெற்று நன்கு அலங்காரம் செய்யப்பெற்றது. விழா ஏற்பாடுகள் நடத்துவரும் வேலையில் பழநியப்பச் செட்டியாரும் கொழும்பிலிருந்து வந்து சேர்ந்தார். சங்கத்தின் துவக்கம் குறித்து அவர் கேட்டு மகிழ்ந்தார். அவர் வரவை நன்னிமித்தமாக அனைவரும் கருதினர். எடுத்த செயல் இனிதே நடந்து வெற்றி தரும் என்று நம்பிக்கை கொண்டனர். பழநியப்பரும் தாமே முன்னின்று சங்கத் துவகக்த்தினை நிகழ்த்த முடிவுசெய்து, அவ்வாறே செயல்பட்டார்.

துவக்கவிழா
சௌமிய ஆண்டு சித்திரைத் திங்கள் முப்பத்தோராம் நாள் (13. 5. 1909) வியாழக்கிழமை அன்று காலை மேலைச்சிவபுரியில் அமைந்துள்ள சுவாமிநாத விநாயருக்கு சிறப்புச் செய்து குருபூசை விழா தொடங்கப் பெற்றது. அந்நாளில் திருநாவுக்கரசு நாயனார் புராணம் படிக்கப் பெற்றது. மேலும் விழாவிற்கு வந்திருந்தோர் அனைவர்க்கும் நல்லவிருந்து அளிக்கப்பெற்றது.

பிற்பகல் முன்று மணிக்கு சங்கத்தின் துவக்கவிழா தொடங்கியது. சோழவந்தானூரிலிருந்து விழாவிற்கு முதல் நாளே வந்திருந்த அரசஞ் சண்முகனார் விழாத் தலைமை ஏற்றார். வித்யாபாநு இதழாசியர் மு. ரா. கந்தசாமிக் கவிராயர், கீழச்சிவப்பட்டி வித்துவான் பீமகவி, தேவகோட்டை வேல்சாமி கவிராயர், வேந்தன்பட்டி புலவர் வாத்தியார் என்ற சைவப்பிள்ளை ஆகியோர் வாழ்த்துக்கள் கூறினர்.

துவக்கச் சொற்பொழிவுகள்
தலைமை வகித்த அரசஞ்சண்முகனாரவர்கள் `பக்தி' , `தமிழின் பெருமை' ஆகியவை பற்றியும், கதிரேசன் செட்டியாரவர்கள் `ஈசுவர தரிசனம்' என்பது குறித்தும், நெடுவை இராமசாமி ஐயங்காரவர்கள் `அடியார் பெருமை' பற்றியும், யாழ்ப்பாணம் சு. சரவணமுத்துப்பிள்ளை அவர்கள் `சயமக் குரவர்' பற்றியும் அந்நாளில் சொற்பெருக்காற்றினர்.

சங்கத்தின் பெயரமைவு
சங்கத்தின் துவக்கவிழாவில் கூடியிருந்த அவையோர் கருத்துப்படி இச்சங்கத்திற்கு, `மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை' எனப் பெயரிடப்பெற்றது.

சன்மார்க்கம் என்பதை உண்மை நெறி எனத் தமிழில் மொழி பெயர்க்கலாம். "உலகத்துள்ள சமயங்கள் யாவும் உண்மை நிலை அடைதற்குரிய வழிகளையே உண்மை நெறி எனக் கொண்டு மயங்கி நிற்க, சைவசமயம் அந்நெறிகளையெல்லாம் தன்னுள் கொண்டு நேரே பரம்பொருளிடத்துச் சேர்க்கும் திறனுடையது ஆதலில் சைவ சமயமே சன்மார்க்கம் என்னும் பெயர்க்கு மிக உரிமையுடையதாகும்.'' சமய உண்மைகளையும், ஒழுக்க வகைகளையும் இச்சபை அறிவுறுத்துகிறமையால் இதற்கு சன்மார்க்க சபை என்று அறிஞர்கள் பெயர் சூட்டியுள்ளனர்.

சங்கத்தின் பெயரோடு அதன் துவக்க நாளையும் நினைவுகூறும் பாடல்கள் பின்வருமாறு.

1. செய்ய சவுமியத்திற் சித்தரைமுப் பானொன்றிற்
றுய்யகுரு வார சுபதினமே வையத்திற்
சேமமுறு மேலைச்சிவபுரியிற் சன்மார்க்க
நாம அவை நிறுவு நாள்

2. ஆயிரத்துத் தொள்ள யிரத்தொன்ப தாங்கிலவாண்
டேயுமதி மேபதின்முன் றேய்தினமேயாயறிஞர்
சன்மார்க்க மென்னுஞ் சபை நிறுவிச் வைசமெனு
நன்மார்க்க மோர்ந்ததிரு நாள்.

இப்பாடல்களில் முதல் பாடலில் சன்மார்க்க சபை தோன்றிய தமிழ் ஆண்டு குறிக்கப் பெறுகிறது. சௌமிய ஆண்டு, சித்திரைத்திங்கள் முப்பத்தொன்றாம் நாளில் குருவாரமாகிய வியாழக்கிழமை அன்று சன்மார்க்க சவை தோற்றம் பெற்றது என்ற செய்தி முதல் பாடலில் காட்டப் பெற்றுள்ளது. சமய குருமார்களுக்கான நினைவைக் கொண்டாடும் இச்சன்மார்க்க சபை வியாழக் கிழமையான குரு வார நாளில் துவங்கப் பெற்றிருப்பது மிக்கப் பொருத்தமுடையதாக உள்ளது.

அதற்கு இணையான ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஒன்பதாம் ஆங்கில ஆண்டில் மே மாதம் பதிமுன்றில் சன்மார்க்க சபை என்ற பெயருடைய சங்கம் தோற்றுவிக்கப் பெற்றது என்ற செய்தி இரண்டாம் பாடலில் அமைக்கப் பெற்றுள்ளது.

"இச்சபையின் பெயர் மிகச் சிறந்தது. பல மதத்தார்க்கும் ஒப்ப அமைந்துள்ளது. சன்மார்க்கர் கூட்டம் என்பது நன்கு விளங்குகின்றது.'' என்று உ. வே. சாமிநாதையர் அவர்கள் சன்மார்க்க சபைப் பெயரமைவினைப் பாராட்டியுள்ளார். இப்பெரியாரின் வாக்கு மெய்யானது என்பதை சன்மார்க்கசபை இன்னமும் காட்டிவருகிறது. எதிர்காலத்திலும் இப்பணி நடைபெற்று வரும் என்பதில் ஐயமில்லை.

சன்மார்க்க சபையின் நோக்கங்கள்
சன்மார்க்க சபை தன் பெயருக்கேற்ப நல்லவற்றையெல்லாம் வளர்ப்பதைத் தம் கடமையாகக் கருதி, அதற்குரிய வகையில் நோக்கங்களை உருவாக்கிக் கொண்டது. கால நிலைக்கேற்றவாறு அவ்வப்போது வேண்டுவனவற்றையும், தம் நோக்கங்களுள் சேர்த்துக் கொண்டது.

சைவ சமயம் தழைத்தோங்கத் தோன்றிய சைவ சமயத்தலைவர் நால்வர் திருநாட்களிலும், காரைக்காலம்மையார் திருநாளிலும், கூடுமாயின் மற்ற அடியார்கள் திருநாட்களிலும் குருபூசை நிகழ்த்தி, கடவுள் வழிபாடு, அடியார் பெருமை, ஒழுக்கம் , கல்வி முதலியன குறித்துச் சொற்பொழிவு செய்வித்தலையும், அக்காலங்களில் சிவனடியார்களுக்கும், ஏழைகளுக்கும் அன்னமளித்தலையும் முதல் நோக்கமாகக் கொண்டு, சன்மார்க்க சபை செயல்படத் தொடங்கியது.

தமிழ்மொழி வளம் பெறுவதற்கு உரிய வகையில் சிறுவர்களுக்குக் கல்வி பயிற்றுவித்தல், மக்கள் பயிலும் பழக்கத்தை உருவாக்கும் வகையில் நூலகம் அமைத்தல், தமிழ்ப்புலமையில் சிறந்தார்க்கு சிறந்த பட்டங்கள் வழங்கிச் சிறப்பித்தல், தமிழ் நூல்கள், உரைகள், ஆய்வுரைகள் ஆகியவற்றை வெளியிடுதல், பிற மொழிகளிலுள்ள அரிய நூல்களை மொழிபெயர்த்தல், தமிழ்க்கல்லூரி அமைத்து தமிழறிவினைப் பெருக்குதல், அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு ஆக்கம் தருதல் ஆகியவற்றையும் தம் நோக்கங்களாகக் கொண்டுச் சன்மார்க்க சபை செயலாற்றி வருகிறது.

சன்மார்க்க சபையும் பழநியப்பரும்
சன்மார்க்க சபையின் தொடக்ககாலத் தலைவராக விளங்கியவர் அண்ணல் பழநியப்பர் ஆவார். இவர் ஆயிரத்து எண்ணூற்று எழுபத்து முன்றாம் ஆண்டு நவம்பர் திங்கள் இருபத்துமுன்றாம் நாள் தோன்றினார். இவர் தம் தம் தந்தையார் சாமிநாதச் செட்டியாரவர்கள் இவரது இருபதாம் வயதிலேயே இறைவனடி எய்தியமையால் இவர் இளமையிலே குடும்பப்பொறுப்பினை ஏற்க வேண்டியவரானார்.

இவர் காட்சிக்கு எளியர். துயருற்றார்க்கு இரங்கும் தன்மையும், ஈகையும் உடையவர், பெருஞ்செல்வம் படைத்தாரல்லர். ஆயினும் தம்மிடம் வந்தவர் தகுதியறிந்து ஈத்துவக்கும் இயல்பினர்.

`ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு '

என்ற வள்ளுவர் வாய்மொழிக்கு இணங்க வாழ்நாளெல்லாம் புலவர் பெருமக்கள் குறிப்பறிந்து, இவர் பொருளுதவி செய்து புகழ் பெற்றவர். இவர் எப்போதும் புலவர் குழாம் சூழ வீற்றிருப்பவர் , தமிழ்ப்புலவர்களின் தொடர்பைப் பெரிதும் விரும்புபவர், இவர்தம் குடும்பப் புலவராக நெடுவை திரு. இராமசாமி ஐயங்கார் இவரது ஆதரவில் இருந்துள்ளார்.

மகிபாலன்பட்டி மு. கதிரேசனார், சோழவந்தானூர் அரசஞ்சண்முகனார், மு. சா. கந்தசாமிக் கவிராயர், இரா. இராகவையங்கார், மு. இராகவையங்கார், உ. வே. சாமிநாதஐயர் போன்ற அறிஞர்களோடு இவர் நட்பு கொண்டு விளங்கினார்.

அக்காலத்தில் கோயில் கட்டுதல், நந்தவனம் அமைத்தல், அடியார்களுக்கு உணவளித்தல், ஆகியவை வணிகப் பெருமக்களுக்குரிய அறச்செயல்களாக விளங்கின. அண்ணல் பழநியப்பர் இவ்வறங்களோடு, கல்விக் கோயில் அமைத்து கல்வியை வளர்ப்பதை நாட்டின் தேவைக்குத்தக்க அறமாகக் கொண்டார்.

இளவல் அண்ணாமலையாரோடு ஈருடல் ஓருயிராக வாழ்ந்த பழநியப்பர் அவரின் துணையையும், பண்டிதமணியாரின் நட்பையும் பெற்று மேலைச்சிவபுரி சன்மார்க்க சபையை உருவாக்கினார். சன்மார்க்க சபைக்குத் தனிக்கட்டிடம் அமைப்பதற்கு உரிய இடத்தைத் தேர்ந்து வாங்கி, அவ்விடத்தில் ஏற்றம் மிக்க ஓர் கட்டிடத்தை கட்டி முடித்தார். அக்கட்டிடத் திறப்புவிழாவை உயரிய சொற்பொழிவுகளோடு நிகழ்த்தினார். இவ்விழா நிகழ்ச்சி செட்டிநாட்டில் மேலும் பல கலைக்கூடங்கள் தோன்றக் காரணமாக இருந்தது.

சன்மார்க்க சபையின் ஆக்கம் கருதி செயலாற்றிய பழநியப்பர், அதன் தலைவராக முன்று ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றினார். சன்மார்க்க சபையின் வளர்ச்சி குறித்த சிந்தனையில் இருந்த பழநியப்பர், தம் இளவலுக்கு எழுதி வைத்துள்ள கடிதத்தில் `சன்மார்க்க சபையைத் தளரவிடாது எப்பொழுதும் நீடித்து நடத்தி வருக' என ஆணையிட்டிருந்தார். இத்தகு பண்பினைக் கொண்ட அண்ணலர் ஆயிரத்துத் தொள்ளாயிரத்துப் பன்னிரண்டாம் ஆண்டு மே திங்கள் ஆறாம் நாள், முப்பத்தொன்பதாம் வயதில் இவ்வுலக வாழ்வை நீத்து, புகழுடம்பு எய்தினார்.

அண்ணல் பழநியப்பரின் பிரிவாற்றாது வருந்திய புலவர்கள் பலர் கையறுநிலைச் செய்யுள் பல பாடியுள்ளனர். அப்பாடல்கள் அண்ணல் பழநியப்பரின் செயல்திறனையும், இறைப்பற்றினையும், மொழிப்பற்றினையும் எடுத்துக் காட்டுவனவாக விளங்குகின்றன. இவரது பிரிவாற்றாமையினால் துன்புற்றோர் செட்டிநாட்டின் பல இடங்களில் இரங்கற் கூட்டங்களை நிகழ்த்தியுள்ளனர்.

மேலைச்சிவபுரி சன்மார்க்க சபையில் 15. 5. 1912 ஆம் நாளில் கரு. முத்து அருணாசலம் செட்டியாரவர்கள் தலைமையில் இரங்கற்கூட்டம் நடைபெற்றது. அவ்வமயம் புலவர் பெருமக்களும், வணிகப்பெருமக்களும் அண்ணல் பழநியப்பரின் அருமை, பெருமைகளைப் பாராட்டிப் பேசினர்.

சன்மார்க்க சபையும் அண்ணாமலையாரும்
சன்மார்க்க சபையின் இரண்டாம் தலைவர் அண்ணாமலையார் ஆவார். இவர் அண்ணன் பழநியப்பரின் ஆணைப்படி சன்மார்க்க சபையைப் பேணிப் பாதுகாத்தார். தாது ஆண்டு புரட்டாசித் திங்கள் இருபதெட்டாம் நாளில் (12101876) தோன்றிய அண்ணாமலையார் பழமைப் பற்றோடு, புதுமையிலும் நாட்டம் கொண்டு விளங்கினார்.

இவர் சன்மார்க்க சபையின் நிலையான வளர்ச்சிக்குத், தக்க முலதனத்தைத் தொகுத்து உதவினார். இவர் காலத்தில் மதுரைத் தமிழ்ச்சங்கப் படிப்புக்கள் இங்குத் துவக்கப்பெற்று அத்தேர்வுகளுக்கு மாணவர்கள் அனுப்பப் பெற்றனர்.

பதின்முன்று ஆண்டுகள் சன்மார்க்க சபைத் தலைவராகப் பணியாற்றிய இவர், தம் நாற்பத்தொன்பதாவது வயதில் அதாவது ஆயிரத்துத் தொள்ளயிரத்து இருபத்தைந்தாம் ஆண்டில் இறைவன் திருவடி அடைந்தார். அன்னார் பிரிவாற்றமை குறித்து இரங்கற்கூட்டம் 10. 4. 1925 ஆம் நாளில் நடைபெற்றது. அதில் பல அறிஞர்கள் இரங்கற்பாக்களைப் பாடினர்.


சன்மார்க்க சபையும் பண்டிதமணியும்
பண்டிதமணி மு. கதிரேசனார் 16. 10. 1881 ஆம் நாளில் பிறந்தார். இவர் இளம் வயதில் வாதநோயினால் துன்புற்றார். அதனால் இவரின் உடல் நலன் குன்றியது. இதன் காரணமாகப் பள்ளி செல்ல இயலாது ஏழாம் வயதில், திண்ணைப் பள்ளியில் ஏழுமாதங்கள் மட்டுமே இவர் பயின்றார்.

பின் இவர் ஆசிரியரின் உதவியின்றி அரிய நூல்களைத் தாமே கற்றார். இவர் வீட்டிலிருந்தவாறே பல நூல்களின் வழியாகவும், சான்றோர்களின் நட்பின் முலமும் தம் அறிவை வளர்த்துக் கொண்டார். புலவர்கள் பலரின் நட்பு இவருக்குப் பேருதவியாக இருந்தது. மேலைச்சிவபுரி அண்ணல் பழநியப்பருடன் பண்டிதமணியார் பழகிய காலத்தில், சங்கம் வைத்துத் தமிழ் வளர்க்கும் எண்ணம் தோன்றியது என்பது முன்னரே காட்டப் பெற்றது. அதன் பலனாக சன்மார்க்க சபை தோற்றம் பெற்றது என்பதும் முன்னரே அறிவிக்கப் பெற்ற செய்தியாகும்.

சன்மார்க்க சபையின் வளர்ச்சிக்கு வேண்டிய உதவிகளையெல்லாம் பண்டிதமணி மு. கதிரேசனார் செய்தார். சொற்பொழிவாற்றுவதற்கு உரியவரைத் தேர்ந்து அழைப்பது, சிறுவர்களுக்கு கல்வி கற்பிப்பதற்குத் தக்க ஆசிரியர்களை அமைப்பது போன்ற செயல்களைத் இவர் தொடர்ந்து செய்து வந்தார்.

பள்ளியில் பயிலுகின்ற மாணவர்களை அரசஞ்சண்முகனார் போன்ற அறிஞர்களின் உதவியோடு கல்வி பயில வைத்துத், தேர்வு வைத்து, மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குப் பெரிதும் உதவினார். இவர் இப்பகுதியின் தமிழ்மொழி வளர்ச்சிக்கும், சைவ சமய வளர்ச்சிக்கும் தேவையானவற்றை அறிந்து அதற்குரிய வழிமுறைதகளைக் கண்டறிந்தார்.

வட மொழி அறிவைப் பண்டிதமணியார் பெற்றிருந்தமையால் அம்மொழியிலுள்ள சிறந்த நூல்களைத் தேர்வு செய்து, அவற்றைத் தமிழில் மொழிபெயர்த்து மொழிபெயர்ப்புப் பணியைத் திறம்படச் செய்தார். அவற்றை சன்மார்க்க சபையின் வழியாக வெளியிட்டார். இது குறித்த செய்திகள் இவ்வாய்வின் உட்பிரிவுகளாக விளங்கும் மொழிபெயர்ப்புப் பணி, நூல் வெளியீடு ஆகியபகுதிகளில் விளக்கப் பெற்றுள்ளன.

இவர் சன்மார்க்க சபையின் சொற்பொழிவுக் கூட்டங்களில் அறிஞர்களை அழைத்து, பேசச் செய்ததோடு தாமும் பங்கு பெற்று பல அரிய சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார். இவரது சொற்பொழிவினைக் கேட்டு பயன்பெற்றோர் பலர். இவர் சன்மார்க்க சபையில் நிகழ்த்தியுள்ள சொற்பொழிவுகளின் தலைப்புக்கள் பின்ணிணைப்பில் தரப்பெற்றுள்ளன.

இப்பணிகளைத் தொடர்ந்து இவர் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்து நான்காம் ஆண்டில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியப் பணியேற்றார். அப்பணியேற்பினை சன்மார்க்க சபை பாராட்டி மகிழ்ந்தது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துப் பேராசிரியராகப் பண்டிதமணி பணியாற்றிய காலத்தும், அவர் சன்மார்க்க சபைக்கு அவ்வப்போது வருகைபுரிந்து, வேண்டிய ஆக்கங்களைச் செய்து உதவினார்.

சங்கம் என்றால் வேலை இல்லாதவர்கள் கூடும் இடம் என்று கருதப்பட்ட அந்தக் காலத்தில் சங்கங்களால் பலன் காணமுடியும் என்பதைக் காட்டியது இச் சன்மார்க்கசபை.

பல்கலை வாணர்களான புலவர்களை இப்பகுதிக்கு அழைத்து வந்து இச்சன்மார்க்க சபைச் சிறப்பித்தது. இதனால் தமிழன்னையும் பெருமை பெற்றாள். தமிழ் மக்களும் பெருமை பெற்றனர். சன்மார்க்க சபையும் சிறப்பை அடைந்தது.

இந்தச் சன்மார்க்க சபைக்கு வராத புலவர்களே இல்லை. இப்படிப்பட்ட அமைப்பு தோன்றக் காரணமிருந்தவர் பண்டிதமணி ஆவார். அக்காலத் தமிழ்ப் புலவர்களை இனம் காட்டிய பெருமை பண்டிதமணிக்கும், இச்சன்மார்க்க சபைக்குமே உரிய்தாகும்.

"பண்டிதமணி அவர்களின் பூரண அபிமானத்தைப்பெற்றது. இந்த சங்கம் '' என்று சொ. முருகப்பா அவர்கள் இச்சன்மார்க்க சபை குறித்துக் கருத்து தெரிவிக்கின்றார்.

பண்டிதமணி அவர்களால் சன்மார்க்க சபை தக்க வளர்ச்சியைப் பெற்றது. சன்மார்க்க சபையால் பண்டிதமணிக்கும் மேன்மை ஏற்பட்டது. இச்சூழலில் பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியாரவர்களுக்கு ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபத்தைந்தாம் ஆண்டில் `பண்டிதமணி' என்ற பட்டத்தை வழங்கியும், ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பதாம் ஆண்டில் அன்னாரது உருவப்படத்தை சன்மார்க்க சபையில் திறந்து வைத்தும் சன்மார்க்க சபை தன் நன்றி கடனை அவருக்குச் செய்தது. சன்மார்க்க சபை வழங்கிய பண்டிதமணிப் பட்டம் கதிரேசன் செட்டியாருக்கு, அவரது இயற் பெயரை விட நிலையான பெயராக இன்றும் விளங்கி வருகிறது.

சன்மார்க்க சபையில் பண்டிதமணி அவர்களின் உருவப் படத் திறப்புவிழா செட்டிநாட்டு ராசா. சர். அண்ணாமலைச் செட்டியாரவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ராசா. சர். அண்ணாமலைச் செட்டியாரவர்கள் சன்மார்க்க சபையின் சிறப்பையும், பண்டிதமணி அவர்களின் திறமையையும் அவ்விழாவில் எடுத்து விளக்கியதோடு "இவ்வுருவப்படம் இச்சபைக்கு வரும் யாவருக்கும் ஊக்கத்தையும், உழைப்பையும் பரோபகாரத்தையும் மேற்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தும் ஓர் அடையாளமாக இருக்கும்'' என்று பாராட்டியுள்ளார்.

சன்மார்க்க சபை தோற்றம் பெற்ற ஆண்டிலிருந்து இருபத்தைந்து ஆண்டுகள் உடனிருந்தும், அண்ணாமலைப் பல்கலைக்கழத்துப் பணியில் இருந்த பதின்முன்று ஆண்டுகள் அவ்வப்போது வருகை தந்தும், பணி ஓய்வு பெற்ற பின்னர் ஆறு ஆண்டுகள் முழுநிலைப் பணியாக சன்மார்க்க சபை பணியை ஆற்றியும் ஆக மொத்தம் நாற்பத்து நான்கு ஆண்டுகள் சன்மார்க்க சபைக்கு வேண்டும் பணிகளைப் பண்டிதமணியார் செய்துள்ளார்.

சன்மார்க்க சபை தோன்றுவதற்கு முலகாரணமாயிருந்து, அதன் ஆக்கம் கருதி உழைத்துவந்த பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியாரவர்கள் 24. 10. 1953 ஆம் நாளில் இறைவன் திருவடி நீழல் எய்தினார்.

பண்டிதமணியாரின் இழப்பால் துயருற்ற சன்மார்க்க சபை 27. 10. 1953 ஆம் நாளில் இரங்கற் கூட்டம் ஒன்றைக் கூட்டியது. அக்கூட்டத்திற்கு அமராவதி புதூர் மகளிர் இல்லத்துத் தலைவர் சொ. முருகப்பா அவர்கள் தலைமையேற்றார். பண்டிதமணியாரின் நுண்ணறிவு, கவிநயம், உரைநயம், சபையின் வளர்ச்சியில் இடைவிடாது கொண்டிருந்த ஆர்வம் ஆகியவை பற்றிப், பல பேரன்பர்கள் அவ்விழாவில் உரையாற்றினார்கள்.

பண்டிதமணி அவர்கள் எழுதிய நூல்களின் உரிமையை அவரது மைந்தர்கள் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்து முன்றாம் ஆண்டில் சன்மார்க்க சபையாருக்கு வழங்கினர். இவ்வகையில் பண்டிதமணியாரின் வாழ்வும் சன்மார்க்க சபையின் வளர்ச்சியும் ஒன்றோடு ஒன்றாகப் பின்னிப் பிணைந்து ஓங்கிச் சிறந்தன.



சன்மார்க்க சபையும் சாமிநாதரும்
சன்மார்க்க சபையின் முன்றாம் தலைவராக விளங்கியவர் சாமிநாதர் ஆவார். இவர் அண்ணல் பழநியப்பரின் முத்த புதல்வர். இவர் முப்பத்தெட்டு ஆண்டுகள் சபைத் தலைவராக இருந்து அரும்பணி புரிந்தார்.

இவர் காலத்தில் சன்மாரக்க சபை வெள்ளிவிழா, பொன்விழா ஆகிய இருபெரும் விழாக்களைக் கண்டது. சன்மாரக்க சயைன் முன்மண்டபம் எழுப்பப்பெற்றது. கணேசர் செந்தமிழ்க் கல்லூரி சென்னைப் பல்கலைக்கழக இணைமவு பெற்று தனித்தமிழ்க்கல்லூரியாக இயங்கியது.

சன்மார்க்க சபையின் இருபத்தைந்தாம் ஆண்டு நிறைவு வெள்ளிவிழா சென்னை மகாமகோபாத்தியாய, தட்சிணாத்தியக் கலாநிதி, டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் தலைமையில் ஆயிரத்து முப்பத்து நான்காம் ஆண்டில் மே மாதத்தில் ஒன்பது, பத்து ஆகிய இருநாள்களில் நிகழ்த்தப் பெற்றது.

அவ்வமயம் இங்கு வந்து அறிஞர்கள் பலர் சொற்பொழிவாற்றினர். விழாவிற்கு வந்திருந்தோர் அனைவருக்கும் விருந்து அளிக்கப்பெற்றது. இவ்விழா மிகச் சிறந்த விழாவாக அந்நாளில் கருதப்பெற்றது.

ஆயிரத்து எண்ணூற்று அறுபதாம் ஆண்டின் அமைப்புகளைப் பதிவு செய்தல் (சொலைட்டி ரிஜிஸ்டிரேசன்) சட்டப்படி சன்மார்க்கசபை ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்தொன்பதாம் ஆண்டில் பதிவு செய்யப்பெற்றது. இக்காலத்தில் இதற்கான ஒப்பந்த விதிகள் உருவாக்கப்பெற்றன. மேலும் நிறைவேற்றுக்கழகமும் அமைக்கப்பெற்றது. இது சன்மார்க்க சபையின் குறிக்கத் தக்க வளர்ச்சியாகும்.

சன்மார்க்க சபையின் பொன்விழா 3. 10. 1959 ஆம் நாளில் கொண்டாடப் பெற்றது. பொன்விழாவை அன்றைய தமிழ்நாடு மாநில முதலமைச்சர் பெருந்தலைவர் காமராசர் அவர்கள் தொடங்கி வைத்தார். டாக்டர் ராசா. சர். அ. முத்தையா செட்டியாரவர்கள் தலைமையேற்றார். இவ்விழாவைத் தொடங்கி வைத்த காமராசர், `சன்மார்க்கத்தைக் கடைபிடித்து வாழ்ந்தால் மக்கள் வளமாக இருப்பார்கள். அப்போது அரசங்கம் கூடத் தேவையிராது. அதுவே அமரவாழ்வு என்று கூறுகிறார்கள். அதையே நானும் விரும்புகிறேன்' என்று கூறினார்.

சன்மார்க்க சபையின் முதல் தலைவர் அண்ணல் வ. பழ. சா பழநியப்பச் செட்டியாரவர்கள், இரண்டாம் தலைவர் இளவல் வ. பழ. சா. அண்ணாமலைச் செட்டியாரவர்கள் ஆகியோரின் உருவப்படங்களை முறையே டாக்டர் ராசா. சர். முத்தையா செட்டியாரவர்களும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டி. எம் நாராயண சாமிப் பிள்ளையவர்களும் இவ்விழாவில் திறந்து வைத்து அவர்களின் புகழை நிலைப் படுத்தினர்.

சபைத் தொடக்கவிழா தலைவர் அரசஞ் சண்முகனாரின் உருவப்படத்தை பேராசிரியர் ரா. பி. சேதுப்பிள்ளை அவர்களும், மு. ரா . கந்தசாமிக் கவிராயர் உருவப்படத்தை லெ. ப. கரு. இராமநாதன் செட்டியாரவர்களும் திறந்து வைத்தனர்.

இவ்விழாவில் பேரறிஞர்கள் பலர் சொற்பொழிவாற்றினர். அனைவருக்கும் நல்விருந்து அளிக்கப்பெற்றது.

5. 11. 1963 ஆம் நாளில் சாமிநாதன் செட்டியாரவர்கள் இயற்கை எய்தினார். 6. 11. 1963 இல் அன்னாருக்கு சன்மார்க்க சபையினரால் இரங்கற் கூட்டம் நடத்தப்பெற்றது. இச்சமயத்தில் அவர் குறித்த இரங்கற் பாக்கள் பாடப்பெற்றன.

சன்மார்க்க சபையும் சிதம்பரனாரும்
சன்மார்க்க சபையின் நான்காம் தலைவராக விளங்கிய சிதம்பரனார் அண்ணல் பழநியப்பரின் இரண்டாம் புதல்வர் ஆவார். இவர் காலத்தில் மசன்மார்க்க சபைக்கு நிலையான முலதனம் தொகுக்கப்பெற்றது.

டாக்டர். வ. சுப. மாணிக்கம் அவர்களும் , சிதம்பரம் செட்டியாரவர்களும் அவர்தம் துணைவியார் திருமதி சேதுக்கரசி ஆச்சி அவர்களும் மலேயா, சைகோன் முதலிய அயல்நாடுகளுக்கு நிதி திரட்டுதற்காக 25. 5. 1962 ஆம் நாளில் சென்றனர்.

மலேயாவாழ் மக்கள் இவர்களைத் தக்கவாறு சிறப்பாக வரவேற்று பெருந்தொகையை சன்மார்க்கசபையின் வளர்ச்சிக்கு நன்கொடையாக வழங்கினர். இத்தொகையால் சன்மார்க்க சபை உரமும், உயர்வும் பெற்றது.

சன்மார்க்க சபையின் முன்மண்டபம் விரிவுசெய்யப்பெற்று, புதுப்பிக்கப்பெற்றமையும் சன்மார்க்க சபை வரலாற்றில் குறிக்கத்தக்க நிகழ்ச்சியாகும். இம்மண்டபம் 25. 11. 1964 ஆம் நாளில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கே. சொக்கலிங்கம் அவர்களால் திறக்கப்பெற்றது.


இதனைத் தொடர்ந்து கணேசர் செந்தமிழ்க் கல்லூரிக்கென நான்கு வகுப்பறைகள் கொண்ட தொகுப்புக் கட்டம் கட்டப்பெற்று அதன் திறப்புவிழா ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தொன்பதில் நடைபெற்றது.

சன்மார்க்க சபையின் வைரவிழா 8. 2. 1970 ஆம் நாளில் காலை, மாலை ஆகிய இரு வேளைகளில் நிகழ்வுற்றது. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் மு. வரதராசனார் அவர்கள் காலை நிகழ்வுக்குத் தலைமையேற்றார். சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நெ. து சுந்தரவடிவேலு அவர்கள் தலைமை தாங்கினர்.

சன்மார்க்க சபைத்தலைவர் முன்னாள் தலைவர் பழ. சிதம்பரனார் உருவப்படத்தை தமிழ்க்கடல் இராய. சொக்கலிங்கனார் அவர்களும், கல்லூரிக்குழுத் தலைவர் ஆ. நாகப்பச் செட்டியாரவர்கள் உருவப்படத்தை மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் அவர்களும் திறந்து வைத்தனர்.

வைர விழாவில் இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழ்சார் நிகழ்வுகளும் இடம் பெற்றன. மக்களை இவை கவர்ந்தன.

பதினேழு ஆண்டுகள் சபையைத் தளராது காத்த சிதம்பரம் செட்டியாரவர்கள் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்தொன்பதாம் ஆண்டு இயற்கை எய்தினார்.

சன்மார்க்கசபையும் வ. சுப. மாணிக்கனாரும்
பண்டிதமணியின் தலைமாணாக்கர் வ. சுப மாணிக்கனார் ஆவார். இவர் மேலைச்சிவபுரி ஊரினர். இவர் பண்டிதமணியாரைப் போலவே சபையின்பால் மிக்க ஈடுபாடு கொண்டவர். பண்டிதமணிக்குப்பின் தன்வாழ்நாள் முழுமையும், சன்மார்க்க சபையின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்தார்.

இவர் கணேசர் செந்தமிழ்க் கல்லூரியின் தலைவராக இருந்து, கல்லூரி வளர்ச்சிக்குப் பெரும் தொண்டாற்றினார். கல்லூரி உயராய்வு மையமாக வேண்டும் என்பது இவரின் நோக்கம் ஆகும். அவரது கனவு இரண்டாயிரத்து முன்றாம் ஆண்டில் நிறைவேறியது

சபைச் சான்றோர்கள்
சன்மார்க்க சபையின் ஐந்தாம் தலைவராக இளவல் அண்ணாமலைச் செட்டியாரின் இரண்டாம் புதல்வர் விசுவநாதன் செட்டியார் 1979 ஆம் ஆண்டிலிருந்து 1981 ஆம் ஆண்டு வரை செயல்பட்டார்.

பின்னர் சாமிநாதன் செட்டியார் புதல்வர் ப. சா. பழநியப்பச் செட்டியாரவர்கள் 1981 ஆம் ஆண்டிலிருந்து 1998 ஆண்டு வரை சபைத் தலைவராக இருந்தார். இவர்காலத்தில் சன்மார்க்க சபையின் உறுப்பாக விளங்குகின்ற கல்லூரியில் பிறதுறை வகுப்புக்கள் தன்நிதிப்பிரிவில் உருவாக்கப்பெற்று, கல்லூரி விரிவு பெற்றது.

பின்னர் சா. அண்ணாமலைச் செட்டியாரவர்கள் தலைமைப் பொறுப்பேற்றார். இவருக்குப்பின்னர் சித. பழநியப்பச் செட்டியாரவர்கள் 1998 ஆம் ஆண்டிலிருந்து 2001 ஆம் ஆண்டு வரை முன்று ஆண்டுகள் தலைமைப் பொறுப்பில் இருந்தார். இவர் காலத்தில் சன்மார்க்கசபை முத்துவிழாவைக் கொண்டாடியது.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூற்றொன்பதாம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இருபது, இருபத்தொன்று ஆகிய நாள்களில் முத்துவிழா நிகழ்வுற்றது. இவ்விழாவிற்கு குன்றக்குடி ஆதின பொன்னம்பல அடிகளார் தலைமை ஏற்றார்.

முத்துவிழா நினைவுக் கட்டிடத்தை அன்றைய தமிழ்ப்பாண்பாடு மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் மு. தமிழ்க்குடிமகன் திறந்து வைத்தார். செம்மல் வ. சுப. மாணிக்கனாரின் திருவுருவப்படத்தைக் குன்றக்குடி அடிகளார் திறந்துவைத்தார். இவ்விழாவிலும் பல்வேறு அறிஞர்கள் சொற்பொழிவாற்றினர்.

சன்மார்க்கசபையின் ஒன்பதாவது தலைவராக மீண்டும் சா. அண்ணாமலைச் செட்டியாரவர்கள் செயல்பட்டார்.

தற்பொழுது ப. சா. சிங்காரம் செட்டியாரவர்கள் பத்தாவது தலைவராக இருந்து செயலாற்றி வருகிறார்.

சன்மார்க்க சபையின் தொடக்க காலத்திலிருந்து செயலாளர்களாக திரு. ஏ. இராமநாதச் செட்டியாரவர்கள், அவர்களும், திரு. மு. குமரப்பச்செட்டியாரவர்களும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

இருபத்தேழு ஆண்டுகள் சன்மார்க்க சபைச் செயராளராக ஏ. இராமநாதச் செட்டியாரவர்கள் பணியாற்றினர். இவர் 1936 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.

பின்னர் குமரப்பச் செட்டியாரவர்களின் செயலாக்கத்தில் சபை நிகழ்வுகள் நிகழ்ந்தன. 1948 ஆம் ஆண்டு வரையான முப்பத்தொன்பது ஆண்டுகள் இவரது பணி நடைபெற்றுச் சிறந்தது.

பின்னர் ஆ. நாகப்பச் செட்டியாரவர்கள் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்தெட்டாம் ஆண்டிலிருந்து சபைச் செயலராகப் பணியாற்றினார். இவர் சபைக்கு தேவையான பொருளுதவிகளை அவ்வப்போது வழங்கியுள்ளார். மாணவரில்லத்தை தம் பொருட்செலவிலேயே கட்டித்தந்துள்ளார்.
இவருக்குப் பின்னர் சா. அண்ணாமலைச் செட்டியார், சித. பழநியப்பச் செட்டியார். ப. சா. சிங்காரம் செடட்டியார் ஆகியோர் செயலர்களாகப் பணியாற்றியுள்ளனர். தற்பொழுது அ. சாமிநாதன் செட்டியார் சன்மார்க்க சபைச் செயலராகப் பணியாற்றிவருகிறார்.

சபை தொடங்கிய காலத்திலிருந்து செயலர் பொறுப்பை சபைத் தொடர்புடையாரே ஏற்றுவந்தனர். சபைத் தலைவர் பொறுப்புக்களை வ. பழ.சா. குடும்பத்தார் ஏற்று வந்தது போலவே தற்பொழுது சபைச் செயலர் பொறுப்பினையும் இக்குடும்பத்தாரே ஏற்று செயல்படுத்தி வருகின்றனர்.

நூற்றாண்டு விழா
சன்மார்க்கசபை கிராமப்புற மக்களின் வாழ்க்கையில் விழிப்புணர்வை உருவாக்கியது. சமுதாயத்தில் மாறிவரும் காலச் சூழலுக்கு ஏற்ற வகையில் வாழ்வதற்குரிய வழிமுறைகளை இளைஞர்களுக்கு எடுத்துணர்த்தியது.

சன்மார்க்க சபையின் இப்பணிகள் இன்று, நேற்று உருவானது அல்ல. தனி ஒருவரின் தொண்டுமல்ல. நூற்றாண்டுகளுக்கு முன்னர், முன்னோர் விதைத்த விதைகளின் பலனே இப்பணிகள் என்றால் அது மிகையாகாது.
அன்று தொடங்கிய இத்தன்னிகரில்லாப் பணி இன்று ஆலமரமாக விரிந்து உயர்ந்துள்ளது. அவ்வுயர்வினைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவதற்கான நிகழ்வுகள் இச்சன்மார்க்க சபையினரால் தொடங்கப்பெற்றுள்ளன.

இவ்விழாவிற்காக சன்மார்க்க சபையின் முகப்பு மண்டபம் தற்கால கட்டிடப் பாணியில் கட்டப்பெற்றுவருகிறது. நூற்றாண்டு விழா நினைவுக் கட்டிடம் எழுப்புவதற்கு உரிய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு செப்படம்பர் மாத்தில் நூற்றாண்டு விழா நிகழ்வுகளைத் தொடங்கி ஓராண்டு முழுவதும் கொண்டாடுவற்குரிய திட்டங்கள் உருவாக்கப்பெற்று வருகின்றன.

சன்மார்க்க சபை தோன்றிய காலத்திலும், அதன் பின்னரும் கல்வி, சமய, ஒழுக்கம் ஆகியவற்றை வளர்ப்பதற்காக பல சங்கங்கள் தோன்றின. ஆயினும் அவை காலவெள்ளத்தில் நிலைபெறாது போயின. சன்மார்க்க சபை நீடித்து, நூற்றாண்டைக் காண்பதற்கு அதன் சமுதாய நோக்க மிக்க செயல்பாடுகளே காரணமாகும்.

1 கருத்து: