திங்கள், 15 மார்ச், 2010

உலகத்தின் அரசமொழி

இந்த பிரபஞ்சம் மௌனத்தை மட்டுமே வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் உலகத்தின் காதுகளில் உச்சரிக்கப்பட்ட முதல் மொழி தமிழ்.இந்துக்களுக்கு ஒரு கீதையும் கிறித்தவர்களுக்கு ஒரு பைபிளும் இஸ்லாமியர்களுக்கு ஒரு குரானும் போதாதென்று மனித குலத்திற்காக செய்யப்பட்ட மகத்தான வேதம்தான் திருக்குறள். கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி.கணியூர் என்னும் புழுதிக் காட்டில் எழுதப்பட்ட 'யாது ஊரே யாவரும் கேளிர்" என்ற பூங்குன்றனின் வரிகள் ஐக்கிய நாட்டு சபையில் உலகத்து உறவினர்களை புன்னகையுடன் வரவேற்கிறது. நயாகர நீர் வீழ்ச்சியிலும் கூட தமிழ் "வணக்கம்" சொல்லிக் கொண்டிருக்கிறது. இப்படியான ஓர் உலகத்தின் ராஜபாசை உள்ளூரில் காயப்பட்டுக் கொண்டிருப்பது வேதனை அல்லவா ? .'தமிழகத்தின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை 'என்ற பாவேந்தனின் வருத்தம் இன்னும் தீர்ந்தபாடில்லை.'தென்பொதிகை தமிழ் கற்று வீசும்போது தேம்சுநதி காற்றுக்கு ஏன் ஏங்குகின்றாய் ,உன் முதுகா பல்லக்கு வடமொழிக்கு,உன் நாக்க ஆங்கிலத்தின் காலடிக்கு'என்ற கேள்விகளால் வேள்விசெய்து கொண்டிருக்கிறோம்.'மெல்லத் தமிழ் இனி சாகும் 'என்று ஆதங்கப்பட்ட பாரதிக்கு நாம் ஆறுதல் சொல்லும் நாள் வருமா?ஒரு தமிழ் தலைமுறை தமிழ் படிக்காமலேயே வளர்ந்து வருவது கேவலமல்லவா?பள்ளிகளில் பிஞ்சுக் குழந்தைகளின் வாயில் ஆங்கில வசம்பை தடவோம் கல்வி முதலாளிகளே இதற்க்கு மூலகாரணம்.தமிழ் நாட்டில் தமிழ் மாணவன் தமிழில் பேசியதற்காக தண்டத்தொகை வசூலிக்கும் ஆங்கில அடிவருடிகள் இருக்கத்தானே செய்கிறார்கள் .ஒரு மொழி அழிந்துபோகிற பொது அதனோடு சேர்ந்து ஒரு இனமும் அழிந்துவிடும் என்று அறிந்தும், மொழிக்காக குரல் கொடுக்காமல் இருப்பதற்காக வேக்கப்படுவதை தவிர வேறென்ன செய்யமுடியும் என்று யாரும் நினைக்கலாகாது. ஒரு தேசிய மொழியை (இந்தி)ஒழிப்பதற்காக உயிரை ஈந்த மொழிப் போராளிகள் ஒரு சர்வாதிகாரிகளின் மொழியை தலைக்குமேல் வைத்து கொண்டாடுவதை விட வேறென்ன கேவலம் இருந்துவிட முடியும். அரக்கர்களால் வீசப்பட்ட கிளஷ்டர் குண்டுகள் தமிழர் மீது மட்டுமே வீசப்பட்டதல்ல .தமிழரின்,மொழி-கலை-வரலாறு-பண்பாடு-கலாசாரம்-இலக்கியம்- போன்ற பலவற்றின் மீது வீசப்பட்டிருக்கிறது என்பதை நாம் காலம் கடந்தே உணரப்போகிறோம் .தமிழ் உள்ளூரில் வதை படுகிறது ,தமிழர்கள் உலகம் எங்கும் வதைபட்டு கொண்டிருக்கிறார்கள். மொழி உணர்வை முன்னெடுத்து வைப்போம் .மொழியால் ஒன்றிணைவோம் .வெல்க தமிழ் ! வாழ்க தமிழர் !