வெள்ளி, 15 ஏப்ரல், 2011

சித்திரை-தமிழ் புத்தாண்டு

சித்திரை முதல் தேதியை தமிழ் புத்தாண்டு என கொண்டாடுவது அறிவியல் பூர்வமற்றது எனவும், முற்காலத்தில் தமிழர்கள் தை முதல் தேதியை தான் புத்தாண்டு என கொண்டாடினர் எனவும் சில தமிழ் அறிஞர்கள் வாதிட, தமிழ் அறிஞர்களின் பரிந்துரை என கூறி தமிழக அரசு இனி தை திங்கள் முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு என அறிவித்தது.

சமுக சமய கருத்துக்களின் அடிபடையில் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சித்திரை முதல் தான் தான் கோவில்களில் நாங்கள் வழிபாடுகள் நடத்துவோம் என கூறினர். தை முதல் நாளை புத்தாண்டு என அறிவிப்பதை எதிர்க்கின்றனர்.



ஆண்டின் துவக்கம் என்பது நாள் காட்டி சார்ந்தது. நாள் காட்டி என்பது நாள் மாதம், ஆண்டு என கால பொழுதின் பிரிவுகளை அடுக்கும் கருவி. இதில் நாள் என்பது இயல்பாக அறிய முடியும். சூரியன் உதயத் திலிருந்து மறு உதயம் வரை ஒரு நாள் என கணிக்கலாம்.இன்று கடிகாரம் வந்த நிலையில் நடு நிசியிலிருந்து அடுத்த நடு நிசி வரை நாள் என கொள்கிறோம், ஆனால் முற்காலத்தில் சூரிய உதயம் தான் நாளின் துவக்கம் என கொள்ள பட்டது.

நாள் என்பதை எளிதில் அறிய முடிகிறது, மாதம் என்பது என்ன? உலக வரலாற்றில் எங்கும், எல்லா கலாச்சாரத்திலும், நிலவு தான் மாதம் எனும் கால பிரிவை சுட்டி நின்றது. தமிழில் மாதம் என்பது திங்கள்; திங்கள் என்பது நிலவு. அதுபோல ஆங்கில “மன்த்” லத்தின் மொழியில் நிலவு எனும் பெயரிலிருந்து உருவானதே. உலகெங்கும் பல மொழிகளில் மாதத்திற்கு பெயர் நிலவு தான். நிலவின் வளர பிறை தேய் பிறை இயக்கம் தான் மாதம். ஒரு முழு நிலவிலிருந்து மறு முழு நிலவு வரை மாதம்.

சித்திரை, வைகாசி, ஆணி..என மாதங்களின் பெயர்கள் ஏற்பட்டது எப்படி?. ஒவ்வொரு நாளும் நிலவு வானில் குறிப்பிட்ட ஒரு விண்மீனுக்கு அருகில் நிலை கொள்ளும். அதன் விண்மீன் தான் அந்த நாளின் நட்சத்திரம். அடுத்த நாள் வேறு ஒரு நட்சத்திரம். இப்படி நாள் ஒன்றிக்கு ஒரு நட்சதிரதிர்க்கு அருகில் காட்சி தரும். இருபத்தி ஈழு நாளுக்கு பிறகு நிலவு அதே முதல் நட்சதிரதிர்க்கு மறு படி வந்து சேரும்.

தேய்- வளர பிறை காட்டும் நிலவு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நட்சதிரம் என நகர்ந்து வரும் போது எதாவது ஒரு நட்சத்திரத்தில் முழு நிலவாக இருக்கும் அல்லவா? நிலவு எந்த நட்சத்திரத்தில் முழு நிலவு நிலை கொள்கிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயர் தான் அந்த மாதத்தின் பெயர். அதாவது சித்திரை மாதத்தில் முழு நிலவு கொள்ளும் நாள் சித்திரை நட்சத்திரமாக இருக்கும் (சில இந்திய நாள் காட்டிகளில் முழு நிலவு அல்ல அம்மாவசை கொண்டு நாள் மாதம் குறிக படுகிறது.) சித்திரை நட்சத்திரத்தில் முழு நிலவு அமைந்த பின் அடுத்த மாதம் விசாக நட்சத்திரத்தில் முழு நிலவு ஏற்படும். அது விசாக மாதம்- அல்லது வைகாசி.

ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நட்சத்திரத்தில் முழு நிலவு நிகழும். மொத்தம் இருபத்தி ஏழு நட்சத்திரங்கள் இருந்தாலும் பன்னிரண்டு நட்சடிரங்களில் மட்டுமே முழு நிலவு காட்டும். இவ்வாறு மொத்தம் இருபத்தி ஈழு நட்சத்திரங்களில் வெறும் பன்னிரண்டு நட்சத்திரங்களில் மட்டுமே நிலவு முழு நிலவு நிலை கொள்ளும் என பண்டைய மக்கள் அறிந்திருந்தனர். உடனே வேத காலத்திற்கு செல்ல வேண்டாம். வேத காலத்திற்கு முன்பே கற்காலம் சார்ந்த பழங்குடி மக்கள் – நிகோபரி முதலிய மக்கள்- இதனை அறிந்திருந்தனர். இந்திய விற்கு வெளியே பல நாகரிங்கங்களும் அறிந்திருந்தன.

நிலவு பன்னிரண்டு முழு நிலவுக்கு பிறகு மறுபடி முதல் மாத நட்சடிரதிர்க்கு வந்து முழு நிலவு கொள்ளும். முழு நிலவிலிருந்து முழு நிலவு என கொண்டால் ஒரு மாத காலம் 29.5 நாட்கள், எனவே இந்திய இஸ்லாமிய மாதங்களில் 29-30 என மாறி மாறி நாட்கள் அமையும். பாநிரெண்டு மாதத்தில் மொத்தம் 354 நாட்கள் மட்டுமே என்பதை கவனத்தில் கொள்க. ஆனால் நமக்கு பூமி சூரியனை சுற்றிவரும் காலம் சுமார் 365 நாட்கள் என தெரியும்.

இஸ்லாமிய நாள்காட்டி, திபெத்திய நாள் காட்டி முதலிய சூரியனின் செலவை கணக்கில் கொள்வதில்லை. எனவே இஸ்லாமிய மற்றும் திபெத்திய நாட்காட்டிகளில் ஒரு ஆண்டு என்பது வெறும் 354 நாட்கள் கொண்டவை யாக அமைகிறது. அரபிய பாலைவனத்திலும் திபெத்திய பனி பிரதேசத்திலும் பருவ காலங்கள் குறிப்பிடும் படியாக இல்லை. எனவே இங்கு சந்திர இயக்கத்தை மட்டுமே கொண்ட நாட காட்டிகள் போதுமானதாக இருந்ததன.

இந்தியாவில் குறிப்பாக, கற்காலதிற்கு பிறகு சமுக வளர்ச்சியின் ஊடே உழவு தொழில் சமூகம் உருவகியதும் நிலவு சார்ந்த நாள் காட்டி போதுமானதாக இல்லை. பருவ காலத்தோடு பொருந்த வேண்டி இருந்தது. எனவே தான் தமிழர்கள் உட்பட இந்திய பகுதியில் பல சமூகங்கள் சூரியனி சேர்ந்து இயங்கும் சூரிய- சந்திர நாட்காட்டிகளை உருவாக்கினர். மலையாள நாடு போன்ற பகுதியில் சந்திரனை முற்றிலும் தவிர்த்து சூரிய நாட்காட்டி உருவாக்கினர்.

சூரிய நாட்காட்டி மற்றும் சூரிய சந்திர நாட்காட்டியில் எந்த நாளோ புது ஆண்டு துவக்கம் என கொள்வது என்ற கேள்வி எழுந்தது. சூரியனின் இயக்கம் கவனமாக உற்றுநோக்கப்பட்டது.

சூரியன் எங்கே உதிக்கும் என்ற கேள்விக்கு நாம் எல்லோரும் உடன் கிழக்கு என பதில் கூறுவோம். ஆனால் சூரிய உதயத்தை கவனமாக உற்று நோக்கினால் எல்லா நாளும் சூரியன் மிக சரியாக கிழக்கில் உதிபதில்லை என்பதுபுலப்படும். ஆண்டில் இரண்டே இரண்டு நாள் தான் சூரியன் மிக சரியாக கிழக்கில் உதிப்பன். வேனில் காலத்தில் மார்ச் 21/22 மற்றும் குளிர் காலத்தில் செப்டம்பர் 21/22 ஆகிய நாட்களில் தான் சூரியன் மிக சரியாக கிழக்கில் உதிக்கும்.

மற்ற நாட்களில் சூரிய உதயம் வட கிழக்கு அல்லது தென் கிழக்கு திசையில் இருக்கும். எடுத்துக்காட்டாக மார்ச் 21 அன்று மிக சரியாக உதய புள்ளி கிழக்கில் இருக்கும். ஆனால் அதற்க்கு அடுத்த நாள் வட கிழக்கில் உதய புள்ளி அமையும். அதற்கும் அடுத்த நாள் மேலும் உதய புள்ளி வடக்கு நோக்கி நகரும். இவ்வாறு வடக்கு நோக்கி நகரும் உதய புள்ளி உச்ச பட்ச வடக்கு திசையில் ஜூன் 21 அன்று நிலை கொள்ளும். அதன் பின் சூரிய உதய புள்ளி தெற்கு நோக்கி விலகும். இதனை தான் தட்சிணாயணம் என்பர். அதாவது சூரியனது உதய புள்ளியின் தென்திசை ஓட்டம்,

தெற்கு நோக்கி நகரும் உதய புள்ளி மறுபடி செப்டம்பர் 21/22 சரியாக கிழக்கு திசையில் அமையும். மேலும் தென்திசை நகர்வு தொடர்ந்து உச்சபட்ச தென் தென்திசை உதயம் டிசம்பர் 21/22 அன்று நிகழும். அதன் பின் சூரிய உதய புள்ளியின் நிலை வடக்கு நோக்கி செல்ல துவங்கும்.இதுவே உத்தராயணம். சூரிய உதய புள்ளியின் வட திசை செலவு.

சூரியன் மிக சரியாக கிழக்கில் உதிக்கும் அந்த இரண்டு நாட்கள் மட்டும் தான் இரவு மற்றும் பகல் பொழுதுகள் சமாக இருக்கும். ஏனைய நாட்களில் பகல் பொழு நீண்டோ அல்லது இரவு பொழுது நீண்டோ அமையும். எனவே இந்த இரண்டு நாட்களை சம இரவு பகல் நாள் என்பர். உத்தராயண சூரிய புள்ளி நகர்வின் போது, இந்திய போன்ற வட கோள புவி பகுதியில், நேற்றயதை விட இன்று பகல் பொழுது காலம் கூடுதலாக அமையும். இன்றயதை விட நாளை பகல் பொழுது காலம் கூடுதலாக அமையும். இதற்கு நேர் மாறாக உத்தராயண காலத்தில் பகல் பொழு காலம் நாள்பட குறைந்து வரும்.



துருவ பகுதிகளில் ஆறு மாதம் பகல் ஆறு மாதம் இரவு என இருக்கும் என நாம் படித்திருப்போம். உத்தராயண் காலம் தான் வட துருவத்தில் பகல். தட்சிணாய காலம் வட துருவத்தில் இரவு. தென் துருவ பகுதியில் இதற்கு நேர் மாறாக இருக்கும் என்பதை சொல்ல தேவையில்லை.



ஆக சூரிய இயக்கத்தில்– சரியாக கிழக்கில் உதிக்கும் இரண்டு நாட்கள் [மார்ச்21/22, செப்டம்பர் 21/22] , உச்ச பட்ச வட கிழக்கு உதய புள்ளி (தட்சிணாயணம் மே 21/22) உச்ச பட்ச தென் கிழக்கு உதய புள்ளி (உத்தராயணம் டிசம்பர் 21/22) ஆகிய நான்கு நாட்கள் சிறப்பானவை. இந்திய நாட்காட்டிகளில் பொதுவே இந்த நான்கு நாட்களில் உத்தராயணம் (டிசம்பர் 21/22), மற்றும் வேனில் கால சம இரவு பகல் நாள் ஆகியவற்றை (மார்ச்21/22) ஆண்டின் முதல் நாள் என கொள்ளும் பல்வேறு நாள் காட்டிகள் உள்ளன.

தை திங்கள் உத்தராயணம் டிசம்பர் 21 அன்று ஏற்படுகிறது என்றால் நாம் மட்டும் தை திங்களை ஜனவரி 14 அன்று கொண்டாடுவது ஏன்? உள்படியே இது ஜோதிடர்கள் மற்றும் பிற்போக்கு பதம் பசலிகள் ஏற்படுத்திய நடைமுறை. நாள் காட்டிகள் செழுமை படுத்த பட்ட காலத்தில், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் முன்பு உத்தராயணம் ஜனவரி 14 (தை முதல் நாள்) இருந்தது. அனால் இன்று இந்த வடஓட்டம் டிசம்பர் 21/22 அன்று நடைபெறுகிறது. வேனில் கால சம இரவு பகல் நாள் ஏப்ரல் 14 அதாவது சித்திரை முதல் நாள் எனவும் இருந்தது. இன்று இது மார்ச் 21/22 அன்று நிகழ்கிறது. இந்த வித்தியாசம் ஏன் ஏற்பட்டது? உத்தராயணம் மற்றும் வேனில் கால சம இரவு பகல் நாள் முதலிய நடைபெறும் நாள் வித்தியாசம் ஏன் ஏற்படுகிறது?

இதனை விளங்க பூமியின் சிறப்பு இயக்கம் ஒன்றை விளங்க வேண்டும். பூமி நாள் ஒன்றுக்கு ஒருமுறை தன்னை தானே சுற்றுகிறது, இதுவே ஒரு நாள். சுமார் 365 நாள்களுக்கு ஒரு முறை சூரியனை சுற்றுகிறது இது ஆண்டு. இந்த இரண்டு இயக்கம் தவிர பம்பரம் தலை ஆடுவது போல் வேறு ஒரு இயக்கம் பூமிக்கு உள்ளது. இதனை ஆங்கிலத்தில் precession எனவும் இந்திய வானவியல் பாரம்பரியத்தில் அயன சக்கிரம் எனவும் கூறுவார். (ஜோதிடர் கூறும் அயன அம்சம் இல்லை). இதன் காரணமாக தான் இரண்டாயிரம் வருடம் முன்பு இருந்த நிலையில் ஜனவரி 14 அன்று உத்தராயணம் நிகழாமல் டிசம்பர் 21 அன்றே நிகழ்ந்து விடுகிறது.

கற்கால பழங்குடி மக்கள் இரவு வானில் சூரியன், சந்திரன் முதலிய வற்றின் இயக்கத்தை உற்று நோக்கி அறிவியல் பூர்வமாக வானியல் அடிபடையில் உருவான நாள் காட்டி காலப் போக்கில் ஜோதிடர் கையில் வந்தது. ஜோதிடர்கள் ஏன் எப்படி என்ற அறிவு இல்லாமல் அன்று எழுதி வைத்த வாக்கியம் என்று கூறிக்கொண்டு வான இயக்கம் மாறி போனதை கண்டும் காணமல் சென்றதன் விளைவு தான் ஜனவரி 14 அன்று தை முதல் நாள் எனவும் உத்தராயணம் எனவும் இன்றும் கூறி வருகிறோம்.

தமிழ் மற்றும் இந்திய நாள்காட்டி களில் மட்டும் தான் இந்த சிக்கல் ஏற்படுகிறதா, ஏன் மேலை (ஆங்கில) நாள் காட்டியில் சிக்கல் இல்லை என கேள்வி எழுப்பலாம். உள்ளபடியே ஆங்கில நாள்காட்டியிலும் சிக்கல் ஏற்பட தன் செய்ததது. நாள்காட்டி சீர்திருத்தம் செய்து இதனை சரி செய்தனர்.



ரசிய புரட்சியை அக்டோபர் புரட்சி என்கிறோம், கொண்டாடுவது நவம்பர் 7இல். ஏன் தெரியுமா? அயன சக்கிர சலனத்தால் ஐரோப்பிய நாள்காட்டியும் பிழை கண்டது. ஈஸ்ட்டர் திருநாள் ஞாயிற்றுக்கிழமை தான் ஏற்படவேண்டும். புனித வெள்ளி வெள்ளிகிழமை தான் ஏற்படவேண்டும். இவை நிலை தவறியது. எனவே தான் கிரோகோரி எனும் போப் ஐரோப்பிய நாள்காட்டியை சீர் செய்தார். அதன் தொடர்ச்சியாக சுமார் பதினோரு நாட்கள் விடுபட செய்து நாள்காட்டி செய்யப்பட்டது. புரட்சிக்கு முன்பு ரஷ்யாவில், ஐரோப்பாவில் பயன்படுத்திய துவங்கி இருந்ததும், பத்தாம்பசலி பிற்போக்கு ஜார் அரசு சீர்திருத்த நாட்காட்டியை பயன்படுத்தவில்லை. புரட்சி நடந்தபோது இருந்த நாள்காட்டியில் அக்டோபர் 26, ஆனால் புரட்சிக்கு பிறகு அறிவியல் பூர்வ நாள்காட்டி வந்த பின் நவம்பர் 7. அதனால் தான் அக்டோபர் புரட்சியை நவம்பர் மாதத்தில் கொண்டாடுகிறோம்.





ரஷ்யா புரட்சி போல, இந்திய விடுதலைக்கு பிறகு நமது நாள்காட்டிகளும் அறிவியல் பூர்வமாக இருக்க வேண்டும் என்ற அவாவில் திருக்கணித பஞ்சாங்கம் எனும் நாள் காட்டிகள் ஏற்படுத்த பட்டன. ஆயின் பழம் பஞ்சாங்கங்கள் கடவுள் கொடுத்த வாக்கியம் பாரம்பரியம் எதுவம் மாற கூடாது என கூறி சீர்திருத்தங்களை தடுத்து வருகின்றனர். கேரளாவில் சுமார் ஐநூறு ஆண்டுகள் முன்பே சீர்திருத்தம் வேண்டும் என வானவிலயளர்கள் கூறி யுள்ளனர். சமீபத்தில் மேகநாத் சாஹா எனும் உலக புகழ் பெற்ற விஞ்ஞானி (இடது சாரி வேட்பாளராக போட்டியிட்டு வென்று பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்) இந்திய நாள்காட்டியை சீர்திருத்தம் செய்ய வேண்டும் என முயற்சி செய்தார். இந்தியாவில் உள்ள பல்வேறு நாள்காட்டிகளை ஒருங்கிணைத்து இந்திய தேசிய நாட்காட்டி தயாரித்தார். நட்பில் உள்ள வானியல் நிலைக்கு ஏற்ப மார்ச் 21 அன்று துவங்கும். சட்டப்படியான, அலுவல் சார்ந்த இந்திய நாட்காட்டி குறித்து மதிய அரசு அதிகரிகளுக்கு கூட இன்று தெரியாது. இது தான் வேடிக்கை.



நாள் காட்டியில் மாற்றம் வேண்டும் எனவும், பழம் தமிழர்கள் தை முதல் நாளை - உத்தராயணம் தினத்தை தான் ஆண்டின் துவக்கம் என கொண்டார்கள் என தீர ஆராய்ந்து தெளிவாக கூறிய தமிழ் அறிஞர்களுக்கு அறிவியல் தெரிந்திருக்கும். எனவே உத்தராயணம் உள்ளபடியே இன்று டிசம்பர் 21 இல் தான் ஏற்படுகிறது என ஏன் அரசின் கவனத்திற்கு கொண்டு வரவில்லை. பிற்போக்கு ஜோதிடர்களுடன் சமரசமா? தமிழ் மரபில் உத்தராயணம் தான் சரியான ஆண்டின் துவக்கம் என கொள்வதாக இருந்தாலும் தை முதல் நாளை டிசம்பர் 21க்கு மாற்றி, மேகநாத் சாஹா போல அறிவியல் பூர்வமான நாள் காட்டியில் செய்யாமல் பாதி கிணறு தாண்டிய செயலாக தான் தமிழக அரசின் முயற்சி புலபடுகிறது.


thanks
written by
su po Agaththiyalingam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக