சனி, 29 மே, 2010

தோற்றுப் பழகு

யாரேனும்
உள்ளுறுத்தும் படியாய்
ஈனப்பார்வை பார்த்தால்
பதிலுக்கு
ஈரப்பார்வை பாருங்கள்.

வெடிக்க ஒலிக்கும் - பிறரின்
எக்காளச் சிரிப்பைவிட
சலனமற்ற
அடர்த்தியான மெளனம்
சக்தி வாய்ந்தது.

முத்துத் தண்டுவடத்தை - யாரும்
முறித்துப் போடவில்லை.
நிமிர்ந்து பாருங்கள்
தாழ்வு மனப்பான்மை
குனிந்துகொள்ளட்டும்.

நேற்று விழவைத்தவர்களை
இன்று அழவைப்பவர்களைத்
தொழுது வையுங்கள்.
விழவைத்து அழவைத்து - உங்களை
எழவைப்பவர்கள்
அவர்கள்தான்.

செந்தணலாய் எரியும்
அவமானச் சிவப்பை - உன்
கன்னங்களில்
காணத் துடிப்பவர்களுக்குக்
குளிர்நிலவாய் காட்சிகொடுங்கள்.

பள்ளம் பறித்தால்
இரண்டையும் கற்றுக்கொள்ளுங்கள்
விழுவதையும் எழுவதையும்.

சரமாரியாய் - உங்களை
குறிவைத்துப் பாயும்
சரங்களை சேமித்து
செய்துகொள்ளுங்கள்
உங்களுக்கான வலிய கேடயம்.

உங்கள் மீது
கல்லெறிகிறவர்களைக் கைத்தொழுங்கள் - அந்த
கற்களை அடுக்கிவைத்தால்
இமயம் செய்யலாம்.

யாரேனும்
சொற்களை முள்ளாக்கி
கீறினால் - இதயத்தில்
உழவு நடப்பதை
வலியுடன் மகிழுங்கள்.

நகுதல் ஒலிகளை
நாத கீதமாய்
நுகர்ந்து பாருங்கள்.
திட்டுமொழிகள் கூட
தித்திக்கும் மொழியாய் இனிக்கும்.

பொடிவைத்து பேசினால்
படி வைத்து பேசுங்கள்.

உளைச்சல்களே
விளைச்சல்கள் தரும்
வருத்தங்களே
திருத்தங்களைத் தரும்.

கை கொட்டிச்சிரித்தால்
கெட்டிச்சிரிப்பை கொடுங்கள் .

எல்லோருக்கும் பிடிக்காத சனம்
பிடித்தசனம் ஆகட்டும்
'விமர்சனம்'.

சிக்கிக் கொள்ளாதீர்கள்
கவலைகள்
வலைகள் வைத்திருக்கின்றன.

வலியோனாய் வாழ்ந்து
எளியோனாய் காட்சிக்கொடு

வாழ்க்கையில் பயணப்படுகிறபோது
பாதங்களைப் பதம்பார்க்கும்
கூரிய முட்களை
ஊசியாக்கிக் கொண்டால்
உதிரிப்பூக்கள்
மாலையாகிக்கொள்ளும்.

தோற்பதும் வெல்வதும்
வீரனுக்கு அழகு.
முதலில்
தோற்றுப்பழகு.

சனி, 8 மே, 2010

காதல் குறட்பாக்கள்: 27

மாந்தளிர் நிறம்கொண்ட
பூந்தளிர் பூவையைத்
தழுவும் இன்பம்
உன்னத உழைப்பில்
கிடைத்த உணவைப்
பிறருக்கும் கொடுத்து
தானும் சுவைக்கும்
இன்பத்திற்கு இணையானது.

இனிய உணவு
இரைப்பை நிரப்பும்
இனிய உணர்வு
இதயப்பை நிரப்பும்
--------------------------------------
குறள்: 1107
தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு

காதல் குறட்பாக்கள்:26

உயிராற்றல் பாய்கிற
உன் மூங்கில் தோள்களை
தொடும்போதெல்லாம்
என் விரல்
புல்லாங்குழல் ஆகிறதே.
எதனால் செய்யப்பட்டிருக்கின்றன
உன் தோள்கள் ?

அழகினாலா ?
அமிழ்தினாலா?
--------------------------------------------
குறள்:1106
உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.

காதல் குறட்பாக்கள்:25

உன்
ஆடை நழுவுகையில்
உன்
தோளை தழுவுகையில்
நான்
நினைக்க விரும்புகிற
பொருளாக நீ!
நான்
விரும்பி நினைக்கிற
பொருளாகவும் நீ!
---------------------------------------
குறள்:1105
வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்

காதல் குறட்பாக்கள்:24

அன்பே!
நீயொரு அதிசயத் தீ!
நெருங்கினால் பனிக்கிறாய்
விலகினால் எரிக்கிறாய்.
-------------------------------------------
குறள்:1104
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றால் இவள்

காதல் குறட்பாக்கள்:23

காதலியே !
உன் மெல்லிய தோள்தழுவி
பஞ்சணையிலும் நெஞ்சணையிலும்
பள்ளிகொள்ளும் துயிலின்பம்
சொர்கத்தின் சுகத்தைக்காட்டிலும்
சுகமானது.

எத்தனை கோடி
இன்பம்வைத்தாய் இறைவா !
இவளிடம்.
---------------------------------------------
குறள்:1103
தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு

செவ்வாய், 4 மே, 2010

காதல் குறட்பாக்கள்:22

தலைவலிக்கு எனவும்
ஜலதோசத்திற்கு எனவும்
தனித்தனி மாத்திரைகள் உண்டு .

அன்பே!
உன்னால் ஏற்பட்ட
காதல் காய்ச்சலுக்கு
நீதானே மருந்து .

காதல் மருத்துவமனையில்
அவசர சிகிச்சைபிரிவில்
அனுமதிக்கப்பட்டிருக்கிறேன்
முத்த மாத்திரைகளை
மொத்தமாய் கொண்டுவா!
-----------------------------------
குறள்:1102
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து

காதல் குறட்பாக்கள் :21

செவியால்; விழியால்;
இதழால்; உயிரால்; உடலால்;
ஆனா
ஐம்புலன் இன்பம்
கிடைக்கிறது
இவள்
ஒருத்தியிடம் மட்டுமே
-----------------------------------------------
குறள்:1101
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள

காதல் குறட்பாக்கள்:20

புருவ வில்லுக்குக்
கீழுள்ள இமைகள்
சொல்லெடுத்துக் கொடுக்க
கண்கள் கிசுகிசுக்கின்றனவே ஏன்?
வார்த்தைகள்
விடுப்பு எடுத்துக்கொண்டனவோ?
சைகைமொழி பேசும்போது
சப்தமொழி எதற்கென்று
மெளன விரதமா ?

இருந்தாலும்
இடைவிடாமல்
பேசிக்கொண்டே இருக்கின்றன
உன் பேரழகு விழிகள்
----------------------------------------------------
குறள்:1100
கண்ணோடு கன்ன்நினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல

காதல் குறட்பாக்கள்:19

எதிர் எதிர்
பார்க்கிறாய்.
எதிரிபோல் பார்க்கிறாய்
கூட்டத்தில் என்னைக்
குறிப்பாய் பார்க்கிறாய்.

காதலியே!
உன் இனிய விழிகளில்
வறட்சிப்பார்வையும்
உன் இதய மொழிகளில்
ஈர வார்த்தையும்
காதல் நாடகத்தில்
நீ போடும்
இரட்டை வேடங்கள்தானே ?
---------------------------------------
குறள்:1099
எதிலார்ப் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள

ஞாயிறு, 2 மே, 2010

காதல் குறட்பாக்கள் : 18

நான்
உன்னை ரசித்துப்பார்த்தேன்
நீ
என்னை பார்த்துரசித்தாய்.
புன்னகை பூப்பூக்க
ஓசையில்லாமல் சிரிக்கும்
சிரிப்பழகியே!
மயிலழகை
நடையழகில் கொண்ட
எனதழகியே!
கூடிக்கொண்டே இருக்கிறது
உனது
அழகின் கனம்
---------------------------------------------
குறள்:1098
அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.

சனி, 1 மே, 2010

காதல் குறட்பாக்கள்:17

மெல்லியல் மீதுபாயும்
வல்லினச்சொற்கள்
வார்த்தை வாள்களல்ல
வசந்தத்தின் முன்னறிவிப்புகள் !

எதிரியைப்போல பார்க்கும்
எதிர்ப்பார்வைகள்
புரியாத பார்வைகளல்ல
புதிர்போடும் புதியபார்வைகள்!

இங்கு
இருவருமே நிராயுதபாணிகள்
இருந்தாலும்
இடைவிடாமல் நடக்கிறது
காதல்போர்.
---------------------------------------------
குறள்:1097
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு

காதல் குறட்பாக்கள்: 16

என்னை
மூன்றாமவனைப் போல்
முன்கோபித்த சினச்சொற்கள்
உன்
இதய தேசத்தின்
இசை மொழியா?
வசை மொழியா?

கண்டுகொண்டேன்
கண்டுகொண்டேன்
--------------------------------------------
குறள்:1096
உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர் சொல்
ஒல்லை உணரப் படும்