திங்கள், 27 ஜூன், 2011

தேசிய விருதாளர் ஜீவாவும் நானும்


மனதின் திரைசீலையை விலக்கிப்பார்த்தால் நட்பின் காட்சிகள் விரிகின்றன.ஜீவாவும் நானும் நீண்டகால நண்பர்கள் அல்ல.ஜீவாவைப் பற்றி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்,ஆனால் ஜீவாவுடனான நேரடி தோழமைக்கு உண்மையில் ஒரு ஐந்து வயதுதான் ஆகிறது.இருந்த போதிலும் ஜீவா ஒரு இனிய நண்பர்.இலக்கியக் கூட்டங்கள் திரையிடல் நிகழ்வுகள் ஓவியக்கண்காட்சிகள் என்று மொழியும் கலையும் சார்ந்தவற்றில் மட்டுமே சந்தித்து சிந்தனைகளைப் பரிமாறிக்கொண்டிருக்கிறோம்.என் எழுத்திற்கு இவரது ஓவியத்திற்கும் இடையேயான தொடர்புதான் என்னையும் அவரையும் ஒன்று சேர்த்திருக்கிறது.

மனிதக்குலத்திற்கான மகத்தான வேதமாக விளங்கும் திருக்குறளை இன்னும் புதிய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கவில்லையே என்ற ஏக்கத்தில் நான் எழுதிய நூல்தான் "காதல் குறட்பாக்கள்" ஆகும். இன்பத்துப்பாலை இன்றைய தலைமுறை படிக்கும் விதத்தில் கவிதைப்பாலாக மாற்றிய அந்த நூலுக்கு தேவையான கோட்டோவியங்களுக்காக பிரத்யேகமான ஒரு கலைஞரைத் தேடிய போதுதான் எனக்கு ஜீவா அறிமுகத்திற்குப் பிறகு நெருக்கமானார். மிக மிக குறுகிய காலக்கட்டத்தில் அழகாய் அர்த்தப்பாடுடைய வள்ளுவக் கவிதைகளை ஓவியங்களாகத் தீட்டி தந்தது பிரமிப்பை ஏற்படுத்தியது திருவாளர் ஜீவா அவர்கள். காதலின் எல்லா உணர்வுகளையும் பிசகாமல் என் கவிதையையும் தாண்டி ஜீவாவின் ஓவியங்களே ஆத்மார்த்தமாய் பேசின.ஜீவாவின் இந்த பங்களிப்பு ஜீவாவிற்குள் இருக்கும் ஒரு நேர்த்தியான இலக்கிய வாதியை எனக்கு அடையாளம் காட்டியது.வள்ளுவன் சங்ககாலத்தமிழில் சொன்னதை சிரத்தைஎடுத்து நான் சமகாலத் தமிழில் சொல்லிமுடித்தேன்.ஜீவாவோ மிகவும் இலகுவாக ஒவ்வொரு ஓவியத்திலும் நூறு நூறு செய்திகளை அழகாக உச்சரிக்க வைத்தார்.இந்நூலுக்கு அணிந்துரை எழுதிய வானம்பாடிக் கவிஞர் 'சிற்பி' பாலசுப்ரமணியன் அவர்கள் கவிதை குறித்தும் ஜெவாவின் படங்கள் குறித்தும் சிலாகித்துக்கொண்டது இன்னும் கெளரவம்.

புலம் பெயர்ந்த தமிழர்களின் உச்சபட்ச துயரங்களை ஒரு அரை நூற்றாண்டிக்கு முன் பேசிய படம் தான் 'பராசக்தி".என் நெஞ்சில் பசுமரத்தாணி போல ஆழப்பதிந்த இந்த உலகத்திரைப்படத்தை திரைக்கவிதையாக வடிக்கவேண்டும் என்ற வேட்கையில் நான் படைத்த முதல் நூல்தான் "பராசக்த்தி திரைக்கவிதை" என்ற ஆகும்.ஒரு பகலில் படம் கண்டு ஓரிரவில் எழுதி முடிக்கப்பட்ட நூல்தான் இந்த பராசக்தி திரைக்க்கவிதை ஆகும்.தலைப்புகள் கொடுத்து காட்சி காட்சிகளாக எழுதப்பட்ட இந்நூல் பழைய திரைப்படத்தில் சின்ன சின்ன அடையாளத்தைத் தாங்கிவரவேண்டும் என்ற எண்ணத்தில் முதன் முதலில் ஓவியர் ஜீவாவை அணுகி என் திட்டத்தை வெளியிட்டேன். முதலில் யோசித்த ஜீவா ,பிறகு சம்மதித்து ஊதியம் பெறாமல் கோட்டோவியங்களை உயிரோவியங்களாகத் தீட்டித்தந்தார்.நெருப்பு வரிகளுக்கு நெய் ஊற்றியதைப் போல ஜீவாவின் கோட்டோவியங்கள் அடர்த்தியாகவும் அழுத்தமாகவும் வெளிப்பட்டிருந்தன. வானம்பாடிக்கவிஞர் புவியரசு அவர்கள் இந்நூலுக்கு அணித்துரையும் ,கவிக்கோ அப்துல் ரகுமான் இந்நூலுக்கு வாழ்த்துரையும் வழங்கி எங்கள் இருவரையும் சிறப்பித்திருந்தார்கள்.

என் ஆய்வு நூலான "இருபதாம் நூற்றாண்டு தமிழ்கவிதைகள்" என்ற நூலும் ஜீவாவின் ஓவியங்களோடு வெளிக்கொண்டுவரப்பட்டது. இலக்கிய காலகட்டங்களில் கவிதைகள் உணர்த்தும் கருப்பொருள்களை உருப்பொருள்களாக கண்ணுக்கு முன்னால் ஓவியர் ஜீவா அவர்கள் கொண்டுவந்து நிறுத்தினார்.இந்த நூல் கல்வியாளர்கள் மத்தியில் உலக அளவில் பெரிய வரவேற்பை எங்கள் இருவருக்கும் பெற்றுத்தந்தது.இப்படியாக எமது மூன்று நூல்களுக்கும் தேசிய விருதாளர் திருமிகு ஜீவா அவர்களே கோட்டோவியங்களை வரைந்து தந்தது எனக்கு தேசிய விருது கிடைத்ததைப் போன்ற இனிய மாயையை உருவாக்கவே செய்திருக்கிறது.ஒரு தேசிய விருதாளர் எனது நூல்களுக்கு கோட்டோவியங்களை வரைந்திருக்கிறார் என்ற பெருமிதம் எப்போதும் எனக்கு உண்டு.

ஒரு மனிதர் ஏதேனும் ஒரு களத்தில் சிறப்பு வாய்ந்தவராக இருப்பதுதான் இயல்பு,ஆனால் ஜீவா அதற்கு விதிவிலக்கு,ஜீவா ஒரு ஓவியர்,ஒரு திரை விமர்சகர்,ஒரு படைப்பாளி, ஒரு எழுத்தாளர்,ஒரு சினிமாகாரர், ஒரு புகைப்பட கலைஞர்,ஒரு கணினி வரைகலைஞர், ஒரு வாசகர், ஒரு தொழிலகத்தின் அதிபர்,ஒரு பன்மொழி வித்தகர், ஒரு பொதுவுடைமைவாதி,ஒரு திறனாய்வாளர்,ஒரு காலாரசிகர்,ஒரு கலைக்குடும்பத்தவர், ஒரு வழக்கறிஞர் ,ஓவியம் குறித்த பல நிலைகளில் சோதனை முயற்சிகள் செய்த தேர்ந்த ஞானி.சித்ரகலா அகாடமியின் நிறுவனர்,கோவை சினிமா குழுமத்தின் பிதாமகன் ,ஒரு வலைப்பதிவாளர், ............என்று இவரின் பன்முகம் விரிகிறது.

தனது கடந்த கால கலைதாகங்களை தன் நெஞ்சத்தில் நெடுநாட்கள் சுமந்து வந்த ஜீவா,தான் பார்த்த ரசித்த உள்ளூர் மற்றும் உலக சினிமாக்களைப்பற்றிய கட்டுரைகளை ரசனை என்ற இதழில் எழுத, அதன் தொகுப்பாய் நெய்யப்பட்டதுதான் அவருக்கு தேசிய விருதை பெற்றுத்தந்த "திரைச்சீலை"ஆகும்.நாஞ்சில் நாடுக்காரராக இருந்தாலும் கொங்கு நாட்டில் பிறந்து கிளைத்து வளர்ந்து ரசித்து ருசித்து வடித்துதந்த அந்த பொக்கிஷம் இன்று அவரை ஒரு தேசியவிருதாளராக அடையாளம் காட்டி இருக்கிறது.

யாரால் எதுவால் ஒரு நல்ல கலைஞர்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டு புறந்தள்ளப்பட்டாலும் காலம் அவர்களை அடையாளம் கண்டுகொண்டு சிம்மாசனம் அமைந்தது அந்த கலைஞனை அதில் அமரவைத்து அழகு பார்க்கும் என்பதற்கு ஜீவா ஒரு தித்திப்பான உதாரணம்.

சனி, 25 ஜூன், 2011

'தகிதா ஊடகக் களம்' -தயாரித்த "பூமித் தொட்டில்" என்னும் சூழலியல் சார்ந்த ஆவணகுறும்படம்

தகிதா-வின் புதிய கிளையான 'தகிதா ஊடகக் களம்' -தின் சார்பாக தயாராகியுள்ள நிழற்படங்களால் உருவாக்கப்பட்ட "பூமித் தொட்டில்" என்னும் சூழலியல் சார்ந்த ஆவணகுறும்படம் விரைவில் முகநூல் தோழர்களின் பார்வைக்கு வரவிருக்கிறது.
காத்திருங்கள்.

பெயர்:

"பூமித் தொட்டில்"


வகை:

நிழற்பட ஆவணம்


காலம்:

பத்து நிமிடங்கள்

கரு:

சூழலியல் சார்ந்தது


ஒலிக்கலவை

மாண்டேஜ் மீடியா ப்ரொடக்சன்


நிழற்படம் மற்றும் நிழற்படத்தொகுப்பு:

நடராஜன் ஆதிலட்சுமி( மலேசியா)



எண்ணம் - எழுத்து - குரல் - தயாரிப்பு

போ. மணிவண்ணன்(இந்தியா)

திங்கள், 20 ஜூன், 2011


"எனக்கும் ஒரு புத்தகம்கொடுங்க பெரியப்பா....!
எனக்கும் ஒரு புத்தகம்கொடுங்க பெரியப்பா.....!"
என்று
நான் படிக்கும்போதெல்லாம்
இடைவிடாது கேட்கும்
இரண்டு வயதாகும்
என் தம்பிமகளின் நச்சரிப்பு
என் பால்யகால மக்குத்தனத்தை
நினைவூட்டி
வெட்கப்பட வைக்கிறது என்னை

ஞாயிறு, 12 ஜூன், 2011

திரைத் திமிங்கிலங்களிடம் சிக்கிக்கொள்ளும் நல்ல மீன்களில் ஒன்று "ஆண்மைத்தவறேல்


மக்களிடம் மசாலாக்களை விற்பனை செய்யும் சினிமா திமிகிலங்கள் நல்ல மீன்களை உயிரோடு வாழவிடுவதே இல்லை.சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் "ஆண்மைத்தவறேல்' திரைப்படம் நல்ல மீன்களின் ஒரு மீன். வெளியான நாளிலிருந்து திரை வணிகக்கடலில் சர்வாதிகார புயல்களுக்கு இடையில் தன்னை தக்கவைத்துக்கொண்டே இருக்கிறது.நல்ல படங்கள் திரையரங்கிலிருந்து விரட்டப்படும் முன்னதாக பார்த்துவிடுவது அந்த நல்ல படைப்புக்கு நாம் கொடுக்கிற

திங்கள், 6 ஜூன், 2011

ஆண்மைத்தவறேல் - திரைவிமர்சனம்


தமிழ்த் திரையுலகின் முதல் இளம் இயக்குஞர் திருவாளர்.குழந்தைவேலப்பன் அவர்களுக்கு கோடித் திரைகலைஞர்கள் மற்றும் சினிமா ரசிகர்களின் சார்பாக நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.அன்பின் ஆரத்திகள்.'ஆண்மைத்தவறேல்' என்னும் இத்திரைப்படம் ரசிர்களை உணர்வு சார்ந்து சிந்திக்க வைக்காமல் அறிவு சார்ந்து அணுக வைத்திருப்பது தமிழுக்கு புதிது.சிக்கல்களை அறிவியல் பூர்வமாக அணுகுவது எப்படி என்று சொல்லும் அருமையான திரைப்படம் மட்டுமல்ல திரைப்பாடமும் கூட. இதற்காகவே குழந்தை வேலப்பனுக்கு பலத்த கைத்தட்டல்களைத் தரலாம்.

உலகமயமாகி இருக்கும் இந்த நிலையில் பெண்மாமிசப் பசிக்கான வேட்டையில் ஆண்மைத் தவறும் ஆடவர்களையும் ஆண்மைத்தவறாத ஆடவர்களையும் இனம் பிரித்து காட்டியிருக்கும் கோணம் அசாத்தியமானது.ஓவ்வொரு வீட்டில் இருக்கும் யமுனாக்கள் மற்றவர்களால் கவனிக்கப்படுகிறார்கள் என்ற குறிப்பு சரியான எச்சரிக்கை. கதை நகர்வு நிஜ நகர்வாகவே பல காட்சிகளிலும் பளிச்சிடுகிறது. பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையேயான தகவல் இடைவெளி இப்படத்தில் சரியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தந்தையை இழந்து தாயை சுமந்து தன் ஒற்றை ஊதியத்தில் குடும்பத்தை நகர்த்தும் லட்சோப லட்ச யமுனாக்களில் வாழ்வில் ஒரு பாதுகாப்பு வளையத்தை இத்திரைப்படம் வலிமையாக செய்துதந்திருக்கிறது.

இந்த சமூகத்தில் கஞ்சா ஹெராயின் அபின் போன்ற போதை வஸ்த்துக்களின் பட்டியலில் பெண்ணும் இடம்பெறுவது சோகம்.இந்த உலகத்தில் பெரு வணிகங்களில் ஒன்றாக பெண்வணிகம் இருப்பதை இத்திரைப்படம் அடர்த்தியாக எடுத்துக் காட்டியுள்ளது .அதை நாடகத்தனமாக சொல்லாமல்,பூசியும் மெழுகாமல், அதன் பல்வேறு நிலைகளை எடுத்துக்காட்டி அவைகளை வேரறுத்துள்ள ஆண்மை போற்றுதலுக்குரியது.ஒரு கலைஞனுக்கே உரிய துணிவு கம்பீரம் அச்சமற்றத் தன்மையை இந்த படத்தின் இயக்குஞர் குழந்தைவேலப்பனின் நெறியாள்கையில் பார்க்கமுடிகிறது.

'எம் பொண்ணு எங்கடா' என்று யமுனாவின் தாய் கதறும் அந்த சிலவினாடிகளில் கண்கலங்க வைக்கிறார்.ஒரு நடுத்தர குடும்பத்தின் தாயாக வாழ்ந்து ரசிகர்களின் ஒட்டுமொத்த பரிதாபத்தையும் அள்ளிக்கொண்டு போகிறார். உண்மையில் .இது யமுனக்களுக்கான கதை மட்டுமே அல்ல ,எத்தனை எத்தனையோ யமுனாக்களின் தாய்களுக்கான கதை. 'என்ன சொன்னானா' என்ற கனத்த குரலில் பேசிக்கொண்டு சிறைக்குள் அட்டகாசமாய் நுழையும் அந்த போலீஸ்காரர் தொடங்கி இறுதிவரையில் வரும் தொடர்ச்சியான காலவர்களை காட்டிய விதம் கண்ணியத்திற்குரியது . இரக்கமும் சமூக அக்கறையும் கண்ணியமும் காவலர்க்கும் உண்டு என்பதை இத்திரைப்படம் திறந்த மனதோடு முன்னேடுத்து வைத்துள்ளது.

தன் காதலியை பறிகொடுத்த கதாநாயகன் தொடக்கம் முதல் இறுதிவரை ஓயாமல் அலைந்து திரியும் ஒவ்வொரு காட்சிகளிலும் பார்வையாளர்களின் இரக்கத்தை ஏகமாய் பெறுகிறார்.நண்பனாக காதலனாக பரிணாமப்பட்ட கதாநாயகன் நாயகியை தேடும் வேட்டையில் ஒரு தந்தையின் ஸ்தானத்திற்கு உயர்ந்ததுதான் அற்புதம்.தனக்கும் நிகழ்விற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை நிரூபிப்பதற்காக நாயகன் போராடவில்லை, தந்தை இல்லாத ஒரு மகளுக்கு உண்மையான காதலன் ஒருவன் தந்தையாக இருக்கமுடியும் என்பதுதான் இங்கு நிரூபிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் ,அண்டை மாநிலம் ,வட இந்தியா, மேலைநாடுகள் என்று எங்கு தொடங்கி எங்கெல்லாம் இந்த பெண் வணிகத்தின் வேர்கள் கிளைகொள்கிறது என்பதையும் எப்படி எல்லாம் சந்தைப்படுத்தப்படுகிறது என்பதையும் வரைப்படத்தொடு வரைந்துகாட்டி இருக்கும் இப்படம் ஆணாதிக்கத்தின் காமத்திரையை கிழித்தெறிந்துள்ளது.இந்த நயவஞ்சக வலைப்பின்னலில் மேலை நாடுகளின் தலையீடு இருப்பதையும் இப்படம் தன் கேமரா கண்களால் குத்திக்காட்டியுள்ளது. கற்பு குறித்த மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு பாலியல் பண்டமாக்கப்பட்ட பெண்மை சுற்றுலாதலங்களில் ஆடவர்களின் காமப்பசிக்காக தரம்பிரிக்கப்பட்டு கூவிவிற்கப்படும் சோகம் மனதை பிழிகிறது.

'சம்மதத்தோட கற்பழிக்கரத்துக்கு பேருதா காதல்' என்று திருத்தமாக எதார்த்தம் பேசும் போலீஸ்காரரின் வசனம் இங்கு ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.நம்பகத்தன்மையற்ற காதல் உறவுகளை நம்பி ஏமாறும் படித்த பெண்கள் இங்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.இந்திய இளைஞர்களின் இரவுகளைத் திருடுவதோடு அவர்களின் வாழ்வியல் கட்டமைப்பைத் தகர்க்கும் மேலை மென்பொருள் நிறுவனங்கள் நம்மை கொஞ்சம் கொஞ்சமாக சுரண்டிக் கொண்டிருப்பதை இத்திரைப்படம் பட்டவர்த்தனம் ஆக்கியுள்ளது.

சென்னை கடற்கரை சாலையில் தொடங்கி கோவா கடற்கரை சோலையில் முடியும் இந்த கதையில் யமுனா நதிகள் சீரழிக்கப்பட்டு மாசூட்டப்படுவது கலைதர்மத்தோடு கூடிய குறியீடு. ஓடையாக தவழ்ந்து நதியாக நடந்து ஆறாக பெருக்கெடுத்து ஓடும் பெண்நதிகள் கடலில் சங்கமிக்காமல் போகும் துரதிஷ்டங்களுக்கு இந்த ஆண்மைய சமூகமே முழுப்பொறுப்பாகும் என்பதை தவறாமல் சொல்லியிருக்கும் குழந்தையின் ஆண்மை போற்றுதலுக்கு உரியது..சாலையோரத்தில் நடமாடும் ஓராயிரம் மலர்களை பறித்துக்கொண்டு போகும் அந்த ஒற்றை வாகனம் நமக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது.அந்த வாகனத்தில் பயணிக்கும் கடத்தல் தலைவன் தொடங்கி கூட்டாளிகள் அனைவரும் வாழ்கிறார்கள்,மிகை எதார்த்தமே இல்லாமல் பார்த்துக்கொண்டது நம்பகத்தன்மையை ஏற்ப்படுத்துகிறது.

'நீங்க பண்ண பெரிய தப்பு என்ன தெரியுமா, பெண்ணா பிறந்ததுதான் அதுலும் கொஞ்சம் அழகா'என்ற வசனம் ஏன் பெண்ணாய் பிறந்தோம் என்ற எரிச்சலையும் அச்சத்தையும் எல்லா பெண்களிடமும் பற்றவைத்துவிடுகிறது.வெள்ளைக்காரர்களிடம் அன்று நமது தேசத்தை அடகுவைத்தோம் இன்று தேகத்தை அடகுவைக்கிறோம் என்ற கொதிப்பு இன்னும் ஆத்திரத்தை மிகுவிக்கிறது.கோவா உலக சுற்றுலா பயணிகளின் திறந்தவெளி படுக்கையறைகளாக மாறிப்போயிருக்கும் நிலையை துல்லியமான துளைக்கும் எதார்த்தத்தோடு பதிவுசெய்திருக்கிறது இந்த ஆண்மைத்தவறேல்.

இந்தியத் தாயின் மாராப்பிற்கு அந்நியக் கரங்களால் அச்சுறுத்தல் வந்திருப்பதை அவமானத்தோடு பதிவு செய்திருக்கிறது. இன்றைய உலக பெண் வணிகத்திற்கு ஆதரவாகவும் பக்கபலமாகவும் ஊடகங்களும் இணையங்களும் இருந்து இழிதொழில் புரிவதை சுட்டிக்காட்டி அறிவியலின் கன்னத்தில் பளார் என்று இயக்குஞர் குழந்தை அறைந்திருக்கிறார்.

முதல் காட்சி அடைமழை ஒட்டுமொத்த பெண் சமூகத்தின் சோகத்தை சொல்லி அழுவதாய் நமக்கு இறுதியில்தான் உணர்த்துகிறது.போலி வாகனங்கள் போலி மனிதர்கள் போலி வாழ்க்கை என்று போலியாக வாழும் மனிதரில் சில மிருகங்களை ஆண்மைத்தவறேல் வேட்டையாடி இருக்கிறது. பாதகம் செய்பவரைக்கண்டால் பயம்கொள்ளல் ஆகாது பாப்பா மோதி மிதித்துவிடு பாப்பா. அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா என்று பாப்பாக்களுக்கு சொன்ன இந்த வீர வரிகளை குழந்தை நம் அனைவருக்குமே சொல்லி விழிப்படையவும் எதிர்வினைப்புரியவும் செய்திருக்கிறார்.

காதல் காட்சிகளில் தோலுறிக்கப்பட்ட ஆட்டுக்குட்டிகளாய் கதாநாயகிகளைக் காட்டும் இன்றைய தமிழ் சூழலில் ,பெண் வணிகம் மற்றும் பாலியல் சார்ந்த கதைக்களமாக உங்கள் ஆண்மைத் தவறேல் இருந்தபோதிலும் அதில் துளியளவேனும் விரசம் கலக்காத உங்களின் கலை நேர்மைக்கு நான் எழுந்து நின்று கைகள் தட்டி தலைவணங்குகிறேன்.அடுத்தது என்ன என்ன என்ற எண்ணத்தை படம் முழுக்க ஏற்படுத்தி இருப்பது உங்களின் இயக்கத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

கரன்சிகளைப் பெற்றுக்கொண்டு கன்னிப்பெண்களின் கடத்தலுக்கு அடைக்கலம் தரும் கர்நாடகத் தாய், பரிசோதனைக்குப் பிறகு உள்ளூரில் விற்பதற்காய் தரம்பிரிக்கப்பட்ட கேரளத்து பெண் ஆகிய இரு கதாபாத்திரங்கள் மூலம் தமிழ்ப் பெண்ணின் நிலையை தூக்கிப்பிடிக்க வேண்டும் என்று நினைக்கும் உங்களின் ஆழ்மனப்பதிவு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.உங்களின் கலை அரசியலில் சமரசமும் தேவை.

சுயமரியாதை பாதிக்கப்பட்டதால் 'உயர் போனா மயிரா போச்சு'என்று துணிந்ததை காட்சியாகக்காட்டி ஓடும் வாகனத்திலிருந்து கதவகற்றி பாய்ந்து எதிர்வரும் வாகனத்தால் மோதிவீசப்பட்டு மரணிக்கும் உயர் அதிகாரியின் மகள் கதாபாத்திரம், கதையின் திடீர் திருப்பம்.ஆளில்லா சாலையில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் அடுத்தடுத்து வந்துபோகும் நாயகன் மற்றும் கடத்தல் தலைவனின் வாகனங்கள் கதையின் பயணத்தில் விறுவிறுப்பை அதிகப்படுத்துகின்றன. கடத்தப்பட்ட வாகனத்திற்கு உள்ளிருந்துகொண்டு துணிச்சலோடு கடத்தல் தலைவனின் அலைபேசியில் அழைப்பைத் தொடரும் காட்சி நடுநடுங்க வைக்கிறது.


கார் குண்டுவெடிக்க காணாமல் போன முன்னாள் காவல்துறை அதிகாரியின் தோற்றமும்,ஏல வெற்றியும் திரைக்கதையில் புதிய பாய்ச்சல்.கதையின் நகவிற்கேற்ப கேமரா கோணங்கள் தொடங்கி கேமரா அசைவுகள் தொடர எல்லாம் அட்டகாசம்.இசை தேவையான இடங்களில் சோகம் இரங்கல் தனிமை வெறுப்பு காயம் கவலை விரக்தி என்று எல்லா உணர்வுகளையும் அளவாகவும் அழகாகவும் வாசித்திருக்கிறது.தேடுதல் வேட்டையில்'அண்டம் பொடிபட' என்ற பாடல் ஆவேசம் கொப்பளிக்கும் சுனாமி பாய்ச்சல்.

இறுதிக்கட்ட சண்டைக்காட்சியில் கதாநாயகன் தனியாக மாட்டிக்கொண்டானே என்ற வருத்தமும் அவனுக்கு எப்படியாவது உதவவேண்டும் என்று எண்ணம் மேலிடலும் கதாபாத்திரப்படைப்பிற்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றி.வெற்றியின் வெற்றி உறுதிசெய்யப்பட்டு விட்டது

உலகின் இன்றைய எரியும் பிரச்னையை தன் சினிமா கிரணங்களால் கொளுத்தி அதற்க்கு காரணமானவர்களை சுட்டு காயப்படுத்தி தன் ஆண்மையை குழந்தை நிருபித்திருக்கிறார்.கரு கதைக்களம் கதைப்பின்னல் கேமரா நகர்வு அர்த்தமுள்ள இசை கதையோடு கூடிய பாடல் மிகை எதார்த்தம் இல்லாத காட்சியமைப்பு கச்சிதமான படத்தொகுப்பு என்று இன்னும் பல சிறப்பம்சங்களோடு உலகத்தரத்திற்கான உன்னத படமாய் இந்த ஆண்மைத்தவறேல் கம்பீரம் கொண்டிருக்கிறது.வழக்கமான சினிமா சட்டகத்திற்குள் சுருங்கிப்போகாமல் தான் சொல்ல விரும்புவதற்கு ஏற்ப கதையை பரப்பி இருக்கும் போக்கு பாராட்டுக்குரியது




தமிழ் சினிமா வரலாற்றில் சிக்கலை உணர்வுப் பூர்வமாக அணுக வேண்டாம் அறிவுப்பூர்வமாக அணுகுங்கள் என்று சொல்லி இருக்கும் படம்தான் இந்த ஆண்மைத்தவறேல்.சினிமா கனவுகளை மட்டும் ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை அல்ல என்பதை குழந்தை நிரூபித்திருக்கிறார். உண்மைகள் கலைஊடகத்தில் கலைதர்மத்தோடு முன்னெடுத்து வைக்கப்பட்டுள்ளன..ஊடகத்துறை மாணவனாக இருந்து இயக்குஞராக அடையாளப்பட்டிருக்கும் நீ,எதிர்வரும் இளைய படைப்பாளிகளுக்கு கலங்கரைவிளக்கம். நேற்று தோள் தட்டினேன் இன்று கைத்தட்டுகிறேன்.இன்னும் இன்னும் நீ திரைத்துறையில் புதிய உயரங்களைத் தொட வாழ்த்துகிறேன்.


.



.