செவ்வாய், 29 ஜூன், 2010

தமிழனின் தாய்நிலம் ஆப்பிரிக்கா

இந்த பிரபஞ்சத்தின் ஆதி மனிதன் கறுப்பனாக இருந்தான்.அந்த கறுப்பர்களின் தாய் நிலமாக இருந்தது ஆப்பிரிக்க கண்டமாகும். அந்த அப்பிரிக்கா கண்டத்தில் இருந்த கருப்பனே தமிழன்.ஆம் இந்த வையத்தின் ஆதி குடியாகவும் பூர்வ தோற்றமாகவும் இருந்தவன் தமிழனே.இக்குரிப்பிக்க கண்டத்தின் மத்திய பகுதியில் இருந்து உரேனியம் கதிவீச்சு பெரளவும் வெப்பத்தை கக்கியபடி வெளிப்பட்டபோது அந்த வெப்பத்தி தாங்கிக்கொள்ள முடியாமல் தமிழன் ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து கடற்கரை ஓரமாக வெளியேறினான்.அப்பிரிக்கா கண்டத்திலிருந்து வெளியேறி தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவன் நுழைந்த கண்டம் ஆசியா.இவர்களில் பலர் கடற்கரையை ஒட்டி நகர்ந்து வெளியேறினார்கள். சிலர் கிடைத்த மரக்கட்டைகளில் தப்பித்தோம் பிழைத்தோம் என்று கடல்வழியாக செய்வதறியாது சோதனை முயற்சியாக வெளியேறி இருக்கக்கூடும்.அப்படி வெளியேறிய தமிழர்கள் வாழ்ந்த கண்டம் லெமுரியா என்று சொல்லப்பட்டிருக்கவேண்டும். உரேனியம் வெப்பத்திற்கு மாற்றாக கடலில் குளிர்ச்சி அவர்களுக்கு ஆறுதலாக இருந்திருக்க கூடும்.கடற்கரையை ஒட்டி தரைவழியாக வந்தவர்கள் ஆசியாவிர்க்குள் நுழைந்து இந்தியாவிற்குள் புகுந்து கடல் இருக்கும் தெற்கு நோக்கி நகர்ந்தார்கள். தெற்கில் அவர்களுக்கு சில்லென்ற கடலும் ஒளிந்து கொள்வதற்கு மலைகளும் சாதகமாகவே இருந்தன.

மனித நாகரீகம் நதிக்கரைகளில் தோன்றியது என்று சொல்வதற்கு காரணம் உரேனியம் என்னும் வெப்பக்கதிர் வீச்சின் எதிர்வினைதான். உயரமான மலைகள் வெப்பக் கதிர்வீச்சின் பாதிப்பிலிருந்து அவர்களை பாதுகாத்தன. குகைக்குள் ஒளிந்துகொண்டு ஆதிமனிதன் தன்னை தற்காத்துக் கொண்டதற்கும் அதுவே காரணம்.இன்றைக்கும் மலையும் மலை சார்ந்த பகுதிகளில் வாழும் மக்களில் வாழ்வியலில் தொன்மக் கூறுகளை காண முடிகிறது.தங்கள் மொழிகளுக்கு வரிவடிவம் இல்லாதவர்களாகவும் இருப்பதும் அவர்கள் பூர்வ குடிகள் என்பதற்கு நல்ல ஆதாரமாகும்.மேலும் எல்லா மலைவாழ் மக்கள் வாழ்வியலில் ஒரு ஒற்றுமையைக் காண முடிகிறது.மலையிலிருந்து சமவெளிக்கு வந்த பிறகே தமிழினத்தில் கலப்பு நேர்ந்திருக்க கூடும். போர்கள்,வர்த்தகங்கள், போன்ற சமூகவியல் காரணங்களால் மொழியிலும் இனத்திலும் கலப்பு நிகழ்ந்துள்ளது. ஆதிமனிதனின் எச்சங்களாக ஒவ்வொருவரிடமும் மச்சங்கள் இருக்கின்றன. ஒரு கறுத்த மனிதனின் கறுமை நிறம் வெளுப்பதற்கு பத்து லட்சம் ஆண்டுகள் ஆகின்றனவாம்.அப்படியே கறுத்த தமிழனின் கறுப்பு கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து மச்ச்சமாகவும் மிச்சமாகவும் நின்றுள்ளது.

திங்கள், 28 ஜூன், 2010

ராவணன்-ஒரு கண்ணோட்டம்

'மனிதன் எல்லா அவலங்களோடும் அழகாகவே இருக்கிறான்' என்ற வாசங்கள் நினைவூட்டுகிற கதாபாத்திரம் தான் பிருத்துவி. 'நானோ புறத்தே குப்பைகளை சுமக்கிறேன் நீயோ அகத்தே சுமக்கிறாய்' என்ற கூற்றை மேனா மினுக்கி சமூகத்தை பார்த்து கேட்கும் கதாபாத்திரம் தான் ராவணன.

தாய் நாட்டில் பிறந்து இயற்கையோடு இரண்டறக் கலந்து வாழும் பூர்வக்குடி மனிதன் தான் ராவணன்.தமிழகத்தின் காட்டுப்பகுதியிலும் ,தமிழகத்தின் மலைப்பகுதிகளிலும் வாழும் ஆதிசமூகத்தாரையும், ஈழத்தில் பூர்வகுடிகளாக வேர்களை பதித்து விழுதினை இறக்கிய தமிழ் சமூகத்தையும், வட இந்தியாவின் பல மாநிலங்களில் தொல்குடிகளாக விளங்குபவர்களில் நிகழ்வு வலிகளை வெளிப்படுத்த ராவணன் கதாபாத்திரத்தினை மணிரத்னம் கருவியாக பயன்படுத்தி இருக்கிறார்.

மண்ணையும் மக்களையும் மெய்யாலுமே நேசிக்கிற அப்பாவி மனிதர்களை இந்த தேசம் அதிகாரத்தால் ஆயுதங்களால் சாதியத்தால் மத அடையாளங்களால் இன்னும் பலவற்றால் எப்படியெல்லாம் வேட்டையாடுகிறது என்பதையும்,அவர்களது வாழ்வாதார சிக்கல்களை இன்னும் மிகுவித்து அவர்களை விளிம்புநிலை மனிதர்களாக மாற்றிவிடுகிற அவலத்தை இந்த படம் அறிவிஜீவித் தனமாக சித்தரிக்க தவறவில்லை.


இந்த படம் நிகழ்காலத்தின் ஒட்டுமொத்த அவலங்களை குறியீடாக பேசும் அற்புத சித்திரம். ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரங்களை குறிவைத்து தங்கள் அதிகாரங்களால் மனித உரிமை மீறலை நாளும் மேற்கொண்டு போர்நியதிகளை கொன்று குவிக்கும் சிங்களர்களின் வன்மங்களுக்கு கிடைத்த சாட்டை அடி . சட்டீஸ்கரில் பூர்வகுடிகளை விரட்டி அந்த பசுமையும் கனிமங்களும் நிறைந்த அந்த பிரதேசங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் மத்திய அரசுக்கு எச்சரிக்கை .

ஆதிக்க சமூகத்தின் தவறான அதிகார பயன்பாட்டையும், ராட்சச ஆயுதங்களைக் கொண்டு சொந்த நாட்டு குடிகளை ஒடுக்கும் போக்கினையும் இந்த திரைப்படம் குத்திக்கிழிக்கிறது. குறிப்பாக இந்திய வனங்களும் இந்திய வளங்களும் மறைமுகமாக கொல்லைபோய்க் கொண்டிருக்கும் நடப்பு வலிகளை அழகியலை பதிவு செய்துள்ளது.


தீய அதிகார வர்க்கத்திடமிருந்து மண்ணையும் மக்களையும் காப்பாற்ற போராடுகிற போராளிகள் தங்கள் ஆயுதங்களை எந்த சூழ்நிலையிலும் கீழே போடக்கூடாது என்ற நவயுக போராட்ட சித்தாந்தம் புதிது.எந்த சமூகத்தில் பூர்வ குடிமக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுகிறதோ அந்த சமூகங்களில் புரட்சி வெடிக்கும்.இடைவிடாத போராட்டங்களே வெற்றிக்கு வித்தாகும் என்றும் ஒரு குறிப்பை விட்டு செல்கிறது

உலகத் தமிழர்களின் உன்னத திருவிழா -ஜூன் 26

உலகெங்கிலும் சிதறிக்கிடந்த தமிழ் தோழர்களை மொழியால் இணைத்து இனிக்கச்செய்த இந்த செம்மொழி திருவிழா அனைத்து தரப்பினரின் வரவேற்பை பெற்றுள்ளது.வாகனங்களில் வண்டி வண்டியாய் மக்களை விலைபேசி அழைத்து வந்து கூட்டம் நிரப்புதல், கட்சியின் அடையாளத்தை பறைசாற்றும் வகையில் குறித்த வண்ணங்களில் ஆடையணிந்து வருதல், 'தலைவர் வாழ்க' ..முதலான வாசகங்களை உரக்கச்சொல்லி கோஷமிடுதல் , கழகத்தின் கொடிகளை வானுயர பறக்கவிடுதல், வேற்று கிரகத்தை உரசும் வகையில் ஓங்கி உயர்ந்த கட் அவுட்களை நிறுவுதல் போன்ற எதுவுமே இல்லாமல் இருப்பது அதிசயம் ஆச்சர்யம்.


கனிவாக பேசும் காவல் நண்பர்கள், கைகள் நீட்டி வழிகாட்டும் போக்குவரத்து காவலர்கள்.புன்னகையோடு பதில் பகரும் அரசு அதிகாரிகள், ஓடியோடி பணியாற்றும் அரங்க பொறுப்பாளர்கள், இயல்பாகவே மக்களோடு மக்களாய் காட்சிதரும் அரசியல் தோழர்கள் என்று எல்ல அதிசயங்களையும் இந்த மாநாட்டில் கண் குளிர காணமுடிகிறது.இவர்கள் எல்லோரையும் மிஞ்சும் வகையில் பொது மக்கள் மிகப்பெரிய ஆதரவை தெரிவித்தது இந்த செம்மொழி மாநாட்டிற்கு மிகப் பெரிய வெற்றியை பெற்றுத் தந்துள்ளது.

மாநாட்டின் இதயப்பகுதியாய் மட்டுமல்லாமல் மூளையாகவும் இருப்பவை ஆய்வரங்கங்கள். இந்த மாநாட்டின் முக்கிய நோக்கத்தை இலக்காகக் கொண்டு அதனை வெளிக்கொண்டுவரும் முதன்மைப் பொறுப்பை தாங்கிக்கொண்டு செயல்பட்டுகொண்டிருக்கின்றன.பலப்பல தலைப்புகளில் புதுப்புது கோணங்களில் விவாதங்கள் சூடு பறக்க புதிய சிந்தனைகளுக்கு வழிபிறக்க விடைகள் விளைந்தன முடிவுகள் முடிவாயின.

இனி இந்த உலகத்தில் ஒற்றைத் தமிழனுக்கு சின்ன கீறல் விழுந்தால் மொத்த தமிழர்களும் களத்தில் நிற்பார்கள் என்கிற அளவில் தமிழர்களிடையே நல்ல அன்பையும் நல்லுறவையும் அடர்த்தியான புரிதலையும் இந்த மாநாடு ஏற்படுத்தி இருக்கிறது.உதைபடுகிற வதைபடுகிற தமிழர்களுக்காகவும் புறந்தள்ளப்படுகிற , தமிழுக்காகவும் தமிழர்கள் இனி போர்க்களம் புகும் அளவிற்கு உணர்வெழுச்சியை இந்த மாநாடு ஏற்படுத்த தவறவில்லை.


'இருப்பாய் தமிழா நெருப்பாய் நீ இருந்தது போதும் செருப்பாய்'என்னும் வரிகள் தரும் ஞானத்தை தெளிவை இந்த நிகழ்வும் தந்திருக்கிறது. இந்த ஒன்று பாடல் உலக அரங்கில் தமிழர்களின் பலத்தை உலக நாடுகளுக்கு மறைமுகமாக பறைசாற்றவே செய்கின்றன .அரக்க நாடுகள் இனி தமிழர்களுக்கு எதிராகவும் தமிழுக்கு எதிராகவும் வால் ஆட்டுவதற்கு யோசிக்கும் அளவிற்கு இந்த மாநாடு மிகப் பெரிய பாதிப்பை எற்படுத்தவே செய்திருக்கிறது.

ஆய்வரங்கம் முடிந்த பிறகு மாலை பொழுதில் 'பாஞ்சாலி சபதம்' நாடகத்திற்காக தொல்காப்பியர் அரங்கம் நோக்கி இருக்கையில் இடம் பிடிக்க வேக வேகமாக விரைந்தேன்.நாடகத்திற்கான ஏற்பாடுகள் முடிந்திருந்த நிலையில் விழா விருந்தினர்கள் வரும் வரையில் மண்ணிசையாக இப்பொழுது நாட்டுப்புற பாடல்கள் பாடும் என்ற அறிவிப்பை ஒலிபெருக்கி அறிவித்ததும் மேடையில் மூன்று மாணவர்கள் காட்சிப்பட்டார்கள். கிராமத்து சங்கதிகளோடு தமிழ் சங்கீதம் இசைக்கத் தொடங்கினார்கள் .அவர்களின் தெளிவான உச்சரிப்பு வெடித்த குரல் உணர்வோடு கலந்து மலரும் வரிகள் என்று எல்லாவற்றையும் உள்வாங்கிக்கொள்ளமுடிந்தது.அவர்கள் இசைக்கல்லூரி மானவர்களாகத்தான் இருக்கக்கூடும் என்று முடிவுக்கு வரும்போது இவர்கள் சென்னை சங்கமம் அமைப்பை சார்ந்த கலைஞர்கள் என்ற அறிவிப்பு என்னுள் பொங்கும் மகிழ்வை ஏற்படுத்தவே செய்தது.


விருந்தினர் வருகை தர , கிராமத்து மண்ணிசையும் உள்ளுணர்வை தூண்ட முடிந்து அவை நிசப்தத்தில் நிறைந்தது. விளக்குகள் தங்களின் விழிகளை சுருக்கிக் கொள்ள மேடையில் ரோகினி காட்சிப்பட்டார். சிறந்த குணசித்திர கலைஞராக திரைக்களத்தில் அடையாளப்பட்ட அவர்களே பாஞ்சாலியாக தோன்றி சுமார் முப்பது நிமிடங்களுக்கும் மேலாக உடல் மொழி ,கவிமொழி, விழிமொழி, மௌன மொழி, என்று எல்லா மொழிகளையும் பயன்படுத்தி நாடகத்தில் ஒற்றை கதாபாத்திரமாக நிறைந்திருந்து நிறைவான பங்களிப்பை தந்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார்.நீண்ட வசனங்கள், வகை வகையாய் கவிதைகள் என்று தங்கு தடை இல்லாமல் மனனமாய் கொட்டித் தீர்த்தார்.

இப்படியாக பல பல சுவையான தரமான அர்த்தமுள்ள நிகைவுகள் வளாகத்தின் அனைத்து அரங்கங்களிலும் நடை பெற்றுக்கொண்டே இருக்கத்தான் செய்கின்றன.அலுவல் காரணமாக எனது அரங்கத்திலிருந்து வெளியேற. முடியாமல் போனதால் அந்த அறிய வாய்ப்புக்களை இழந்தேன். நீங்கள் இத்தகைய வாய்ப்பை இழந்துவிடக்கூடாது என்பதற்க்காகத்தான் இந்த பதிவை அவசர அவசரமாக pathikiren .வாசியுங்கள் நண்பர்களுடன் பகிருங்கள். நன்றி வணக்கம்.

வெல்க தமிழ் வெல்க தமிழ் வெல்க தமிழ்

சனி, 26 ஜூன், 2010

செம்மொழி மாநாட்டில் புத்தகக் கண்காட்சி ஒரு பார்வை

செம்மொழி மாநாட்டில் குறிப்பிடத்தக்க ஒன்று எல்லோரின் கவனிப்புக்கு உள்ளானது. கொடிசிய அரங்கத்தில் பேசும் பேர் அறிஞர்கள் , அதன் எதிர்ப்புறத்திலோ பேசாத அறிஞர்களின் பேசும் புத்தகங்கள். ஆம் சி ஐ டி கல்லூரியின் மைதானத்திடலில் வரலாற்று காணாத பிரமாண்டமான புத்தக கண்காட்சி வாசக அன்பர்களுக்காக காத்திருந்தது.இலக்கிய தாகமுள்ள ,மொழி ஆர்வம் மிக்க புதிய தலைமுறை இளைஞர்களும் பழுத்த அறிஞர் பெருமக்களும் படையெடுத்த அறிவும் போர்க்களமாக புழுதி பறக்க தன்னை அடையாளபடுத்திக்கொண்டே இருந்தது.

பகல் பொழுதெல்லாம் ஆய்வரங்கம், கலைக்கூடம், பொது அரங்கம் என்று பார்த்தும் கேட்டும் மகிழ்கிற அன்பர்கள் பொன்மாலைப் பொழுதில் எதிர்ப்புறத்தில் உள்ள புத்தக காட்சியகத்திற்கு சென்று ஓய்வாய் அறிவைப் பருகலாம் என்று செல்லும் பலரும் சிரமங்களைப் பார்க்காமல் சீறிவரும் அலைக்கு எதிராக நீச்சலிடும் தன்மையைப்போல இருபுறமும் சூழ வருகிற நெரிசலை எதிர்கொண்டபடி வளைந்து நெளிந்து குனிந்து புகுந்து கடந்து என்னென்ன உத்திகளைப் பயன் படுத்தி மக்கள் வெள்ளத்திலிருந்து மீள முடியுமோ அதையெல்லாம் மேற்கொண்டு விரைவார்கள்.

பார்த்தோம் கேட்டோம் ரசித்தோம் என்று கொடிசிய வளாகத்திலிருந்து வெளியேறுகிற கூட்டம் எதிர்ப்புறத்தில் இருக்கும் புத்தக அரங்கங்க வளாகத்தில் மக்கள் கூட்டம் குறைவாக இருக்கும் என்றும் அங்கு சென்று இளைப்பாறிக் கொள்ளலாம் என்றும் கற்பனையோடு வரத்தான் செய்கிறார்கள். உண்மையில் நிலைமை வேறு. மாறாக புத்தக வளாகத்தில்தான் மக்கள் வெள்ளம் வடியாமல் தீராநதியாகவே இருக்கிறது என்பது முற்றிலும் உண்மை. இளைஞர்கள் வேடிக்கை பார்ப்பதற்காக அங்கு செல்வார்கள் என்று தவறான அபிப்பிராயம் வைத்திருந்த என் கருதுகோளை தகர்த்து எரிந்தது அவர்கள் சுமந்துவந்த புத்தகப் பொதிகள். மனதிற்குள் அவர்களுக்கு வணக்கம் சொல்லிக்கொண்டேன்.

எனது மூன்று நூல்களை பதிப்பித்து தந்த சீதை பதிப்பகத்திற்கு செல்வதற்காக நான் திட்டமிடும்போது தான் அந்த தொலைபேசி அழைப்பு வந்தது. எதிர்முனையில் அஜயன் பாலா. இரைச்சலுக்கிடையே இசைபோல் மென்மையாய் பேசிய அவரின் உரையாடலை அரைகுறையாய் புரிந்த தைரியத்தில் அவர் நின்றுகொண்டிருக்கும் இடம் நோக்கி நகர்ந்தேன்.வணக்கங்களை பரிமாறிக்கொண்டு முகப்புத்தாக பதிவுக்காக என்னை வாழ்த்தினார்.நானும் வாழ்த்தினேன். இருவரும் திட்டமிட்டு அட்சய கலசத்தில் அறிவுலக அமுதம் உண்ண கிளம்பினோம்.எனது இரு சககர வாகனம் பின்னால் அஜயன்.எதிரில் இருபுறமும் மக்கள் இடைவெளி இல்லாமல் வந்தவண்ணமாய் இருந்தார்கள்.தன்னந்தனி காட்டில் ஆயிரம் ஆயிர வேங்கை கூட்டத்திற்கிடையில் இரண்டு புள்ளி மான்களை எங்கள் இருவரின் நிலை இருந்தது. கூட்டத்தை கடக்க எந்த வாகனமும் அனுமதிக்கப்படவில்லை என்பதை முன்னால் இருக்கும் கண்ணாடி வழியாக பார்த்து தெரிந்து உறுதிப்படுத்திக் கொண்டேன். கிட்டத்தட்ட மக்கள் கூட்டத்தில் மோட்டார் சைக்கிள் வித்தைக்காரனைப் போல கிளைச் ஒன்றிலும் இரண்டிலும் மாற்றி மாற்றி இடது கைவலிக்க பயணப்பட நேர்ந்தது.

இப்படியாய் கை வலிகளோடு இரண்டு கிலோ மீட்டரை கடந்த அனந்த மகிழ்ச்சியில் மீதமிருந்த ஒரு கிலோமீட்டர் இருப்பு இன்னும் வலியை தர காத்திருந்தது. நல்ல வேலையாக அங்கு குறுக்கே வந்து நகரத் தொடங்கிய தண்ணீர் வண்டியின் நிழலில் ஒளிந்தபடியே சென்றதால் எல்லை வந்து சேர்ந்தோம் .சாலையை கடந்து புத்தக சோலைக்குள் நுழைந்த எனக்கு ஒரு இனிப்பான செய்தி காத்திருக்கிறது என்று அஜயன் சொன்னார். காந்தத்தின் பின் செல்லும் உலோகமாய் பின் சென்றேன். ஒரு அரங்கத்தினுள் அழைத்து சென்று ஒரு பொக்கிச பெட்டி ஒன்றை காண்பித்தார். அதை மிக கவனத்தோடு கையில் எடுக்கவேண்டும் என்ற ஆணையை எனது மூளை எனக்கு கட்டளை இட்டது. அந்த அளவிற்கு அதன் தோற்றம் இருந்தது. ஒரு பால் பருவ மழலையை கையில் வாங்கும் தாயைப்போல் நான் அந்த நூலை எந்திக்கொண்டேன். தமிழ் இலக்கிய வரலாறு குறித்தும் தமிழ் அறிஞர்கள் குறித்தும் எண்ணற்ற நூல்கள் வெளிவந்துள்ள நிலையில் இந்த குறிப்பிட்ட நூல் நூற்று இருபத்தைந்து தமிழ் அறிஞர்கள் குறித்த வாழ்க்கை வரலாற்று குறிப்புகளை தாங்கி வெளிவந்துள்ளது. அட்டை தொடங்கி வண்ணம் தொடர அடர்த்தியான நல்ல தரவுகள் வரையில் கணிசமான வியர்வை இந்த நூலுக்காக செலவிடப்பட்டிருப்பது நன்றாக தெரிந்துகொள்ள முடிகிறது.

இந்த நூல் தமிழ் இலக்கிய வரலாற்றில் மாபெரும் மைல்கல்.பல் துறைகளில் முத்திரை பதித்த அஜயன் பலா அவர்களுக்கு இந்த நூல் மிகப்பெரிய அடையாளத்தை உலக அரங்கில் ஏற்படுத்தித்தரும் என்பதில் எள் அளவும் ஐயம் இல்லை.அஜயன் தொடர்ந்து இலக்கிய களத்தில் மட்டும் தீவிரமாய் இயங்குதல் நலம். வாழ்த்துக்கும் வரவேற்புக்கும் உரிய இந்த நூல் குறித்து பார்த்தவன் என்ற முறையில் என் பதிவு இது.வாங்கிப் படிப்பீர்கள் என்ற முறையில் உங்கள் பகிர்வையும் இந்த தமிழ் கூறும் நல்லுலகம் எதிர்ப்பார்க்கிறது.

உலகத் தமிழர்களின் உன்னத திருவிழா -25 ஜூன்

நட்சத்திரங்கள் உதிர்ந்து விழுந்திருந்த பூமிக் கிரகமாய் இரவுநேரத்து சாலை விளக்குகள் வெளிச்சங்களை பூசிக்கொண்டே இருந்ததால் கருத்த இரவு கூட வெளுத்த பகலாகவே காட்சி தந்தது. தெய்வத் தமிழுக்கு கும்பாபிசேகம் நடைபெறுவதாகவே கருதி தாய்த் தமிழின் மீது பக்தி பரவசம் மேலிட்ட பக்தர்களை போல மக்கள் உணர்வு மேலிடப்பட்டதாய் உணர்ந்தேன். அரசியலுக்கு அப்பாற்பட்டு குடும்பம் குடும்பமாக கூட்டம் கூட்டமாக அணிதிரண்டு வந்தது மக்கள் மெய்சிலிர்ப்பை ஏற்படுத்தவே செய்தனர்.

எல்லோரின் முகத்திலும் சந்தேசமும் உற்சாகமும் மிகையாகவே தென்பட்டது. ஆர்வம் என்ற எண்ணை ஊற்றப்பட்டு மொழி உணர்வு என்னும் தீக்குச்சி கிழிக்கப்பட்டதால் ஒவ்வொரு தமிழனும் குன்றிலிட்ட விளக்காய்
மிளிர்வதை கண்களால் கண்டு களித்தேன்.இருட்டை கொன்ற வெளிச்ச வீரர்களாய் நெஞ்சை நிமிர்த்தி நின்றிருந்தன மின்கம்பங்கள் .பால் வெளிச்சத்தில் நனைத்த படி வீடு திரும்பினேன் .தமிழ் கனவுகள் விழித்திரையில் இரவுக்காட்சியாய் விரிந்தது விடிந்தது

சூரியன் எல்லைக்குள் நுழைவதற்கு முன்பாகவே மாநாட்டு பரபரப்பில் பீளமேடுசாலையில் காற்றை கிழித்தபடி இரண்டுசக்கரத்தில் பறந்தேன். கொடிசியா வளாகம் வழக்கம் போல வரவேற்று நின்றது. சாலையில் இருபுறமும் வியாபாரிகள் வழிநெடுக கடைவிரித்திருந்ததும் பல நூறு ஏக்கர் பரப்பிலான களத்தில் வெள்ளை வெள்ளையாய் ஆடையணிந்து கோடி புறாக்கள் குழுமியதைப் போல காட்சி தந்ததும் எனக்கு பட்டினப்பாலையில் கடற்கரை காட்சி நினைவிற்கு வந்தது.கொடுத்தலும் பெறுதலும் இடைவிடாது நடந்துகொண்டே இருந்தது

இரும்புத்தூண்கள் காக்கிசட்டை அணிதிருக்கின்றனவா? என்று சொல்லும் அளவிற்கு வாசலில் கண்ணியம் மிக்க காவல் துறை விழிப்பு நிலையில் இருந்தது. அதில் ஒரு கரம் எனது வாகனத்தை கைகளால் மறிக்கவே ஏன் அடையாள அட்டையை காட்டியது மரியாதையோடு நான் அனுமதிக்கப்பட்டேன்.இரு புறமும் மக்கள் நுழைந்த வாரும் விடைபெற்றவாரும் இருந்தனர்.முதல் பரிதனையில் இருந்து விடை பெற்ற எனக்கு அடுத்த பரிசோதனை காத்திருந்தது. அதையும் தாண்டி கம்பீரத்தோடு நடைபோட்டி கபிலர் அரங்கம் சென்று சேர்ந்த போது நேரம் எட்டு மணி ஆகியிருந்தது.

ஆய்வரங்கத்தின் கண்ணாடி வாசலில் என் முகத்தை பார்த்து முடி திருத்தியபடி நுழைய சில்லென்ற குளிரூட்டப்பட்ட செயற்கை காற்று பனிக்காலத்து பருவநிலையை நினைவுப்படுத்தியது. பத்து திரை அரங்குகளை சேர்த்தால் என்ன பரப்பு இருக்குமே அந்த அளவிற்கு விரிந்திருந்த அரங்கில் உள்ளூர் பேரறிஞர் பெருமக்களும் அயல் நாட்டு தமிழ் அறிஞர்களும் ஆங்காங்கே அமர்ந்தபடி மகிழ்வாய் மலர்ந்த முகத்துடன் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்வதும் அளவளாவுதலும் ஆக இருந்தனர்.ஒரு புறம் குடிநீர் தேநீர் தின்பண்ட பிரிவுகள் எல்லா நேரமும் விருந்தோம்பிக்கொண்டே இருந்தன.செவிக்குணவும் வயிற்றிற்கு உணவும் கணிசமாகவே கிடைக்கும் அன்னைத் தமிழின் அமுதத் திருவிழா கோலம் பரவசம் ஊட்டியது

இருபத்தி மூன்று ஆய்வரங்க அறைகளில் எங்கள் கபிலர் அறை மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று முன்னதாகவே அமைப்பாளர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். அதை நிரூபிக்கும் வகையில் தமிழிலக்கிய உலகில் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திய பேராளர்கள் ஒவ்வொரு அமர்வையும் அலங்கரித்தார்கள். இன்றைய அரங்கில் கல்வெட்டு குறித்த ஐந்து கட்டுரைகள் நோக்கர்களுக்கு புதிய விருந்தாக இருந்தது என்றால் அது மிகையல்ல ,நானும் தெரியாத நிறைய தகல்வல்களை தெரிந்துகொள்ள முடிந்தது. கல்வெட்டியலில் சிறந்த ஆய்வாளர்களாக திகழும் திரு ஐராவதம் மகாதேவன் அவர்கள் இந்த குறிப்பிட்ட அமர்வுக்கு தலைவராக இருந்து நல்ல பதிவை ஏற்படுத்தினார்.சூடான சுவையான விவாதங்கள் வரலாற்றுப் பின்னணியில் எழுந்தன எழுத அனைத்து வினாக்களுக்கும் சரியான பதில்கள் விழுந்தன.

இலக்கியம் சார்ந்த அமர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது சுகவீனப்பட்டிருப்பவர்கள் அழைத்து வரப்படும் தள்ளுந்தில் ஒருவர் அழைத்து வரப்பட்டார். அவசரத்தில் வரவேற்றுவிட்டு உற்று பார்த்தபோதுதான் தெரிந்தது. அவர் ஈழத் தமிழறிஞர் வணக்கத்திற்கும் மரியாதைக்கும் உரிய திரு சிவத்தம்பி அவர்கள். . அவர்மீதிருந்த அன்பின் காரணமாக அருகில் சென்று மீண்டும் ஒரு முறை வணங்கி மகிந்தேன். கைகள் குவிய அவரின் முகம் மலர்ந்தது.விழிகளில் இமைகளை பாதி கவிழ்த்து கருத்தரங்கில் தன கவனத்தை குவித்தார்.இப்படியாக இருவர் இருவரல்ல உலகெங்கிலும் இருக்கும் தமிழ் பேரறிஞர்களை ஒரே கூரையில் கீழ் பார்க்கும் பாக்கியத்தை இந்த பிறவியில் நான் கிடைக்கப் பெற்றதற்காக நான் எல்லாம் வல்ல இயற்க்கைக்கு நன்றி கூறிக்கொண்டேன்.பெயர் தெரிந்த அறிஞர்கள் சிலர் முகம் தெரிந்த அறிஞர்கள் சில என்று எல்ல அறிகர்களில் நல்ல இலக்கியம் மற்றும் மொழி அதிர்வுகளை பெரும் பேரு பெற்றேன்.பொங்கும் மகிழ்வு உற்றேன்.

வியாழன், 24 ஜூன், 2010

உலகத்தமிழர்களின் திருவிழா -செம்மொழி மாநாடு -நாள் 24 ஜூன் .

நேற்றைய மாநாட்டின் களைப்பும் களிப்பும் கலந்து எனது இன்றைய காலை விடிந்தது. மாநாட்டிற்கு செல்லவேண்டும் என்று அலைபேசி அலறி எச்சரித்தது. அதன் ஆணையை அசட்டை செய்தபடி அதன் வாயை என் சோம்பேறித் தனத்தால் மூடினேன்.மீண்டும் ஏகமாய் அலறி என் தூங்குமூஞ்சித் தனத்தை குத்திக்காட்டியது. ஒரு பெரு மூச்சு விட்டபடி எழுந்திருந்தேன்.இன்றைய ஆய்வரங்க ஒருங்கிணைப்பு குறித்த கவலைகள் என் மனதை ஆக்கரமித்துக் கொள்ள பரபரத்தபடி இயங்கி மின்னல் வேகத்தில் தயாரானேன்.இரு சக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து விடைபெறும்போது நேரம் காலை ஏழு மணி.சாலையில் யாரும் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்று எண்ணிக்கொண்டு சென்ற எனக்கு பெரிய ஏமாற்றம் காத்துக்கொண்டு இருந்தது.

புயல் புகுந்து வெளியேறிய பிரதேசமாய் சாலையின் இருபுறங்களிலும் நேற்றின் அடையாளங்கள் பல வடிவங்களில் இருக்கத்தான் செய்தன.நகரினுள் நுழைய நுழைய மக்கள் கூட்டம் பெருக்கெடுத்துக் கொண்டே ஒருந்ததை கண்கள் பார்த்து பரவசப்பட்டன. ஒரு குறிப்பிட்ட நிறுத்தத்திலிருந்து சிறப்பு பேருந்து ஒன்றில் அழைத்து செல்லப்பட்ட சில நூறு ஆய்வறங்கப் பொறுப்பாளர்கள் நுழைவு வாயிலில் பரிசோதனைக்கு விரைவாய் உட்படுத்தப்பட்டு அனுமதிக்கப் பட்டார்கள். அலைபேசி, பணப்பை , கைக்குட்டை ஆகியவற்றை சுமந்துகொண்டு இரண்டு கைகளையும் தூக்கிப்பிடித்து பரிசோதனைக்கான எங்களின் ஒத்துழைப்பை வழங்கினோம் .

உள்ளே நுழைந்ததும் ஆய்வரங்க தொடக்கவிழாவில் எங்கை வருகையை வரவைத்துகொண்டோம். விழா மேடையின் எதிர் முனையின் இறுதியில் அமர்ந்திருந்த எனக்கு மேடையை அலங்கரித்த சான்றோர்கள் புள்ளி புள்ளியாய்த் தெரியவே ,
பிரத்யேக காட்சிப் பெட்டிகளில் அருகே அழகாய் காட்சியளித்தார்கள். விழிகளால் பார்த்து செவிகளால் ரசித்துக்கொண்டேன்.

போர்வைத் தேவைப்படும் அளவிற்கு பல்லாயிரம் பேர்கள் அமர்ந்திருந்த உள்ளரங்கள் குளிரால் சில்லிடச்செய்யத் தவறவில்லை. சுகமான சிம்மாசனமாய் இருக்கைகள் அருகில் பிளாஸ்டிக் குடுவையில் அடைக்கப்பட்ட குடிநீர்.இலவசம்தான் என்றாலும் தண்ணீர் தேவைப்படாததால் பலரும் அதன் மீது தீண்டாமையை மேற்கொண்டார்கள். வெளிநாட்டு விருந்தினர்கள் தமிழில் தமிழர்களை விட அழகாய் சிறப்பாய் பிழையின்றி பேசியது குறித்து பல உள்ளூர்த் தமிழர்கள் பெருமை பட்டு கொண்டனர்.

இரண்டாம் நாளில் ஆய்வரங்கள் தொடக்க விழாவைத் தொடர்ந்து ஆய்வரங்கங்கள் இருபத்திமூன்று அரங்கங்களில் பல்வேறு தலைப்புகளில் தொடங்கின. அரண்கள் என் நான்கு "கபிலர் அரங்கு"தான் எனது கட்டுப்பாட்டில் உள்ளது. சரியாக பண்ணிரண்டுமணிளவில் தொடங்க இருந்த அரங்கினுள் எல்லா ஏற்பாடுகளையும் முன்னதாகவே செய்து முடித்துவிட்டதால் குறித்த நேரத்தில் எவ்வித தடங்களும் இன்றி துல்லியமாய் தொடங்கியது.

முதல் இரண்டு அமர்வுகள் மொழியியல் சார்ந்தும் மூன்றாம் அமர்வு இலக்கணம் சார்ந்தும் இருந்தது.சதாசிவம்,வேல்முருகன்,சுப்பிரமணி,மனோகரன், நடனசபாபதி, வசந்த குமாரி,குமரேசன்,ஏகாம்பரம்,காசுமான்,ரோஸ் மேரி,இராஜேஸ்வரி, குமரன்,கிரிஜா,ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு கோணங்களில் கட்டுரைகளை படைத்தளித்தனர்..
(தொடரும்...)

உலகத்தமிழர்களின் திருவிழா -செம்மொழி மாநாடு -நாள் 23 ஜூன் .

கிழக்கின் வெளிச்சவருகைக்குப் பிறகும் ஆரவாரங்களும் பரபரப்பும் இல்லாமலும் கருநாகத்தைப்போல பளபளத்து காட்சித்தரும் வளைந்து நெளிந்த கோவையின் சாலைகளை வாகனங்கள்தான் வருடம்தோறும் நிரப்பிச்செல்லும் ,வழக்கத்திற்கு மாறாக இன்று பெருந்திரளான மக்கள் சாரைசாரையாய் ஊர்ந்து நகர்ந்தவண்ணமாகவே இருந்தார்கள்.உள்ளபடியே அவரவர்களுடைய திருவிழாக்களை அவரவர்கள் கொண்டாடுவது வழக்கம்.இந்த திருவிழாவோ அனைவருக்குமான ஒருவிழாவாக இருந்ததுதான் தமிழுக்கு கிடைத்த மிகப்பெரிய பேரு.

லட்சோப லட்ச மக்கள் அலைகடலென திரண்டிருந்த கண்கொள்ளாத காட்சி இனம் மதம் மொழி கடந்து உலகத்தமிழர்களின் ஒருங்கிணைக்கும் தமிழால் நேர்ந்தகு குறித்து அனைவருக்குமே பேருவகை. வ. உ.சி .பூங்காவில் தொடங்கி விமான நிலையம் வரையில் விழாகோலம் பூண்டிருந்த கோவையின் சாலைகள் எங்கும் செம்மொழியின் அடையாளங்கள் பளிச்சென தெரிந்தன.சாலையை ஒட்டி குடியிருக்கிறவர்கள் ஏதோ தங்கள் குடும்பத்தில் விழா நடக்கிறது என்று அடையாளப்படுத்துவதுபோல தங்கள் முற்றங்களில் சாணத்தால் மெழுகி கோலம் இட்டிருந்தனர்.கட்சிக்கொடி, கட்சி பதாகை, கட்சி டிஜிட்டல் பேனர்கள் என்று எதையும் எங்கும் பார்க்கமுடியவில்லை எனபது வெளிப்படையான உண்மை. முழுக்க முழுக்க இந்த விழாவில் தமிழ் மொழி முன்னிலைப் படுத்தப் பட்டிருப்பது குறித்து மக்கள் விருப்பம் தெரிவிக்கிறார்கள். இவ்விழ தங்களை கௌரவித்ததாகவே உணர்கிறார்கள். குற்றம் சாற்றுவதற்கு கூட வாய்ப்பை வழங்காத அளவிற்கு விழா நிகழ்ந்திருப்பது மெய்யாலுமே மகிழ்வையும் பெருமிதத்தையும் எல்லோரிடமும் ஏற்படுத்தி உள்ளது.

தொடக்கவிழா திட்டமிட்டதைப் போல இயல்பாய் நடத்தி முடிக்கப்பட்டிருந்தது. மேடையில் இருப்பவர்கள் உள்ளிட்ட அனைவருமே தாங்கள் அமர்ந்திருப்பது வெறும் இருக்கைகள் என்று உணராமல் சிம்மாசனங்களாகவே எண்ணி கர்வப்பட்டுக்கொண்டார்கள். எளிமையாகவும் இயல்பாகவும் செயல்பட்ட பாதுகாப்பு குழுவினரின் உழைப்பு, மக்களை கனிவான முறையில் நல்வழிப்படுத்தியது. மக்களும் அவர்களுக்கு ஒத்துழைப்பை சிறப்பாக வழங்கி ஊர்கூடி தேர் இழுப்பதற்கு கரம் கொடுத்தார்கள்.

தொடக்கவிழாவைத் தொடர்ந்து அனைவரும் கொடிசியா வளாகம் முழுக்க வளம் வந்த வண்ணமாய் காட்சியளித்தார்கள்.வந்திருந்தோரின் முகத்திலிருந்த உற்சாகம் ,உதட்டிலிருந்த புன்னகை, கரம் குவித்த மரியாதை எல்லாம் இவர்களை சொர்கத்தின் புத்திரர்களாக முன்னிறுத்தியது. ஒவ்வொரு தமிழர்களும் தங்களுக்கே உரிய விருந் தோம்பலோடு அனைவரையும் வரவேற்க தவறியதில்லை.தமிழ் தாயின் ஆசிர்வாதத்தில் ஒருதாய் பிள்ளைகளாக அனைவருமே குழுமி அடர்த்தியான நல அதிர்வை ஏற்படுத்தினார்கள். கடல் கடந்தும் கண்டம் தாண்டியும் வருகை தந்திருக்கும் உலகத்தின் அறிவுஜீவிகளை பெருமிதத்தோடு வரவேற்று உபசரித்தார்கள்.

மொழி ஒவ்வொரு தமிழனையும் கட்டிப்போட்டிருந்ததை என்னால் நன்கு உணரமுடிந்தது. மொழிக்காக நாமும் நமக்கான பங்களிப்பை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கல்லாத பாமரர்கள் மத்தியிலும் இன்று பற்றவைக்கப்பட்டிருக்க வேண்டும்.

கோவை மாநகரில் பிற எல்லையிலிருந்து , குடும்பத்துடன் வேண்டுதலுக்காக பாத யாத்திரையாக நடந்து வருபவர்களைப் போல பல்லாயிரம் பேர் குதூகலம் போங்க வருகைபுரிந்த வண்ணம் இருந்தார்கள். 'தமிழ்' எல்லோரின் மனதிலும் வணக்கத்திற்கு உரியதாக இருப்பதை அப்போதுதான் அறிந்து கொள்ளமுடிந்தது.. சிலர்,இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கரவாகனத்தில் வந்திருந்தனர். தங்கள் வாகனங்களை அச்சமின்றி பல இடங்களிலும் நிறுத்துவதற்கு பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

விழிகளிளுக் செவிகளிலும் விருந்து உண்டவர்களுக்கு சரியாக ஒரு மணி அளவின் சூடாய் சுவையாய் கம கம பொட்டல் உணவுகள் காத்துக் கொண்டிருந்தன. நடந்த களைப்பையும் நின்றிருந்த களைப்பையும் தாண்டி மக்கள் அலங்கார ஊர்திகள் நகர்வலம் வரும் அந்த பொன்மாலை பொழுதுக்காக காத்திருந்தனர். மாலை பொழுதில் சாலையின் இரு புறங்களிலும் இடமாகவும் வளமாகவும் சென்றவர்கள் வென்றவர்கள் வந்தவர்கள் என்று சொல்லும் வண்ணம் மக்கள் வழியத்த் தொடங்கினர்.பெரியவர்கள் பெண்கள் குழந்தைகள் பள்ளி கல்லூரி மாணவர்கள் என்று பலரையும் இந்த கூட்டத்தில் பார்க்க முடிந்தது.

"ஊர்கூடி தேரிழுத்தால் வந்து சேரும் ஒரு மனதை நாம் இருந்தால் துன்பம் தீரும் ".என்ற வரிகளுக்கேற்ப தமிழினம் தன தாய்த்தமிழின் தொன்மைச்சிறப்புகளை கண்டு ரசிப்பதற்காக சாலையின் இரு மருங்கிலும் ஆவலுடன் திரண்டிருந்த நேரத்தில் அலங்கார ஊர்திகள் ஒவ்வொன்றாய் பவனி வந்தன.-வள்ளுவர் கோட்டத்து தேர்- குறிஞ்சி முல்லை மருதம் நெய்தான் பாலை ( ஐவகை நிலங்கள்) -கடையேழு வள்ளல்கள்- குற்றாலக் குறவஞ்சி- போர்க்கை பாண்டியன்- பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழன்- மனுநீதி சோழன்-கூத்தரும் பாணரும்-வேலு நாச்சியார்- கண்ணகி- மணிமேகலை- கட்டபொம்மன்- ஊமைத்துரை- மருது சகோதரர்கள்- மருத நாயகம் - ஆகிய தொன்ம இலக்கியங்களின் பிரதிபலிப்பை அலங்கார ஊர்திகளை மக்கள் கண்கள் குளிர கண்டு ரசித்தனர்.மேலும் பாரதியார்- சாதிகள் அற்ற சமூகம்- வண்ணங்கள் பல எண்ணங்கள் ஒன்று- சங்கே முழங்கு- கலை வளர்ச்சி- பகிர்ந்து உண்- என்று சுமார் பன்னிரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த கலை அலங்கார ஊர்திகள் வந்து அதே தொலைவிற்கு திரும்பின. அந்தனை தொலைவிலும் மக்கள் சங்கிலித் தொடர்போல் நீண்டிருந்தது தமிழினத்தின் பலத்தை அடர்த்தியாய் காட்டியது. நேற்று வெயிலில் ஆதிக்கம் அதிகமாக இருந்ததுகூட மக்களுக்கு தெரியாத அளவிற்கு அவர்களை ஆர்வம் குடைபிடிக்கவே செய்திருந்தது.

நாளை.....???

மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் சந்திப்பில் நான்

செம்மொழி மாநாட்டிற்காக வந்திருந்த வெளியுலக எழுத்தாளர்களுக்கான இயல்பான சந்திப்பு ஒன்று நேற்று நடைபெற்றது. . அதில் குறிப்பாக மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் இருநூறு பேர் கலந்துகொண்டனர்.அந்த சந்திப்பில் தமிழகத்து படைப்பாளிகள் சார்பில் நான் கலந்துகொண்டு 'உள்ளூரும் உலகத்தமிழும்' என்ற தலைப்பில் பேசினேன். என் நெகிழ்வான உரையால் ஈர்க்கப்பட்ட மலேசிய எழுத்தாளர்கள் சங்கத்தில் பொதுச்செயலாளர் திரு ஆ. குணநாதன் அவர்கள் எனக்கு சால்வை அணிவித்து , மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் என்ற செம்மொழி மாநாட்டை ஒட்டி விளியிடப்பட்ட மலர் ஒன்றையும் பரிசாக்கி மரியாதை செய்தார்கள். 'புதிய ழ' இதழை அனைவருக்கும் நான் பரிசாக்கி மகிழ்ந்தேன். நம் கவிதை இதழ் முயற்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து அகம் மகிழ்ந்தார்கள். மலேசிய எழுத்தாளர்கள் பலரையும் சந்தித்து தனித்தனியே உரையாடுகிற நல வாய்ப்பு கிட்டியது.ஒருவர்கூட தமிழல்லாத பிறமொழியில் பேசி நான் பார்க்கவில்லை. தமிழை புகழும் போதெல்லாம் அவர்களை புகழ்வதாகவே நினைந்து நினைந்து பூரித்துக் கொண்டதை அவர்கள் திருமுகத்தைப் பார்த்து தெரிந்துகொள்ள முடிந்தது. கடல் கடந்தும் கண்டம் தாண்டியும் இருக்கிற தமிழர்கள் தமிழை வெகுவாக நேசிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்கு நல் வாய்ப்பாக இருந்தது. இது என் வாழ்வில் மறக்கவொண்ணா நிகழ்வாகும்.

மலேசிய தோழர்களே வாருங்கள்.பதில் கூறுங்கள்

திங்கள், 21 ஜூன், 2010

காதல் குறட்பாக்கள் : 28

நீயும்
நானும்
ஆரத் தழுவினோம்.
இடையில்
நுழைய முயற்சித்து
தோற்றுப் போனது
'காற்று'.
-----------------------------------
குறள் : 1108
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
பொழப் படாஆ முயக்கு

ஞாயிறு, 13 ஜூன், 2010

இயக்குனர் சேரனுடன் ஒருநாள் -(பகுதி- 4)

புன்னகையின் ரேகைகள் ஏகமாய் பரவி இருந்த சேரனின் முகத்தில் பரபரப்பின் சுவடுகளை பார்க்க முடிந்ததில்லை.தன ஆட்காட்டி விரலால் பொத்தான் ஒன்றை அழுத்தினார் .அதன் மணியோசை கரைந்துபோகும் முன் உதவியாளர் திடீரென அவதரித்திருந்தார்.யாரோ ஒருவரின் பெயரை உச்சரித்துவிட்டு 'எங்கே' என்று கேட்டார். இந்த வினாவிலிருந்து சேரன் அடுத்த அலுவலுக்கு தயாராக இருப்பதை நான் யூகித்துக்கொண்டபடியே 'உங்களுடைய அரிய திரை நேரத்தில் இரண்டு மணிநேரத்தை திருடிக்கொண்டேன், உங்களை சந்தித்ததில் மெத்த மகிழ்ச்சி' என்று நன்றியின் மூலம் விடைபெறுவதற்கு உரிய குறிப்பை முன்வைத்தேன்.எனக்கும் உங்கள் சந்திப்பு மகிழ்வை ஏற்படுத்தியது என்று பதிலளித்து சேரன் புன்னகைத்தபோது உதவியாளர் ஒருவர் விரைந்து வந்து 'வந்தாச்சு சார்' என்று தகவலை சொல்லிவிட்டு நகர்ந்தார். சேரன் அலுவல் காரணமாக வெளியே கிளம்புகிறார் ,வாகனம் வந்திருக்ககூடும் என்று ஊகித்துக்கொண்டேன். என் இரண்டு ஊகங்களும் தவறானவை என்பதை 'சாப்பிடலாம் வாங்க மணி' என்று சேரன் அழைத்த போது அறிந்துகொண்டேன். மரியாதைக்காக மறுத்தேன்.பின் அன்பிற்காக சம்மதித்தேன்.உடனே நாங்கள் அமர்ந்திருந்த அலுவலக சிம்மாசனங்கள் காலியாகின. அடுத்த அறைக்குள் நகர்ந்தோம்.அந்த அறையின் மேற்கு திசையில் வலதுபுறமாக இருந்த கை கால் தூய்மைப்படுத்தும் அறைக்குள் நான் வழிகாட்டப்பட்டேன்.வெளியில் வந்ததும்.ருசிகர சமையலை கமகம நறுமணம் அறிவித்தது. அந்த அறையில் மூவர் அமரும் இலவம்பஞ்சு சோபாவின் இடது ஓரத்தின் நான் அமர்ந்துகொண்டேன்.சேரன் அருகிலுள்ள ஒற்றை சிம்மாசனத்தில் அமர்ந்துகொண்டார்.சேரனின் கண்ணசைப்பை புரிந்து கொண்டு இயங்கும் இனிய உதவியாளரிடமிருந்து வெள்ளைநிற பீங்கன் தட்டினை நாங்கள் இருவரும் வாங்கிக்கொண்டோம். சைவ பிரியாணி பரிமாறப்பட்டது.அதில் கண்ணை உறுத்திக்கொண்டிருந்த காய்கறிகளில் வண்ணங்களும் ,நெய்யா எண்ணையா என்று ஐயப்பாட்டை ஏற்படுத்தும் அளவில் இருந்த அதன் நறுமணத்தை நுரையீரல் முழுக்க நான் நிரப்பிக்கொண்டேன். பசியின் ஆதிக்கம் அதிகமாகி இருந்ததை அந்த வினாடியில் உணரமுடிந்தது. பழுப்பு நிறத்தில் உருண்டை உருண்டையாய் வருவலும் வழங்கப்பட்டது. தட்டின் ஒருபுறம் வெங்காயப் பச்சிடி மறுபுறம் கிழங்கு குருமா இன்னொருபுறம் வாழைக்காய் வற்றல் என்று பீங்கான் தட்டின் மொத்த பரப்பையும் முழுக்க ஆக்கிரமித்துகொண்டன. பழுப்புநிற வறுவலை சுவைக்க தொடங்கியதிலிருந்து முடிக்கும் வரை சில்லி கோபியா சில்லி சிக்கனா என்ற ஐயப்பாடு எனக்கு இருந்துகொண்டே இருந்தது. அவ்வளவு சுவையாய் இதமாய் இருந்தது. சைவ பிரியாணி எனது தட்டில் தீர்ந்திருந்தபோது வெள்ளை சாதம் வழங்குமாறு சொன்ன சேரனின் ஆணைக்கு உதவியாளரும் நானும் சம்மதிக்கக இரண்டாம் சுற்று தொடங்கியது. அடிக்கடி எனக்கு தேவையானவற்றை வழங்குமாறு மகிழ்வாய் ஆணையிட்டுகொண்டே இருந்தார். இதயப்பையும் இரைப்பையும் நிரம்பி இருந்த இறுதிக்கட்டம். இரண்டொரு நிமிடங்களுக்கு முன்னதாக உணவருந்தி முடித்திருந்த சேரன் நான் சாப்பிடும் வரை காத்திருந்தது அவரின் விருந்தோம்பல் பண்பை வெளிப்படுத்தியது. கைகளை சுத்தம் செய்வதற்காக அந்த அறைக்குள் சென்று வெளியேறும் வாசலில் கைகளின் ஈரத்தை துடைப்பதற்கான துண்டை தருவதற்காக அதன் வாசலில் காத்திருந்தார். உணவு முடித்து தமிழ், இனம், மொழி, கலை சார்ந்த விவாதங்களை மெல்லத்தொடங்கி ஒரு கட்டத்தில் முடித்து வைத்தோம்.இருவரும் விடைபெறும் நேரம்.ஒரு உதவியாளரை அழைத்து ஆட்டோவில் என்னை வழியனுப்பி வைக்குமாறு சொல்லி அனுப்பினார். பொங்கும் மகிழ்வுடனும் நட்பின் சிலாகிப்புடனும் தோழமையின் பேரானந்தத்துடனும் நன்றி சொல்லி விடை பெற்றேன்.

'அதிதி தேவோ பவ' என்று சொல்லிக்கேள்விப் பட்டிருக்கிறேன்.
அதை சேரனிடம் பழகி தெரிந்துகொண்டேன்.

"நல்ல மனம் வாழ்க
நாடு போற்ற வாழ்க"

சனி, 12 ஜூன், 2010

இயக்குனர் சேரனுடன் ஒருநாள் -(பாகம் -3)

உங்கள் முகத்தில் முத்துமுத்தாய் வேர்த்திருக்கிறதே என்று மின்விசிறியை சுழல வைத்தார் எனக்காக.கைக்குட்டையை எடுத்து துடைத்துக்கொண்டே நான் குளிர்பிரதேசத்தில் பிறந்தவன்,மலைமாவட்டமான உதகை தான் என் பூர்வீகம் என்று சொல்லி தொடங்கினேன்.மதுரை மாவட்டம் மேலூரில் ஜனனமானேன் என்று தன் வேர்களைக் குறிப்பிட்டார் சேரன்.ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் பெற்றோர்கள்.,ஒரு குழந்தையின் இரண்டாவது பெற்றோர் ஆசிரியையர்கள் என்ற வாசகத்திற்கும் இவருக்கும் பொருத்தம் உள்ளது. காரணம் இவரது அன்னை ஒரு பள்ளி ஆசிரியை. இவர் சொந்த ஊரில் எந்த பள்ளியில் பணி அமர்த்தப்பட்டாரோ அதே பள்ளியிலிருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். கால் நூற்றாண்டைக் கடந்து சுமார் முப்பது ஆண்டுகள் கல்விக்காக தன்னை அர்பணித்திருப்பதை பெருமிதம் பொங்க சொன்னபோது நானும் பெருமிதப்பட்டுக் கொண்டேன். எனது அன்னையும் பள்ளி ஆசிரியைதான் என்று அவரின் பதிலுக்கு இடையே பொருத்தமாய் குறுக்கிட்டு நாம் இருவரும் ஆசிரியர் குடும்பத்தில் வந்தவர்கள் என்று சொன்னதும் அவரின் முகம் இன்னும் மலரத்தொடங்கியது.திரை மற்றும் திரையிடல் சார்ந்த பணியில் தனது தந்தை அனுபவம் பெற்றவர் என்று தந்தையை அறிமுகம் செய்து வைத்தபோது, தந்தையின் கலையுணர்வும் தாயின் கல்விஞானமும் சேர்ந்த சரிவிகித கலவையாக நீங்கள் இருக்கிறீர்கள் என்று நானும் சொல்லி மகிழ்ந்தேன்.உங்கள் திரைப்பயணம் எப்படி நேர்ந்தது என்று இயல்பாய் கேட்டு வைத்தேன்.திரை உலகில் கால் நூற்றாண்டை நோக்கி நெருங்கிக்கொண்டிருக்கிற கனத்த படைப்பாளி என்பதை அவரின் பதில் உறுதிப்படுத்தியது. யாருக்காகவும் எதற்காகவும் எந்த சூழ்நிலையிலும் நான் என் படைப்போடு சமரசம் செய்துகொள்ளமாட்டேன் என்று உறுதியோடு இருக்கிற சேரனின் பேச்சில் சமூக அக்கறையும் படைப்பு தர்மமும் பளிச்சிட்டது. சினிமா சார்ந்து உரையாடியவற்றில் ,சேரன் தன் வெற்றிபெற்ற படங்களைப்பற்றி சிலாகித்துக்கொண்டதே இல்லை.மாறாக தோல்வியைத் தழுவிய படங்கள் என்று சொல்லப்படுகிற குறைந்த நாட்கள் ஓடிய படங்கள் குறித்து வினாக்களை முன்வைத்தார். அதில் அவரது தன்னடக்கத்தையும் படைப்பை செழுமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற ஆவலையும் பார்க்கமுடிந்தது.

இயக்குநர் சேரனுடன் ஒருநாள் - (பாகம் -2)

ஒரு விளக்கின் ஒளி மற்றொரு விளக்கை ஒளி ஏற்றுவதைப்போல சேரனின் புன்னகை என்னிடமும் மகிழ்ச்சியை மலர்த்தியத்தை என்னால் நன்கு உணரமுடிந்தது. சற்று சதை வற்றி இளைத்ததுபோல இருந்த சேரனைப் பார்த்து நேரில் வித்தியாசமாக காட்சி தருகிறீர்கள் என்று கேட்டதற்கு ,எட்டு கிலோ எடை குறைத்திருக்கிறேன் என்று சிரித்தபடியே சொல்லிஎன்னை உள்ளே அழைத்து சென்றவராய் தான் அமர்வதற்கு முன் என்னை அமரச்செய்தார்.அவரின் ஒவ்வொரு அசைவையும் கூர்ந்து கவனித்த அந்த நொடிகளில் விறைப்பும் கம்பீரமும் கலந்த புலனாய்வுத் துறையிடம் இருக்கவேண்டிய உடல்மொழியை அவருக்குத் தெரியாமல் நான் விழிகளால் வாசித்தேன். 'யுத்தம் செய்' திரைப்படத்திற்காக கனகச்சிதமான கதாபாத்திரமாக தன்னை உருமாற்றியிருந்த சேரனையும் மீறி அவருக்கே உரித்தான இயல்பான அன்பின் அடையாளங்களும் போலித்தனமற்ற உண்மையின் வெளிப்பாடுகள் பளிச்சிடவே செய்தன.பாண்டியநாட்டில் பிறந்திருந்த போதிலும் தன பெயரை சேரன் என்று வைத்துக்கொண்ட திரைராசன் சிம்மாசனத்தில் என்னெதிரே அமர்ந்துகொண்டார்.அவரது வரவேற்பிலும் விருந்தோம்பலிலும் லயித்து போன நான் சிலவினாடிகள் வாத்தைகள் தொலைத்து மெளனத்தில் சஞ்சாரித்தேன்.மொழி,
கலை,ஊடகம் சார்ந்த தோழர்களை இணைக்கும் முகநூலின் பங்களிப்பை குறிப்பிட்டபடி எங்களின் உரையாடல் வெதுவெதுப்பானது.வெகுநாள் நட்புக் கொண்டாடிய நண்பனுடன் பேசுவது போலவும் ; பாசத்தைப் பொழியும் சகோதரனுடன் சிலாகித்தது போலவுமான உணர்வை அவரது நடத்தை உருவாக்கியது. அணுக, பேச இத்தனை எளிதான மனிதரா என்ற ஆச்சர்யத்தை ஒவ்வொரு கணமும் ஏற்படுத்திக்கொண்டே இருந்தது.. பரிமாறலில் இடையிடையே அறைமுழுவதையும் அழகால் என் விழிகள் அளவெடுத்துக்கொண்டு இருந்தன.மேசைக்கு நேர் மேல்புறத்தில் தொங்கும் நிலையில் வாசிப்புக்காக வைக்கப்பட்டிருக்கும் அழகான மின்விளக்கு. இடது புறத்தில் உள்ள குட்டி மேசையில் நிரம்பி வழியும் வெற்றிப்பதக்கங்களும் வியர்வையின் விளைச்சலாய் கேடையங்களும். தன் நல்ல திரைப்படத்தின் மூலம் தேசிய விருதுகளை நெஞ்சின் பதியன் போட்டிருப்பதைப் போலவே சுவர்களும் அதன் விருதுகளை சுமந்தபடி கம்பீரமாய் காட்சியளித்தன.மேசையிலிருந்த பொத்தானை அழுத்தியது வழக்கமான இரைச்சலுக்கு பதிலாக இசையை ஒலித்தது.அரை லிட்டர் பிடிக்கும் சில்வர் டம்ளரில் குடிநீர் கிடைத்தது. மினரல் நீரின் ஆதிக்கத்தையும் ,பிளாஸ்டிக் அரக்கனையும் அங்கு பார்க்கமுடியாமல் போனதற்காய் அக்கணமே மகிழ்ந்தேன். சுமார் ஒருமணியளவில் தொடங்கிய அர்த்தமுள்ள உரையாடல் இரண்டை மணி வரையில் தொடர்ந்தது.ஒளிவு மறைவுகள் இன்றி இருவரின் இதயங்களும் திறந்த புத்தகமாய் மலர்ந்திருந்தன .இதற்கிடையில் நான் கொண்டு சென்ற 'புதிய ழ' கவிதை இதழை கையொப்பமிட்டு அன்பாய் அளித்தேன்.என் ஆர்வத்தை அறிந்தவராய் நூலுக்குள் உடனே பயணிக்கத் தொடங்கிவிட்டார்.இந்த நூலில் தயாரிப்பு குறித்தும் ,இந்த நூலுக்காக கவிஞர்களை ஒருங்கிணைக்கும் முறை குறித்தும் ஒவ்வொன்றாய் கேட்டு தெரிந்துகொண்டார்.இதற்கிடையில் அவரது அலைபேசியை ஒலிக்க செய்த அழைப்பை ஏற்றுக்கொள்ளாமல் அணைத்து வைத்துக்கொண்டது அவரின் நாகரீகத்தை எனக்கு கற்பிக்க வைத்தது. பூமியானது மழையின் முத்தங்களுக்காக காத்துக்கொண்டிருந்த அந்த ஈர நொடிகள் என்னுள் வெப்பத்தை பற்றவைத்தது. குளிரூட்டப்பட்ட அறை என்று யூகித்திருந்த நான் 'மின்வெட்டா' என்று வினவியதும் ,மின்விளக்கை எரியவிட்டு உறுதிப்படுத்திக்கொண்ட சேரன் மின்சாரன் இருக்கிறது .முடிந்தவரை மரங்களில் சுவாசங்களையே உள்வாங்கிக்கொள்கிறேன்,
மின்விசிறிகளுக்கு நான் என்றுமே அடிமையாய் இருந்ததில்லை என்று விளக்கினார் . அவரது வலதுபுறத்து சாளரம் பெரிதாய் அகலமாய் திறந்திருந்ததை அப்போதுதான் நான் கவனிக்க தொடங்கினேன்.அபிபுல்லா சாலையின் சிவசைலம் கண்ணில் காட்சிதந்தது.நான் பெரும்பாலும் மின்விசிறி உபயோகிப்பதில்லை என்று தொடங்கி,இயற்கையின் வெப்பநிலைக்கு ஏற்றவாறு நாம் நம் உடலை பழக்கப்படுத்திக்கொள்வது நல்லது என்று தன் அனுபவத்தை கலந்துகொண்டார்.

இயக்குனர் சேரனுடன் ஒருநாள் ....(பகுதி-1 )

சரியாக நண்பகல் பன்னிரண்டரை மணிக்கு விடுதியிலிருந்து வெளியேறி பாரதிசாலை வந்ததும் காற்றை கிழித்துக் கொண்டு விரைந்த ஆட்டோ என் விரலசைப்பிற்கு நிலைகுத்தி நின்றது.'அபிபுல்லா சாலை போகணும்.,வாடகை எவ்வளவு? சரியா ஒருமணிக்கெல்லா சேத்திடனும் ' என் வினாக்களுக்கும் கட்டளைக்கும் தலை சாய்த்தப்படி என்னையும் சுமந்தபடி பறந்தது.நெரிசல் சிக்னல் எல்லாம் தாண்டி துல்லியமான நேரத்திற்கு கட்சிதமாக கொண்டு சேர்த்தார்.'எறங்குங்க,இதுதான் டைரக்டர் சேரன் ஆபீஸ்'என்று வாடகையை பெற்றுக்கொண்டு மாயமானார். எந்த ஆரவாரமும், படோடாபமும் , சிமாவுக்கே உரிய பந்தாவும் அங்கு தென்படவில்லை.இது இயக்குனர் சேரன் அவர்களின் அலுவலகம் தானா? என்ற ஐயப்பாடு வந்து தொற்றிக்கொண்டது.நல்ல மனிதர்களின் இதயம் போல திறந்திருந்தது வெளிப்புறத்து உலோகக்கதவு.தயக்கத்தோடு உள்ளே நுழைந்தபோது நிசப்தம் பரவிய வரவேற்பறை.சுவரில் அட்டோகிரப் டிஜிட்டல் அட்டையில் நல்ல படங்களைத் தந்த சேரன் புன்னகை முகத்தோடு வரவேற்றுக்கொண்டிருந்தார்.இப்போதுதான் உறுதிபடுத்திக்கொள்ள முடிந்தது.இதழ்கள் படித்தபடி இருக்கையில் அமர்ந்திருந்த மூன்று இளைஞர்கள். 'திரு சேரன் இருக்காருங்களா' என்று கேட்டதும் 'நீங்க'என்று விசாரித்தபடி அமரச்சொன்னார்கள். என்னை அறிமுகப்படுத்திக்கொண்டதும்.
கீழதளத்திளிருந்து முதல் மாடியை நோக்கி அழைத்து செல்லப்பட்டேன்.அங்கிருந்த இருக்கைகள் எனக்கு சிம்மாசனங்கலாய் தெரிந்தன. இருக்கையில் அமர்ந்ததும் அவை என்னை முழுதுமாய் உள்வாங்கிக்கொண்டன மிருதுவாய் அழகாய்.அதில் சுகமாய் புதைந்திருந்து கலை அம்சத்தோடு கூடிய அந்த அறையை ரசிக்கத்தொடங்கினேன். பழைய லாந்தர் விளக்கினை போல கலை நயத்தோடு உருவாக்கப்பட்டிருந்த அந்த எழில் விளக்கு கிழபுரத்து சுவற்றில் மூலையில் ஒரு டீபாயில் காட்சிதந்தது.இரண்டாவது தளத்திற்கு செல்லும் படிக்கட்டு பகுதியின் கூழ்பகுதியில் சுவற்றை ஒட்டி குட்டியாய் ஒரு மர மேசை அதில் ஒரு கணினியும் குட்டியாய் ஒரு சுழலும் இருக்கையும். வெட்கத்தில் சிவந்ததைப் போல மருதாணி கலந்ததைப்போல் வைத்ததை போல தரை முழுக்க கிராமத்து செம்மண்ணை அடையாளப்படுத்தும் விதத்ததில் செந்நிறத்தில் பளிச்சிட்டது.இடது புறமாக இருந்த மூடியிருந்த அறையில்தான் இயக்குனர் இருக்க கூடும் என்று யூகித்தபடி அமர்ந்திருந்தபோது கதவின் இடது புறத்து நிலவில் பழங்காலத்து தொலை பேசி ஒன்று மரத்தில் பொருத்தப்பட்டிருந்தது. எல்லாம் ரசித்தப்படி நேரம் ஆவலிலும் சுவாரஸ்யத்திலும் மெல்ல மெல்ல கரைந்துகொண்டே இருந்தது. கதவுகள் திறக்கும் ஓசை ஏதும் இல்லாமல் திறந்தது. வெள்ளை சட்டை அணிந்து வாகாய் வகையாய் ஒருவர் வெளியேறினார் ,அவர் யாரென்று என்னால் கவனிக்க முடியவில்லை ,இயக்குனர் அவர்களின் நண்பராய் இருக்கக்கூடும்.அவரை பின்தொடர்ந்து வழியனுப்பும் முகமாய் வெளியில் வந்து என் கண்களுக்கு எளிதாய் காட்சிப்படுகிறார்.அரிதாரங்கள் பூசும் திரைக்களத்தில் போலித்தனம் இல்லாத தமிழ் சினிமாவின் பொக்கிசமாய் திரு சேரன்.'வணக்கம்' இருவரும் பரிமாறிக்கொண்டோம். அவரில் படைப்புகளுக்காக எனது பாணியில் வணங்கினேன். இன்முகத்தோடு வரவேற்றபடி என்னை உள்ளே அழைத்து சென்றார்.(பகுதி -௨ தொடரும்)

செவ்வாய், 1 ஜூன், 2010

தொடர்வண்டி குறிப்புகள்

இருவரிக்குள் ஒருவரிக்கவிதையை
எழுதிச்செல்கிறது தொடர்வண்டி.

தண்டவாளங்களோடு
இடைவிடாமல் இங்கிலீஸ்முத்தம்
கொடுக்கின்றன
இரும்புச்சக்கரங்கள்.

'தண்டவாளங்கள்'
இந்திய மண்ணின் அந்நியன் எழுதிய
உலோக வரலாறுகள்.

எல்லா மனிதர்களையும்
சுமந்தபடி நகர்கிறது
ஒரு ஜனநாயகவீதி.

தூங்கும்
ஸ்டேஷன் மாஸ்டர்களை
சங்கொலியில் எழுப்பியபடி
மின்னதிர்ச்சியில்
கதறிக்கொண்டே ஓடுகிறது
தொடர்வண்டி.

வழிநெடுக
சிலுவை மரங்களாய்
மின்சாரம் சுமக்கும்
கம்பங்கள்.

உறவுக்காரர்களை
வழியனுப்பி வைப்பதுபோல
கையசைத்து புன்னகைக்கும்
சிறார்கள்.

லட்சக்கனக்கில்
நிழல் சிதைந்த
குடைகளைப் பிடித்திருக்கும்
முட்புதர்கள்.

கைகளில்
காயக் கவிதைகளை
முட்கள் கிறுக்க
சுள்ளி பொறுக்கும் பெண்கள்.

கொள்ளை வெயிலில்
வெள்ளைக்காரன் விளையாட்டை
விளையாடும்
கறுப்புக் குழந்தைகள்.

தியானிக்கும்
மலைகள்.

இரையைத் தேடிக்கொண்டே
நகரும் ஆடுகள்.

வறண்ட தரிசுகளில்
நம்பிக்கையை விதைக்கும்
உழவர்கள்.

தூரத்தில்
தண்டவாளத்தை தாண்டும்
பள்ளித்தாமரைகள்.

எல்லோரும் குளிக்கும்
ஒரு
கிராமத்தின் பாத்ரூமாய்
தெப்பக்குளம்.

ஊர் எல்லையில்
தெருமுனையில்
கொட்டமடிக்கும் சுந்தரபுருசர்கள்.

ஆலமரத்தடியில்
அசைவற்று ஓய்வெடுக்கும்
தெய்வங்கள்.

வண்ணங்கள் தொலைத்த
புழுதிபடிந்த சோலைகள்.

கழுத்து வலிகளைத்
தங்களுக்குள்ளேயே
பரிமாறிக்கொள்ளும்
பாரம்சுமக்கும் வண்டிமாடுகள்.

ஆளரவமில்லாத
அனாதைச்சாலைகள்.

சன்னலுக்குள்ளே
கைகளை நிரப்பும்
இயலாத...
பெண்கள்-குழந்தைகள்-பெரியவர்கள்.

மனிதர்களை வள்ளலாக்க
முயற்சிசெய்து
தோற்றுப்போன பிச்சைக்காரர்கள்.

மானிடர்களின் கருணையுள்ளத்தை
சோதனைச்செய்து பார்க்கும்
குரங்குகள்.

அமுதமோ ஆலகாலமோ
உணவுப்பொட்டலங்களை விற்று
விருந்தோம்பும் சீருடைமனிதர்கள்.

வயிற்றில் கலவரம்;
இரப்பையில்
உள்ளிருப்பு போராட்டம்.

பூட்ஸ் கால்களுக்கிடையில்
தவழ்ந்தபடி
தரையைக் கூட்டிச்செல்லும்
ஊனமுற்ற சிறார்கள்.

இப்படியாய் ...
டயர் பஞ்சராகாமல்
ஓடும் தொடர்வண்டியில்
எனக்கு பிடித்தது...
தீண்டாமையை கடைப்பிடிக்காத
ஜெனரல் கம்பார்மென்ட் தான்.