சனி, 14 மே, 2011

பூவலூராருடன் ஒருநாள் - பகுதி I

நெருப்பை கொளுத்திவிட்டு சன்னலுக்குள் கொலைவெறியோடு எட்டிப்பார்க்கும் சூரியனை அடிக்கடி முறைத்துக்கொண்டே , கூடவே சென்னையை செல்லமாக மனதிற்குள் சலித்துக்கொண்டு ஒரு கையில் கைக்குட்டையால் இடைவிடாது வழியும் வியர்வை நதிகளை ஒற்றி எடுத்துக்கொண்டும் மறுகையால் வகுப்பு முடிவதற்கு இன்னும் எத்தனை நிமிடங்கள் இருக்கிறது என்பதை உறுதி செய்வதற்காக அலைபேசியை ரகசியமாய் யாருக்கும் தெரியாமல் பார்க்காததைப் போல பார்த்தேன்.



சைலெண்டில் வைத்திருந்த அலைபேசிக்கு எந்த அழைப்பும் வராததை உறுதிபடுத்திக்கொண்டு,வழக்கம் போல வந்து குவியும் எஸ் எம் எஸ்-களை அசட்டை செய்யும் பரபரப்பில் ஒவ்வொன்றாக டெலீட் செய்வதற்காக எனது விரல்கள் விரையும் போது அன்பழகனிடமிருந்து வந்த செய்தி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.சந்தோசம் மேலிட எப்போது இந்த வகுப்பு முடியும் என்ற எரிச்சலும் தலைத்தூக்கியது.என் ஏக்கம் பயிற்சியாளரின் மனதிற்குள் உள்ளுணர்வை ஊடுருவி இருக்கக்கூடும்.வகுப்பு முடிந்தது.



எல்லோரும் வெளி ஏறுவதற்கு முன்பாக முந்திக்கொண்டு வகுப்பிலிருந்து வெளியே வந்தேன்.சூரிய நெருப்பு என் வருகைக்காக காத்திருந்து வார்ம் வெல்கம் கொடுத்தது.என்னை வரவேற்ற சூரியன் தன் அணைப்பை விளக்கி கொள்ளவே இல்லை.சூரியனின் இந்த அசௌகர்யத்திலிருந்து தப்பித்துக்கொள்ள அந்த வழியே குறுக்கிட்ட ஆட்டோவில் இடது கையை குறுக்கே நீட்ட நின்ற ஆட்டோவிற்குள் குனிந்து அமர்ந்து நிமிர்ந்ததும்தான் ஆசுவாசமாக இருந்தது. சூரியனிடமிருந்து தப்பித்தது போர்க்களத்திலிருந்து பகையாளியிடமிருந்து பிழைத்து வந்ததைப் போன்ற உணர்வை என்னுள் ஏற்படுத்த.ஆட்டோவின் இருவழி சாளரம் எனக்கு விசிறி வீசிக்கொண்டிருந்தது.நான் அந்த சில வினாடிகளில் அரசனாக சக்கர பல்லக்கில் பயணப்பட்டேன்.



அறைவந்து சேர,நான் மின்னல் வேகத்தில் தயாரானேன்.குளியல்,உடைமாற்றம்,புறப்பாடல் எல்லாம் ஐந்து நிமிடங்களுக்குள் முடிந்திருந்தது.எஸ் எம் எஸ்ஸில் குறிப்பிட்ட காலத்திற்கும் சேப்பாக்கத்திலிருந்து வடபழனிக்கு செல்லமுடியுமா என்ற சந்தேகம் எழுந்தது.ஆடோவா? பேருந்தா? என்ற மனசலனங்களுக்கு இடையே காத்திருந்த அந்த முன்னிரவுப் பொழுதில் குட்டி பேருந்தைப் போல ஒரு சேர் ஆட்டோ வந்து நின்றது.'வடபழனி போகுமா' கேள்விக்கு 'போகும் ,பாண்டி பஜாரிலிருந்து பக்கம்'பதில் திருப்தி அளிக்க சம்மதத்தோடு உள்ளே அமர்துகொண்டேன்.புது வாகனம் போலிருக்கக்கூடும் மெதுவாகவே நகர்கிறது.



குறிப்பிட்ட அந்த சந்திப்பிற்கு நாம் காலதாமதமாக போகிறோமே என்ற குற்ற உணர்வோடு விரைவாக ஓட்டுமாறு டிரைவருக்கு மனத்தால் இடைவிடாமல் எஸ் எம் எஸ் அனுப்பிக்கொண்டிருந்தேன்.அவர் விரைய முடியாத அளவிற்கு சாலையில் இருபுறமும் வாகனங்கள் எங்கள் வாகனத்தை அணைத்துக்கொண்டு ஊர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.



காற்றில்லாத உலகத்தில் வசிப்பவனைப் போல துடித்து வழியும் வியர்வைத் துளிகளை துடைக்கிறேன் .கைக்குட்டை மேலும் துடைக்க முடியாத அளவிற்கு முழுதுமாக நனைந்தே போனது.புதிய நகரத்தில் இரவு நேரத்தில் எப்படிப் போகப்போகிறோமோ என்று நினைத்திருந்த வேளையில்தான் வாகனம் நிற்கிறது.எல்லோரும் இறங்குகிறார்கள். 'வடபழனி வந்துருச்சா' என்று கேட்ட கேள்வி என்னை வெளியூர்க்காரன் என்பதை டிரைவருக்கு அறிவித்திருக்கக்கூடும்.'இங்கே எறங்கி பஸ் புடிச்சா ரெண்டாவது ஸ்டாப்'. பத்து ரூபாயை அவருடைய உள்ளங்கைக்குள் திணித்துவிட்டு ஒரு குறுக்கு சாலைக்குள் அடுத்த பேருந்திற்காக நகர்கிறேன்.அந்த நிறுத்தத்தில் காத்திருப்பில் சுமார் நாற்பது பேர் ,அந்த ஜன சங்கமத்தில் நான் கலந்துகொண்டேன்.



'வடபழனி போறதுக்கு பஸ் வருமா?' '12B என்ற பதில் மட்டும் தெறிக்கிறது .அதற்காய் காத்திருந்து அந்த வழியாக வரும் ஒவ்வொரு பேருந்தின் நெற்றிப் பொட்டில் எழுதிவைக்கப்பட்டிருக்கும் நிறுத்தங்களை அந்த குறைந்த இருட்டில் விழிப்புணர்வோடு வாசிக்க தொடக்கி ஒரு பத்துநிமிடம் வழிந்தோட இறுதியாய் அந்த எண் குறிப்பிட்ட ஒரு நீளமான பேருந்து மனித தொங்கும் தோட்டத்தை சுமந்துகொண்டு திணறிக்கொண்டு நிற்கிறது.கூட்டத்தின் நெரிசலோடு நான் ஐக்கியமாகிறேன்.



சிலவினாடிகளுக்குள் முழுதுமாக நான் நனைந்துபோய் இருந்தேன்.பயணச்சீட்டு எடுத்தாகி விட்டது.வடபழனி எனது அடுத்த கண்டுபிடிப்பு உலகமாக என் எண்ணத்தில் விரிந்தது. பூசைப்பொருட்களோடு சில தாய்மார்கள் அமர்ந்திருந்ததை பார்த்த நான் அவர்கள் இறங்கும் இடத்தில் இறங்கினால் வடபழனி கோயில் வரும் என்று நானே முடிவுசெய்துகொண்டேன். இறங்கிக்கொண்டேன் அப்படியே நடந்தது. ஆனால் எஸ் எம் எஸ்ஸில் குறிப்பிட்ட இடத்திற்கு இன்னும் நடக்கவேண்டி இருக்கிறது என்பதை மீண்டும் கேட்டு முடிவு செய்துகொண்டவனாய் நடக்கலானேன்.



ஒரு அழகான திருப்பத்தில் விளக்குகளால் மின்னும் கண்ணாடி சுவர்களால் ஆன அந்த கடை.முகப்புக் கண்ணாடியில் மேலிருந்து கீழாக தண்ணீர் வழிந்துகொண்டிருப்பதைப் போன்ற காட்சியை என் கண்ணின் நிறுத்தி நானும் மனத்தால் குளிர்ந்துகொண்டேன். ஆனால் உடல் கொதிப்பை நிறுத்திய பாடில்லை.வாசல் வரையில் வந்துநிற்கவும் கதவை ஒருவர் திறக்கிறார்,நிதானமாக நுழைகிறேன்.



மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்த அந்த உணவு விடுதியில் வலது மூலையில் திறந்திருந்த வாசல் வழி பார்ப்பதற்குள் என்னை குளிரூட்டப்பட்ட அந்த முதல் வரவேற்பறை எனக்கு இதமாய் ஒத்தடம் கொடுக்க தொடங்கி விட்டது.எல்லா இருக்கைகளும் நிறைந்திருக்கும் இந்த விடுதியில் எங்கே அமர்ந்திருப்பார்கள் என்று தேடலோடு நுழையும் போது எதிரில் தேனம்மை என் வருகையை உறுதிப்படுத்திக்கொண்டவராய் புன்னகைத்து வரவேற்கிறார்.இருகரம் வணங்கிக்கொண்டே நெருங்குகிறேன் முதுகைக் காண்பித்தபடி அமர்ந்திருந்த நால்வரில் ஆல்மார்க் தங்க நிறத்தில் கருப்பு மல்லிகைகளை கணத்தில் தாடியை வளர்த்தி இருந்த அந்த விருந்தினர் திருப்பிப் பார்க்கிறார்.சந்தோசம் என் வார்த்தைகளைத் திருடிக்கொள்கிறது.அவரது ஆச்சர்யம் சிரிப்பின் வரவேற்பு என்னை இதயத்தை நிறைக்கிறது.அவர்தான் முகநூலில் எழுத்துக்களால் தோழமையான அறிவுஜீவி ஸ்ரீஜி.ஆச்சர்யம்,ஆனந்தம்,மனதிற்குள் ஆரவாரம்..இவற்றின் கலவையால் நிறைகிறேன்.



வரிசையாக தமிழ்ச்செல்வி, துணைவனார் நிக்கோலஸ்,தன் கேமரா குழந்தையோடு வருகைதந்திருந்த ஜெயராஜ் பாண்டியன்மற்றும் பலர் வட்டமேஜையில் இணைந்திருந்தனர்.அருகில் சில நண்பர்கள் எல்லோரையும் வணங்கி முடித்துவிட்டு அமரலானேன்.செய்தி அனுப்பிய அன்பையும் கயலையும் காணவில்லை.செல்வா வருவதாக தலைப்பு செய்தி சொன்னார்கள். சின்ன சின்ன விவாதங்கள் விசாரிப்புக்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக