வியாழன், 31 மார்ச், 2011

பலர்
காயத்தைக் காயம்
செய்துவிடுவார்கள்
சிலர்
காயத்தை மாயம்
...செய்துவிடுவார்கள்.

வலிகளை
வாங்கத் தயாராக
இருப்பவர்களே
வலிகளைக்
கொடுப்பதற்கு
தகுதியானவர்கள்

அம்மா+அப்பா=தெய்வம்

என்னைத்

தெய்வம் தந்தது

என்னைத்

தெய்வம் வளர்த்தது

என்னைத்

தெய்வம் ஆளாக்கியது.



எனது

பிரார்த்தனைகளைத்

தெய்வத்திடம் வைத்தேன்

எனது

வரங்களைத்

தெய்வத்திடம் கேட்டேன்



தெய்வம்

எனக்குவரம் தந்தது

தெய்வம்

எனக்கு எல்லாம் தந்தது

எனது

வணக்கங்களைத்

தெய்வத்திற்குக் கொடுத்தேன்



தேக்கி வைத்த

அர்ச்சனைகளைத்

தெய்வத்தின் காலடியில்

சமர்ப்பித்தேன்.......



இறுதியில் ஒருநாள்

என்னிடம்

திட்டு வாங்கிக்கொண்டு

எனக்கு

மன்னிப்பைத் தந்தது

தெய்வம்.



அதன் பின்னும்

தெய்வம்

வரம் கொடுக்கும்

நான்

வணக்கம் சொல்வேன்...

சிட்டுக்குருவியாகவோ
மைனாவாகவோ
மயிலாகவோ
புறாவாகவோ
கிளியாகவோ
...காக்கையாகவோ
ஆந்தையாகவோ
பருந்தாகவோ
கழுகாகவோ
இவைகளில் ஏதாவது ஒன்றாக
இருந்துவிட்டுப் போகிறேன்....

"சக்கரங்கள் வேண்டாம்
சிறகுகள் கொடு"

இறைவா
என் பயணங்களுக்கு....

தலைக்கீழ் சுவாலையோடு
எரிந்துகொண்டே இருக்கிறது
சூரிய அடுப்பு.

பேசுவது தமிழா?

தமிழா நீ பேசுவது தமிழா ..
அன்னையைத் தமிழ்வாயால் மம்மி என்று அழைத்தாய் …
அழகுக் குழந்தையை பேபி என்றழைத்தாய்…
என்னடா தந்தையை டாடி என்றழைத்தாய்…
இன்னுயிர்த் தமிழை கொன்று தொலைத்தாய்….

உறவை லவ் என்றாய் உதவாத சேர்க்கை…
ஒய்ப் என்றாய் மனைவியை பார் உன் போக்கை…
இரவை நைட் என்றாய் விடியாதுன் வாழ்க்கை…
இனிப்பை ஸ்வீட் என்றாய் அறுத்தெறி நாக்கை…

வண்டிக்காரன் கேட்டான் லெப்ட்டா? ரைட்டா?
வழக்கறிஞன் கேட்டான் என்ன தம்பி பைட்டா?
துண்டுக்காரன் கேட்டான் கூட்டம் லேட்டா?
தொலையாதா தமிழ் இப்படிக் கேட்டா?

கொண்ட நண்பனை பிரண்டு என்பதா?
கோலத் தமிழ்மொழியை ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம் சார் என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி சாவது நல்லதா?

பாட்டன் கையில வாக்கிங் ஸ்டிக்கா
பாட்டி உதட்டுல என்ன லிப்ஸ்டிக்கா?
வீட்டில பெண்ணின் தலையில் ரிப்பனா?
வெள்ளைக் காரன்தான் உனக்கு அப்பனா

உயிர்த்தெழு


தினம்தோறும்
இறக்கிவிடப் படுகிறேன்
அறையப்படுகிறேன்.

பேருந்து பயணத்தில்
இருக்கைகளில்
இயேசுனாதராய்
நான்.

புதன், 30 மார்ச், 2011

கீற்று வலைத்தளத்தில் தகிதா பதிப்பகத்தின் நூல் விமர்சனம்

முகில் பூக்கள் - பி.கு.சரவணனின் கவிதை நூல் ஒரு பார்வை
ஆத்மார்த்தி

தகிதா பதிப்பகம்
முதல் பதிப்பு நவ.2010.
.......................................................................................

பொதுவாகவே கவிதைகளை வகைப்படுத்துதல் தேவையற்றது. கவிதை அ-கவிதை என்று வேண்டுமானால் பகுக்கலாம். கவிதைகள் துக்கத்தை தனிமையை அகாலத்தை மரணத்தை சொல்பவையாக இருந்துவரும் அதே நேரத்தில் மேற்சொன்னதற்கெல்லாமும் மாற்றாக சந்தோஷத்தை, இயற்கையின் பேரன்பை, நேசத்தை காதலை, நல்லதொரு நம்பிக்கையை அழகியலை கையாள்வதிலும் கவிஞன் தவறுவதே இல்லை. சரவணன் இரண்டாவது பட்டியலில் தன் கவிதைகளைப் படைக்கிறார்.

உவமைகள்,உவமைகள் திகட்டாத உவமைகளின் துணைகொண்டு தனது மென்மையான கவிதைகளை தனக்கு பேசுவதற்கு மாற்றாய்க்கிடைத்த வாய்ப்பாக கைக்கொள்ளுகிறார் சரவணன். அவர் கையாளும் பொருள்களனைத்தையும் அவர் எந்த வித சிரமுமின்றி இயற்கையினின்றும் எடுத்துக்கொள்கிறார். தனது பொதுப்பொருளாக காலங்களை ஊடுருவும் மழையை முன்வைக்கிறார் சரவணன்.

"செவ்விதழ் அசைத்து
நாணம் கொண்டது
பாதிரிப் பூ
மேகப் புற்றிலிருந்து
பறக்கத் தொட்டங்கின
மழை ஈசல்கள்.

நேரடியாக காட்சிப்படுத்துகையில் மழையின் ஈரத்தை பத்திரம் செய்து தனக்கு முக்கியமானவர்களின் கைகளில் தந்து அதனை ஏந்தச்செய்யும் கவிஞன்,அதன் அசாதாரணங்களை விடவும் அனுபவங்களுக்கே முக்கியத்துவம் தருவதை உணர முடிகிறது.

சிணிங்கிப் பூக்கும் அன்பு

"மழையில் உயிர்க்கும்
தொட்டாற் சிணுங்கி
மழைக்கும் சிணுங்கும்

என்னும் சிக்கனக் கவிதையில் தொட்டாற்சிணுங்கியாக மாறிவிடவே முடிவது சிறப்பு. மழையை அதன் போக்கில் விட்டுப்பிடிக்கிற மனப்பான்மை சரவணனின் பல கவிதைகளில் நமக்கு புரியநேர்கிறது

"மேகம் மழைத்தூரிகை பிடித்து வரைந்த ஓவியத்தில் நான் நனைந்து கொண்டிருந்தேன்" என்னும் ஒன்றில்

"ஈரம் பொழிந்து நிலமெங்கும்
தவழ்ந்து கிடந்த
பிச்சிக்கொடிகளில்
மலர்ந்து கொண்டிருந்தது
நெகிழும் பேரன்பு"

எனச்சொல்கையில் நமக்கும் இடமாற்றம் செய்யப்படுகிறது ஓர் அதிகாலை மழைபடர்ந்த ஈர நில அனுபவம்.

"மழையில் நனைந்து
வெடவெடத்துப் போய் தன்
சிறகுகளை அடித்து
வெப்பம் தேடும்
அந்தச் சிறுகுருவிக்காக
எனக்குப் பிடித்த
மழையை
பெய்தது போதும் என்று
சொல்வாயா..?"

என்னும் சொல்வாயா என்ற கவிதை உற்றுப்பார்த்தால் நாம் இது வரை பாரபட்சமின்றி செலுத்தி வந்திருக்கிற சிற்றுயிர்கள் மீதான கரிசனம், மழை என்னும் பொதுமையைத் தனது சுயநலமாக்கிக்கொள்ளும் லாவகத்தின் முன் இரண்டு விரல்களை நீட்டும் குழந்தை போல் இந்தக் கவிதையை முன்வைக்கிறார் சரவணன். குருவிக்காக நடுவிரல் தொட விரும்பும் ஒவ்வொருவரையும் மழைக்காக ஆட்க்காட்டி விரல் ஒன்றும் நீண்டிருப்பதை ஞாபகப்படுத்துகிறார் சரவணன். எதையும் தான் விரும்பும் வடிவத்துக்குள் அடக்கிவிடுகிற முனைப்பும் உழைப்பும் இருக்கின்றன இவரிடத்தில்.

"என் மேசை நாட்காட்டியில்
சிரித்துக் கொண்டிருந்த குழந்தைகளின்
சிரிப்பை கேட்டு அடம்பிடித்தன
என் தோட்டத்தில் இருந்த
பசுஞ்செடிகள்.
அடம்பிடிக்கும் செடிகளுக்கு
நீரூற்றத் தொடங்கிய
சில நாட்களுக்குப் பின்
வந்த ஒரு காலை நேரத்தில்
செடியெங்கும் பூத்துக் கிடந்தன
குழந்தைகளின் சிரிப்பு."

காலை நேரத்தில் பூத்துக்குலுங்கும் பள்ளி செல்லத் தயாரான பிள்ளைகள் நம் அகக்கண்ணில் வந்து செல்வது கவிஞரின் சொல்வன்மையே.மழை பொழியத்தொடங்கும் அந்த ஒரு நொடி நேரத்தை மிக அலாதியான அமைதியான சொற்களால் விளக்கும் அது நிகழ்ந்த பொழுது இந்த தொகுப்பின் மிக முக்கியமான கவிதை.

"மகிழ்ச்சி வெறுப்பு கோபம்
என ஒவ்வொருவரும்
எதாவது ஒன்றை
அங்கே விட்டு சென்றனர்" என்கிறார்.

ஒரு சிறுகதைக்குண்டான ஆச்சர்யங்களையும் செய்திகளையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது "அப்பாவின் தோழி வாங்கிக் கொடுத்த ஹார்மோனிகா" என்னும் கவிதை.அதன் முற்று வரியான "அப்பா மட்டும் எதுவும் சொல்லவே இல்லை" என்னும் வரியில் அப்பாவின் தோழி வாங்கிக் கொடுத்தது என்னும் தலைப்பிலிருக்கும் செய்தியை முடிச்சிடுகிறார் சரவணன்.அது நமக்கு சொல்லப்படுகிறதே அன்றி யார் வாங்கிக்கொடுத்தது என்பது அப்பாவை தவிர வேறு யாருக்கும் வீட்டில் தெரியாது எனக் கொண்டால் இதன் நீட்சி மிகப் பெரியது.

"சட்டென்று அணைத்து
முத்தமிட்ட மழையிடம்
சொன்னேன்
உனக்கும் எனக்கும் மழையை
மிகவும் பிடிக்குமென்று"

காதல் அந்த மழையில் தொடங்கி படிக்கிற விழிகள் வரை ததும்புகிறதல்லவா....?

நான் தொலைத்தவைகளை
மீட்டுத் தருகிறது மழை
என் யாழின் நரம்புகளில் இருந்து

என்னும் யாழ் மீட்டிய மழையின் இசை என்னும் கவிதை நமக்குள் உண்டுபண்ணுகிற அதிர்வுகள் அமைதியானவை, அதே நேரத்தில் அபூர்வமானவையும் கூட. நினைவு மழை என்னும் கவிதையில் மனசெங்கும் நினைவு மழை என்னும் சரவணன் அடுத்த கவிதையிலேயே மழையாய் எழுகின்றன நினைவுகள் என்கிறார்.திகட்ட திகட்ட மழையை புகட்டி விடுவதென்ற எத்தனம் தற்செயலாய் அமைந்திருப்பது தான் இக்கவிதைகளின் அழகு.

எப்பொழுதும் நனைந்து கொண்டே இருத்தலை மிகவும் நேசிக்கிற மனிதராக இருக்கிறார் சரவணன். அதே நேரத்தில் மழையைப் பிணைத்து அவர் நினைவுகளை, மென்மையை, தொலைந்த பால்யத்தை, நேசத்தை, காதலை, முத்தத்தை, தனிமையை, வனத்தை, பூக்களை, தோட்டத்தை என இயற்கையின் சகல முடுக்குகளிலும் மழையொன்றைப் பெய்ய செய்து அதனூடாக அவ்வவற்றை தரிசிக்கிறார்.

மிகவும் எளிமையான,படிக்கிறவர்களைக் கிறங்கச் செய்யும்,மென்மையின் வாய்த்திருத்தலை உட்கொண்டு மழை மழையைத் தவிர வேறொன்றுமில்லை என அணுகியிருக்கும் சரவணனின் முகில் பூக்கள், மனங்களை மழை கொண்டு கழுவும் கவிதைகள்.

செவ்வாய், 29 மார்ச், 2011


திருப்பூரில் இன்று நிலநடுக்கம்.சாலைகள் வீடுகள்,பள்ளிகள் ,வணிக வளாகங்கள் பலவற்றிலும் விரிசல்.மக்கள் பீதி .புவியியல் ஆய்வாளர்கள் ஆய்வு ....பூமி தன்னை புதுப்பிக்க நினைக்கிறது. தயாராகுங்கள் தோழர்களே

நீர் நிலம் சுற்று சூழல் என்று அனைத்தையும் கொன்று சிறந்த வர்த்தக நரகமாக முடிசூட்டிக்கொண்ட திருப்பூர் .நேற்று பருத்தி வலையில் ...இன்று எமனின் பாசவலையில்

அவளது
உச்சந்தலையில்
இளஞ்சூட்டில்
அவன் வைத்த முத்தம்
முதல் முத்தம்...

உச்சந்தலை தொடங்கி
உள்ளங்கால் வரையில்
அணு அணுவாக
தொடர்ந்தன முத்தங்கள்.

விழி
உதடு
கன்னம்
கழுத்து
விரல்
என்றவாறு
இறங்குமுகமாக
இறங்கிக்கொண்டிருந்தது
முத்தத்தின் பயணங்கள்

இப்படியாய்
பொழுதெல்லாம்
அவனுக்கும் அவளுக்குமான
காதல் பரவசங்கள்
தொடர்ந்தன.

(அவன் பெயர் சூரியன்
அவள் பெயர் மலை )

சத்துணவு


என்
இரைப்பைகள் இசைமுழக்கமிட
பசித்திருந்த மதியப்பொழுதில்
பயணம் மேற்கொள்ளவேண்டியதாயிற்று...

என் பசியறிந்து
தன் ஒலிபெருக்கி தனங்களில்
சங்கீதப் பாலை
என் செவியில்
வார்த்துக்கொண்டே இருந்தாள்
அந்தப் பேருந்துதாய்.

என்னால்
உணரமுடிந்தது......

உலகத்திலேயே
சிறந்த சத்துணவு
"சங்கீதம்".

திங்கள், 28 மார்ச், 2011

தாய்கள் ....


மரணத்தை சுமந்தபடி
அரக்க வேகத்தில் வரும்
பேருந்து எமனை
சட்டை செய்யாமல்....

குட்டிகளுக்கு
வாழைப்பழ தோல் சேகரிக்கும்
தாய்க்குரங்குகளையும்
குஞ்சுகளுக்கு
சிதறிய பாப்கான்களைச் சேகரிக்கும்
தாய்க்காக்கைகளையும்


வேடிக்கை பார்த்துக்கொண்டே
வருகிறார்கள்

தாய்ப்பால் மறுத்து
புட்டிப்பால் புகட்டும்
மானுடத்தாய்கள் .....

ஞாயிறு, 27 மார்ச், 2011


தனிமையையும்
ஏகாந்தத்தையும்
என் மீது பூசி
ஆயிரம் உறவுகள் இருந்தும்
என்னை
அனாதையாக
உணரவைக்கிறது
பேருந்தின்
மிருதுவான பயணங்கள்

சன்னலில் ஓரம்
அமரும் போதெல்லாம்
ஏதோ ஒன்றை நினைத்து
அழவிரும்புகிறேன்.
சில நேரம் கண்ணிலிருந்து
பல நேரம் மனதிலிருந்து

தகிதா பதிப்பகத்தின் "முகில் பூக்கள்" - (நூல்விமர்சனம்-மாயூ )

மழையைக் கொண்டாடும் குட்டிக் கவிதைகளை அள்ளிக் கொண்டு வந்து தூவிசெல்கிறது சரவணனின் "முகில் பூக்கள்." வெளியிலில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் மாலை திடீரென்று கறுத்து மழையாய்ப் பொழிந்துபோகும்கணங்களின் உயிர்ப்பை, அந்த நிமிடங்களின் மனதில் தோன்றும்எண்ணங்களை வார்த்தைகளில் சொல்லிவிடுவது எப்போதுமேவாய்ப்பதில்லை. பல சமயங்களில் மழை பற்றி எந்தவித பிரக்ஞைகளும் அற்று குடையைப் பிடித்தோ, பிடிக்காமலோ, மழையை சபித்துக் கொண்டோ, திட்டிக் கொண்டோ ஓடிக் கடந்து விடுவதை சலிக்காமல் செய்ய விழைகிறோம். மழை யாரையும் பற்றி யோசிப்பதாய்த் தெரிவதில்லை. அது எவர் போருட்டுமில்லாமல் தன்பாட்டுக்கு கொட்டிப் போவதையோ, அடித்துப் பெய்வதையோ, வந்த சுவடே தெரியாமல் மண்ணை ஒற்றிப் போவதையோ செய்துகொண்டிருக்கிறது.



சரவணனின் கவிதைகளில் மழை நிகழ்த்திப் போகும் அழகியல் உணர்வு மிகவும் நெகிழ்ச்சியாக மனதைப் பற்றிப் படர்கிறது. மழையை தோழியாய், காதலியாய், நட்பாய், பெயரற்ற அன்பாய், இன்னும் அழகழகாய் உருவகிக்கிறார் கவிஞர். அவரது ஒரு கவிதையில்,



அசைந்து

நடந்து - பின்

களம் புகும்

கம்பீர யானையை

பெய்கிறது மழை.

சாரலாய்

தூறலாய்

பெரு மழையாய்



குடையை மறந்து போய்விட நேரிடும் பொழுதுகளில், கடைக்குள் ஒதுங்கி, கண்ணாடியூடோ, இல்லை ஒண்டிக்கொண்டு நிற்கும் வாசலினூடோ மழையைப் பார்க்கும் அந்தப் பொழுதை நினைத்துக் கொள்கிறேன். முகத்தில் அடிக்கும் சாரலும், பின் துளிகளும் பின் பெரிதாய் மழையாயும், அழகாக மாறி மாறிப் பூக்கின்றன நினைவுகள் மனதுக்குள். உண்மைதான், ஆடி அசைந்து களம்புகும் யானைதான் மழை.



அந்தி மந்தாரை

பூத்த நேரம்

பவள மல்லியின்

வாசனையோடு

சாலையில்

நடந்து சென்றது

மழை...



செம்மஞ்சள் வானத்தின் முடிபில் தொடங்கி மெலிதாய், மிக மெல்லியதாய் பெலத்துப் பின் பெய்யும் மழை சாலையில் நடப்பதாய் நம்பத் தொடங்குகிறது மனது. மண்ணைத் தழுவி, அனைத்து, ஆவேசத்துடன் முத்தமிட்டுப் பின் ஊடாடி வெள்ளமாய்ப் பாய்ந்து ஆறுடன் கலந்து அருவியில் வீழ்ந்து கடலுடன் இணையும் மழை எல்லாச் சாலைகளிலும் நடக்கும் விதம் எம்மாத்திரம். ஆமாம், சாலையில் நடக்கும் மழை அழகுதான். அதிலும் அந்திமாலையில் மனம் மயங்கி, உருக வீறாப்பாய் நடக்கும் மழை இன்னும் அழகு.



யாருமில்லாமல்

தொடங்கிய பயணத்தில்

அந்த அழகிய ஊரில்

பெய்யத் தொடங்கிய மழை

வீடு வரை வந்தது



என்னும் கவிதையில் பால்யத்தில் மழையில் நனைந்து கொண்டே வீடு வந்த நினைவுகளும், மழை துணைக்கு வருவதை மனது விரும்பி அதில் லயித்த பொழுதுகளும் கண்முன்னே ஆடுகின்றன. இன்னும்,



மேகங்கள்

கடந்து போன பின்பும்

இலைகளைப் போலவே

மழைப்பாட்டை

பாடிக் கொண்டிருக்கிறது

மனசு



என்று இன்னொரு கவிதையில் கவிஞர் சொல்வது போல, மழை தந்த அனுபவங்களை, நினைவுகளை மனதின் ஆழத்தில் போட்டு, பின்னோர் நாள் இன்னொரு மழை பெய்கையில் வீட்டில் அமர்ந்திருந்து அவற்றை மீள நினைவில் அமர்த்தி அதன் பொருட்டு காதல் கொள்ளவைக்கும் சாமர்த்தியத்தை மழை கற்று வைத்திருக்கிறது. மழை ஒவொரு முறையும் பெய்துவிட்டோ, அடித்தூற்றிப் போய்விட்டோ சென்ற பின், அது குறித்து நினைத்துப் பார்க்க, பேசிக் கொள்ள, இல்லை புன்னகைக்க என்று ஏதோ ஒரு நிகழ்வை தந்துவிட்டுப் போவதை அழகாக செய்கிறது. எல்லோருக்கும் அவரவர் வாழ்நாளில் ஒரு மழை நாள் ஒரு அனுபவத்தை பரிசளித்து விட்டுத்தான் போயிருக்கும்.



நிறம் இழந்த வானம்

நீராய்

நிலம் புகுந்தது



அற்புதமாக இருக்கிறது மழை இப்போது. துளியாய் மாறி மண்ணோடு சேரும் அந்த மழையின் காதல், சூழலுக்கேற்ப மென்மையாய், அழகானதாய், ஆவேசமானதாய் இருக்கிறது. இப்படியான உணர்வுகளை கலந்து கொட்டி விதைத்துப் போகும் மழை மனிதர்களை தன் உணர்ச்சிக் குவியலுக்குள் புதைத்து தத்தளிக்க வைத்தும் விடுகிறது. கவிஞர் இந்தக் கவிதையின் இறுதியில் சொன்னது போல்,



மீண்டும்

அவனும் அவளும்

பார்த்த கணத்தில்

பெய்யத் தொடங்கியது

காதல் மழை



ஆமாம், காதலைப் போல.



"யாழ் மீட்டிய மழையின் இசை, காடுகள் நிறைந்த மனம், ரசனை, மழைப் பாட்டு" போன்ற கவிதைகள் அடங்கலாக அறுபத்தியேழு கவிதைகளைத் தாங்கி வந்திருக்கும் "முகில் பூக்கள்" தொகுப்பு தகித்தா பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கிறது. குட்டிக் குட்டிக் கவிதைகள் மழையை மட்டுமே பாடுபொருளாகக் கொண்டு இயற்றப்பட்டிருக்கின்றன. மனதில் படிந்துபோகும் இயல்பான தமிழ் நடையில் பிரசவிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு கவிதையின் முடிவிலும், அந்தக் கவிதை தொடர்பை நினைத்துப் பார்க்க எமது நினைவுத் தொட்டியில் ஏதோவொரு அனுபவம் காத்திருக்கிறது.



வசந்தகாலத்தின் தொடக்கத்தில், "முகில் பூக்கள்" தொகுப்பை வாசித்து முடித்ததும் மழை அழகாய், இன்னுமின்னும் அழகாய்ப் பெய்யத் தொடங்கியிருந்தது வெளியில். இன்னுமொரு பொழுதில் மழை பற்றி எழுதும் பாத்தியத்தை என் வார்த்தைகளே எனக்குக் கொடுங்கள் என்ற வேண்டுதல்களுடன் எனக்குப் பிடித்த மழையை கவிதைகளாய் மீட்டிப் பார்க்க வைத்த சரவணனுக்கு வாழ்த்துக்களும்.



P.G சரவணனின் நட்பை கவிதைகள் ஏற்படுத்தித்தந்தன. முகப்புத்தகத்தில்கவிதைகளைப் பகிர்வதும், அவற்றைப் பொறுமையுடன் வாசித்துகருத்துக்களைப் பரிமாறுவதுமாக ஏற்பட்ட கவித் தோழமை இன்று அவரதுமுதலாவது தொகுப்பை கைகளில் வைத்துப் பிரித்துப் பார்க்கும் போதுபெருமையடைந்தது என்றே சொல்லவேண்டும். அதனை அனுப்பித் தந்த அவரது அன்புக்கு நன்றி சொல்லி, அவரது கவிப்பயணம் இன்னும் சிறப்பாகத் தொடர வாழ்த்தி,



தோழமையுடன்,

-மாயூ

தகிதாவின் பதினைந்தாவது நூல்


தகிதாவின் பதினைந்தாவது நூல்

வெள்ளி, 25 மார்ச், 2011

money திருநாடு

எல்லா இடங்களிலும் கையேந்தி பிச்சைக் கேட்கும் பல கோடி இந்தியர்களின் பணம், யாரோ பலரது கணக்கில் 25,00,000 கோடி ரூபாயாக மேலைநாட்டு வங்கிகளில் இருக்கிறது. பல ஏழைகளை சுரண்டி சில பணக்காரர்கள் வாழும் உலகத்தின் முதல் தேசம் நமது இந்தியா...சுரண்டப்பட்டவர்கள் ஏழைகளாக.... சுரண்டியவர்கள் பணக்காரர்களாக...வாழ்க பாரத money திருநாடு

அறைமுழுதும்
அழகழகாய் கண்ணாடிகள்
சுவர்கள் கண்ணாடிகளாலானதா ?
இல்லை
கண்ணாடிகளே சுவர்களானதா ?
...ஆச்சர்யம்தான்.

எல்லோரும் முகம்பார்க்கிறார்கள்
அவரவர்களது முகங்கள்
தெரிவதில்லை
தெரிகின்றன
அடுத்தவர்களது முகங்கள்மட்டும்தான்.

பேருந்து ஆலமரம்
எங்கும் தொங்குகின்றன
கைப்பிடி விழுதுகள்

புதன், 23 மார்ச், 2011

சிம்மாசனங்க...

கைக்குட்டை

கைக்குடை

துப்பட்டா

துண்டு

டிபன் பாக்ஸ்

புத்தகம்

கைப்பை

தண்ணீர் பாட்டில்

செய்தித்தாள்

அரிவாள்

புடலங்காய்

இவைகளுடன்

வீரிட்டு அழும்
ஒரு கைக் குழந்தை என
பலவும்
சன்னல் வழியாக
நுழைந்து
இடங்களை ஆக்கிரமித்திருந்தன
பேருந்து சிம்மாசனங்களில்.

யாரும் ஏறுவதற்கு
முன்னதாக!

திங்கள், 21 மார்ச், 2011

பயணங்கள்


பயணங்கள்
சிறந்த பாடங்கள்.

தானங்களில் சிறந்த தானம்
நிதானம்தான்.
சில நேரங்களில்
வேகமும்
விவேகம்தான்.

நேரான சாலைகளில்
வேகம் பிடிக்கும்போது
வளைவுகள் காத்திருக்கும்
இல்லையேல்
வேகத்தடை வரவேற்கும்.

விட்டுக்கொடுப்பதால்
சிலருக்கு தோல்விகளும்
பலருக்கு வெற்றியும்
கிடைக்கலாம்
முந்திச்செல்வதால்
சிலருக்கு வெற்றியும்
பலருக்கு தோல்வியும்
கிடைக்கலாம்.

ஒலி எழுப்பி
உங்கள்
இருப்பை காண்பித்துக்கொண்டே
இருங்கள்.


பழுது பார்ப்பதற்காகவும்
அழுது பார்ப்பதற்காகவும்
இறைவன் சில
வரங்களை வழங்குவான்.

முன்னாலும்
பின்னாலும்
எந்நாளும் பார்ப்போம்.
நமது பயணங்கள் தொடரட்டும்.

வெள்ளி, 18 மார்ச், 2011


சூரியனின்
காலைப் பயணத்திற்கு
முன்னதாகவே
என் பயணம்
தொடங்கியது .
...
பேருந்தின் கண்ணாடிக்குள்
ஊடுருவிய
குளிர்காற்று சில்லிட்டது.

கையைவிரித்து
மெய்யைப் போர்த்தியபடி
தொடர்ந்த அதிகாலை
பயணத்தில்...

இடையிடையே
மரங்களின் ஊடே
வந்த கதிர்கள்
தவணை முறையில்
வெப்பத்தில் ஒத்தடங்களைத் தந்தன.

அடடா
என்ன அருமைமேலும் பார்க்க

வியாழன், 17 மார்ச், 2011


இந்திய வீட்டில்

இன்னும் இருக்கும்

எல்லா பிள்ளைகளுக்கும்

தனம்தந்து பால்வார்க்கும்

இயற்கை தாய்க்கு

மார்பக புற்று

சரிந்து விழுபவர்களை
எச்சரிப்பதற்கும்
குறட்டைவிடுபவர்களை
சப்தம் கலைப்பதற்கும்
நேரம் சரியாகிவிடுவதால்..
...நானும் பயணங்களை அனுபவிப்பதில்லை....

எல்லா பயணங்களிலும்
பயணிகள்
உறங்கித் தொலைக்கிறார்கள்

பயணத்தில்

இன்று தோள் கொடுத்தேன்

எனது தோளை
...
யாரோ ஒருவருடைய

எச்சில் ஈரமாக்கியிருந்ததை

விழிப்பில் உணர்ந்தவனாய்

கோபத்துடன் திரும்பினேன்

பக்கத்து இருக்கை

காலியாக இருந்தது

(யாரோ ஒருவர் இறங்கி இருக்கக்கூடும்)

நகரும் அரண்மனை
நிறைய சிம்மாசனங்கள்
எதில் வேண்டுமானாலும்
நான் அமர்ந்து கொள்கிறேன்.

எனக்காக இருவரை
அரசு
ஊதியத்திற்கு
வைத்திருக்கிறது...
ஒருவர் ஓட்டுனர்
இன்னொருவர் நடத்துனர்.

தினம் தோறும்
நான்
அரச மரியாதையுடன்
பயணம் போகிறேன்.
(அரசு பேருந்து )

சுட்டெரிக்கும் வெயிலில் மலர்கள்
கலர்குடை பிடிக்கின்றன
வண்ணத்துப்பூச்சிகள்

நகராத பேருந்து வீடு
நகரும் வீடு பேருந்து.
இரண்டிலும்
யாரும் யாரோடும்
பேசுவதே இல்லை.
...கனத்த மெளனம்
மனதை கனக்கச் செய்கிறது.

இளைப்பாறல் அவசியமாகிறது.
நிறுத்தமில்லா பயணத்தில் கூட...

வெள்ளி, 11 மார்ச், 2011

ரோபோக்கள் வைத்த ஒப்பாரி

எரிமலைகள்

எரிந்துகொண்டிருக்கும்

இருபத்தினாங்குமணிநேர

மின்மயானம்தான்

ஜப்பான்...



அந்த

பூமியின் வெப்பத்தை

கடலின் முத்தங்கள்

ஈரப்படுத்தி இன்று ஆறவைத்தனவோ ?



எப்போதும்

அஸ்தியைக் கரைக்க

கடலைத் தேடி போவார்கள்

இன்று கடலே

அவர்களைத் தேடி வந்திருக்கிறது.



உயர்ந்த அலைகள்

நிமிர்ந்து நிமிர்ந்து

அறைகின்றன-அந்த

குள்ள மனிதர்களை...



'பட்ட காலிலே படும்

கெட்ட குடியே கெடும்'

என்பதற்கு

உதாரணமான இவர்கள்

இன்று ரணமாகிப் போனார்கள்...



பூமியின் தாலாட்டில்

நான்கு லட்ச குடும்பங்கள்

பகலில் கண்ணுறங்கிப் போயின ...



இறந்த மனிதர்களை

ஆற்றில் கரைப்பது வழக்கம்

இங்கே

இறவாத ஒரு தேசமே

கடலில் கரைந்து போனது....



தரையில் படகுகளும்

கடலில் மகிழுந்துகளும்

'பயணங்கள் தொடர்வதில்லை'



நேற்று

இவர்களுக்கு இறையாய் மீன்கள்

இன்று

மீன்களுக்கு இறையாய் இவர்கள்..



நீண்ட நாட்களாகவே

பூமி மாத்திரையை

விழுங்க

பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறது

கடல்...



நேற்று

நதியோடு விளையாடி வந்த

மானுடம் - இன்று

விதியோடு விளையாடிக் கொண்டிருக்கிறது



எந்தவேலையையும் செய்யும்

இவர்களால்

கண்டுபிடிக்கப்பட்ட ரோபோக்கள்

இறுதியாய் இந்தவேலையையும்

செய்யும்...

'....................ஒப்பாரி'