வியாழன், 30 டிசம்பர், 2010

புதன், 29 டிசம்பர், 2010

தகிதா கண்காட்சி

கோவையில் வரும் 31,1,2 ஆகிய மூன்று நாட்கள் நடைப்பெற இருக்கும் கண்காட்சியில் தகிதா பதிப்பகத்தின் அரங்கு இடம்பெறுகிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன் .கோவை வாழ் முகநூல் தோழர்களே ! வாருங்கள் ;இந்த தகவலை உங்கள் வாசக நண்பர்களுக்கு கூறுங்கள்.அறிவு ஜீவிகளே !ஒன்று சேருங்கள்.என்றும் உங்கள் நல்லாதரவில் எமது தகிதா பதிப்பகம் என்னும் காகிதச் சோலையில் காவியங்கள் எப்போதும் பூத்துக் குலுங்கும்

செவ்வாய், 28 டிசம்பர், 2010

'தகிதா' கவிதைச்சிற்றிதழ்

தமிழுக்கு சிறப்பு ழ, கவிதைக்கு புதிய ழ என்று குவலயத்து தமிழர்களின் நல் ஆதரவைப் பெற்று வந்த 'புதிய ழ' என்னும் கவிதை இதழ் பெயர்மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் நேர்ந்ததால் 'தகிதா' புதிய பெயரை அறிவிக்க கடமைப் பட்டுள்ளோம் .புதிய ழ என்ற பெயர் முன்னதாகவே பதிவு செய்யப்பட்ட பெயராக இருந்ததுள்ளதை எமது பதிவு கடித்தை மறுக்ககப்பட்டதலிருந்து சமீபத்திலேயே அறிந்துகொண்டோம்.புதிய ழவுடன் இணைந்து பதிப்புலகில் காலடி எடுத்து வைத்து முதல் வெளியீட்டிலேயே பதிமூன்று நூல்களை கொணர்ந்த 'தகிதா' என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் உங்கள் கைகளில் இந்த வருடத்தின் இறுதி இதழை தவழ விட்டிருக்கிறோம்.
இந்த கவிதைச் சிற்றிதழைத் தொடங்கி ஒருவருடம் முடிந்து விட்டதை நினைக்கும் போது நிறைவாக இருக்கிறது. தமிழகம் முழுக்க ஏன் தரணி முழுக்க பல படைப்பாளர்களை அடையாளப்படுத்திய பெருமிதமும் நெஞ்சில் நிறைகிறது. அப்படி கவிதைப் படைத்த சில படைப்பாளர்களின் நூல்களைத் தகிதாவின் மூலம் வெளிக்கொண்டு வந்ததை ஊடக உலகில் ஒரு மைல் கல்லாக கருதுகிறோம்.படைப்பாளிகள் மற்றும் வாசகர்களின் பாராட்டும் ஊக்கமும் வாழ்த்தும் விமர்சனமும் கண்டனங்களும் இப்படியாய் எல்லாமும் எங்களை சிறப்பாக இயங்க வைத்திருக்கிறது.
வானம்பாடிகள் கவிதைத் தமிழ் வளர்ந்த இந்த கொங்கு மண்ணில் இரண்டாம் தலைமுறைகளாக இருக்கும் நாங்கள் கன்னித்தமிழையும் கவிதைத் தமிழையும் வாழ்வாங்கு வாழவைப்போம்.அந்த வானம்பாடி கவிஞர்களுக்கு வணக்கங்களையும் புதிய வானம்பாடிகளுக்கு வாழ்த்துக்க்களையும் தெரிவிப்பதில் பேருவகைக் கொள்கிறோம் .
கலைகளின் அரசியாக விளங்கும் கவிதை,பதிப்பகங்களால் புறக்கணிக்கப்படுவதும் நூலகங்களால் அனுமதி மறுக்கப்படுவதும் புத்திலக்கியத்திற்கு நேர்ந்திருக்கிற மிகப்பெரிய பின்னடைவாகும்.கவிதையின் இருண்டகாலமாக இருக்கும் இத்தகைய இலக்கிய சூழலில் கவிதைக்கு செய்வதன் மூலம் தமிழுக்கும் ஏதாவது செய்துவிட முடியும் என்ற நம்பிக்கைதான் எங்களை இடைவிடாது இப்படி வியர்வை சிந்த வைத்திருக்கிறது.
கடந்த ஒருவருட காலமாக கவிதை இதழ் சிறப்பாக வெளிவருவதற்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்த எம் ஆசிரியர் குழுவினருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

முத்தமிழ் முத்தங்களுடன்
போ. மணிவண்ணன்

வெள்ளி, 24 டிசம்பர், 2010

"அழுத பிள்ளைக்கு அமுதம் "-"விமர்சித்தவர்களுக்கு விருது "2010

விருதுகள் என்பவை பெரும்பாலும் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களை பாராட்டி கெளரவிக்கும் ஓர் அற்புதமான பொக்கிஷம்.ஒரு கலைஞன் வாழும் காலத்திலேயே பாராட்டப்படுகிற பொழுது அந்த கலைஞன் மரிப்பதற்கும் முன்பதாக ஒரு மகா கலைஞனாக மாறிவிடக்கூடும் .வாழும் காலத்தில் செய்யப்படாத மரியாதைகள் எந்தக் கல்லறைகளையும் கெளரவிப்பதால் பயனென்ன ?

ஆகவேதான் நல்ல கலை இலக்கியக்கூறுகளை ஆக்கப்படுத்தி ஊக்கப்படுத்த விருதுகள் துணை நிற்கின்றன.மேலும் விருதுகளில் மூலம் நல்ல நூல்களையும் நல்ல படைப்பாளர்களையும் அடையாளம் காணமுடியும்.அப்படிப்பட்ட விருதுகளில் ஒன்றுதான் சாகித்திய அகாதமி விருது, இது இந்திய அளவில் இலக்கியத்திற்காக வழங்கப்படுகிற உயரிய விருதாகும்.

நாஞ்சில் நாடன்...
நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பில் நாற்பது ஆண்டுகளாகத் தீவிரமாகச் செயல்பட்டுவரும் புத்திலக்கியப் படைப்பாளர்களில் நாஞ்சில் நாடன் குறிப்பிடத்தக்கவர் .இவர் 1947-ன் இறுதி நாளில் பிறந்தார் .இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் , தோவாளை வட்டத்தில் , வீரநாராயண மங்கலம் பிறந்த ஊரில் . தகப்பனார் கணபதியா பிள்ளைக்கும் தாயார் சரஸ்வதி அம்மாளுக்கும் வாரிசாக அவதரித்தார்.

மாற்றுப் பணி ஒன்றில் முழுநேர ஊழியராக பணியாற்றும் இவர் தன் எழுத்துப் பணியையும் முதன்மையானதாகவே கருதினார்.வாழ்வியல் எதார்த்தங்களை தன் எழுத்துக்களில் ஏற்றி புத்திலக்கியங்களை உயிர்ப்புடன் உலவ விட்டார்.

ஆறு நாவல்கள்(சதுரங்கக் குதிரைகள்,என்பிலதனை,எட்டுத்திக்கும் மதயானை), எட்டு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு கவிதைத் தொகுதி, நான்கு கட்டுரைத் தொகுப்புகள் தமிழுக்கு இவரது கொடை. பல சிறுகதைகள் பன்மொழிகளில் பெயர்க்கப்பட்டவை.'எட்டுத் திக்கும் மதயானை' என்கிற இவரது நாவல், ஆங்கிலத்தில் 'AGAINST ALL ODDS' என மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

முதல் நாவல் 'தலைகீழ் விகிதங்கள்',தங்கர் பச்சானின் இயக்கத்தில் 'சொல்ல மறந்த கதை' என திரைப்படம் ஆனது.மாணவர்கள் பலர் இவரது படைப்புகளில் M.Phil., Ph.D., ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனர். இவரது நாவல்கள், பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளன.

குடும்பத்துடன் கோவையில் வசித்து வரும் இவர் பெயர்தான் நாஞ்சில் நாடனே ஒழிய உண்மையில் இவர் ஒரு முழுமையான கோவை நாடன்தான். கணிதத்தில் பட்ட மேற்படிப்பு படித்தவர். மகள் டாக்டர் சங்கீதா மருத்துவத்தில் மேற்படிப்பு பட்டமும், மகன் கணேஷ் பொறியியல் கல்வியில் பட்டமும் பெற்றவர்கள்.

இந்திய இலக்கிய உலகில் உயரியதாகக் கருதப்படும் சாகித்ய அகாடெமி விருது, எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்குக் கிடைத்துள்ளது.எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் 'சூடிய பூ சூடற்க' என்ற சிறுகதைத் தொகுப்புக்கு நடப்பு ஆண்டுக்கான சாகித்ய அகாடெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2007 ஆம் தமிழினி பதிப்பகம் மூலம் 160 பக்கங்களில் வெளியான இந்தத் தொகுதி, 12 சிறுகதைகளை உள்ளடக்கியது. இது, 2009-ல் மறுபதிப்பு கண்டது

கோவையில் ஆ.மாதவனுக்கு நிகழ்ந்த விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழாவில் அமைப்புசார் விருதுகளின் அரசியல் பற்றிக் கோவை ஞானியும்,நாஞ்சிலும் கடுமையாகக் கொட்டித் தீர்த்து 24 மணி நேரம் கழிவதற்குள் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது அழுத பிள்ளைக்கு பால் என்பதைப் போல ,கடுமையாக விமர்சித்தால் அகாதமி விருது கிடைக்கும் என்ற தவறான அடையாளத்தை அகாதமியின் மீது ஏற்படுத்துகிறது

ஒரு அரை நூற்றாண்டு காலம் தமிழ் இலக்கியத்திற்காக அற்புதமான பங்களிப்பை அளித்த நாஞ்சில்நாடன் அவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த விருதினை காலம்கடந்து செய்யப்பட்ட மரியாதையாகத்தான் கொள்ளமுடியும் .

புத்திலக்கியங்களும் அதிலும் குறிப்பாய் கவிதை இலக்கியங்களும் வெகுவாக புறக்கணிக்கப்படுகிற இன்றைய தமிழ் சூழலில் ,இது போன்ற விருதுகளின் அமைப்புக்குழுவில் இருப்பவர்களில் நவீனப் படைப்பாளிகள் மிகுதியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுதல் இந்த அரசின், அந்த அமைப்பின் தலையாய கடமையாகும்.

வியாழன், 23 டிசம்பர், 2010

தாள்

நேற்று என்பது வெற்றுத்தாள்
இன்று எனபது செய்தித்தாள்
நாளை எனபது வினாத்தாள்
வாழ்க்கை ஒரு விடைத்தாள்

நூல்கள்

விலைமதிக்கமுடியாத
நூல்கள்
மலிவு விலைக்கு விற்கப்படுகின்றன
வாங்குவதற்கு யாரும் வருவதில்லை...

மலிவான நூல்கள்
விலைமதிக்கமுடியாத விலைக்கு
விற்கப்படுகின்றன
வாங்காமல் யாரும் விடுவதில்லை

"என் தற்கொலை எண்ணத்தை தற்கொலை செய்தது ஒரு நூல்" - நீதியரசர் மாண்புமிகு கர்ப்பகவிநாயகம்

"மனித மாண்புகளும் தன்னம்பிக்கையும் " என்ற நெறிகாட்டு விழா ஒன்றில் நீதியரசர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.நல்ல நூல்கள் மரணத்தைக் கூட வென்றெடுக்கும் ஆற்றல் பெற்றவை.

இப்படித்தான் தேவகோட்டையில் பிறந்த ஒரு இளைஞர் தற்கொலைக்கு முயன்ற ஒரு சமயத்தில் நூலகம் ஒன்றிற்கு சென்று இறுதியாய் உறுதியாய் ஒரு நூலை படித்து முடிப்பது என்று முடிவெடுத்திருந்தான்.அவனின் இறுதி விருப்பின் படியே ஒரு நூலை எடுத்து படிக்கத்தொடங்கினான்.நூல் பெரிதாக இருந்ததால் வாசிக்க நாட்கள் கூடுதலாக தேவைப்பட்டிருக்கின்றன.முதலில் உள்ள அத்தியாயங்கள் அவனிடம் பெரிய பாதிப்புகள் எதையும் ஏற்படுத்தவில்லை.

இனி சாவது என்று முடிவெடுத்தபோது இறுதியில் சில அத்தியாயங்களை படித்து முடிக்கவேண்டும் என்ற ஆர்வம் அவனுக்கு மேலிட்டிருக்கிறது. நூலின் இறுதி அத்தியாயங்களை படித்து முடித்ததும் தாம் எண்ணியதைப் போல தற்கொலையை உறுதியாய் எண்ணியபடி முடித்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு அறிவுறுத்திக் கொண்டே இருந்ததுள்ளது .

இறுதியில் உள்ள பக்கங்கள் தீரும் நிமிடங்கள் நெருங்கவே தீராத வாசிப்புக்கும் தீர்ந்து போக இருக்கிற சுவாசிப்புக்கும் பலப்பரிச்சை நிலவியது.அந்த இளைஞன் தன் இறுதி ஆசையாய் வாசித்துக்கொண்டிருந்த அந்த நூலை படித்து முடித்ததும் இனி தற்கொலை செய்யக்கூடாது என்று முடிவெடுத்தான்.

அப்படியாய் ஒருவனின் மரணத்தைக்கூட மரணிக்கச் செய்த நூல் 'மகாத்மா காந்தியின் சுயசரிதை' அந்த இளைஞன் பிற்காலத்தில் பெரிய நீதிபதியாக உயர்ந்தான் .அவன்தான் இந்த கர்ப்பக விநாயகம்.(இப்படியாய் அவர் சொன்னதும் அவையினர் தங்களை மறந்து அவருக்கும் கரகோஷங்களால் இடைவிடாது மரியாதை செய்தனர்.கைத்தட்டல் சுமார் இரண்டரை நிமிடங்கள் நீடித்தன )
.

கர்வம் கொண்டால் கடவுளை இழப்போம்;பொறாமைக் கொண்டால் நண்பனை இழப்போம்;கோபம் கொண்டால் நம்மையே நாம் இழக்க நேரும். படிப்பு எவ்வளவிற்கு ஒருவனுக்கு அறிவைத்தருகிறதோ அந்த அளவிற்கு அடக்கத்தையும் தரவேண்டும்.கர்வம் கொண்ட ஒருவனிடம் இறைவன் ஒருபோதும் தங்கி இருக்க சம்மதிப்பதில்லை.ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளே இருக்கும் இறைவன் அவன் கர்வம் கொள்ளும் போதுதான் வெளிநடப்பு செய்கிறான். அருமைத் தோழர்களே என்றைக்கு நீங்கள் உங்கள் பலவீனங்களை அறிந்தவர்கள் ஆகிறீர்களோ அன்று முதலே நீங்கள் பலசாலிகள் ஆகிறீர்கள்.

மகிழ்வின் விதைகளை இதயத்தில் விதைத்து அதை முகத்தில் மலர்த்தவேண்டும். மகிழ்ச்சி இல்லாத முகம் மயானம் போன்றது.முகத்தில் தவழும் புன்னகை நல்ல இதயத்தின் பிரதிபலிப்புதான்.வாழ்க்கை ஒரு சவால்,சாகசம்,அழகு,சரித்திரம்,அதில் உங்கள் விதியை பொசுக்கி சம்பலாக்க வேண்டும். அந்த விதியை பொசுக்கி சாம்பலாக்க உண்மை ,உழைப்பு, ஊக்கம், உயர்வு, மற்றும் இறைநம்பிக்கை போன்றவை உறுதுணையாய் இருக்கும்.

புதன், 22 டிசம்பர், 2010

முகநூல்

கன்னத்தில்
வரி ஒழுங்கில்லாமல்
தாறுமாறாக எழுதப்பட்டிருந்தன
சில புதுக்கவிதைகள்.
யாரும் வெட்டாததால்
தன் நகங்களை
தூரிகையாக்கி
தானே வரைந்திருக்கக்கூடும்
அந்த
மூன்றுமாத மழலை.

செவ்வாய், 21 டிசம்பர், 2010

'காலம் ' ஆவோம்

நேற்று
உதிர்ந்துவிட்டது
இன்று
மலர்ந்திருக்கிறது
எங்கேயோ இருக்கிறது.
நாளையின் விதை...

சுயம்

உள்ளங்கால் முதல்
கழுத்துவரையில்
ரகசியமான துரோகம்
கழுத்து தொடங்கி
உச்சந்தலைவரையில்
கவன ஈர்ப்பு செய்யும்
அன்பின் அரிதாரம்

கழற்றமுடியாமல் இங்கே
முகமூடிகள்
முகங்களாகிவிடுவதால்
சுயம்தேடும் சுகத்தில்
கழிகிறது கலியுகம்

திங்கள், 20 டிசம்பர், 2010

யோகநித்திரை

வாகனம் விரையும்
அரக்க சாலையின் ஓரமாக
பேரிரைச்சலுக்கு இடையே
குறட்டைவிட்டு தூங்கும்
ஒருவனின் ஆழ்ந்தநித்திரை
ஆயிரம் யோகிகளின்
தவத்திற்கு சமம்

சனி, 18 டிசம்பர், 2010

புதிய ழ-வில் இடம் பெற்ற சில கவிதைகள்

*
என்றாவது ஒருநாள்
வற்றக்கூடும் என் கண்ணீர்
அன்று எண்ணிக்கொள்
நீ எறிந்த கற்களை
-கவிதாயினி ராஜேஸ்வரி
*

*
பூச்சியொன்றைக் குறிவைத்து
மெல்ல நகர்கிறது
சுவர்பல்லி
பசிக்கும் மரணத்திற்கும்
நடுவில் நான்
-கவிஞர் நானற்காடன்.
*

*
கடவுளுடனான
எல்லைப் பிரச்சனைகளில்
கண்ணிவெடியின்
தாக்குதல்களிலிருந்தும்
கவனமாய்
தப்பித்துக்கொண்டிருக்கின்றன
சாத்தானின் காலடிகள்.
-கவிஞர் பிரக்ளின் குமார்
*

*
பஞ்சாரக் கோழிகள் சிறகடிப்பும்
கட்டிப்போட்ட நாய்களின் உறுமல்களும்
சின்னக் குழந்தை
ஆற்றாமையில் வடிக்கும் கண்ணீரும்
பொருள் கொள்ளாது நிகழ்கிறது
கிடையில்
ஓர் ஆட்டுக்குட்டியின் பிரிவு
-கவிஞர் சங்கரபாண்டியன்
*

*
சந்ததிகள்
வேரருக்கப்பட்டதை எண்ணி
புகைகிறது
அடுப்படியில்
மரம்
-கவிஞர் சுரேஷ்
*

*
உச்சி வெயிலில்
ஏதேதோ எண்ணியப்படி
நடந்தேன்
விரக்தியாய்
எதிப்பக்கம் திரும்புகையில்
பூத்திருந்தது
செடியில் எனக்கான
கவிதை
-கவிதாயினி ரம்யா
*

*
புன்னகை ஒப்பனையால்
மறைக்கமுயன்று
தோற்கிறேன்
ஏகாந்த ரணங்களின்
சோக வடுக்களைக்
காட்டிக்கொடுத்து விடுகின்றன
கண்ணீர்த்துளிகள்
-கவிஞர் தனபால்
*

*
தன் தலைமுடியைத்
தானே பற்றிக்கொண்டு
விடுவிக்கும் உபாயம்
அறியாமல்
வீறிட்டு அழும்
சிசுவைப் போல்
உன் நினைவுகளில் நானும்
-தனலெட்சுமி பாஸ்கரன்
*

*
யாரும்
பெயர்த்தெடுக்க முடியாதபடி
வாழ்க்கைச் சிலுவையில்
அறையப்பட்டுக் கிடக்கிறேன்
ஆணிகளாய்
உன் நினைவுகள்.
-கவிஞர் பாலாஜி
*

*
விலகியே இரு!
நெருங்கி வந்தால்
அழுதுவிடுவேன்
பழைய பேழைக்குள்
பதுக்கிவைத்திருந்த
பதட்டம் கூடிய
நினைவுகள் அழுக்காகிவிடும்.
விலகியே இரு!
இன்னும் சில காலம்
சுமந்து திரிகிறேன்
-கவிஞர் கிட்னப்பையன்
*

*
வெளிச்சத்திற்காய்
எரியத்தொடங்கிய
அந்தத் திரிகளைத்
தூண்ட விரல் தேடுகையில்
மெல்ல
இருள் பரவிக்கொண்டிருந்தது
விளக்கினைச்சுற்றிலும்
அடியிலும்.
-கவிதாயினி சத்யா
*

*
குழந்தையோடு
உறங்கும்
பொம்மையின் கனவில் வரலாம்
நிலாசோரூட்ட அம்மா
-கவிஞர் காயாதவன்

வெள்ளி, 17 டிசம்பர், 2010

லண்டனில் "தகிதாபதிப்பகம்" -'ஆத்மலயம்' நூல் வெளியீடு

தகிதா பதிப்பகத்தின் வெளியீட்டில்
திரு கங்கைமகன் அவர்கள் எழுதிய
"ஆத்மலயம்" என்ற நூல் இன்று
லண்டனின் வெளியாகிறது என்பதை
மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

தகிதா வெளியீடுகள்

கவிஞர் ' வைரஸ் ' எழுதிய " நிறைய அமுதம் ஒருதுளி விஷம் " என்ற கவிதை நூல் "தகிதா பதிப்பகத்தில்" காதல் தொகுப்பாக வளர்ந்துகொண்டிருக்கிறது.இனிக்க இனிக்க கவிதை எழுதி ரசிக்க ருசிக்க தந்திருக்கும் அந்த படைப்பாளரை வாழ்த்துவோம்

தகிதா வெளியீடுகள்

நமது முகநூல் தோழரான ஜோசப் சேவியர் தாசப்பன் அவர்களின் கவிதைத் தொகுப்பு ஒன்றும் தொடர்ந்து அச்சாக இருக்கிறது. நல்ல இலக்கிய ரசனையும், மொழி ஆளுமையும் , படைப்பாற்றலும் மிக்க இந்த படைப்பாளர் கவிதையில் மாற்று ரசனையை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் அருமையான புத்திலக்கிய படைப்பாளி. தமிழ் இலக்கிய வரலாற்றில் காலம் கடந்து ஓடும் கவிதை நதியில் இவர்களின் ஓடமும் ஓடும். வருகிற தலைமுறைகளையும் கரை சேர்க்கும்

தகிதா வெளியீடுகள்

கவிஞர் இரத்தின பிரியன் என்ற மூத்த படைப்பாளியின் கவிதைத் தொகுப்பு தகிதா பதிப்பகத்தில் தயாராகிக்கொண்டிருக்கிறது. ஜப்பானிய தத்துவக்கவிதைகள் என்று குறிப்பிடப்படும் ஹைக்கூ கவிதைகள் எழுதுவதில் வல்லவர். கவிதைக்களத்தில் நீண்ட வருடங்களாக முத்திரை பதித்துவரும் அவரின் கவிதைத்தொகுப்பு தகிதா பதிப்பகத்தின் மற்றுமொரு மைல்கல் .அவரை தகிதா வரவேற்று வாழ்த்துகிறது

புதியழ - வில் இடம்பெற்ற கவிதைகளின் சிதறல்கள் சில

கவிதையைக் கழுவாதீர்கள்-அது
அழுக்குகளுடனும்
கசங்களுடன்
அப்படியே இருக்கட்டும்!
-பூ.ஆ .ரவீந்திரன்

தாய்மொழியை
வளர்ப்பதும் பாதுகாப்பதும்
ஆயிரம் தாய்களை
பாதுகாப்பதற்கு சமம்.
-சேரன்

உழைப்பாளிகளின் உதிரத்தால்
தொழிலாளர்களின் வியர்வையால்
தியாகிகளின் தியாகத்தால்
சிவந்த பூமி
இன்னும் சிவந்தது படைப்பாளிகளால்.
சூரியகாந்தன்

கவிதைகளின் தரமும்
வெளிப்பாட்டு உத்திகளும்
செம்மை.
ழ மாற்றங்களைக் கொண்டுவரும்
மாறுபட்ட இதழ்
-இந்திரசித்து

பந்துகூட அடித்தால்
பதிலுக்கு எகிறும்
வந்துவிடு தமிழா!
வரலாறு படைப்போம்
-வேலுமணி

பாலாற்றுக்கரையோர
பூக்களைச்சூடுவதை விடுத்து
பக்கிங்ஹாம் கால்வாயின்
காகித பூக்களையா சூடுவது
-கோவைஅன்பு

அம்மா என்றே
அழகிய கன்றும்
இம்மா உலகில்
இனிக்கும் தமிழில்
அன்னை தன்னை
அழைத்தே மகிழும்
-விசயலட்சுமி

அன்றிருந்த தாயே !
அவனிக்கொருமொழியாய்
நின்று இருந்தாய்
காரியத்தை நேரே
எதிர்கொண்டு வென்றிருந்தாய்...
-இளங்கீரன்

தரையில் குழிதோண்டி
புதைத்தாலும்
தன்னைத்தானே புதுப்பித்து
மீண்டெழும் திறன் உண்டு
தாரணி ஆண்ட தமிழ்மொழிக்கு .
-முருகன்

வற்றாத கருத்துற்று
மடைதிறந்து
மனமென்ற தேசத்தில் ஓடும்போது
நற்றமிழே உனைவிதைத்தேன்
உள்ளமெல்லாம் நாமணக்க
நீ செழித்த வாழ்வு கொண்டேன்
-இளங்கோவன்

மொழியை அழித்தல்
முழியை மழித்தல்
விழியை இழந்தால்
வழியை ஒழிந்தாய்
-கலாம் காதிர்

மழலைத்தமிழ் பேசாத
எனக்காய்
தமிழ் மொழித்தாய் ஒருத்தாய்
பேதத்தால் கண்ட அங்கலாய்ப்பாய்
உள்ளதே பலதாய்
-சாந்தி வின்சென்ட்

ஒரு இனம் அழிந்ததே
குருதியில் மிதந்ததே
என்ன செய்துகொண்டிருந்தோம்.
இலவசங்களின் மயக்கத்தில்
நம் ஆண்மைகளை அல்லவா அழுக்காக்கினோம்
பொழுதுபோக்கு
பீடைகளைத் தொழுது
நாசமாய் போனோம்
-அமுல்செல்வி

தலைதூக்கி
தடம் பதிக்க
தடையெல்லாம் தூளாக்கி
தந்ததும் எம்மொழியே!
-வின்சென்ட் ராய்

மெளனத்
தமிழ் பேசி
புன்னகை புரிகிறது
பூக்கள்
-பூர்ணா

தமிழால் உணர்வால்
தகித்திடும் தலைமை
தாங்கிடும் சூரியனே!
உலகால் செம்மொழி
உன்னதம் அடைந்திட
இலங்கிடும் தமிழ் மனமே!
-இரத்தினப்பிரியன்.

நீக்கமற நிலைத்திருந்து
வாழ்வாங்கு வாழ்ந்திருந்து
வானளவு உயர்ந்திருந்து
செந்தமிழே! -பத்ரிநாராயணன்

விழிவிலக்கை
அணைத்துவிட்டோம்
விரல்களையும் இழந்துவிட்டோம்
இனிமேலும் வாழ்கின்றோம்
தமிழுக்காய் தமிழனுக்காய்
-குருசாமி

வீரம் பேசிய
போர்க்களமும்
ஈரம் பொங்கிய
ஒற்றுமையும்
எம் இனத்தின் முகவரியே
-தமிழ்வரதன்

கனவுகள் மெய்ப்படும்
காலமடா-தமிழ்
கவிதைகள் வென்று
போடும் தாளமடா!
-சோலாச்சி

தாயிடம் பால்குடிக்க
பிள்ளைக்கு அனுமதி வேண்டுமா?
-புதுவை ஈழன் .

தமிழுக்காய் உன்னை விதைப்பாய்
தமிழுக்காய் கணை தொடுப்பாய்
தமிழுக்காய் தலை நிமிர்வாய்
தமிழுக்காய் சிலை வடிப்பாய்
-நீலமேகம்

அன்னை மார்பில்
அழுந்திய வாயின்
அம்மாவென பசிநிறைத்த
முழக்கம்
-குமரேசன்

அந்நிய மண்
தமிழ் சரித்திரம் வியக்கிறது
இந்திய மண்
திட்டமிட்டே மறைக்கிறது
-தமிழாளி

துட்டுக்காக
தமிழை வெட்டிக்கொல்லும்
மேட்டுக்காரர்களால்
கெட்டுபோய் நிற்கிறது
-உதயக்குமாரன்

திரைக்கடல் ஓடி
திரவியம் தேடும்
தமிழன்
தாய்ப்பாலுடன்
தமிழ்ப்பாலருந்தும்
இனியன்
கம்பன் வழியன்.
-பத்மாவதி

கூழுக்காய் பாலுக்காய்
வேலைக்காய் வேட்டிக்கை
அலையாய் அலைந்ததில்லை
தமிழை தமிழுக்காய்
-தேனம்மை


அச்சமில்லை என்று
பகைவர்தமை துச்சமாக்கினாய்
விட்ட உன் சுவாசம்
வாழ்ந்த உன் வாழ்க்கை
தமிழுக்காய்

'அப்பா' என்றொரு குழந்தை

கழுவப்பட்டிருந்த பின்னும்
கழுவப்படாமலே இருந்தது
மலம் கழித்திருந்ததன்
அடையாளங்கள்...

கண்பார்வை குறைந்துபோன
எழுபதுவயது
தந்தையின் குறைக்கு
முகம்சுளிக்காமல்
நுழைகிறேன்
வீட்டின் கழிவறைக்குள்

பூவிழுந்த விழியாள்

என் முகத்தில்
படரும் உணர்விழைகளை
வாசிக்கும் அளவிற்கு
விழிகள் பிரகாசமாய் இல்லை
என் அன்னைக்கு....
இருந்தாலும் புரிந்துகொள்கிறாள்
என் மொழிகளை
செவிகளில்
பார்த்து.பார்த்து.

ozone

ஏ சி யின்
குளிர் காற்று அடித்ததில்
கிழிந்தது
ஓசோனின் கன்னம்

புதிய ழ - நூல்கள் விமர்சனம்

"வரப்பெற்றோம்" நூல் விமர்சனப்பகுதியில்...................

புதுவை ஈழனின்-"ஜெல்லட்டின் குச்சிகள்"
திருப்பூர் ரத்தினமூர்த்தியின்-"அர்த்தங்கள் ஆயிரம்"
நீலநிலா சென்பகராகனின்- "யாரோ எழுதிய கடிதம்"
லக்ச்மணனின் -"ஓடியன்"

ஆகிய நூல்கள் விமர்சனம் செய்யப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளன .வாழ்த்துகிறோம்

"பி ஆர் ஆர் என்றொரு கலைத்தந்தை "- நன்றி நன்றி நன்றி

இலக்கியத்தையும் ஓவியத்தையும் இருவிழிகளாகக் கொண்டு இந்த பிரபஞ்சத்தை தரிசிக்கும் கலைத்தந்தை பி ஆர் ஆர் அவர்களுக்கு தோழமையுடன் மணிவண்ணன் வரைவது. வணக்கம் முதலில்.தங்களின் இடையறாத பணிகளுக்கிடையே எமது கவிதை சிற்றிதழ்களுக்கும் தகித்த பதிப்பகத்தின் வெளியீடுகளுக்கும் சிறப்பான முகப்பினை தயார் செய்து தந்து எமது வெற்றிக்கும் துணை நிற்கும் தங்களுக்கு ஆசிரியர் குழுவினரின் சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றிகளை உரித்தாக்க கடமைப் பட்டிருக்கிறோம்

காதல் குறட்பாக்கள்

ஊடலில்
தோற்றவரே
வெற்றிபெற்றவராக
அறிவிக்கப்படுகிறார்.
ஏன் தெரியுமா?

கட்டில் போரில்
காயங்கள் செய்தவரைவிட
காயங்கள் பெற்றவரே
வாகை சூடுவதால் !

குறள்: 1327
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலில் காணப் படும்

காதல் குறட்பாக்கள்

என்
காதல் நிரபராதியை
காமச்சிறையில்
அடைக்கத்தான்
குற்றங்கள் சுமத்தினேன்.
அவர் நிச்சயமாய்
முத்த தண்டனையிலிருந்து
தப்பமுடியாது

குறள்:1321
இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவரளிக்கு மாறு

காதல் குறட்பாக்கள்

நீருக்கு வண்ணம் கொடுத்த
நிலமானாய் நீ.
நிலத்திற்கு ஈரம் கொடுத்த
நீரானேன் நான்

நீரும் நிலமுமாய்க்
கலந்த பிறகு
உன்னோடு கொள்ளும் சிணுங்கல்களில்
சுகிக்கிறேன்
சொர்கத்தின் சுகத்தை

குறள்:1323
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியை தன்னார் அகத்து

காதல் குறட்பாக்கள்

உண்டல் இனிது
செரித்தல் அதனினும் இனிது
அதுபோல்
புணர்தல் இனிது
புணர்தலுக்கான உணர்தல்
அதனினும் இனிது

குறள்:1325
உணலினும் உண்டது அறலினிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது

கவிஞர் கலாம் காதிர் அவர்களின் வாழ்த்து _புதிய ழ

புதியதாய் கவியுலகில் புகுந்திடும் கவியன்பர்களைமதித்திடும் பண்பில் மதிக்கின்றேன் மணியின்புதிய “ழ” என்னும் புத்துயிரூட்டூம் பதிப்பகம்அதிகமதிகம் அணுதினமும் மதிக்குமென் அகம்எழுத்தறிவித்த என்னுயிர் ஆசான்களைப் போல்; என்...“எழுத்தை” அறிவிக்கும் எண்ணத்தில் முதல்வன் நீதமிழின் சிறப்பெழுத்தையே உனது தலையெழுத்தாக்கிதமிழாய் தமிழுக்காய் தாழாது உழைத்திடும்அமிழ்தினுமினிய அன்பின் ஊற்று நீ

உப்புசத்யாகிரகம்

அமோகமாய் விற்பனையாகிறது
வேதாரண்யத்தில்
tata salt

மோகன்தாசுக்கு தலைக்கனம் இல்லை

எத்தனையோ பேருக்கு
கோமணம் ஆனது
தலையில் முடிந்திருந்த
நீளமான முண்டாசு

'தகிதா பதிப்பகம்"

"என் கைரேகை படிந்த கல்" என்ற கவிதை தொகுப்பை 'தகிதா பதிப்பகம்" பெருமையுடன் வெளியிடுகிறது. இந்நூலின் ஆசிரியர்"யாழி" என்ற புனை பெயரில் சிற்றிதழ்களிலும், இலக்கிய இதழ்களிலும்,வார இதழ்களிலும் எழுதிக்கொண்டிருக்கும் கிரிதரன் ஆவார் . சிறந்த படைப்பாளர்:சிறந்த விமர்சகர்: புதிய ழ கவிதை சிற்றிதழின் இணை ஆசிரியர்.மேலும் " யாழிசை" என்ற பெயரில் அலைபேசி வழி கவிதை இதழ் நடத்திக்கொண்டிருக்கும் நல்ல தமிழர்.அன்னாரை தகிதா பதிப்பகம் வாழ்த்தி வரவேற்கிறது. இவரது நூலின் அட்டையை வடிவமைத்தவர் எமது பதிப்பகத்தின் அனைத்து நூல்களுக்கும் முகப்பு வடிவமைத்து தரும் திரு அனந்த பத்மநாபன் ஐயா அவர்கள் ( பி ஆர் ஆர் ) .எமது கலை பயணங்களுக்கு உறுதுணையாக இருக்கும் அன்னாருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகளை உரித்தாகிக் கொள்கிறோம். நீங்களும் வாழ்த்துங்கள் தோழர்களே !... வெல்க தமிழ் ! வாழ்க தமிழர்

காதல் குறட்பாக்கள்

'இப்பிறவியில் உன்னை பிரியேன்'
என்றேன்.
அவள்
வரும் பிறவிகளுக்காய்
வருந்தி அழுதாள்.

குறள்:1315
இம்மைப் பிறப்பில் பிரியலாம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்

"புதிய ழ" சந்தாவும் விளம்பரமும்

கொங்கிலிருந்து குவலயமெங்கும் "புதிய ழ" கவிதை சிற்றிதழ் வெளிவந்து கொண்டிருக்கிறது.தற்போது அச்சில் இருப்பது இதழ் ஐந்து . இதில் உலகறிந்த உள்ளூர்க்கவிஞர்களும் , உள்ளூர் அறிந்த உலகக் கவிஞர்களும் கவிதை எழுதி வருகிறார்கள். தமிழ் கவிதை உலகில் வானம்பாடிகளுக்கு அடுத்தபடியாய் புதிய ழ குழுவினர் 'புதிய வானம்பாடிகளாக' அடையாளப்பட்டிருக்கிறார்கள். தமிழ் இலக்கிய வரலாற்றில் கவிதைக்கான அடையாளங்களை பெற்றிருக்கும் இந்த இதழில் தங்களின் சொந்தமான நிறுவனத்தின் விளம்பரங்களையும் , தாங்கள் பணியாற்றும் நிறுவனங்களின் விளம்பரங்களையும் தர விருப்பம் இருக்கிறவர்கள் தொடர்புகொள்ளுங்கள். இந்த கவிதை நூலுக்கு சந்தாதாரர்களாக ஆகா விரும்புகிறவர்களும் தொடர்பு கொள்ளுங்கள். கவிதைப் படைப்பாளிகள் தங்கள் நூல் குறித்த விமர்சனம் ழ -வில் இடம்பெற வேண்டும் என்று விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள்.

நீங்கள் தமிழுக்காகவும் கவிதைக்காகவும் செய்ய இருக்கும் உதவிக்கு இப்பொழுதே நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் -

இப்படிக்கு
புதிய ழ ஆசிரியர் குழுவினர்.

தகிதா வெளியீட்டில் அடுத்ததாக பி ஜி சரவணனின் கவிதை தொகுப்பு

தகிதா வெளியீட்டில் அடுத்ததாக பி ஜி சரவணனின் கவிதை தொகுப்பு வெளியாகிறது.அழகியல் குறித்தும் , சூழலியல் குறித்தும் செம்மொழிக்கவிதைகளை பொழியும் இந்த படைப்பாளி புத்திலக்கியத்தில் குறிப்பிடத்தக்க பதிவை ஏற்படுத்தியவர். இவரது புதுக்கவிதைகள் சங்க இலக்கியங்களை படிக்கும் சுக அனுபவத்தை உருவாக்குகின்றன .புழக்கத்தில் இல்லாமல் மறைந்துபோன பழம் சொற்களாலும் ,மனதிற்குள் சாரலைப் பொழியும் குளுமையான வார்த்தைகளாலும் கருவாக்கி உருவாக்கும் இவனின் கவிதைகள் தனித்துவம் வாய்ந்தவை. ஆடம்பரமில்லாத இயல்பான கவிதைகளின் எதார்த்த படைப்பாளி பி ஜி சரவணன் அவர்களின் கவிதைத் தொகுப்பை வெளியிடுவதில் தகிதா பதிப்பகம் பெருமை கொள்கிறது

தகிதாவின் வெளியீட்டில் அடுத்ததாய் ஒரு சிறுகதை தொகுப்பு

தகிதாவின் வெளியீட்டில் அடுத்ததாய் ஒரு சிறுகதை தொகுப்பு வெளிவருகிறது . தொகுப்பின் பெயர் ' கோவை கடற்கரை' என்பதாகும் .இந்த தொகுப்பின் ஆசிரியர் ஒரு மாணவர்.பெயர் ம.அசோக்குமார் .கல்லூரி படித்துக்கொண்டிருக்கிறார். முற்போக்காக சிந்திக்கிற, முற்போக்காக செயல்படுகிற படைப்பாற்றலும் மொழியாளுமையும் வாய்க்கப்பெற்ற வளரும் மாணவ கலைஞன். 'பிப்ரவரி 30 ' என்னும் குறுநாவலை எழுதி புத்திலக்கிய வரலாற்றில் முத்திரைப்பதித்த அற்புத படைப்பாளி.அன்னாரை பதிப்பகத்துடன் இணைந்து நீங்களும் வாழ்த்தி வரவேற்பு செய்யுங்கள் .

சங்கொலி

"பொங்கு தமிழர்க்கு
இன்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமென சங்கே முழங்கு"
ஓயாமல்
முழங்கிக்கொண்டே இருக்கிறது
மரித்த தமிழர்களின் மனைகளில்

வாழ்வும் மரணமும்

கண்ணிவெடிகள்
புதைக்கப்பட்டிருந்த
இடத்திற்கு அருகே
இரைதேடிக் கொண்டிருந்தது
சமாதானப் புறா

தகிதாவின் அடுத்த வெளியீடு - கவிஞர் நாணாற்காடனின் 'சாக்பீஸ் சாம்பலில்'

கவிஞர் நாணாற்காடன் என்ற அற்புதமான ஹைக்கூ படைப்பாளியின் மூன்றாவது தொகுப்பு தான் இந்த 'சாக்பீஸ் சாம்பலில்'. இவரின் முதல் நூல் 'கூப்பிடு தொலைவில்'(காதல் கவிதைத் தொகுப்பு),இவரின் இரண்டாவது நூல் 'பிரியும் நேரத்தில்' (ஹைக்கூ கவிதைத் தொகுப்பு) .இவரின் இரண்டாவது நூல் சென்னை -தாராபாரதி விருதினை பெற்றுள்ளது. தமிழகத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய நேர்த்தியான ஹைக்கூ படைப்பாளர்களில் ராசிபுரத்து கவிஞரான நாணாற்காடனும் ஒருவர் .ஹிந்தி ஆசிரியராகப் பணியாற்றும் இவருக்கும் அப்படியொரு தமிழ்ப் பற்று.இவர் புதுக்கவிதையையும் நவீனக் கவிதைகளையும் எழுதிவரும் சமகாலப் படைப்பாளி .நிறைய கவிதைகளை இந்தியிலிருந்து தமிழுக்கு கொண்டுவந்து சேர்த்த மொழிபெயர்ப்பு தொனியாக விளங்குகிறார். கடந்த எட்டு ஆண்டுகளாக தமிழ் இதழ்களின் தொடர்ந்து எழுதிவரும் புத்திலக்கிய படைப்பாளி. கன்னடம், இந்தி ,ஆங்கிலம், தமிழ் , மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பரிச்சயம் மிக்க பன்மொழி வித்தகர்.அவரின் அற்புத படைப்பாம் 'சாக்பீஸ் சாம்பலில்' என்னும் நூலை தகிதா பதிப்பகம் வெளியிடுவதில் பெருமை கொள்கிறது

தகிதாவின் அடுத்த வெளியீடு - இயற்கைசிவத்தின் 'கட்டைவிரல்களின் கல்லறை '

தகிதாவின் அடுத்த வெளியீடாக செஞ்சியை சார்ந்த நவீனப் படைப்பாளி இயற்கைசிவத்தின் 'கட்டை விரல்களின் கல்லறை' என்னும் கவிதை நூல் வெளிவருகிறது. கலை உலகில் சிறந்த புகைப்படக் கலைஞராக அடையாளப்பட்ட இயற்க்கைசிவம் அவர்கள் இத்தொகுப்பின் மூலம் சிறந்த புத்திலக்கியப் படைப்பாளியாக தன் முத்திரையை பதிக்கிறார். செஞ்சியை ஆண்ட மன்னனான 'தேசிக்கு ராஜா' என்ற பெயரில் அலைபேசிவழி குறுங்கவிதை இதழை நடத்திக்கொண்டிருக்கிறார். இதன் ஆசிரியரும் இவரே. இவர் சிறந்த திரை விமர்சகனாக விளங்கி பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறார்.மொழிப்பற்றும், கலையார்வமும், கொண்ட இந்த படைப்பாளரின் வயது முப்பது. இவர் தெள்ளுத் தமிழில் பேசக்கூடிய சிறந்த பேச்சாளரும் ஆவார்.இவ்வாறு பல்துறை கலையார்வம் கொண்ட இப்படைப்பாளியின் கவிதைத் தொகுப்பை வெளியிடுவதில் தகிதா மகிழ்வு கொள்கிறது. பாராட்டியும் கெளரவிக்கிறது

புதிய ழ ஆண்டுமலர் - 2010

கொங்கில் இருந்து குவலயமெங்கும் வெளியாகும் 'புதிய ழ' கவிதை சிற்றிதழ் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவுப் பெரும் நிலையில் ழ-வின் ஒட்டுமொத்த தொகுப்பு ஒன்றினை படைப்பாளர்களின் குறிப்புகள் மற்றும் புகைப்படங்களுடன் வண்ணத்தில் பிரமாண்டமான முறையில் கொண்டுவர திட்டமிட்டிருக்கிறது.கவிதை மலரில் முத்திரை பதிக்க விரும்பும் கவிதைப் படைப்பாளிகள் தங்கள் கவிதைகளை விரைந்து அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.கவிதைகள் இரண்டுவரிகளிலிருந்து பன்னிரண்டு வரிக்குள் இருக்கலாம். புதுக்கவிதை,ஹைக்கூ கவிதை, ஜென் கவிதை, மரபுக் கவிதை -இவற்றில் எந்தவகைக் கவிதையாக வேண்டுமானாலும் இருக்கலாம். வரவேற்ப்பும் வாழ்த்தும். நீங்கள் கவிதைகளை அனுப்பிவைக்க வேண்டிய மின்னஞ்சல்:\ :puthiyazha@gmail.com, dhakitha@gmail.com.

தகிதா பதிப்பகத்தின் அறிமுக விழா மற்றும் நூல் வெளியீட்டுவிழா

எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமையன்று தகிதா பதிப்பகத்தின் அறிமுக விழா மற்றும் நூல் வெளியீட்டுவிழா கோவையில் உள்ள கஸ்தூரி ஸ்ரீனிவாச கலையரங்கத்தில் நடைபெற உள்ளது.இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் திரு சேரன் அவர்களும் ,கௌரவ விருந்தினராக ஓவியர் பி ஆர் ராஜன் அவர்களும் ,கலந்துக்கொள்ள இருக்கிறார்கள். தஞ்சாவூர் கவிராயர் தலைமை தாங்க , விஜயா பதிப்பகத்தின் உரிமையாளர் திரு வேலாயுதம் முன்னிலை வகிக்க ,தமிழ் சிற்றிதழ்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு பூ. ஆ ரவீந்திரன், யுகமாயினி ஆசிரியர் சித்தன், படைப்பாளர் நெய்வேலி பாரதி குமார், வழக்குரைஞர் விஜயன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க, பதினைந்து புத்திலக்கியப்படைப்பாளிகளின் கவிதை மற்றும் கதை இலக்கியங்கள் வெளியாக உள்ளன. வாருங்கள் வருகை தாருங்கள். கூறுங்கள் வாழ்த்துக் கூறுங்கள். நெஞ்சம் நிறைந்து அழைப்பது உங்கள் தகிதா மணிவண்ணன்

தகிதாவின் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் புத்திலக்கிய படைப்பாளிகள்

தகிதாவின் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் புத்திலக்கிய படைப்பாளிகளை
வருக வருகவென வரவேற்கிறேன்.

- ஈழவாணி (மலேசியா)
- நடராஜன்மாரியப்பன் (அமெரிக்கா)
- ஆதித்தன் (இலங்கை)
- எம்.கே.பக்தவத்சலம் (கேரளா)
- சித்ரா நடராஜன் (கோவை)
- யாழி (நல்லூர்)
- நாணர்காடன் (ராசிபுரம்)
- இயற்கை சிவம் (செஞ்சி)
- பி.ஜி.சரவணன் (மதுரை) -
-வே.தனலட்சுமி (ஈரோடு)
- அசோக்குமார் (கோவை)
-அருண்குமார் (கோவை)

தகிதா பதிப்பகத்தின் நூல்கள் விற்பனைக்கு

தகிதா பதிப்பகத்தின் சார்பாக சமீபத்தில் பன்னிரு நூல்கள் வெளியிடப்பட்டன . மொத்தம் பன்னிரண்டு நூல்களில் பத்து நூல்கள் கவிதை நூல்கள் மற்ற இரண்டு நூல்கள் சிறுகதைத் தொகுப்புகள்.இவை அனைத்தும் தபால் செலவுடன் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
தொகை Rs.500/- மட்டுமே.
தொடர்புக்கு:dhakitha@gmail.com,puthiyazha@gmail.com,
ph:+91-94437-51641

சேரன் என்றொரு "கதைப் பொக்கிஷம் "-1

"ஞாபம் வருதே ஞாபகம் வருதே" என்று ஒவ்வொருவரும் நினைவு கூறும் பலகாலங்களில் ஒரு பொற்காலம் எல்லோருக்கும் இருக்கும் .பொற்காலங்களை பொக்கிசங்களாக உணர்கிறவர்களால்தான் வெற்றிக்கொடிகட்டமுடியும்.பெரும்பாலும் எல்லோராலும் மறக்கமுடியாத நாள் பிப்ரவரி பதினான்காக இருக்கலாம்.ஆனால் என்னால் மறக்கமுடியாத நாள் நவம்பர் பதினான்குதான்.ஆம் 'தகிதா' என்ற பதிப்புக்குழந்தை ஜனித்து தவழ்ந்த தினம்தான் அன்று .மேலும் அந்தநாளை பிறவிகள் தாண்டி நினைவுப்படுத்துகிறவர் ஒருவர் .அது வேறுயாரும் அல்ல "கதைப்பொக்கிசம்" இயக்குனர் திரு சேரன் அவர்களே.

ஒரு நாள் ஒரு மதியப்பொழுதில் அவர் படபிடிப்பில் பரபரப்பாக இருந்திருக்கக்கூடும் அலைபேசியில் எதிர்ப்பார்போடு அழைத்த என் அழைப்பிற்கு மறுமுனையில் பரவசமூட்டும் பதில்கள் எனக்காக காத்திருந்தன .'சொல்லுங்க தோழர்' என்று என் அழைப்பிற்கு வரவேற்பை வைத்தார்.'தோழர் தகிதா என்ற பெயரில் பதிப்பகம் ஒன்றை தொடங்கி இருக்கிறேன்...' என்று என் வாக்கியத்தை முடிப்பதற்கு முன்னால் திடீரென்று ஒரு ஆச்சர்ய வெடி ஒன்றை வெடித்ததும் மகிழ்ச்சியில் நன் திக்குமுக்காடிப்போனேன். 'உங்கள் தகிதா பதிப்பகம் சேரனின் புத்தகத்தை எல்லாம் பதிப்பிக்காதா' ?என்ற கேள்வியைக்கேட்டதும் மகிழ்ச்சியில் சில வினாடிகள் ஊமையாகிப்போனேன்.

எந்த யூகங்களுக்கும் இடம்தாராமல் உடனே ஒத்துக்கொண்டது எனக்கு ஆச்சர்யத்தை அளிக்கிறது என்று கேட்டேன். 'என்ன நிகழ்வு? எதற்காக நடக்கிறது? யார் நடத்துகிறார்கள் ? என்பதை அறிந்ததன் காரணத்தால் தான் ஒப்புதல் தந்தேன் , உறுதிபடுத்திக்கொள்ளுங்கள் ' என்ற பதில் தகிதா குறித்து முகநூலின் வழி முழுமையாக அறிந்திருந்ததை என்னால் உணர முடிந்தது. மேற்கொண்டு நான் என்ன கேட்பேன் என்பதை புரிந்துகொண்டவராய் 'வருகை, தங்கல் குறித்த கவலைகள் உங்களுக்கு வேண்டாம் ,நீங்கள் விழா ஏற்பாட்டை கவனியுங்கள்' என்றார்.தோழர் சேரனின் அந்த ஆறுதலான ஊக்கமூட்டும் பதில் தகிதாவின் வெற்றிவிழாவிற்கு என்னை அரக்கத்தனமாக உழைக்க வைத்திருக்கிறது.

சேரன் என்றொரு "கதைப் பொக்கிஷம் "-2

ஒரே பிரசவத்தில் பன்னிரு மழலைகளை அறுவைசிகிச்சை செய்யாமல் சுகப்பிரசவமாக புறம்தந்த தாயைப்போல் தொண்ணூறு நாட்களில் பன்னிரு நூல்களை தயாரித்த நிறைவிலும் மகிழ்விலும் ஆழ்மனம் இருந்திருந்தாலும் , பன்னிரு படைப்பாளர்களின் குடும்பம் புடைசூழ்ந்த வருகையையும் , சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொள்ளும் சிறப்பாளர்களையும் , .கோவை மற்றும் தமிழகம் முழுதிலுமிருந்து வருகப்புரியும் இலக்கிய அன்பர்களையும், புதிய ழ சிற்றிதழின் ஆசிரியர் குழுவினரையும், முறையாக ஒருங்கிணைக்க வேண்டுமே என்ற அச்சமே அதிகமாகவே பற்றிக்கொண்டிருந்தது. இதற்கிடையில் இயக்குஞர் சேரன் அவர்களின் வருகை ஏற்பாடுகள் குறித்து நானே எனக்குள் கலந்தாலோசித்துக்கொண்டேன்.பரவசமும் பரபரப்பும் கலந்த அந்த வினாடியில் மீண்டும் என் அலைபேசி இயக்குஞரை தொடர்புகொண்டது.

'வணக்கம் சொல்லுங்கள் தோழர்' என்று எதிர்முனையில் இயக்குஞர் ஒலித்ததும்,'வணக்கம் தோழர், உங்கள் பயணம் குறித்த கேட்டு தெளிவுப்படுத்திக்கொள்ளலாம்
என்றுதான் அழைத்தேன். உங்களுக்கு விமானத்திற்கான பயணச்சீட்டு பெறவேண்டும் ,எப்போது வருகிறீர்கள் ?நாளையும் நேரத்தையும் சொன்னால் எதுவாக இருக்கும் ' என்று முடிப்பதற்கு முன்பதாக 'இதோ பாருங்க மணிவண்ணன் 'சேரன்' விமானத்தில் எல்லாம் இல்லை, விமானம் வேண்டாம் நீங்கள் தொடர்வண்டியில் பதியுங்கள். முடிந்தால் முதல் வகுப்பு இல்லையென்றால் இரண்டாம்வகுப்பு போதுமானது ' என்ற பதிலில் அவரின் கர்வம் தொலைத்த எளிமையும், விழாவிற்கு கூடுதலாக செலவு வைக்ககூடாது என்ற நல்லெண்ணமும் கலந்திருந்ததை நன்கு உணர்ந்தவனாகி மகிழ்ந்தேன்.மனதிற்கும் வாழ்த்திக்கொண்டேன்.சொன்னது போலவே பதினான்காம் தேதி காலை கோடம் பாக்கத்திலிருந்து கோவைப் பாக்கத்திற்கு அந்த பொக்கிஷம் வந்து சேர்ந்தது.

தகிதா பதிப்பகத்தின் அறிமுக விழாவிற்கான இறுதிகட்ட வேலைகள் நிறைவுக்கு வந்த அந்த பொன்மாலைப் பொழுதில் தொலைதூரத்திலிருந்து வருகை தந்த கவிதைத் தோழமைகளின் வருகையை கஸ்தூரி ஸ்ரீனிவாசா கலையரங்கம் வரவுவைக்க தொடங்கியது. பெற்றோர்களோடும் குழந்தைகளோடும் நண்பர்களோடும் பயணக் களைப்பின் அடையாள ரேகை சிறிதும் தெரியாத அளவிற்கு இனிய சந்திப்பு எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சிப்பூக்களை மலர்த்திக்
கொண்டிருந்தது.எப்போதும் ஆரவாரங்களுக்கு பஞ்சமில்லாத அந்த பீளமேடு சாலையின் ஒருபுறத்தில் விழா நடப்பதற்கான எந்த அடையாளங்களையும் புறத்தே
காண்பித்துக்கொள்லாமல் குளிரூட்டப்பட்ட உள்ளரங்கில் விழா தொடங்கியது..

சேரன் பேசுகிறார்:ஜோடனைகளோடு வாழ்வது எனக்குப் பிடிக்காது

எல்லோருக்கும் வணக்கம்.புத்தக வெளியீட்டு விழா. பன்னிரண்டு புத்தகங்களை ஒரே நேரத்தில் அச்சடித்து பதிப்பகமாக அறிமுகமாகிற விழா என்று தான் இதுவரை நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.இதற்கு முன்னால் நடந்த , அரங்கம் முழுவதும் கைதட்டிய விசயங்களையும் என்னைப்பற்றி மணிவண்ணன் அவர்கள் பேசிய விசயங்களையும் நான் மறந்துவிட்டேன்.ஆகவே அதைப்பற்றி பேசப்போவதில்லை.ஏன்னா அதுலே நெறைய முரண்பாடுகளும் இருக்கு.அதே அப்புறம் பேசறேன்.

முதலில் எனக்கு மணிவண்ணன் என்ற பேராசிரியர், இந்த தமிழ் ஆர்வலர், தமிழின்மேல் ஒரு பற்றோடு இருக்கிறார் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.ஆனால் இங்கு பார்த்த போதுதான் தெரிகிறது,கண்களிலிருந்து வந்த கண்ணீர் அவர் வெறியோடு இருக்கிறார் என்பதை எனக்குக் காட்டியது. அந்த ஆர்வலரை, ,அந்த தமிழ்ப் பற்றாளரை எனக்கு முகப்புத்தகத்தின் மூலமாகத்தான் பழக்கம்.இந்த முகப்புத்தகம் என்று சொல்லக்கூடிய தளம் நிறைய நண்பர்களை , நிறைய ஆற்றல்மிகுந்தவர்களை ,வேறு வேறு விதமான சிந்தனையாளர்களை எனக்கு அறிமுகப்படுத்தியது.அதில் முக்கியமான சிந்தனையாளர் திரு மணிவண்ணன் அவர்கள்.

நான் முகப்புத்தகத்தில் தினசரி எனது புகைப்படத்தை வெளியிடுவதுண்டு,நான் எடுத்த புகைப்படத்தை. சின்னச் சின்ன ஆசைகள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தனித்தனியா இருக்கும்.ஒரு சில பேர் என்னதா நல்ல ஆளா இருந்தாலும் வீட்டுக்குள்ளே பாத்ரூமில் பாடிப்பாப்பாங்க,நம்மளும் ஒரு பாடகர்னு நெனச்சிகிட்டு.இப்ப நிறை பேர் நல்ல கவிஞர்களா இருந்தால் கூட சில ஆசையாலே பேனா எடுத்து நானும் எழுதினதுண்டு கவிதைன்னு. அப்படி சின்ன சின்ன ஆசைகள் இருக்கிறது மாதிரி இந்த போட்டோ எடுத்து பார்ப்பேன் நான். எனக்கு நிறைய போடோ எடுக்குற ஆர்வம் உண்டு,சின்னவயசிலிருந்தே அந்த ஆர்வம் நிறைய இருந்தததனாலே .ஆனா எனக்கு கேமரா இப்பதா கிடைச்சுச்சு டைரக்டர் ஆனதுக்கப்புறம்.

ஆதனாலே இப்ப எடுத்து எடுத்து பழகுன அதுலே நல்ல இருக்கிற போடோடோக்களை முகநூலில் போடுவேன். போட்டுட்டு அதுக்கு கீழே சில வரிகளை எழுதுவேன்; தமிழ்லே எழுதுவேன். எனக்கு அந்த போட்டோ எந்த மாதிரி பாதிக்குது அப்படின்னு. அப்படி அந்த போடோ பாதிக்கிற வரிகளை போடுவேன். சும்மா சாதாரணமாத்தா ஆரம்பிச்சே ஒரு போட்டோ போட்டுட்டு அந்த போட்டோவுக்கு நாலு வரிவேணுமேன்னு போட ஆரம்பிச்சேன்.ஆனா அது வந்து தினசரி ஐம்பது ஐம்பத்தைந்து அறுபது பேர் கருத்துக்களை பதிவு செய்ய ஆரம்பிச்சாங்க.ஆனா அறுபத்த்தஞ்சி பேரோட கருத்துக்களும் வேறுவேறான பார்வையில் இருந்தது. அது ரெம்ப அற்புதமான விஷயம்.

இந்த உலகத்திலே ஒரே மாதிரியான தாக்கம் எங்கேயும் இருக்க முடியாது. வேறுமாதிரியான தாக்கம், வேறே மாதிரியான பார்வை,ஓவொரு இடத்திற்கும் வித்தியாசப்படும். நம்ம வீட்லே பொறந்த அண்ணன் தம்வி அஞ்சு பேரும் வித்தியாசம். பின்னே எங்கிருந்து வெளியிலிருந்து வர்ற மருமக நமக்கு ஒத்துபோற ஆசைப்படற மாமியார நாம இருக்க முடியும் . அதுபோலதான்.அந்த வரிகள் அறுபத்தைத்து பேர் வித்தியாசமா இருக்கும் போது அதுலே எனக்கு அறிமுகம் ஆனவர்தான் மணிவண்ணன் சார்.அதுலே என்னோட போடோகளுக்கு அழகான கவிதைகளை எழுதிகிட்டே இருந்தார். எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. நா அவருக்கு பதிலளிச்சே .பதிலளிச்சபோது அவர் அவரது கவிதை பற்றிய ஆர்வங்களை அவர் வெளியிட்ட போது. அப்படித்தான் எங்களுக்கு பழக்கமானது.ஒரு முறை என்னை வந்து அலுவலகத்தில் சந்திக்கலாமா என்று கேட்டார்.தாராளமாக வாங்க நா உங்களை சந்திக்கிறேன்னு சொன்னப்ப,வந்து என்னை அலுவலகத்தில் சந்தித்தார்

அப்புறம் அதைக்கூட முகப்புத்தகத்திலே வந்து மூணு நாட்கள் மூன்று பகுதிகள் எழுதினார் . என்னை சந்தித்த விஷயத்தை.எனக்கே தெரியாது அவர் அப்படி எல்லா என்னை பாத்தாங்கறது.நா சாதாரணமான மனுசனாத்தா அவரிட்டே பேசிக்கிட்டிருந்தே ,அவரு என்னியே ஒவ்வொரு அங்குலம் அங்குலமா அளந்து அளந்து எழுதி இருந்தார். அது எனக்கு தெரியலே,அவரு எழுதுனதுக்கப்புரம் நா கொஞ்சம் உசாராயிட்டே. இனிமே வந்து பாக்கரவங்ககிட்டே நாம சரியா இருக்கனும்ன்னு.அவ்வளவு பாத்து இதுபண்ணி எழுதினார். எனக்கு அதெல்லா தெரியலே. ஜோடனைகளோடு வாழ்வது எனக்குப் பிடிக்காத் விஷயம். இயல்பான மனுசனா இரு.அவ்வளவுதா .உனக்கு கோபம்வந்தா காட்டிடு,சந்தோசம் வந்தா சிரிச்சிறு, அழுகைவந்தா அழுதிடு.அவ்வளவுதான் ,அப்படியே ஒரு மனுஷன் வாழ்ந்துட்டாலே நிம்மதியா வாழ்க்கை இருக்குமுன்னு நெனக்கிறேன். எல்லாத்தையும் அடக்கிகிட்டு நேயாளியா வாழ நான் தாயாரா இல்லை.

(சேரன் நாளையும் பேசுவார்

சேரன் பேசுகிறார்: யாழ் நூலக எரிப்பின் சாம்பல் மீண்டும் தமிழுக்கே உரமாகும்

மணிவண்ணன் தமிழ் பற்றி பேசும்பொழுது ,இலங்கையைப் பற்றி பேசும்பொழுது, அந்த நூலகங்களில் தமிழ்ப் புத்தகங்கள் எரித்தது தொடர்பாக பேசும் பொழுது , அவர் கண்களில் கண்ணீர் பொங்கி வழிந்தது. ஆனா கவலை படாதீங்க மணிவண்ணன். எரிக்கப்பட்டது பிரதிகள்தான் உண்மை வந்து வெளியிலே கெடக்கு. உண்மையான பிரதிகள் உண்மையான எழுத்து இங்கே கெடக்கு. அப்புறம் நீங்க வந்து அது எரிக்கப்பட்டதா ஏன் நெனச்சி அழுகிறீங்க .அந்த சாம்பல் நமது விதைகளுக்கு உரமாகப் பயன்படப் போகிறது. அதன் மூலம் நூற்றுக்கணக்கான பிரதிகள் நூற்றுக்கணக்கான புதிய புதிய சரித்திரத் நூல்களை இளைஞர்கள் எழுதத்தான் போகிறார்கள் என்று நினையுங்கள்..அதற்கு நீங்கள் விதைச்சிருக்கிற இந்த விஷயம் ,அந்த ஒரே ஒரு காரணத்திற்க்காக ஆரம்பிச்சிருக்கீங்க என்ற விஷயம் என்னை ரொம்ப வெகுவா பாதிச்சிருச்சி.

நான் தெரிஞ்சோ தெரியாமலோ தான் கேட்டே உங்ககிட்டே,என்னோட புத்தகத்தை தகிதா பதிப்பகம் வெளியிடுமான்னு? ஆனா சத்தியமா சொல்றே உங்களுக்காக ஒரு புத்தகம் எழுதப்போறே. அந்த புத்தகத்தே தகிதா பதிப்பகம் தான் வெளியிடப்போகுது . அதே கண்டிப்பா நான் எழுதுவேன். ஏன்னா எனக்கு நெறைய ஆசைகள் இருக்கு எழுதணும்னு .ஏன்னா சினிமாவுலே எல்லாத்தையும் சொல்ல முடியலே. ஏன்னா சினிமா இப்ப சிக்கி சீரழிஞ்சி இருக்கு. எந்தப் படத்தை எடுக்கணும்னு கொழப்பமா இருக்கு. எல்லா நல்ல படம்றீங்க பொக்கிசத்தே. ஆனா ஓடலே.மாயக்கண்ணாடி எடுத்ததிலேயே பிரமாண்டமான படம் என்று அவரு மைக்கே பிடிச்சி பேசுறாரு.ஆனா ஒருத்தன் வரலே திரையரங்கத்துக்கு.

நீங்க பாத்தீங்களா? நீங்க மட்டும் பாத்தா! கோயமுத்தூரே பாத்த்தாதானே அடுத்த படம் எடுக்க முடியும். அதனாலே எடுக்கமுடியாத விஷயங்கள் நிறைய இருக்கு. நம்ம வாழ்க்கையைப் பற்றி திரைப்படத்தில் சொல்லமுடியாத விஷயங்கள் நிறைய இருக்கு. நம்ம வாழ்க்கை பற்றிய நிறைய கேள்விகள் இருக்கு . இதெல்லா புத்தகங்களா வெளிவரணும். இன்னைக்கு நெறைய வழி இருக்கே, நிறைய பேசுறாங்க நிறைய சொல்றாங்க அப்புறம் ஏன் எழுதனும்மு கேட்கலாம் .காலத்தால் அழியாத பதிவுகள் புத்தகங்கள் மட்டும்தான்.

(சேரன் நாளையும் பேசுவார்...)

சேரன் பேசுகிறார் :"புத்தகங்கள் காலத்தின் விலாசங்கள்"

புத்தகங்கள்தான் நமது பதிவுகள். நமக்கு எப்படி தெரியும் நம் முன்னோர்கள் பற்றி? முன்னோர்கள் வாழ்க்கையைப் பற்றி? தமிழ்கள் வரலாறு பற்றி? எப்படி நாம் தோன்றினோம் என்பது பற்றி, எப்படி தெரியும்? பதிவுகள் வேணும்,பதிவுகள் எழுத்துக்கள் மூலமாகத்தான் கொண்டுவர முடியும்.நீங்க படம்புடுச்சி காட்டுனா கூட எங்கேயோ துருபுடுச்சி அழிஞ்சி போயிடும். பதிவுகள் எழுத்துக்கள் மூலமாக நூலகங்களில் பாதுகாக்கப்படவேண்டும்.

எனக்கு எப்படி சொன்றதுன்னு தெரியாது. ஆனா சில ஆட்சியாளர்கள் சில நேரங்கள்லே மிக நல்ல விசயங்களை செஞ்சிருவாங்க .அதுலே ஒண்ணு வந்து, சென்னையில் கட்டியிருக்கக்கூடிய நூலகம். மிகப் பெரிய நூலகம் அது. அது பாதுகாக்கப்பட வேண்டிய நூலகம். மலேசியாவில் பாத்தப்ப நெனச்சே ,இந்த மாதிரி நூலகம் வந்து நம்ம நாட்டுக்கு தேவையாச்சேன்னு. நெஜமாவே அப்படி ஒரு நல்ல விஷயம் நடந்துருச்சி. அதன்மூலம் நல்ல புத்தகங்கள் பாதுகாக்கப்படும் பொழுது பழைய விஷயங்கள் நம் முன்னோர் வாழ்ந்த வாழ்க்கையை ஞாபகப்படுத்தும்.

நாம பின்னாடி வர்ற சந்ததிக்கு என்னத்தே விட்டு போறோ ? நம்முடைய அடையாளத்தைதானே. ஒரு அப்பன் நல்லவனா நடந்திருந்தானா அது பின்னாடி வர்ற பிள்ளைகளுக்கு அடையாளம். கெட்டவனா நடந்த தந்தையின் பெருமையை பிள்ளைகள் பேசமாட்டார்கள்.எங்கப்பா எங்களுக்காக கஷ்டப்பட்டர்ர்.எங்கப்பா வந்து எங்களுக்காக வருத்திகிட்டார்,என்று சொல்லும் போதுதான் அது வரலாறாகவும் அடையாளமாகவும் மாறுது. அதன் வழியில் தான் இந்த புத்தகங்கள் தான் நாம விட்டுச் செல்ற விஷயம்.

இன்னிக்கு இருக்குற இளைஞர்களுக்கு நெறைய பிரசர், நிறைய கேள்விகள்,நெறைய டென்சன் ,அவர்களுக்கு ஒரு காலத்திலே வெறும் கேள்விகள் மட்டுமே விஞ்சி நிற்கும். விடைகளே இருக்காது. அந்த விடைகளை இந்தப் புத்தகங்கள்தான் தீர்த்து வைக்கும் .ஒரு நாளைக்கு திரும்ப இந்த இளைஞர் கூட்டம் முழுக்க பழைய வாழ்க்கை எப்படிடா வாழ்ந்தாங்க? , அவ்வளவு நிம்மதியா அந்த காலத்துலே எப்படிடா வாழ்ந்தாங்க? இப்ப எல்லா பிரசர்லே செத்துகிட்டிருக்கமேன்னு தேடி அலைவாங்க.அப்படி அலையும் போது அவர்களுக்கு விடைசொல்லப் போவது முன்னோர்கள் எழுதிய puththagankal தான். அவர்களது வாழ்க்கை முறை சார்ந்த புத்தகமாகத்தான் இருக்கும்.

அன்னைக்கு இந்த சினிமாவில் கூட நீங்கள் ரசிக்கிற, நீங்க ஓட்டிக்கிடிருக்கிற, நீங்கள் ஆயிரம் ரூபாய் டிக்கெட் கொடுத்து பாக்குற படங்கள் எந்த விடையையும் தமிழ் நாட்டு மக்களுக்குச் சொல்லாது. தமிழகளின் வாழ்க்கையைப் பற்றி பேசிய திரைப்படங்கள்தான் நமக்கான பதிலைத்ததரும்.
சேரன் நாளையும் தொடர்வார்.

சேரன் பேசுகிறார்: நல்ல ரசனையை உருவாக்க தவறிவிட்டோம்

தவமாய் தவமிருந்து பாத்து எங்க அப்பாவை பாத்தேன், நா இப்படிப்பட்ட அப்பாவா வாழலையேன்னு வெக்கப்படறேன், .எங்கப்பா இப்படி இல்லையே ,இப்படிஎல்லா நிறைய கேள்விகளோடு வந்தவங்க நெறைய பேர் .ஒவ்வொரு படங்களும்,என் படங்கள் மட்டும் கெடையாது.ஒவ்வொருத்தரோட படங்களும் இருக்கு.பருத்தி வீரன் எடுத்துக்கிட்டாலும், சுப்ரமணியபுரம் எடுத்துகிட்டாலும் வன்முறை எதற்கு ?வன்முறையினாலே
ஒருத்தரோட வாழ்க்கை எப்படி வீணாகுது? .ஏதாவது ஒரு வகையில் ஒண்ணு சொல்லணும் .ஏதோ ஒரு வகையில் நம்ம சித்தன் ஐயா சொன்ன மாதிரி நின்னு ப்ரோசிங் மாதிரி கேமராவே பாத்து பாத்து பேசக்கூடாதே ஒழிய ஆனா அந்த திரைப்படம் வீட்லே போயி உங்களை பேசவைக்கணும் .ஏதாவது யோசிக்க வைக்கணும் .

ஆனா அதுலே ஒரு ஆபத்து இருக்கு.சித்தன் ஐயா நீங்க கொஞ்சம் கவனிக்கணும்.நானும் உங்கள் மாதிரி மக்கள் பேசட்டுமே , திரைப்படத்திலே நா ஏன் பேசணும் ,மக்கள் போயி யோசிக்கட்டும்.நான் பிரச்சனையே மட்டுமே சொல்லுவேன் , முடிவு ,கருத்து எல்லா சொல்லமாட்டேன்னு சொல்லிட்டுத்தா ரெண்டு படம் எடுத்தேன்.ஒண்ணு மாயக்கண்ணாடி,இன்னொன்னு பொக்கிஷம் .ரெண்டுலயும் அவ்வளவு கருத்துக்கள் அடங்கி இருக்கு.ஒரு இளைஞனை ஒரு சமூகம் எப்படி சீரழிக்கிறது.எந்தெந்த வழியிலெல்ல சீரழிக்குது,அது மனசுக்குள்ளே பேராசை என்ற விதையை எப்படி விதிக்குது,அந்த விதை அவனிடம் எவ்வளவு பெரிய கிளர்ச்சியை உருவாக்கி எத்தகையை சீரழிப்பை அவனது வாழ்வின் வழித்தடங்களில் நிகழ்த்துகிறது என்று சொன்னே.சுற்றுப்புறம் பூரா பாருங்க நெறைய விளம்பர போர்டுகள் ,நெறைய நிறுவனங்கள்,ஆசைக் காட்டும் அழகிகளோடு உள்ள விளம்பர பதாகைகள்.இதெல்லா வச்சிக்கிட்டு நீ டிவி வாங்கு, நீ பைக் வாங்கு,..இப்படி எல்லாத்துக்கு பத்தாயிரம் இருபதனாயிரம் கட்டுனா போதும்.அதுக்கப்புறம் கடன் கட்டறது பத்தின வழியை சொல்லித்தர மாட்டான். ஆனா கடன் கொடுக்கறதுக்கு உங்கள் ஈசியா கூப்பிடுது .நாமும் கடனே உடனே வாங்கி அப்பா இருக்குற தாலியே அடகு வச்சி பைக் வாங்கிர்ரோ. ஆனா மாசம் மாசம் டியூ கட்டும்போது மனசு வலிக்குதில்லே,அதே பத்தி யாரும் யோசிக்கிரதில்லே.

ஆனா அந்த விளம்பரத்துக்கு மயங்குதனாலே அந்த நிறுவனம் நம்ம வீட்டுக்குள்ளே வந்து விழுந்திருச்சி .டிவி மூலமாவும் செல்போன் மூலமாகவும். .செல்போனே எடுத்துகிட்டீகன்னா அவ்வளவு மெசேஜ் நாம்ம அனுமதி இல்லாமே வருது. இதே வாங்கு அதே வாங்கு அது வாங்குன்னு.அப்படி ஆசைப்பட்டவன் என்ன பண்றான்,தான் பார்க்கிற வேலையிலே,தான் நேர்மையாகப்ப்பார்த்த வேலைக்கான சம்பளம் கிடைக்கும் பொழுது, அதை மீறி வாழும் வாழ்க்கையை உருவாக்கிக்கொள்கிறான். அந்த வாழ்க்கையை உருவாக்கும் போது .அதற்கான பணத்தை தேடுவதற்கு தான் பார்க்கும் வேலையிலோ,அவன் இருக்கும் இடத்திலோ ஒருவன் தப்பு செய்யா ஆரம்பிக்கிறான். அப்படித்தான் லஞ்சம் வாங்க ஆரம்பிக்கிறான்,அப்படித்தான் தப்பு பண்ண ஆரம்பிக்கிறார், அப்படித்தான் கையூட்டு நடக்குது; அப்படிதா எல்லாமே நடக்குது.ஆகவே ஒரு இளைஞனை அவை சிதைக்கின்றன. ஒரு நேர்மையான வாழ்க்கைக்கு அவன் தாயாராக இல்லை. ஓவர் நைட்லே ஹீரோவாக நினைக்கிறான்.சினிமாவுலே மூணு நிமிசப்பாடல்லே பணக்காரனானமாதிரி.அஞ்சி நிமிச போட்ட பாட்டோட மாண்டேஜ் முடியறதுக்குள்ளே வாழ்க்கையில் எவனாலயும் முடியாது. ஒருவன் ஒரு வருசத்துலே முன்னேரினான்ன அடுத்த வருஷம் ஜெயிலுக்குள்ளே இருப்பன்.அதெ அவனாலே தக்க வைக்க முடியாது. அது சீட்டு கம்பெனி நடத்துறவங்க நிலைமையெல்லா. இல்லையா? அப்பேற்பட்ட விஷயத்தை வெறும் காட்சிகளா சொல்லிட்டு எந்த கருத்தையும் கேமராவே பார்த்து சொல்லலே. மாயக்க்கண்ணாடியில் எந்த கருத்தையும் நேரடிய மக்கள் கிட்டே சொல்லலே. ஆனா காட்சிகளுக்குள் அடக்கி வச்சி நீ வீட்லே போயி புரிஞ்சிக்கடானு சொன்னே அவனுக்கு படமே புரியலே.


உங்கள் மாதிரி முன்னோர்கள், பெரிய டைரக்டர்ஸ் எனக்கு உலகத்திரைப்பட விழாவிலே சொன்னாங்க ." மக்கள் கிட்டே புரட்சி பண்ணக்கூடாது .அவங்ககிட்டே பேசக் கூடாது. படத்தில் பிரச்சனைகளை சொல்ல வேண்டும் தீர்வை சொல்லாதே" என்று சொன்னாங்க. அட நல்ல விசயமா இருக்கே. ஆவனவன் கருத்துக்கு விட்டுவிடுதல் அதுதானே நியாயம் அதுவும் சரியாகப்பட்டது.என்னன்னா தீர்வு சொன்ன அது என்னுடைய கருத்து தீர்வு சொல்லாமே விட்டுட்டேன்ன நீ அதே யோசிச்சி உனக்கான கருத்தே நீ தேடிக்குவே. அதான் நியாயமான விஷயம் .

இப்ப எங்கே தப்பு நடக்குதுன்னா.அது போல திரைப்படங்களைப் பார்த்து அதை அலுசுவதாய் நாங்கள் உங்களை வளர்க்க வில்லை. உங்களை நாங்கள் அப்படி உருவாக்கவில்லை. அந்த ரசனை மாற்றத்தையும் அந்த ரசனை உருவாக்க நாங்கள்தவறி இருக்கிறோம்

தேசிய நூலகங்களில் தகிதாவின் நூல்கள் & நூல் கிடைக்கும் இடங்கள்

1.The Librarian,National Library,Belvadere,Kolkatta - 27
2. The Librarian,Central Library,Town Hall, Mumbai - 1
3. The librarian,Connemara Public Library,Egmore,Chennai - 8
4. The Kirector,Legal Deposit Division,Delhi Public Library,
Sarojini Nagar,,New Delhi -23
5. Deputy Director,Parliament Library,Parliament House Annex,
New Delhi -110001
6.The Registrar of Books,Office of the Director of information and Public Relation,
Fort St George,Chennai -9

மேற்காணும் தேசிய நூலகங்களில் தகிதாவின் நூல்கள்
இந்திய நூல் வெளியிடும் சட்டத்தின்படி (Act 1954) முறைப்படி அனுப்பப்பட்டுள்ளன

தகிதா நூல்கள் கிடைக்கும் இடம்:

கோவை: 1.விஜயா பதிப்பகம்
2.சேரன் புக் ஹவுஸ்
3. என் சி பி எச்
4. ஹிக்கின் போத்தம்

மதுரை: 1.மல்லிகை புத்தக நிலையம்

(விரைவில் சென்னை மற்றும் பிற நகரங்களில் தகிதாவின் வெளியீடுகள் கிடைக்கும். )

கோவை வாசகர்களின் கவனத்திற்கு

தகிதா பதிப்பகத்தின் நூல்கள்

1.விஜயா பதிப்பகம்
2.சேரன் புக் ஹவுஸ்
3. என் சி பி ஹெச்
4. ஹிக்கின்ஸ் போத்தம்ஸ்

ஆகிய பதிப்பகங்கள் மற்றும் நூல் அங்காடிகளில் விற்பனைக்கு கிடைக்கின்றன.

மேலும் நாளைமுதல் ஒருமாதம்வரை (READERS PARK)ரீடர்ஸ் பார்க்கில் நடைபெற இருக்கும் புத்தகக் கண்காட்சியில் தகிதா நூல்கள் இடம்பெறுகின்றன

சேரனின் பேசுகிறார்: ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு திறமை ஒளிந்திருக்கின்றன

இலக்கியம் ஆனாலும் சரி திரைப்படம் ஆனாலும் சரி, அதை சரியான முறையில் நேரடியாக புரிந்துகொள்ளும் பக்குவத்தை நாம் உருவாக்க வேண்டும். இப்போது கோவையில் இருக்கிறீர்கள் என்றால் இங்கு ஒரு பிலிம் கிளப் ஆரம்பிக்கலாம்.அப்படி ஒரு பிலிம் கிளப் ஆரம்பிச்சி ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு அங்கத்தினருக்கும் போட்டுக்காட்டி நல்ல சினிமா எது என்ற புரிதலை உருவாக்கவேண்டும். இது போன்ற அமைப்பை ஒவ்வோர் ஊர்களிலும் தொடங்கி மாற்றுத் திரைப்படத்திற்கு உரிய ரசனையை உருவாக்க வேண்டும். இப்போது அதற்கு நிறைய தொழில்நுட்ப வசதிகள் வந்துவிட்டன.எங்கோ பிறந்த சேரனும் எங்கோ பிறந்த மணிவண்ணனும் இப்போது நண்பர்கள் இந்த முகப்புத்தகத்தில் மூலம். இல்லாட்டி இரு வந்திருக்காது. ஆகவே விஞ்ஞானத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதில் இருக்கு.

.இந்த மாதிரி நிகழ்வுகளில் கலந்துகொண்டு ,இது மாதிரி புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகிட்டோம் என்கிறதே விட..................... இந்த மாதிரியான நோக்கத்திற்காக இந்த பதிப்பகத்தை இவர் தொடங்கி இருக்கிறார் என்கிறப்போ அந்த பதிப்பகத்தை நானும் நீங்களும் வாழ்த்தியே ஆகவேண்டும். மேலும் மேலும் இப்பதிப்பகம் வளர்வதற்கு இந்த எழுத்தாளர்கள்
அடுத்த எழுத்தாளர்களும் கை கொடுக்கவேண்டும். அடுத்த பதிப்பகத்திற்கு போனா நமக்கு காசு அதிகமாக வரும் அப்படிங்கறதே விட்டுட்டு எந்த பதிப்பகம் எழுத்துத் துறையை வளர்க்க ஆரம்பிக்கப்பட்டது? எந்த பதிப்பகம் எழுத்தாளர்களை அடையாளப்படுத்த உருவாக்க ஆரம்பிக்கப்பட்டது? என்பதே நெனச்சி அந்த பதிப்பகங்களுக்குத்தான் நாம் ஆதரவு கொடுக்கணும். ஏன்னா அவங்களுக்குத்தான் அதிலே முக்கியமான பங்கு இருக்கு.

எங்களைப் பொருத்தவரைக்கும் பதிப்பகம் என்பது ,அதாவது என்னோட மொழியிலே சொல்லணும்னா தயாரிப்பாளர் என்றுதான் சொல்லுவேன்.ஆயிரம் இயக்குஞர்களும் உதவி இயக்குஞர்களும் கதைகளோடு அலைந்துகொண்டுதான் இருக்கிறார்கள். எங்களுக்கு யாரோ ஒருவர் ஒகே பண்ணினாதா கதை திரைக்குவரும். அதே போலத்தால் பத்துபேர் கதை கவிதைகளை எழுதி வைத்திருந்தாலும் ,உங்கள் கதை கவிதைகளை புரிந்துகொண்டு உங்கள் ஆர்வத்தை புரிந்துகொண்டு உங்களை மேலே கொண்டுவருவதற்கு அடித்தளம் அமைக்கிற பதிப்பகத்தார் வேண்டும். பதிப்பகத்தார்தான் உங்களுக்கான தயாரிப்பாளர்கள் .நீங்கள் அதன்மூலமாகத்தன் உங்கள் படைப்புகளை சந்தைக்கு கொண்டுவரமுடியும். நாங்கள் தயாரிப்பாளர்கள் மூலமாகத்தான் எங்கள் படங்களை சந்தைக்கு கொண்டுபோறோம். என்னதா சேரன் வீட்லே உக்காந்து தவமாய் தவமிருந்து மாதிரி பத்து கதையை எழுதினாலும் ஒரு தயாரிப்பாளர்கள் கிடைத்தால்தான் அந்த படத்தை சந்தைக்கு கொண்டுவர முடியும். அதே போலத்தான் உங்களின் படைப்புகளும், நீங்கள் ஆயிரம் பக்கங்கள் பத்தாயிரம் பக்கங்கள் என்று எவ்வளவு எழுதி வைத்திருந்தாலும் அதெ போடறதுக்கு ஒரு பதிப்பகத்தார் வேண்டும்.கொஞ்சம் பெரிய ஆள் ஆகிக்கிட்டீங்கன்ன உங்களைத் தேடி அவங்க வருவாங்க. முன்னாடியே சொன்னதுபோல உங்களுக்கு மாத சம்பளம் நிர்ணயம் பண்ணிடுவாங்க .

யாரும் இங்கே வியாபார சூழலில் ,மிகப்பெரிய அந்தஸ்த்து உள்ள; சொன்ன உடன் செல்வாக்கு இருக்கிற எழுத்தாளர்களை வைத்து இந்த பன்னிரண்டு புத்தகங்களை வெளியிடவில்லை. மேலும் இந்த புத்தகங்கள் வியாபார நோக்கில் வெளியிடவில்லை. அந்த வகையில் இந்த பதிப்பகத்தின் சேவை மிகவும் முக்கியமானது. மிக அரியது. எல்லோரின் பாராட்டுக்கு உரியது.

தமிழாசிரியராக தன் வாழ்க்கையை தொடங்கிய ஒவ்வொருவரும் எப்படி கஷ்டப்பட்டிருப்பாங்க என்று புரிந்துகொள்ளமுடிகிறது. . எவ்வளவு பிரச்சனைகளை சந்தித்திருப்பார்கள் என்று உணர்ந்துகொள்ளவும் முடிகிறது.தமிழ் படிக்கும் மாணவர்களிடம் பிற மாணவர்கள் பேச மாட்டார்கள். தமிழ் பாடம் படித்தாலே இங்கு கெளரவ குறைச்சல். இங்கு ஆங்கிலத்தில் பேசணும், ஆங்கிலத்தில் எழுதணும் ..அப்படி செய்தால்தான் மரியாதை என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். இது வருத்தத்திற்கு உரியது. அதற்காய் வேதனைப் படுகிறேன்.தமிழுக்கு தமிழ் நாடலே மரியாதை இல்லை. தமிழ் நம்முடைய மொழி. நமது உணர்விலும் குருதியிலும் உயிரிலும் கலந்த மொழி.

இங்கு எல்லோருமே தாகூர் ஆகமுடியாது ; எல்லோருமே அப்துல்கலாம் ஆகமுடியாது .ஆனால் ஒவ்வொருவருக்கு உள்ளேயும் ஒவ்வொரு திறமை கட்டாயம் ஒளிந்திருக்கிறது. அந்த திறமை என்னான்னு கண்டு பிடிச்சி அதுலே பெரிய ஆளானால் போதும். பயணம் போகிற போது சன்னலோரத்தில் இருந்து நகரும் பேருந்திலிருந்து அந்த பூமியை உற்று கவனியுங்கள். அது உங்களுக்கு வாழ்க்கையைப் பற்றி நிறைய சொல்லும்.இந்த உலகத்தில் பார்க்கிற ஒவ்வொன்றும் பயன்படுகிறது.பயனற்றவை என்று எவற்றையும் சொல்லமுடியாது.அதுபோல ஒவ்வொருத்தருக்குள்ளும் ஒவ்வொரு திறமை ,வேறு வேறு திறமை இருக்கிறது. அது என்னான்னு கண்டுபுடிச்சி அதில் நாம் பெரிய ஆளாக வளரவேண்டும்.

மேலும் மன நிறைவு என்பது வேண்டும். திருத்தியடைகிற மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.நம்ம கிட்டே என்ன இருக்கோ அது போதும். ஏன்னா மாயக்கண்ணாடியோட இறுதியிலே சொல்லியிருக்கேன். நம்முடைய சூழல் அது. நம்முடைய வாழ்க்கை முறை அது. நம்ம அப்பா அம்மா செத்து வச்சது, நமக்கான நண்பர்கள், நம்மோட பொருளாதார பின்னணி, நம்மோட வாழ்க்கை பின்னணி, நமக்கான தேடல் முயற்சி உழைப்பு ...இவ்வளவு சம்பந்தப்பட்டது ஒவ்வொரு மனிதனோட வெற்றி.வெறுமனே லக்கு லக்குன்னு மருதமலை முருகன் கோயிலுக்கு போயிட்டு வந்தா நடக்காது. முருகன் கோயிலுக்குத்தான் உண்டியல்லே காசு மிஞ்சும். நமக்கு ஒண்ணுமே கிடைக்காது. நம்மிடம் இருக்கும் ஆற்றல் ஒன்றை கண்டு பிடித்து அதை வெளியில் கொண்டு வந்தால் நீங்கள் ஜெயித்துவிட முடியும்.

என்னையே வந்து எங்கம்மா படிக்கவச்சாங்க அம்மா . நா பெரிய படிப்பாளி ஆகணும்,நா மாசம் இருபத்தைத்து ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கணும், குடும்பத்திற்கு உதவணும்,தங்கச்சிகளே
காப்பாத்தனுன்னு நெனச்சாங்க . எங்க குடும்பத்தோட அன்றைய சூழல் அது. நான் படிச்சி நல்ல சம்பளம் வாங்கி இருந்தால் எங்க அம்மாவே காப்பாத்தி இருக்க முடியும், என் தங்கச்சிகளுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்க முடியும். என்னுடைய ஆசை எல்லாம் சினிமா சினிமா சினிமா.சிவாஜியே பாத்து எம் ஜி ஆரைப் பாத்து அதுமாதிரி இதுமாதிரி நடிகனாயிரனும்னுங்கறது என் கனவு .ஆனா அவங்களாலே புரிஞ்சிக்க முடியலே. என்னை அனுப்புவதற்கு அவர் ஒத்துக்கொள்ளவில்லை.

என்னை ஒரு அரசு ஊழியராக படிக்க போட்டிருந்தாங்கன்ன நான் நல்ல சிந்தனைகளோடு நல்ல மனிதனாக வாழ்ந்திருக்க முடியாது, எது கடமை ஆற்றி இருப்பேன். அவ்வளவுதான்.ஆனா நான் அதை மீறி, நான் அது இல்லேன்னு, பத்து வருஷம் போராடுனதுக்கு அப்புறம்தான் பன்னிரண்டு வருஷம் உழைப்புக்கு அப்புறம்தான் , முழுமையான உழைப்புக்கு அப்புறம்தான், நிறைய சந்தோசங்களை இழந்ததற்கு அப்புறம்தான் இது எனக்கு கிடைச்சிருக்கு.ஈசியா கிடைக்கலே.

அதுபோல எல்லா விசயத்திலும் அப்படி வர தயாராக இருக்கணும். ஆனா இன்னைக்கு உள்ளது அவசரமான உலகம்.அவசரமான ஒரு போக்கு இருக்கு. இன்ஸ்டன்ட் மாதிரி எல்லோருமே நம்ம வாழ்க்கையை மாத்திகிட்டோ .எதிலயுமே ஒரு பொறுமை இல்லை.கவிராயர் சொல்ல்ம்போது "நான் கவிதை படிக்கும் போது மனைவி இட்லி வைப்பாள் .நான் புத்தகத்தை சாப்பிட்டுக்கொண்டு இட்லி தொட்டுக்கொல்வேன்"என்றார். நான் சொல்றே, அவர் இருபத்தைந்து வருசமா மனைவி என்ற கவிதையைப் படிக்க மறந்துவிட்டார். இருபத்தைந்து வருசமாக மனைவி எழுதிய இட்லி என்ற கவிதையை ரசிக்க மறந்துவிட்டார். ஏனா,நீங்கள் யாரோ எழுதிய கவிதையை படித்தீர்கள் உங்களுக்காக எழுதப்பட்ட மனைவி என்ற கவிதையை படிக்க மறந்துவிட்டீர்கள்.

இந்தமாதிரி ஒரு விழாவில் கலந்து கொண்டதற்கு.மிகவும் சந்தோசம். நீங்க என்னுடைய படங்களை பார்த்து பாராட்டி "கதைப் பொக்கிஷம்" என்ற தலைப்பை கொடுத்தது எனக்கு கூச்சமாகத்தான் இருந்தது .என்ன பண்ணினோம் ஒன்னும் பண்ணலையே என்கிற நினைப்புதான் வந்தது. புத்திலக்கிய படைப்பாளிகள் கெளரவிக்கப்பட்ட இந்த மேடையில் சேரனும் கேளரவிக்கப்பட்டதற்க்கு இந்த பதிப்பகத்திற்கும் படைப்பாளிகளுக்கும் இந்த கொங்குத்தமிழர்களுக்கும் நன்றியை சொல்லிக்கொள்கிறேன். மிகுந்த சந்தோசம் மிகுந்த மன நிறைவு,மிகுந்த மகிழ்ச்சி. எனக்கு இப்படியொரு சந்தோசத்தை நான் உங்களோடு பகிர்ந்துக்க வந்த நேரத்துலேநீங்க எனக்கான சந்தோசத்தே கொடுத்ததை நான் வாழ்க்கையில் மறக்க மாட்டேன். எப்பொழுதுமே! ஏன்னா அவரு சொன்னது மாதிரி வந்து அங்கீகாரத்துக்குத்தான் ஒவ்வொரு மனிதனும் ஏங்குகிறான்.அந்த அங்கீகாரம் செத்ததற்கு அப்புறம் பட்டயமா வர்றதுலே பிரயோசனமே இல்லை. இருக்கும் போது என் தாய் தந்தைக்கு சோறு போடாமே.இறந்ததுக்கப்புறம் போடோவுக்கு மாலையே போட்டு காக்காவுக்கு சோறு வைக்கரதுலே என்ன பிரயோஜனம் .நீங்கள் என்னை ஊக்கப்படுத்தியதைப் போல நானும் நிறைய பேர்களுக்கு செய்யவேண்டும் என்று இருக்கிறேன். இப்போதும் கூட நல்ல சினிமாக்கள் வந்துச்சுன்ன அந்த இயக்குஞர்களைப் கூப்டு ,அவங்க வயதில் சின்னவங்களா இருந்தாலும் நான் அவர்களைப் பாராட்டுவேன்,வாழ்த்துவேன்...ஒரு சாதார திண்ணைப் பேச்சுக்காரனா அவர்களுடன் அமர்ந்து அவர்களின் படைப்புக் குறித்து சிலாகித்து பேசுவேன். அப்படி அவர்களை நான் தட்டிக்கொடுக்க்னும்னு ஆசைப்பட்டுகிறேன்.

அதே போலத்தான் நீங்களும் என்னை தட்டிக்கொடுத்ததா நினைத்துக்கொண்டு இந்த தட்டிக்கொடுத்த விசயத்தே துளி அளவு கூட என் தலையில் தலைக்கனமா ஏத்திக்காமே இன்னும் இன்னும் இன்னும் நிறைய நிறைய புதிய புதிய முயற்சிகளோடு ,உழைக்கனும்கர எண்ணத்தோடு உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.

(சேரனின் உரை முடிவுக்கு வந்தது... நமது செயல்பாடுகள் இனி தொடரட்டும் தகிதா விழா நிகவுகள் குறித்த பதிவை முகநூலில் வாசித்து வாழ்த்திய நிறை குறைகள் சொன்ன , சிறப்பாக விவாதித்த, புதிய சிந்தனைகளை பகிர்ந்துகொண்ட, பாராட்டிய, முகநூல் தோழமைகள் அனைவருக்கும் மணிவண்ணனின் முத்தமிழ் முத்தங்கள் "கொஞ்சம் கன்னத்தை காட்டுங்கள் ".

கலைப் பொக்கிஷம் (திரு அனந்தபத்மநாபன்)

இவர் குழந்தையாக இருக்கும் போது இவரின் தாய் விளையாடுவதற்கு பொம்மைக்கு பதிலாக தூரிகையைக் கொடுத்திருக்கக் கூடும். இவர் வயதானாலும் ஊன்றுகோலுக்கு பதிலாக தூரிகை பிடித்துக்கொண்டு நடக்கலாம். அப்படியாய் இவரது வலதுகையில் ஐந்து விரல்களோடு ஆறாவது விரலாய் வளர்ந்திருக்கிறது தூரிகை. பார்ப்பவைகளை தன் கண்களில் வண்ணநகல் எடுக்கும் ஆற்றல் பெற்றவர் இவர் . இவரது நாளங்களில் ஒற்றை சிவப்பு ரத்தத்திற்கு பதிலாக வானவில்லாய் பலவண்ண குருதி பாய்கிறது போலும். ஆயிரம் வார்த்தைகளால் ஆன ஓர் அழகு கவிதையை இவரின் ஒற்றை வரைதல் சொல்லும். இவர் ஒருநாள் கூட கறுப்புவெள்ளையில் கனவு கண்டிருக்க முடியாது. இவர் கருப்பு வண்ணத்தில் வரையும்போது ஓர் அழகிய பெண்ணின் புருவம் தொட்டு வரைகிறாரோ? இவர் சிவப்பு வண்ணத்தில் வரையும் போது ஓர் அழகு பெண்ணின் உதடு தொட்டு வரைகிறாரோ? இவர் மஞ்சள் வண்ணத்தில் வரையும் போது ஓர் அழகு பெண்ணின் கன்னம் தொட்டு வரைகிறாரோ? இப்படி எல்லாம் நினைக்க தோன்றும் இவரது வண்ண வரைதல்களை விழிகளால் ஆராதனை செய்யும்போது. நீருக்கு நிறமில்லை எனபது உண்மைதான் இவரது வண்ணப்படங்களைப் பார்க்கும் பொழுது இவர் குடிக்கும் நீருக்கு நிறம் இருக்கிறதோ என்ற சந்தேகம் வருகிறது. பொங்கலுக்கு பொங்கல் எல்லோரும் வீட்டிற்கு வெள்ளை அடிப்பார்கள், இவரோ வண்ணம் அடிப்பார்.. அதற்காய் வண்ணப்படங்களை சுவரில் அடிப்பார்.இவர் தன் தூரிகையை தொட்டு வைக்கும் போது கிழக்கில் சூரியன்.தன் தூரிகையை கழுவி வைக்கும்போது மேற்கில் நிலா.இவரது தூரிகை மிருதுவானதுதான்.ஆனால் சிலரேங்களில் வருடும் சில நேரங்களில் வதைக்கும். புரட்சிகள் எழுத்துக்களால் உருவானைவை அல்ல ஓவியங்களாலும் ...(நாளை தொடர்கிறேன்)

தகிதா வெளியீடுகளிலிருந்து சில கவிதைகள்

1
காலங்கள் கதைகட்காக
காத்திருப்பதில்லை
சில வேளைகளில்
மொழிந்த மொழி
மெளனமாய்
புதைந்துவிடுகின்றன.
-கவிதாயினி ஈழவாணி ( தலைப்பு இழந்தவை )


2.
என்னைக்
காயப்படுத்தும் நோக்கில்
விழுந்த கற்களை
அப்புறப்படுத்தும் போது
சிக்கியது
யார்மீதோ வீசப்பட்ட
என் கைரேகை படிந்த கல்.
-கவிஞர் யாழி ( என் கைரேகை படிந்த கல்)
3.
பலரின் காதல்
பேசியே தீர்ந்து போகும்
நம் காதலோ
பேசாமல் சேமிக்கப்படுகிறது
நம் இதயங்களில்
-கவிதாயினி தனலட்சுமி (நிலா கால நினைவுகள்)

4.
வெகு நாட்களுக்கு முன்
நான் தொலைத்தவைகளை
மீட்டுத் தருகிறது மழை.
என் யாழின்
நரம்புகளில் இருந்து
பரவுகிறது
மழையில் இசை.
-சரவணன்(முகில் பூக்கள்)

5.
எல்லா வழிகளின் முடிவிலும்
மூடியிருக்கும்
வெறுமையான சூனியக்கதவுகளால்
எஞ்சுகின்றது விரக்தி.
-ஆதித்தன்(பொய்யும் பழங்கதையும் வெருங்கனவும்)


6.
குளித்த ஈரக்கூந்தலோடு
நீ வெளியில் வர
காத்திருந்த காற்று
ஹைக்கூ எழுதிவிட்டு போகிறது!
ஆடும் கேசத்தில்
அமர்ந்துகொண்டே ரோஜாப்பூ
அதைப் படிக்கிறது...சிரிக்கிறது...
-மாரியப்பன்(என் பேனாவின் அனாக்கள்)


7.
போராட்டம்
வறுமைக்கு எதிராக
அநீதிக்கு எதிராக
அறியாமைக்கு எதிராக
என்றால்
நிச்சயம் ஆதரிப்பேன்
என் புதல்வர்களை
போர்க்கொடி ஏந்த.
-கவிஞர் பக்தவத்சலம் (போதிமரம் )


8.
யாரோ வீசிய கல்லில்
எழுந்த அலைகளால்
மெல்ல அசைகிறது
மீனுக்காக தவமிருக்கும்
கொக்கின் பிம்பம்
-நானற்காடன்(சாக்பீஸ் சாம்பலில்

தகிதா பதிப்பகத்தில் வெளியான "சாக்பீஸ் சாம்பலில்"(நானற்காடன்) என்ற தொகுப்பிலிருந்து

*
மழை ஏமாற்றும்
பிறிதொரு நாளில்
செத்துப்போகும் துணிச்சலோடு
நேற்றைய மழையில்
வெடித்துச் செடியாகியிருந்தது
ஒரு விதை

*
யாவும் கழுவப்பட்டிருக்கின்றன
மழை பொழிந்த
கவிதைகளால்
அழுக்காகிப் போன
என்னைத் தவிர.

*
உள்ளே
நீ தான் இருக்கிறாய்
கொஞ்சம்
பிளந்து பார்
எனது வேர்ப்பலாவை


*
தமிழர் திருநாளில்
கூச்சமின்றி சொல்கிறாய்
ஹேப்பி பொங்கல்
அட்லீஸ்ட் இதையாவது
இங்கிலீஸ்லே சொல்றத
அவாய்டு பண்ணியிருக்கலாம்
நீ

*
பேனாவின் முனை வழியாய்
கீழிறங்கி
எனது கவிதையை
முடித்து வைக்காமல்
விளையாடுகிறது
ஒரு கடைசிச் சொல்

கவிதைநூல்களை புறக்கணிப்பது ஏன்?

பதிப்பகங்களும் ,அரசு நூலகங்களும் கவிதை நூல்களை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றன. இது புத்தியக்கியத்தின் தேக்கத்திற்கும் கவிஞர்களின் ஏக்கத்திற்கும் வழிவகுத்திருக்கிறது. ஒரு படைப்பாளி முதன் முதலில் எழுதத் தொடங்குவது ஒரு கவிதையைத்தான், அல்லது கவிதை போலிருக்கும் ஒன்றைத்தான். இந்த ஆதார வேரில் இப்படியாய் அமிலம் ஊற்றப்படும் போது கலைகளின் அரசியான கவிதை தெருவில் நின்று கண்ணீர் வடிக்கவே செய்வாள் . கதை இலக்கிய வாதிகளின் அரசியலும் , சிற்றிதழ்களின் கவிதை மறுதலிப்பும் , நூல் வணிகர்களின் விற்பனை உத்தியும் இதற்கு வழிகோலி இருக்கிறதா என்று ஆராயுங்கள் கவிஞர் பெருமக்களே!. (தகிதா பதிப்பகம் குறிப்பாக கவிதை நூல்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டியதற்கு இவைகளே காரணம்) கவிஞர்களே! படைப்பாளர்களே ! உங்கள விமர்சனங்களை முன் வையுங்கள்

விளம்பரமான நூல்களும் விளம்பரமாகாத கலைஞர்களும்

திரு அனந்த பதமநாபன் அவர்ளைப் பற்றி சொல்வதற்கு எனக்கு அவரிடம் பணிசார்ந்த தொடர்பும், அதையும் தாண்டிய அன்பும் உண்டு.எமது தகிதா பதிப்பகம் சமீபத்தில் ஒரே வெளியீட்டில் பதி
மூன்று நூல்களை வெளிக்கொண்டுவந்தது. அந்த நூல்களின் அத்தனை அட்டைகளையும் அழகும் கருத்தும் ததும்பும் வகையில் படிமக் குறியீடுகளோடு வடிவமைத்திருந்தார் திரு ராஜன் அவர்கள்.

ஒரு நூலின் வாசல் எனபது அட்டைதான்.வீட்டில் வாசலில் இருப்பவரின் அழகிய புன்னகை விருந்தினரை எப்படி வரவேற்குமோ அதே போலத்தான் வாசகர்களை அட்டை வரவேற்கிறது எனபது நூறு சதவிகித உண்மை.

வடிவம் சார்ந்தும் வண்ணம் சார்ந்தும் தேர்ந்த ஞானம்,உலக நாடுகளில் நடைப்பெற்ற ஓவியக் கண்காட்சிகளில் பல விருதுகளைப் பெற்ற திரு ராஜன் அவர்கள் எமது நூல்களுக்கு வடிவமைத்தது யாம் பெற்ற பேரு.

உலக நாடுகளால் கெளரவிக்கப்பட்ட திரு அனந்த பத்மநாபன் ஐயா அவர்களை உள்ளூரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ,எமது வெளியீட்டு விழாவில் தமிழகம் முழுவதிலுமிருந்து கலந்துகொண்ட தமிழ் இலக்கிய அன்பர்களின் முன்னிலையில் "கலைப் பொக்கிஷம்" என்ற விருதை வழங்கி எங்களை நாங்களே கெளரவித்துக்கொண்டதாய் .பெருமைப்பட்டுக்கொண்டோம்.

தொடர்ந்து தகிதா பதிப்பகம் கலைஞர்களை பாராட்டவும் வாழ்த்தவும் கெளரவிக்கவும் செய்யும். அவரின் விரல்களுக்கு உலகக் கலைஞர்களின் அன்பை அள்ளிப் போட்டு காப்பீடு செய்துகொள்கிறோம்.

"எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் இறைவா "

மதில் சுவரைத்
தாண்டிப் பறந்த
செய்தித்தாள் பறவை

பூ பூ
என்று கூவிய
பூக்காரியின்
வாசனை வார்த்தை

அமுதம் சுமந்துவரும்
பால்காரனின்
வெள்ளை அழைப்பு

புள்ளிவைக்கும்
அழகிய கோலப்பெண்களின்
விரல்கவிதைகள்

செவிக்குள் நுழைந்து
ஆன்மாவிற்குள் இறங்கும்
சுப்ரபாதம்

பனிப் பவுடரை
பூசிக்கொண்டு
அழகேற்றும் பூமிப்பெண்

புரிந்தும் புரியாத
குருவிகளின்
ரகசிய பரிபாசைகள்

குளிரில் நடுங்கும் பூமிக்கு
வெப்பமுத்தம் வைக்கும்
சூரியன்

காவி உடுத்தி
துறவுக்கு தாயாராகும்
வானம்

குங்குமம் சந்தானம் திருநீற்றின்
அறிவிப்புபலகையாய்
நெற்றி

பூந்தோட்டம் சுமக்கும்
பூவையரின்
மலர்க்கூந்தல்

நுரையீரல் நிரப்பிவைக்கும்
ஊதுபத்தி வாசனை.

பிரார்த்தனை வழியும்
பூஜையறை வாசற்படி


உறக்கம் தெளியாமல்
அழுகையோடு செல்லும்
பள்ளிக்குழந்தைகள்

உணவு ஊட்டிய
எச்சில் கையேடு
டாடா சொல்லும் அம்மாக்கள்


ஆலயம் சென்று திரும்பும்
செருப்பில்லா
பாதங்கள்

கேட்காமல் வரங்களாய்
நலம்விசாரிப்புக்கள்


உள்ளங்கையையும் உதட்டையும்
இணைக்கும்
தெய்வப் பிரசாதங்கள்