வியாழன், 29 ஏப்ரல், 2010

காதல் குறட்பாக்கள்:15

நேருக்கு நேராய்
விழியோடு விழிபொருத்தும்
வல்லமை வைக்காததால்தான்
ஓரவிழியில் மர்மமாய்
பார்வைசரங்களைத் தொடுத்து
காதல் கலவரங்கள்
விளைக்கிறாயோ?

கொரில்லாத் தாக்குதல்
நடத்தும்
உன் கண்களால்
நான் காயப்பட்டிருக்கிறேன்.
-------------------------------------------
குறள்:1095
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்.

காதல் குறட்பாக்கள்:14

உன்னை
என் விழிபார்த்தபோது
நீ நிலம்பார்த்தாய்.
என்
விழிகளை விலக்கியபோதோ
நீ
விழிகளால் சிரிக்கிறாய்.

இதழ்கள்தான் சிரிக்கும்
என்று நினைத்திருந்தேன்
இமைகளும் சிரிக்கின்றனவே!
------------------------------------------------
குறள்:1094
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்

காதல் குறட்பாக்கள்:13

என்
காதல் முளைவிட்டது
நீ
ஓரவிழியில்
பார்வை வீசியபோது.
என்
காதல் பயிரானது
நீ
மனமென்னும்
மடை திறந்தபோது.
------------------------------------------
குறள்:1093
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.

புதன், 28 ஏப்ரல், 2010

காதல் குறட்பாக்கள்:12

இடதுபுறம் தலைகோணி
இருபுறத்து இமைகவிழ்த்து
ஓர விழியில்
பிறைநிலா பூக்கக்
கள்ளத்தனமாய்
நீ பார்க்கும்பார்வை
காதல் பார்வை.

இமைதிறந்து விழிவிரித்து
பெளர்ணமியாய்
நீ பார்க்கும் பார்வை
காமப்பார்வை.

விரிதலும் சுருங்குதலும்
மலர்களுக்கு மட்டுமென
நினைத்திருந்தேன்
உன்
விழிகளுக்கும்
அவை பொருந்துகிறதே!
----------------------------------------
குறள்:1092
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது

காதல் குறட்பாக்கள்:11

உன்
முதல் விழிவீச்சு
என்
மனத்தைக் காயப்படுத்தியது.
அடுத்த
மருள் பார்வையோ
அந்தக் காயத்திற்கு
மருத்துவம் பார்த்தது.
------------------------------------------
குறள்:1091
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன்று அந்நோய் மருந்து

செவ்வாய், 27 ஏப்ரல், 2010

வாழ்தல்

இன்றின் முன்னம்கிழமை
மாலைமறித்து ஜனித்தஇரவு
நீளவளர்ந்த பொழுதொன்றில்
இமைத்திறந்திருந்த நினைவுகளை
விழிக்கதவடைத்து தாலாட்டினேன்.

எனதுஊரில் எனதுபிணம்
நனைந்து கொண்டிருந்தது
இரங்கல் கண்ணீரில்.

என்
பூதவுடல் மீது
சடலங்களாய் பூவுடல்கள்.

பிழைப்பட்டது
பிறவிக்கவிதை.

உயிர்உதிர்த்து உறவிழந்து
நிலம் பிரிந்தேன்.

இப்படியாய்த் துயரத்தீயில்
எரிந்துகொண்டிருந்தது
எனதுபிணம்.

இருள்பரவிய நடுநிசியில்
பயம் வியாபித்த
மனம்
மெதுவாய் உணரத்தொடங்கியது
சாகவில்லை என்பதை.

அந்த
இரத்தலின் வலியில்
உணர்ந்தேன்
வாழ்தலின் அருமையை.
"வாழ்தலின் அருமை"

திங்கள், 26 ஏப்ரல், 2010

காதல் குறட்பாக்கள்:8

எதிரியின்
படைகளை பொடியாக்கிய
என்
வெற்றியும் வீரமும்
ஒளிவீசும்
உன்
நெற்றியின் முன்னால்
தோற்றுப்போனது.

நிலா
தனக்கான ஒளியை
எதனிடம் கடன்வாங்குகிறது
சூரியநிடமா?
இல்லை
உன் சுந்தரவதனத்திடமா?
---------------------------------------
குறள்:1088
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.

சங்க இலக்கியம் - குறுந்தொகை:9

பச்சைப்பசேலென்ற மரகதஇலைகள்
நீளவளர்ந்த நீலமலர்கள்;
அருகில்
பல்வகை மீன்கள்
குழுக்களாய் வாழும்
தண்ணீர்க் குடும்பமான
அலையாடும் ஆழ்குளம்;
கன்னியரின் கண்களைப்போல
மூழ்கும் கயல்மீன்கள்;
தண்ணென்ற குளிர்ச்சியால்
சில்லிடும்
நெய்தல் நீர்த்துறை;

காதல் நெருப்பை கனல்மூட்டி
விலைமகளிடம் விலைபோனதால் ...

காற்று நுழையவும் முடியாமல்
மணம் வெளியேறவும் முடியாமல்
செப்புக்கலசத்தில்
தனியே சிறைசெயயப்பட்ட
சூடாதமலராய் வாடினாள்!
வாட்டத்தை வெளிப்படுத்தாமல் மூடினாள்!
திசைகள்தோறும் தேடினாள்!
தலைவன்வரும் வழியையே நாடினாள்!
-----------------------------------------

நூல் : குறுந்தொகை
ஆசிரியர்:கயமனார்
பாடல்:9
யாய் ஆகியளே மாஅயோளே
மடைமாண் செப்பில் தமிய வைகிய
பெய்யாப் பூவின் மெய்சாயினளே;
பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்
இனமீன் இருங்கழி ஓதம்மல்கு தோறும்
காயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும்
தண்ணம் துறைவன் கொடுமை
நம்முன் நாணிக் கரப்பாடும்மே.

காதல் குறட்பாக்கள்: 7

மதயானைக்குப் போர்த்திய
முகபடாமாக
முந்தானை மறைத்திருக்கிறது
மலர்ந்து நிமிர்ந்த
உன் மார்பழகை.
அந்த
கோபுரக்கலசங்களின்
தரிசனங்கள் கிடைக்காதா?
என் விழிகளுக்கு
விலங்கு மாட்டும்
உன்
ஆடைகளை சபிக்கிறேன்...!
------------------------------------
குறள்:1087
கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்

ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

காதல் குறட்பாக்கள் :6

எப்போதுமே ஆபத்துதான்
மண்ணின் சாலைவளைவுகளும்
பெண்ணின் புருவவளைவுகளும்.
வேல்விழியாலே
உன் புருவவில்லை
வளைக்காதே!
காதல் விபத்துக்கள்
விழிக்காதே!
-----------------------------------------
குரல்:1086
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்

காதல் குறட்பாக்கள்:5

சிலிர்க்கையில்
உன்விழி மீன்விழி
மருள்கையில்
உன்விழி மான்விழி
கருணை அருள்கையில்
உன்விழி கருவிழி.

வருத்துகையில் மட்டும்
எமன் விழையாகிறது
உன் எழில்விழி

--------------------------------------------------------------
குறள்:1085
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம் இம் மூன்றும் உடைத்து..

காதல் குறட்பாக்கள்:4

இரண்டுமே
உயிருண்ணும்.
ஒன்று
காலனின் பாசவலை
மற்றொன்று
காதலியில் பார்வைவலை.
-----------------------------------------------
குறள்:1084
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக் கமர்த்தன கண்

காதல் குறட்பாக்கள் : 3

நேற்றுவரை
அறியாதிருந்த எமனை
இன்று
கண்டுகொண்டேன்
அவள்
கண்களில்

----------------------------------------------------------------------
குறள்:1083
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு

சனி, 24 ஏப்ரல், 2010

காதல் குறட்பாக்கள் :2

நான்
அவளைப் பார்த்தேன்
அவள்
என்னைப் பார்த்தாள்.
படைநடத்தி வந்து
தாக்கியது போலிருந்தது
அவள் பார்த்த
பதில் பார்வை.
--------------------------------------------------------------------------
குறள்:1082
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண்டு அன்னது உடைத்து

காதல் குறட்பாக்கள்:1

பெண்ணா!
பேரழகுத் தெய்வமா!
வண்ணம் பூசிய மயிலா!
குழப்பமடி
கூறடி
அடியே
நீ யாரடி?
---------------------------------------------------------
குறள்:1081
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

சங்க இலக்கியம் - குறுந்தொகை : 8

மரகத வயல்வெளியும்
அலையில்லா குளக்கரையும்
ஒன்றையொன்று முத்தமிட்டுக்கொண்டிருக்கும்;
கிளைகளுக்கு விடைகள்சொல்லி
குதிக்கும் மாங்கனிகளைக்
குளிக்கும் மீன்கள் பசியாறும்;
இத்தகைய
அழகிய மருதநிலத்தில்....

அந்த தலைவன்.
என்
வனப்பில் வழுக்கி
வெல்லமொழி போல
செல்லமொழி பேசி
கள்ளத்தனமாக
காமம் நுகர்வது வழக்கம் .

இப்பொழுதோ
செய்வதையே திரும்பச்செய்யும்
கண்ணாடி பிம்பத்தைபோல
உணர்சிகளற்ற பொம்மையாக
வாழ்க்கைத் துணையுடன்
வாழ்ந்து தொலைக்கிறான்.
(பரத்தையின் கூற்று)
-------------------------------------------------------------------------

நூல்:குறுந்தொகை
ஆசிரியர்:ஆலங்குடி வங்கனார்
பாடல் என்:௮
பாடல்:8
கழனி மாஅத்து விளைந்துஉகு தீம்பழம்
பழன வாளை கதூஉம் ஊரன்
எம்இல் பெருமொழி கூறி,தம் இல்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யும்,தன் புதல்வன் தாய்க்கே.

வியாழன், 22 ஏப்ரல், 2010

சங்க இலக்கியம் - குறுந்தொகை:7

கழைக்கூத்தாடிகள் கயிற்றிலாடுகையில்
கொட்டப்படும் முழக்கமாய்
வாகைமரத்து கொம்புகளும்
மூங்கில்மர தண்டுகளும்
ஓசை எழுப்புகின்றன,
தீக்குண்டமாய் தகிக்கும்
நெருப்புதேசமான பாலைவெளியில்.

வளையல்கள் ஏழுசுரங்களை இசைக்க
சிலம்புகள் சங்கீதசப்தங்களை எழுப்ப
மெல்லடி வைத்து மெல்லியல் நடக்கிறாள்...
வீரம்செறிந்த கரங்களில்
வில்லேந்தி
வெற்றிச்செறிந்த கால்களில்
கழலேந்தி -அவள்
முன்னே நடக்கிறான் காதலன்.

திருமதி ஆவதற்காய்
செல்வனுடன் செல்லும்
செல்வியின் சிலம்பு
கட்டாயம் மெட்டியாக மாறும்...

-----------------------------------------------------------------
நூல்:குறுந்தொகை
ஆசிரியர்:பெரும்பதுமனார்
பாடல் எண்:7
பாடல்:
வில்லோன் காலன கழலே; தொடியோள்
மெல்லடி மேலவும் சிலம்பே; நல்லோர்
யார்கொல்? அளியர் தாமே - ஆரியர்
கயிறு ஆடு பறையின் கால்பொரக் கலங்கி,
வாகை வெண்நெற்று ஒலிக்கும்
வேய்பயில் அழுவம் முன்னியோரே.

புதன், 21 ஏப்ரல், 2010

சங்க இலக்கியம் - குறுந்தொகை: 6

வெளிச்சம்தொலைத்த வானும்
ஓசைதொலைத்த பூமியும்
இருட்டை பூசிக்கொண்டு
கறுத்த முகத்தோடு
காட்சியளிக்கும் ராப்பொழுதில்
கவலை களைந்து
கனவில் களித்தபடி
பூமி என்னும்
ஒற்றை படுக்கையில்
எல்லோரும் துயில்கொள்கிறார்கள்.

நிசப்தம்பரவும் நித்திரைபொழுதில்
உறங்காமல் தனித்திருப்பதும்
தனிமைக்கு துணையிருப்பதும்
நான் மட்டும்தான்.
காரணம்
காதலன் அருகில் இல்லை
நள்ளிரவும்
நல்லிரவாய் இல்லை.

----------------------------------------------------------

நூல்:குறுந்தொகை
ஆசிரியர்:பதுமனார்
பாடல் எண்:
பாடல்:6
நள்ளேன்றன்றே, யாமம்; சொல் அவிந்து
இனிது அடங்கினரே,மாக்கள்;முனிவு இன்று
நனந்தலை உலகமும் துஞ்சும்;
ஓர்யான் மன்ற துஞ்சாதேனே.

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

சங்க இலக்கியம் - குறுந்தொகை : 5

வயல்களின் பூமியிலிருந்து
அலைகளின் பூமிக்கு
மீனுண்ணும் நிமித்தமாய்
குருகுப்பறவைகள் சிறகுவிரித்தன;
கரைகளை உடைக்கும்
அலைகளை உடைய
அந்த
தண்ணீர்தேசத்தின் தலைவன்
என்னை
கண்ணீர்தேசத்தில்
விட்டுவிட்டுப் போனதிலிருந்து...

கறுப்புக் கொடிபிடித்து
தூக்கத்திற்கு எதிர்ப்புத்தெரிவிக்கின்றன
மைபூசப்பட்ட என்கண்கள்;
தொட்டுக்கொள்ளாமலும்
ஒட்டிக்கொள்ளாமலும்
தீண்டாமையைக் கடைப்பிடிக்கின்றன
என்
ஈர இமைகள்
----------------------------------------------------------------------------

நூல்:குறுந்தொகை
ஆசிரியர்:நரிவெரூஊத் தலையார்
பாடல் எண்:
பாடல்:5
அதுகொல்,தோழி! காம நோய்?
வதிகுருகு உறங்கும் இன்நிழற் புன்னை,
உடைதிரைத் திவலை அரும்பும் தீம்நீர்,
மெல்லம் புலம்பன் பிரிந்தென
பல்இதழ்,உண்கண் பாடு ஒல்லாவே.

சங்க இலக்கியம் - குறுந்தொகை:4

சூடான கண்ணீரால்
என் இமைகள்
பற்றி எரியும்போதெல்லாம்
குளிர்விரலால்
தொட்டுத்துடைத்த காதலன்
விட்டுப்பிரிவதை நினைத்து...

நோகிறேன்
வெந்து போகிறேன்
சகிறேனடி தோழி!
-------------------------------------------------------------------------
நூல்:குறுந்தொகை
பாடல் ஏன்:4
ஆசிரியர்:காமம் சேர் குளத்தார்
பாடல்:
நோம் ,என் நெஞ்சே நோம் என் செஞ்சே
இமை தீய்ப்பன்ன கண்ணீர் தங்கி
அமைதற்கு அமைந்த நம் காதலர்
அமைவு இலர் ஆகுதல் நோம் என் நெஞ்சே

திங்கள், 19 ஏப்ரல், 2010

சங்க இலக்கியம் - குறுந்தொகை:4

சூடான கண்ணீரால்
என் இமைகள்
பற்றி எரியும்போதெல்லாம்
குளிர்விரலால்
தொட்டுத்துடைத்த காதலன்
விட்டுப்பிரிவதை நினைத்து...

நோகிறேன்
வெந்து போகிறேன்
சாகிறேனடி தோழி!
-------------------------------------------------------------------------
நூல்:குறுந்தொகை
பாடல் ஏன்:4
ஆசிரியர்:காமம் சேர் குளத்தார்
பாடல்:
நோம் ,என் நெஞ்சே நோம் என் செஞ்சே
இமை தீய்ப்பன்ன கண்ணீர் தங்கி
அமைதற்கு அமைந்த நம் காதலர்
அமைவு இலர் ஆகுதல் நோம் என் நெஞ்சே

சங்க இலக்கியம் - குறுந்தொகை : 3

கனிந்ததேன்ரசம் நிறைந்துவழியும்
கறுத்தக்கிளைகளில் பூத்துச்சிரிக்கும்
குறிஞ்சிமலர்களின் குவலயமான
மலைநாட்டுக்காரனுக்கும் எனக்குமான
மானசீகக்காதல்...

பரந்து விரவிக்கிடக்கும்
புவியைவிட பெரிதானது!
வையமணைத்து நனைக்கும்
கடலைவிட ஆழமானது!
தொடமுடியா தொலைவில்நிலைக்கும்
வானைவிட உயரமானது!

மலைநாட்டுக்காரனுக்கும் எனக்குமான
மானசீகக்காதல்...

------------------------------------------------------------------------

நூல்: குறுந்தொகை
ஆசிரியர்: தேவகுலத்தார்
பாடல் என்:3பாடல்:
நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;
நீரினும் ஆர் அளவின்றே - சாரல்
கருங்கோல் குறிஞ்சி பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே

சனி, 17 ஏப்ரல், 2010

சங்கஇலக்கியம் - குறுந்தொகை :2

சின்னஞ்சிறிய சிறகுகள்விரிய
காற்றைத்தழுவி பறந்து
பிரபஞ்சம்முழுக்க கடந்து
மலர்களின் சிம்மாசனத்தில் அமர்ந்து
நறுமணம் கொண்டு மதுரசம் உண்டு
மகிழும் வண்டே!

ஆறுதலுக்காக கூறுதலில்
பொய்வேண்டாம் மெய்பேசு!

பிறவிகளின் தொடர்ச்சியாய்
உறவுகளின் நேசம்
உணர்வுகள் நீட்சியில்
உரிமைகளே சுவாசம்.

உதடு விரித்த புன்னகையிலும்
உதடு திறந்த பொன்னகையிலும்
இறுக்கமாய் கோர்க்கப்பட்ட
முத்துப்பல்லை வரிசையைக்கொண்டு
அசைவிலும் இசைவிலும்
பொன்மயிலாய் தோகைவிரிப்பவள்
என் பெண்மயில்.!

பாதத்தைத் தொட்டுவிட எத்தனிக்கும்
அவளது
கார்கூந்தலில் நறுமணத்தைவிட
நீ பார்த்த கோடிமலர்களில்
எந்தப் பூவுக்கேனும் இருக்கிறதா?
சொல்வண்டே சொல் !

நூல்: குறுந்தொகை
ஆசிரியர்:இறையனார்
பாடல் எண்:2
பாடல்:
கொங்கு தேர் வாழ்க்கை அம்சிறைத் துப்பி
காமம் செப்பாதுக் கண்டது மொழிமோ:
பயிலியது கெழீஇய நட்பின்,மயில்இயல்,
செறி எயிற்று, அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ, நீ அறியும் பூவே?

சங்கஇலக்கியம்:குறுந்தொகை

மைவடியும் எழுதுகோலைப்போல
இரத்தம்வடியும் அம்புகள்;
உதிரத்தால் சிவந்த
யானையின் வெள்ளைகொம்புகள்;
அசுரரை கொன்று
அதர்மத்தை வென்றதால்
குருதியை குடித்து
சதுப்புநிலமாகியிருக்கிறது போர்க்களம்;
எங்கும் எதிலும் சிவப்பின் ஆதிக்கம்.

காலில் வீரக்கழல்
கையில் வெற்றிவளை -அந்த
கந்தனை அலங்கரிக்கும்
காந்தள் மலர்
கன்னியை அலங்கரித்தல் தகுமோ !
கேள்விகள்
வேள்விகள் செய்கின்றன....

சங்கநூல்:குறுந்தொகை
ஆசிரியர்:திப்புத்தோளார்
பாடல் எண் :ஒன்று
பாடல்:
"செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த
செங்கோல் அம்பின்,செங்கோட்டு யானை,
கழல் தோடி,சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக் காந்தட்கே "

வியாழன், 15 ஏப்ரல், 2010

கங்காரு

அலுவலகத்தில்
காலையில் சிறைப்படும்முன்னும்
மாலை விடுவிப்பிற்குப் பின்னும்
முதன்மைச்சாலையிலிருந்து விலகி
பள்ளியை நோக்கியே பயணிக்கும்
என் இரண்டுச்ச்சக்கரவாகனம்.

அந்த மோட்டார்தேரின்
முன்னிருக்கை சிம்மாசனத்தைக்
குட்டி இளவரசனாய்
ஆக்கிரமிக்கும் ஆசைக்கு
விதித்திருந்த தடையை
மீறியதில்லை என்மகன்.

என்
வயிற்று சுற்றளவை
அளவெடுக்கும் பாவனையோடு
பிஞ்சுக் கைகளால்
உடும்பைப்போல இறுக்கிக்கொண்டும்
போலிஷ் திருடன் விளையாட்டில்
மறைவதைப்போல்
எதிர்ப்படுகிறவர்களுக்குத் தென்படாமல்
என் முதுகின்பின் ஒளிந்தபடி
நிழலாய்ப் பயணிப்பான்.

சிக்னல்
வேகத்தடை
குறுகியவளைவு
மற்றும்
நெடுஞ்சாலைப் பந்தயங்களைக் கடந்து
அன்றையதினமும் தொடர்ந்தது
எங்கள் பயணம்.

பள்ளிவந்து சேர்ந்தபோது
நுழைவாயிலின்
கனத்த உலோகக்கதவுகள்
பூட்டப்பட்டிருந்தன.
பூக்களில்லாத மலர்வனமாய்
ஏகாந்தம் நிரப்பப்பட்டு
வெறிச்சோடியிருந்தது பள்ளிவளாகம்.

மகனை சுமந்துகொண்டிருப்பதான
நினைவில்
வழக்கமாய் அனிச்சையாய்
வந்திருக்கிறேன்
ஞாபகமறதியில்
அன்றையதினம் "ஞாயிற்றுக்கிழமை"

செவ்வாய், 13 ஏப்ரல், 2010

பெய்த நூல்

அந்தச்
சாலையோரப் பேருந்து
வழியில் எதிர்படும்
மூன்று ஊர்களைச்சுமந்து போகிறது.

எல்லா நிறுத்தங்களிலும்
தென்படுகிறார்கள்.
நாசியின்கீழ் பதினொன்றாய்
சளி பயணப்பட்ட உலர்சுவடுகள்;
புறங்கையால் எச்சில்துடைத்த
பக்கவாட்டு அடையாளங்கள்;
கருமையை வறுமைக்குப்பரிகொடுத்த
செம்பட்டை மயிர்கற்றைகள்;
மேலேயுயர்த்தவிடாது கைகளைத்தடுக்கும்
கிழிந்த கக்கங்கள்;
பவுடருக்குக்குப் பதிலாக விபூதிபூசப்பட்ட
கருத்தக் கன்னங்கள்;
நெய்தநூல்களைவிட மிகுதியாய்
பெய்தநூல்கலான சீருடைகளுடன்
எல்லா நிறுத்தங்களிலும்
பள்ளி செல்லும் பிள்ளைகள்.

இவர்களுடன்
இடதுபுறமாய் கோணியபடி
வயதான மூதாட்டியைப்போல்
கனத்து ஊர்கிறது
அந்த அரசுப்பேருந்து.
'குட்டிசாத்தான்களே' என்று
திட்டுமொழிகளால்
நடத்துனர்
செவிகளைக் கௌரவிக்கும்முன்
வெறுமையாகிவிடுகின்றன படிகள்.

ஒருபுறம்
புத்தக சிலுவைகளை சுமந்தபடி
நின்ற இடத்திலேயே
அறையப்பட்டிருக்கிறார்கள்
பேருந்துக்குள்
பிள்ளைஎசுகள்.

மறுபுறமோ
கிரீச்சிட்டு
சக்கரம் தேயும்படி
ஓட்டுனர் பாதங்களில்
வன்மமாய் மிதிபடும்
பிரேக்கால்.....
மண்டையுடைந்தாலும் பரவாயில்லை என்று
அந்தத் தொலைதூரப் பள்ளிக்குச்செல்லும்
எழைசசிறுமிகள்
கெட்டியாய்
பிடித்துக்கொண்டுதான் போகிறார்கள்....

கம்பிகளை அல்ல
நாட இல்லாத 'பாவாடைகளை '