புதன், 2 பிப்ரவரி, 2011

எஸ்.வைதீஸ்வரன் என்றொரு கவிதை பறவை

தமிழ் புதுக்கவிதை உலகில் தனக்கென தனி அடையாளத்தை தன் படைப்புகளால் பெற்று , கவிதை இலக்கிய வரலாற்றில் கலந்து என்றென்றும் வற்றாத கவிதை நதியாக இன்றும் ஓடிக்கொண்டிருக்கும் மூத்த கவிதை படைப்பாளர் திரு எஸ்.வைத்தீஸ்வரன் அவர்களை சந்தித்து சுமார் ஒருமணிநேரம் உரையாடுகிற நல்ல வாசிப்பை இன்று பெற்றேன்.

சுமார் முக்கால் நூற்றாண்டைத் தாண்டி கவிதைக்காகவே இன்னும் வாழ்ந்துக்கொண்டிருக்கிற இந்த மூத்த படைப்பாளியை சந்தித்து தகிதா மொத்த வெளியீடுகளான பதினான்கு நூல்களை அவரிடம் வழங்கி பெருமிதப்பட்டுக்கொண்டேன்.ஆச்சரியமும் மகிழ்ச்சியும் பொங்க சிரிக்கும் புன்னகை விழிகளோடு அவைகளை காதலோடு பார்த்தார்.மகிழ்தார் பாராட்டினார்

தனது பத்தொன்பது வயதிலிருந்து கவிதை எழுதத் தொடங்கி தனது முப்பத்தி நான்காவது வயதில் தனது கவிதை நூலான 'உதய நிழல்' -ஐ 1970௦ இல் வெளியிட்டார் .சுமார் நூற்று நாற்பத்தைந்து (rs.145) ரூபாய் ஊதியம் பெற்றுக்கொண்டிருந்த அன்றைய சூழலில் ரூ.முன்னூற்று பதினைந்து (rs.315)ரூபாய் செலவில் தொள்ளாயிரம் பிரதிகள் தயார் செய்திருக்கும் இவரது துணிச்சலுக்கு மனதிற்குள் தலைவணங்கினேன் கடந்த ஐம்பது வருடங்களில் அந்த தொள்ளாயிரம் நூல்களில் ஐநூறு நூல்கள் மட்டுமே விற்றிருக்கின்றன. நாற்பது வயதாகும் அந்த நூலில் ஆறு பிரதிகளை ஐயா அவர்களின் திருக்கரங்களால் பெற்றுக்கொண்டேன்.இன்னும் அந்த நூல்களின் முகப்பிற்கு முத்தம் வைக்கலாம்

அந்த காலத்தில் ஒரு படைப்பாளன் நூல் வெளியிட வேண்டும் என்றால் சுமார் பன்னிரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்தது என்று ஆதங்கப்பட்ட போது அவரது கவிதைப் பசியை என்னால் நன்கு உணர முடிந்தது.'எழுத்து','கலையாழி','நடை','ஞானரதம்','குமுதம்', போன்ற பத்திரிக்கைகளில் இவரது படைப்புகள் தொடர்ந்து பிரசுரமாகி இருக்கின்றன. அடர்த்தியான சிற்றிதழ்களில் வெளியான கவிதைகளைத் தொகுத்து இந்த நூல் உருவாவதற்கு காரணமாக இருந்த சுதேசமித்திரனை உள்ளன்போடு நினைத்துப் பார்க்கிறார்.கசடதபற ,வானம்பாடி,ழ,மணிக்கோடு,எழுத்து போன்ற கவிதைக்கான குழுக்களின் நெகிழ்ச்சியான நினைவுகளை எல்லாம் மலர்த்தினார்.

தனக்கு எழுபத்தைந்து வயதாகிறது என்று ஐயா பேசும் போது எதேச்சையாக குறிப்பிட்ட போது நான் மலைத்தேன்.அவரது உற்சாகமும் துடிப்பும் தெளிவும் நிறைவும் கூர்மையும் நினைவாற்றலும் ஞானமும் என்னை மெய்சிலிர்க்க வைத்தன.இவை எல்லாவற்றிர்க்கும் காரணமாக இருப்பது தமிழ் என்பதை புரிந்துகொண்டேன். தகிதா எப்படி குறுகிய காலத்தில் இத்தனை நூல்களை கொண்டு வந்திருப்பது தனக்கு ஆச்சர்யத்தை ஏற்ப்படுத்துகிறது என்று அவர் குறிப்பிடும் போது நான் உள்ளூர மகிழ்தேன். இன்றைக்கு நல்ல கவிதைகளைவிட விளம்பரமான கவிதைகள் தான் அதிகம் விற்கப்படுகின்றன என்று அவர் வருத்தப்பட்டுக்கொண்டது எனக்குள்ளும் வலியை எற்படுத்தவே செய்தது.


நல்ல கவிதை எனபது விசாரத் தன்மை உடையதாகவும் நுண்மையானதாகவும் இருத்தல் வேண்டும்.கோட்பாடுகளை தீர்மானம் செய்துகொண்டு .கவிதைப் படைக்கும் தன்மை ஜீவனில்லாதது. கவிதைதான் கோட்பாடுகளைக் கொண்டிருக்கலாம். கோட்பாடுகளால் கவிதை உருவாக்கம் ஆகக்கூடாது. ஒரு நல்ல படைப்பலனுக்கு அவனது மொழி அவனுக்கு வேலைக்காரனாக இருக்கவேண்டும்.

கோவையில் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கிற வானம்பாடி கவிஞர்களான சிற்பி,ஞானி,முல்லை ஆதவன்,சிதம்பரநாதன்,அக்னிபுத்திரன்,மற்றும் பலரைப் பற்றியும் கேட்டறிந்துகொண்டார். நமது 'புதிய ழ'கவிதை சிற்றிதழ் கொங்கில் இருந்து வருகிறது ,என்று கேட்டறிந்துவிட்டு நானும் ஒரு வகையில் கொங்கு நாட்டுக்காரன்தான் என்று தன் உறவு மண்ணை நினைவுகூர்ந்து நெகிழ்ந்தார்.

நடப்பு தமிழ் இலக்கிய சூழலில் மேற்க்கத்திய கோட்பாடுகளை உள்வாங்கிக்கொண்டு தமிழ் வாழ்வியல் சூழலை மறந்து படைப்பை உருவாக்குகிற குருட்டுத்தனமான அணுகுமுறையை அவர் சாடினார்.காலத்தின் போக்கிற்கேற்ப கவிதை மாறினாலும் அது நிலைபெருடையதாக விளங்கும் பாக்கியத்தை இழந்துவிடுகின்றது என்று தெரிவித்தார்.திரை இசை பாடல்களை மட்டுமே கவிதை என்று சிலாகித்துக் கொள்கிற மலட்டுத்தனமான வாசிப்புத்தன்மைக்கு தமிழர்கள் உலகெங்கிலும் ஆளாகி இருப்பது கவலை அளிக்கிறது என்று வேதனைப் பட்டார். படைப்பாளனை ஊடுருவிப்பார்த்து படைப்பின் மீது பொத்தம் பொதுவான விமர்சனங்களை வைக்கிற பிற்போக்கு தனமும் வளர்ந்துள்ளதை சுட்டிக்காட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக