ஞாயிறு, 23 ஜனவரி, 2011

தகிதா படைப்பாளியான ஈழத்தை சேர்ந்த ஆதித்தனின் "பொய்யும் பழங்கதையும் வெறுங்கனவும்"



தகிதா பதிப்பகத்தின் படைப்பாளியான ஈழத்தை சேர்ந்த ஆதித்தனின் "பொய்யும் பழங்கதையும் வெறுங்கனவும்" என்ற நூல் இன்று கொழும்பு தமிழ் சங்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
நல்லதொரு தமிழ்சங்கம் நல்லதொரு படைப்பாளியை கெளரவித்ததால் தமிழன்னை பெரிதுவத்திருப்பாள்.தகிதா பதிப்பகம் நீங்கள் இன்னும் இன்னும் படைக்க வாழ்த்துகிறது. "பொய்யும் பழங்கதையும் வெறுங்கனவும்" நூல் வெளியீட்டு விழா

தகிதா பதிப்பகத்தின் படைப்பாளியான ஈழத்தை சேர்ந்த ஆதித்தனின் "பொய்யும் பழங்கதையும் வெறுங்கனவும்" என்ற நூல் இன்று கொழும்பு தமிழ் சங்கத்தின் வெளியிடப்பட்டுள்ளது.

தகிதா பதிப்பகத்தின் படைப்பாளியான ஈழத்தை சேர்ந்த ஆதித்தனின் "பொய்யும் பழங்கதையும் வெறுங்கனவும்" என்ற நூல் இன்று கொழும்பு தமிழ் சங்கத்தின் வெளியிடப்பட்டுள்ளது.
கவிஞர்,எழுத்தாளர்,ஆவணப்பட இயக்குஞர்,கானுயிர் ஆர்வலர் என பன்முகத் தளங்களில் அறியப்பட்ட கோவை சதாசிவத்தின் புதிய ஆவணப்படமான "நல்லாறு " என்ற ஆவணப்படத்திற்கு எனது பின்னணிக்குரல் இன்று பதியப்பட்டது. என்னிடம் இருந்த சூழலியல் ஆர்வத்தை இன்னும் அதிகப்படுத்திய குறிஞ்சி சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் ,என் இனிய நண்பர் கோவை சதாசிவம் அவர்களுக்கு உங்கள் சார்பாக என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 20 ஜனவரி, 2011

பதினொன்று... பத்து... ஒன்பது...

குறைந்து கொண்டிருந்த சிக்னலில்

வலதுகாலை நொண்டியபடி

இடுப்பிலிருக்கும் குழந்தையைக்காட்டி

பிச்சைகேட்டுக்கொண்டிருந்த

அந்த இளம்வயது தாய்

வாகனநெரிசலில் என்ன ஆனாள்?

சாலைவிதிகளை மீறி

பின்னோக்கிப் பயணப்பட்டது

எனது ஏங்கும் மனம்

செவ்வாய், 18 ஜனவரி, 2011


தகிதா பதிப்பகத்தின் சார்பில் இந்தப் புத்தாண்டில் முதன்முதலாக வெளிவரவிருக்கும் கவிதைத் தொகுப்பு "நிறைய அமுதம் கொஞ்சம் விஷம்" -எழுதியவர் வைரஸ். அந்த படைப்பாளரை வரவேற்று வாழ்த்துங்கள்.

ஞாயிறு, 16 ஜனவரி, 2011

உண்மை எப்போது அரிதாரங்கள் பூசிக்கொள்ளாததால்...அதன் அழகு யாருக்கும் பிடிக்காது. பொய் எப்போதும் அலங்காரங்களோடு அலைவதால் எல்லோருக்கும் பிடிக்கும்

அழுது கதறும்
ஆறுமாத குழந்தைக்கு
பசுவின் பால்
ஊட்டிக்கொண்டிருந்தார்
அப்பா.
பால்தர மறுத்ததால்
படுக்கையில் கிடக்கிறாள்
மார்பகப்புற்றுநோயால்
அவதியுறும்
அம்மா.
"பசுவை வணங்குவோம்"

சனி, 15 ஜனவரி, 2011


இன்றைக்கும்
மணிமேகலைகள்
கையில்
அட்சயப் பாத்திரங்களோடு
அலைந்துகொண்டுதான்
இருக்கிறார்கள்
"கொடுக்க அல்ல ! வாங்க!"

தரணிக் குடுவையில்
தமிழ் பருக்கைகள்
பக்குவப்படுவதற்காகத்தான்
இந்த பற்றவைப்பு

விதைப்பு
விளைப்பு
வரவேற்பு
விருந்தோம்பு
"பொங்கலோ பொங்கல்

வெள்ளி, 14 ஜனவரி, 2011


டே... டே...
மாட்டுக்கு பெயின்ட் அடின்னு
கொடுத்தா
போயி போயி
வரிக்குதிரைக்கு அடிச்சி வச்சிருக்கே
பொங்கலு அதுவுமா
ஆளு அவனு ..

ஆடாத பேரை எல்லா
ஆட வைக்கும்
போடாத மெட்டை எல்லா
போட வைக்கும்
தேடாத சிட்டை எல்லா
தேட வைக்கும்
ஓடாத காலை எல்லா
ஓட வைக்கும்

குளம்படிகள்
தரையில் வீரக்கவிதைகளை
எழுத
வீரம் உழுத
பூமியின் புழுதி
திருநீராய்
பறக்கின்றன

பொய்கை மலர்களும்
பூந்தோட்ட உதிரிகளும்
சந்தித்து
ரகசியமாய்
சந்தோசம் பரிமாறுகின்றன..

நேற்று முறத்தால் புலியை
விரட்டியவள் தமிழச்சி
இன்றும் மறத்தல் காளையை
மிரட்டுபவன் தமிழச்சன்
"வீரம் விளைந்த பூமி

தூய்மையின்

சமாதானத்தின்

கொடிகள்

எல்லோரிடமும்

பறக்கட்டும்

வேட்டியில்...

இந்த தேவாமிர்தத்தை
சுவைக்காதவர்கள்
தமிழராக பிறப்பெடுத்து
என்ன பயன்
"சர்க்கரை பொங்கல்

சங்கீதம்
இசைத்துக்கொண்டே
உழைப்பவர்கள்
நம் தமிழ் பெண்கள்
"அசைத்தலும் இசைத்தலும்

மரகத வயல்களில்தான்
வரப்புகள்
மனித மனங்களில்
இல்லை

உழைப்பின் உன்னதங்களை
சொல்லிக்கொண்டே பயணங்கள் போகிறார்கள்
கடவுள் என்ற முதலாளியால்
கண்டெடுக்கப்பட்ட தொழிலாளிகள்
"விவசாயிகள்"

கணினி குடுவையில்
எழுதுகோல் கொண்டு
கிண்டிக்கொண்டே இருக்கிறேன்
கவிதைப் பொங்கல் .....

வீட்டுக்குள்ளே
சமச்சி தின்னது
நாம கொழுக்க
நாம கொழுக்க

வீதியிலே
பொங்க வச்சது
சொந்தம் செழிக்க-தமிழ்
சொந்தம் செழிக்க

யாரோ பலருடைய
வியர்வை உப்பை
தித்திப்பாய் சுவைத்திருக்கிறோம்
நமது உப்பு
யாருக்காவது
சக்கரையாகி இருக்கிறதா?

பள்ளியில் படிக்கும்போதிலிருந்து
இன்று வரையிலும்
அஃறிணைக்கு
உன்னை உதாரணம் சொன்னதே இல்லை
நீதாயானவள்
நீ தந்தையானவன்
யாரோ பலருடைய
வியர்வை உப்பை
தித்திப்பாய் சுவைத்திருக்கிறோம்
நமது உப்பு
யாருக்காவது
சக்கரையாகி இருக்கிறதா?

ஒரு மழலை
தன் பிஞ்சு விரல்களால்
தென்றல் வீசி
தன் மொழிகளால்
குதலை பேசி
அணைத்துவிட்டு போகிறது

ஆவி பறக்க
எரியும்
என் கோபநெருப்பை

பொங்கலோ பொங்கல்

'பொங்கல்' உலகத் தமிழர்களின் உன்னதத் திருவிழா. இயற்கையை நேசித்து, இயற்கையை சுவாசித்து இயற்கையோடு இரண்டறக் கலந்த இனிய தமிழர்களின் இல்லப் பெருவிழா. படைத்த இயற்கைக்கும், இயற்கை படைத்த உணவிற்கும் நன்றி தெரிவிக்கும் இல்லத் திருவிழா. பாட்டாளிகள் விதைத்த வியர்வைகள் விளைச்சல்கள் காணும் அறுவடைத் திருவிழா. உழைப்பாளிகள் ஓயாமல் உழைத்த உழைப்பின் உன்னதங்களைச் சந்தைக்குக் கொண்டு வந்த சத்தியத் திருவிழா."மண் என்பது மண்ணல்ல, மண் எனபது மனிதர்கள்" என்ற கவிதைக்கேற்ப புழுதிக்காட்டு மண்ணைத் திருநீராகவும், சுடர்விட்டு எரியும் சூரியனைத் திருவிளக்காகவும் வழிபட்ட வண்ணத் தமிழனின் வரலாற்று பெருவிழா.பூமி தந்த அன்னத்தையும் , அன்னத்தைத் தந்த விவசாயிகளையும் மரியாதை செய்யும் ஒரு நாள் பொங்கல் திரு நாள். இந்த இனிய திரு நாளில் தமிழ் உணவு, தமிழ் உடை, தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, தமிழ் பழக்கவழக்கம், தமிழ் கல்வி போன்ற தமிழ் அடையாளங்களைப் பாதுகாப்போம்.பொங்கலோ பொங்கல்.பொங்கலோ பொங்கல்.பொங்கலோ பொங்கல்

வியாழன், 13 ஜனவரி, 2011

ஒரு ஓடையின் கதை

ஒரு ஓடை

ஒத்தையடிப் பாதையில்

நனைந்தும் நனைத்தும்

நடந்து களைத்த

பயணத்தின் முடிவில்

எதிர்ப்பட்டது பெருவெள்ளம் .



இரண்டின் நகர்தலும்

அதனதன் போக்கில்



ஒருபுள்ளியின் சந்திப்பில்

ஓடை

தன் அடையாளத்தைத்

தொலைத்திருந்தது



ஆரவாரங்களோடு

ஓடிக்கொண்டிருந்த வெள்ளம்

ஓடைகளைப்பற்றி

சிலாகித்துக் கொண்டதேயில்லை



இருந்தபோதிலும்

ஓடிக்கொண்டேதான் இருக்கின்றன

ஒவ்வொரு பெருவெள்ளங்களுக்குள்ளும்

பலநூறு ஓடைகள்

புதன், 12 ஜனவரி, 2011

நேற்று போனதற்காய்
இரங்கல் இல்லை
இன்று முடிந்ததற்காய்
இரங்கல் இல்லை
இப்பொழுது கடந்ததற்காய்
இரங்கல் இல்லை.

ஆனால்
எப்போதும்
இருந்துகொண்டே இருக்கிறது
இரங்கல்

செவ்வாய், 11 ஜனவரி, 2011


தகிதா பதிப்பகத்தில் புதிய படைப்பாளர்கள் பலரது நூல்கள் எதிர்வரும் மார்ச்மாத வெளியீட்டுக்காக தயாராகிக்கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் உங்கள் படைப்பும் இடம்பெற விரும்பினால் உடனே தொடர்பு கொள்ளுங்கள்.காவியங்கள் பூக்கும் காகிதச் சோலையில் உங்கள் படைப்புகளும் மலரட்டும் என்று வாழ்த்துகிறேன்.

என்றும் தமிழாய் தமிழுக்காய்
மணிவண்ணன்

திங்கள், 10 ஜனவரி, 2011

தரையில் கரி ஓவியம்

நகரத்தின் சாலைகடக்கும்போது
விலைகொடுக்காமல்
விழிகளால் அள்ளிக்கொண்டு வந்த
குற்றவுணர்ச்சி
மனதையும் மூளையையும்
அரித்துக்கொண்டே இருக்கிறது

"சாக்பீஸ் சாம்பலில்". கவிதைநூல் தேனம்மை லஷ்மணன் பார்வையில்

தகிதா பதிப்பகம் சென்ற மாதம் 10 புத்தகங்கள் ஒன்றாக வெளியிட்டது;.. அதில் ஒன்று நாணற்காடனின் சாக்பீஸ் சாம்பலில்... இவருடைய கவிதைகளை தகிதா பதிப்பகம் மூன்று மாதத்துக்கு ஒரு முறை வெளியிடும் புதிய ,”ழ” வில் படித்திருக்கிறேன்.. பத்து கவிதைத்தொகுதிகளையும் மேற்கு வங்க நூலகத்திற்காக மொத்தமாக கேட்டதாக தகிதா பதிப்பகம் மணிவண்ணன் கூறினார்.. எல்லா கவிஞர்களையு்ம் ஊக்குவிக்கும் இவர் முயற்சி பாராட்டற்குரியது.. விலை ரூ 50.



புதுக்கவிதை ., நவீன கவிதை எழுதி வரும் நாணற்காடனின் ஹைக்கூக்களும் அருமையாய் இருக்கின்றன. இந்தி அசிரியரான இவர் இந்தியிலிருந்து தமிழுக்கு கணிசமான மொழிபெயர்ப்புகளும் செய்துள்ளார்.. தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் நாமக்கல் மாவட்ட செயலாளராக விளங்கும் இவர் எட்டு ஆண்டுகளாக எழுதி வருகிறார்.. ”கூப்பிடு தொலைவில்.” , “ பிரியும் நேரம்.,” ஆகிய இரு கவிதைத் தொகுதிகளும் வெளியிட்டு உள்ளார்.. சாக்பீஸ் சாம்பல் இவரது மூன்றாவது கவிதைத் தொகுதி..





பள்ளிக் கூடம் என்றால் நமக்கு கரும்பலகையும் கலர் கரலராய் சாக்பீஸ்களும் ஞாபகம் வரும்.. டஸ்டரால் அழிக்கும் போது வி்ழும் துகள்கள்.. வெறும் துகள்களாக நமக்கு தென்படும் போது இவர் கண்ணில் மட்டும் சாம்பலாய் .. ஒரு பொருள் எரிந்தால்தான் சாம்பல்.. சாக்பீஸ் கரும்பலகையில் மக்களுக்கு கல்வி புகட்ட தன்னைக் கரைத்து சாம்பலாய் விழுவது அழகுதான்..



ஆனந்த விகடன்., கல்கி., புதிய ,”ழ”., கருக்கல்., அகம்புறம்., கவிதைச்சிறகு., மதுமலர்., என இவர் கவிதைகள் வெளிவந்த புத்தகங்கள் அனேகம்.



தலைப்புகளற்ற கவிதைகள்.. இன்றைய இரவு கூட தனக்கான கடைசி இலையாய் இருக்கலாம் என ஆரம்பிக்கிறது கவிதைத் தொகுதி..



அலைபேசியின் குறுஞ்செய்தி ., காற்றில் நீந்திச் செல்வதும்., மழை வேலிக்குள் மலரெனப் பூத்திருக்கும் காதலியும் பூச்சியொன்றினை குறி வைக்கும் பல்லி பார்த்து., பசிக்கும் மரணத்துக்கும் நடுவில் நான் எனவும்., இரவெனும் மயானற் காட்டில் பிணமாய் நிலவு எரிவதும்.. பாம்புகள் அண்டுவது கருதி பிடுங்கிப் போடப்பட்ட செடிகளில் வாழும் பூக்கள் தேடி பட்டாம் பூச்சிகள் ஏமாறக் கூடும் எ்னவும் ஒன்றையொன்று சுழற்சியிட்டு அழகாயும் அவலமாயும் இருக்கிறது..





கழுகுகள்., பாம்பு., தவளை., பூச்சிகள்., . என எக்கோ சிஸ்டமாய் ஒரு கவிதை அருமையாய் இருக்கு..



தலைப்பின் கவிதைதான் மிக அருமை..



வகுப்பறை தோறும்

கரும்பலகையின் கீழே

சாக்பீஸ் சாம்பலாய்

உதிர்ந்து கிடக்கிறது..

பாடங்களால் எரிக்கப்பட்ட

குழந்தைகளின் வாழ்க்கை..





ஆம் நாம் வைத்துள்ள கல்வித் திட்டங்களை எல்லாம் தோலுரிக்கிறது இக்கவிதை.. மனனம் செய்து கக்குவதுதான் இன்றைய முறையாய் இருக்கிறது.. கல்வி என்பது எளிதாய்., ஆசையோடு கற்பதாய் இருக்க வேண்டும்.. மதிப்பெண்கள்தான் கணக்கிடும் அளவுகோல்களாய் இல்லாமல்..



மழை ., வெய்யில்., காற்று., மரம்., குடிசை., கோயில்., தனிமை., காதல்., இரவு., மரணம்., சிகரெட்., சொற்கள்., குருதி., ஆணாதிக்கம்., மீன்., தூண்டில்., என பலவும் கலந்து கிடக்கிறது கவிதைகளில்.. அதிகம் சொல்லமுடியாமல் ஊவா முள்ளாய் நெஞ்சில் உறுத்திக் கொண்டிருக்கும் ஒற்றைச் சொல் பற்றியதான கவிதைகள் அநேகம்., பிரசவ வலி போல்..வெளியேறத் தவித்து..



வேலையற்றவனின் துயரம்., குழந்தையற்றவள்., முதிர்கன்னி., முள்வேலி மக்களின் வாழ்வு., வேண்டுதல்கள்., பேச்சில் ஆங்கிலக் கலப்பின் அங்கதம்., குழந்தையின் விளையாட்டு., இலவச தொலைக்காட்சி பார்த்து மகிழும் விவசாயி., குழந்தை வளரும் வீடு., கொத்தாய் பூத்திருக்கும் பஞ்சு மிட்டாய் விற்பவன்., பார்வையற்றவர்கள்.,, இறந்தபின்னும் செத்துப் போகாத நிழல்., காலிக் குடங்களோடு லாரிக்காக காத்திருப்பு, சொல்லப்படாத உண்மையின் நீர்த்தல்., என பல்வேறு தளங்களில் இயங்குகிறது கவிதை.





இந்த ஹைக்கூ அருமை..



கிளைகள்தோறும் அமர்ந்தெழும் பறவை

இலைகளில் தங்கிய மழைத்துளிகளை

பொழியச் செய்கிறது..





நீராய் நிரம்பியிருக்கும்

காற்றில்..



தத்தளித்துக் கொண்டிருக்கும்

கற்பிதங்களோடு

நீந்திக் கொண்டிருக்கும் நாம் .. என்ற கவிதையிலும் நாம் எவ்வாறு கற்பிதங்களால் ஆளப்படுகிறோம் என கூறுவது சிறப்பு. பொறி போடவோ ., தூண்டில் போடவோ யாராவது வரும்போது ஒன்று அதிலேயே கிடக்கலாம் அல்லது மீளலாம் ,.. என முடித்திருக்கிறார்..



எண்ணங்களைத் தூண்டிவிட்டு சிந்திக்கச் செய்யுமளவு சிறப்பாய் இருக்கிறது கவிதைத் தொகுதி

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

கொழும்பு தமிழ் சங்கத்தில் தகிதாவின் நூல் வெளியிடப்படுகிறது


தகிதா பதிப்பகத்தில் வெளியான கவிஞர் ஆதித்தன் அவர்களின் "பொய்யும் பழங்கதையும் வெறுங்கனவும்" என்ற கவிதைத் தொகுப்பு இலங்கையில் இரண்டாவது முறையாக அறிமுகவிழா காணுகிறது.கவிஞர் ஆதித்தன் அவர்களை வாழ்த்தி வரவேற்போம்

கொழும்பு தமிழ் சங்கத்தில் தகிதாவின் நூல் வெளியிடப்படுகிறது

தகிதா பதிப்பகத்தில் வெளியான கவிஞர் ஆதித்தன் அவர்களின் "பொய்யும் பழங்கதையும் வெறுங்கனவும்" என்ற கவிதைத் தொகுப்பு இலங்கையில் இரண்டாவது முறையாக அறிமுகவிழா காணுகிறது.கவிஞர் ஆதித்தன் அவர்களை வாழ்த்தி வரவேற்போம்

சனி, 8 ஜனவரி, 2011

தகிதா பதிப்பகத்தின் நூல்கள் நாளை முதல் சென்னையில் உள்ள 'நியூ புக் லேன்ட்'இல் கிடைக்கும் .வாங்கி பயன் பெறுங்கள்

வெள்ளி, 7 ஜனவரி, 2011

கமலுக்கு அறிவுமதியின் கண்டனம் (உலகத்தமிழர்களின் கண்டனங்களும் கூட).

இரவுக் காட்சி உடன் பிறந்தார் அழைக்க..

கமல் படம்.

மன்மதன் அம்பு.

மார்கழி மாஸ ஸபா ஒன்றுக்கு

வந்து விட்டோ‌மோ‌

என்கிற அளவிற்கு

ஒரே கமலஹாஸன் களும்!

கமல ஹாஸிகளும்!

அடிக்கடி அய்யா பெரியாரின் முதுகில்

பதுங்கிக் கொண்டு

நூல்தனம் காட்டும் அவரை

பரமக்குடி பையன் என்றும்

பெரியாரின் பிள்ளை என்றும்

பிறழ உணர்ந்து உணர்த்தவும் முற்பட்டவர்கள்

இந்த

அம்பு

இராம பக்தர்களின் கைகளிலிருந்து

இராவண திசை நோக்கி

குறிவைக்கப் படுகிற அம்புகளில் ஒன்று

என்பதை

உணர்ந்து திருந்துதல் நல்லது.

கவிஞர், அறிவுஜீவி, நாத்திகர் எனப்

பெரும்பகுதித் தமிழர்களுக்கு

அறிமுகமானவர்,

நவராத்திரித் தமிழனை

தசாவதாரத்தால்

முறியடிக்கவும் முயன்றுபார்த்தவர் கமல்.

இந்த மன்மத அம்புவின்

வாயிலாக

தமிழர்களை, தமிழர்கள் இன உணர்வை,

தாய்த் தமிழை

இழிவு செய்வதில்

உயிரே.. மணிரத்னம், அங்கவை சங்கவை

புகழ் சுஜாதா ஆகியோரைத்

தாண்ட முயற்சி

செய்திருக்கிறார்.

"தமிழ் சாகுமாம்

தமிழ் தெருப் பொறுக்குமாம்.

வீடிழந்து, நாடிழந்து,

அக்காள் தங்கைகளின்

வாழ்விழந்துஞ்

ஏதிலிகளாய் இடப்பெயர்வுற்றுஞ்

கொத்துக் கொத்தாய்

தம்

சொந்தங்களை

மொத்தமாய்ப் பலியெடுத்த

கொடுமைகளுக்கு

இன்னும் அழுதே முடிக்காத

அவர்கள் வாழும் (அ) பிழைக்கும்

இடத்திற்கே போய்..

பனையேறி விழுந்தவரை

மாடு

மிதித்ததைப் போலஞ்

வாடகை வண்டி ஓட்டுகிறவராக

ஓர் ஈழத் தமிழரை.. தங்களிடம்..

பாத்திரம்.. பிச்சைக் கேட்பவராக..

கதா பாத்திரமாக்கி..

ஒரு செருப்பாக அன்று..

இரு செருப்பாகவும்

என்று

கெஞ்ச வைத்து..

இறுதியில்

அந்த எங்கள்

ஈழத் தமிழரை

செருப்பால் அடிக்கவும்

ஆசைப்பட்டு ஏதோவோர்

ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள

முயன்றிருக்கிறீர்களே

கமல்!

அது என்ன ஆத்திரம்!

போர்க்குற்றவாளியாகிய அந்தக்

கயவனின் தானோடு ஆடுகிற

சதைதானா உங்களுடையதும்! ஆம்..

சதைதானே உங்களுடையதும்!

அந்த உலகநாடுகளில் போய்.. பாருங்கள்.

அங்குள்ள கோயில்களில்

கழுத்துகள் நிறைய, கைகள் நிறைய

தங்க நகைகளாய்த் தொங்க விட்டு

உங்களவர்களை அர்ச்சகர்களாக

அவர்களைப் பார்த்து, பாதுகாத்து மகிழ்வதை!

தங்கள் பிள்ளைகளுக்கான

பரதநாட்டிய பயிற்சிக்காவும்,

அரங்கேற்றத்திற்காகவும்

இலட்சம் இலட்சமாய்க் கொட்டிக்

கொடுத்து அழைத்து, வரவேற்று,

சுற்றிக் காட்டி, கண்கலங்க

வழியனுப்பி வைத்து நெகிழ்வதை!

இந்தப் படம் எடுக்கப்போன

இடங்களில் கூடஞ் நீங்கள்

பெரிய்ய நடிகர் என்பதற்காக

உங்களுக்காக

தங்கள் நேரத்தை வீணாக்கி

தாங்கள் சம்பாதித்த பணத்தை வீணாக்கி,

எவ்வளவோ உதவியிருப்பார்களே!

அத்தகைய பண்பாடு மிக்க

எங்கள் ஈழத்தமிழ் உறவுகளுக்கு

நீங்கள் காட்டுகிற

நன்றி இதுதானா கமல்!

செருப்புதானா கமல்!

ஈழத் தமிழ் என்றால்

எங்களுக் கெல்லாம்

கண்ணீர்த்

தமிழ்!

குருதித்

தமிழ்!

இசைப்பிரியா என்கிற

ஊடகத் தமிழ்த்தங்கை

உச்சரித்த

வலிசுமந்த

தமிழ்!

ஆனால்.. உங்களுக்கு மட்டும்

எப்படி கமல்

அது

எப்போதும்

நகைச் சுவைத்

தமிழாக மட்டுமே

மாறிவிடுகிறது!

பேசி நடிக்கத் தமிழ் வேண்டும்.

தாங்கள் நடித்த

படத்திற்குக் கோடிகோடியாய்

குவிக்க.. தமிழனின் பணம்

வேண்டும்.

ஆனால்

"அவன் தமிழ்

சாக வேவண்டும்

அவன் தமிழ்

தெருப் பொறுக்க

வேண்டும்."

தெருப் பொறுக்குதல்

கேவலமன்று.. கமல்.

அது

தெருவைத் தூய்மை

செய்தல்!

தோட்டி என்பவர்

தூய்மையின் தாய்..

தெருவை மட்டும் தூய்மை

செய்தவர்கள் இல்லை..

நாங்கள்

உலகையே

தூய்மை செய்தவர்கள்..

"யாதும் ஊரே யாவரும்‘

கேளிர்' என்று

உலகையே பெருக்கியவர்கள்

உங்கள்.

எங்களைப் பார்த்து

செருப்பைத் தூக்கிக்

காட்டிய

கமல் அவர்களே..

உங்களை

தமிழ்தான்

காப்பாற்றியது.

பசி நீக்கியது. நீங்கள்

வாழ்கிற வீடு, நீங்கள் போகிற

மகிழ்வுந்து,‘

நீங்கள் உடுத்துகிற உடை

அனைத்திலும்..

உங்கள்

பிள்ளைகள் படிக்கிற

படிப்பில்.. புன்னகையில்

எல்லாம்

எல்லாம்!

கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட

எங்கள்

ஈழத் தமிழ் உறவுகளின்

சதைப் பிசிறுகள்

இரத்தக் கவுச்சிகள்

அப்பிக் கிடக்கின்றன.

அப்பிக் கிடக்கின்றன.

மோந்து பாருங்கள்.

எங்கள் இரத்த வாடையை

மோந்து பாருங்கள்

மோந்தாலும்.. எங்கள் இரத்த வாடையை மீறி

உங்கள்

படத்தில் வருகிற கைபேசியின் மேல்

வருகிற

மூத்திர வாடைதானே உங்களுக்கு

அதிகமாய் வரும்.

கமல்..

நகைச் சுவை என்பது

கேட்கும் போது

சிரிக்க வைப்பது!

நினைக்கும் போது

அழ வைப்பது!

ஆனால் உங்கள்

நகைச்சுவை

செருப்பால் அடித்து

எங்களைச்

சிரிக்கச் சொல்கிறதே!

இதில் வேறு வீரம்..

அகிம்சைக்கான

வியாக்யானங்கள்!

அன்பான கமல்..

கைநாட்டு மரபிலிருந்து எங்களைக்

கையெழுத்து மரபிற்கு

அய்யாவும் அண்ணலும்

கரையேற்றி விட்டார்கள்.

இனியும் உங்கள்

சூழ்ச்சி செருப்புகளை

அரியணையில் வைத்து ஆளவிட்டு

அழகு பார்க்க மாட்டோம்.

சீதையைப் பார்த்து

"உயிரே போகுதே'

பாட மாட்டோம்.

சூர்ப்பநகையின் மூக்கறுபட்ட

வன்மம் அள்ளித்தான்

"உயிரே போகுதே'

பாடுவோம்.

ஆம்.. கமல்

தாங்கள் சொல்லியபடி..

எம்

தமிழ்

தெரு பொறுக்கும்!

எவன்

தெருவில்

எவன் வந்து

வாழ்வது

என்று

தெரு பொறுக்கும்!

அப்புறம்

எவன் நாட்டை

எவன்

ஆள்வது

என்ற

விழிப்பில்

நாடும்

பொறுக்கும்.

அதற்கு

வருவான்‘

வருவான்

வருவான்

"தலைவன்

வருவான்!'

இந்தத் தலைப்பையாவது

கொச்சை செய்யாமல்

விட்டுவிடுவது நல்லது கமல்.

நீங்கள் பிறந்த இனத்திற்கு

நீங்கள்

உண்மையாக

இருக்கிறீர்கள் கமல்!

நாங்கள்

பிறந்த

இனத்திற்கு

நாங்கள்

உண்மையாக இருக்க வே‌ண்‌டா‌மா‌?



அன்புடன்

அறி‌வு‌மதி

புதன், 5 ஜனவரி, 2011

கமல் பதில் சொல்லுங்கள்

அறிவுமதியின் கேள்வியை உலகத்தமிழர்களின் சார்பாக நானும் திடமாக வழிமொழிகிறேன். அதற்கு சரியான பதிலையும் உலகத்தமிழர்களின் சார்பாக நானும் எதிர்ப்பார்க்கிறேன். கமலிடம் எனது கேள்வி:எங்களின் அழுகையைத் திருடி நகை செய்வது துரோகம்?.
கிடைக்கும் புத்தகங்களை எல்லாம் வாழ்வில் நுழைக்க பார்க்கிறேன்.கிடைத்த பொருட்களை எல்லாம் வாயில் நுழைக்க முயற்சிக்கும் ஒரு மழலையைப்போல்

செவ்வாய், 4 ஜனவரி, 2011

பனி

அதிகாலையில்

வானமகள் பூசும்

பெளடரின் சேதாரமா?



இரவுக்காதலன்

மண்ணின்

சிவந்த உதடுகளுக்கு

வைக்கும்

வெள்ளைமுத்தமா?



சொர்கத்தின்

பருத்திக்காட்டிலிருந்து

பறந்துவந்த குளிர்பஞ்சா ?



பசுமைக் கணவன்

பரிதாப சாவினால்

பூமிப்பெண் கட்டிய

வெள்ளை சேலையா?



நிலாமகள்

குளித்ததில் தெறித்த

சோப்பு நுரைகளா?



வெள்ளைச் சிந்தனையோடு

தரை இறங்கிய

வேற்றுகிரகத்தின்

சமாதான தூதுவர்களா?



நிலவில் இருக்கும்பாட்டி

வெற்றிலை இடிக்கும்போது

சிதறிய

வெள்ளை சுண்ணாம்பா?



கொள்ளைக்கவிதைகளை எழுத

பிரமன் அனுப்பிய

வெள்ளை காகிதங்களா?


ஆகாயத்தின்

ஆயுதபூஜை கொண்டாட்டத்தில்

சிதறி விழுந்த

பொறிகளா?




வானக் கரும்பலகையில்

இறைவன் எழுதியபோது

உதிர்ந்த

சாக்பீஸ் சாம்பல்களா?




வானத்தில் யாரோ

வெள்ளை அவல்களை

தூற்றுகிறார்களா?


வானக் கூரைக்கு

பட்டிபோட்டு

தேய்க்கிறார்கள் போலும்.?


நட்சத்திர மழலைகளுக்கு

வானத்தாய் ஊட்டும்

பால் சிந்துகிறதோ ?