திங்கள், 27 ஜூன், 2011

தேசிய விருதாளர் ஜீவாவும் நானும்


மனதின் திரைசீலையை விலக்கிப்பார்த்தால் நட்பின் காட்சிகள் விரிகின்றன.ஜீவாவும் நானும் நீண்டகால நண்பர்கள் அல்ல.ஜீவாவைப் பற்றி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்,ஆனால் ஜீவாவுடனான நேரடி தோழமைக்கு உண்மையில் ஒரு ஐந்து வயதுதான் ஆகிறது.இருந்த போதிலும் ஜீவா ஒரு இனிய நண்பர்.இலக்கியக் கூட்டங்கள் திரையிடல் நிகழ்வுகள் ஓவியக்கண்காட்சிகள் என்று மொழியும் கலையும் சார்ந்தவற்றில் மட்டுமே சந்தித்து சிந்தனைகளைப் பரிமாறிக்கொண்டிருக்கிறோம்.என் எழுத்திற்கு இவரது ஓவியத்திற்கும் இடையேயான தொடர்புதான் என்னையும் அவரையும் ஒன்று சேர்த்திருக்கிறது.

மனிதக்குலத்திற்கான மகத்தான வேதமாக விளங்கும் திருக்குறளை இன்னும் புதிய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கவில்லையே என்ற ஏக்கத்தில் நான் எழுதிய நூல்தான் "காதல் குறட்பாக்கள்" ஆகும். இன்பத்துப்பாலை இன்றைய தலைமுறை படிக்கும் விதத்தில் கவிதைப்பாலாக மாற்றிய அந்த நூலுக்கு தேவையான கோட்டோவியங்களுக்காக பிரத்யேகமான ஒரு கலைஞரைத் தேடிய போதுதான் எனக்கு ஜீவா அறிமுகத்திற்குப் பிறகு நெருக்கமானார். மிக மிக குறுகிய காலக்கட்டத்தில் அழகாய் அர்த்தப்பாடுடைய வள்ளுவக் கவிதைகளை ஓவியங்களாகத் தீட்டி தந்தது பிரமிப்பை ஏற்படுத்தியது திருவாளர் ஜீவா அவர்கள். காதலின் எல்லா உணர்வுகளையும் பிசகாமல் என் கவிதையையும் தாண்டி ஜீவாவின் ஓவியங்களே ஆத்மார்த்தமாய் பேசின.ஜீவாவின் இந்த பங்களிப்பு ஜீவாவிற்குள் இருக்கும் ஒரு நேர்த்தியான இலக்கிய வாதியை எனக்கு அடையாளம் காட்டியது.வள்ளுவன் சங்ககாலத்தமிழில் சொன்னதை சிரத்தைஎடுத்து நான் சமகாலத் தமிழில் சொல்லிமுடித்தேன்.ஜீவாவோ மிகவும் இலகுவாக ஒவ்வொரு ஓவியத்திலும் நூறு நூறு செய்திகளை அழகாக உச்சரிக்க வைத்தார்.இந்நூலுக்கு அணிந்துரை எழுதிய வானம்பாடிக் கவிஞர் 'சிற்பி' பாலசுப்ரமணியன் அவர்கள் கவிதை குறித்தும் ஜெவாவின் படங்கள் குறித்தும் சிலாகித்துக்கொண்டது இன்னும் கெளரவம்.

புலம் பெயர்ந்த தமிழர்களின் உச்சபட்ச துயரங்களை ஒரு அரை நூற்றாண்டிக்கு முன் பேசிய படம் தான் 'பராசக்தி".என் நெஞ்சில் பசுமரத்தாணி போல ஆழப்பதிந்த இந்த உலகத்திரைப்படத்தை திரைக்கவிதையாக வடிக்கவேண்டும் என்ற வேட்கையில் நான் படைத்த முதல் நூல்தான் "பராசக்த்தி திரைக்கவிதை" என்ற ஆகும்.ஒரு பகலில் படம் கண்டு ஓரிரவில் எழுதி முடிக்கப்பட்ட நூல்தான் இந்த பராசக்தி திரைக்க்கவிதை ஆகும்.தலைப்புகள் கொடுத்து காட்சி காட்சிகளாக எழுதப்பட்ட இந்நூல் பழைய திரைப்படத்தில் சின்ன சின்ன அடையாளத்தைத் தாங்கிவரவேண்டும் என்ற எண்ணத்தில் முதன் முதலில் ஓவியர் ஜீவாவை அணுகி என் திட்டத்தை வெளியிட்டேன். முதலில் யோசித்த ஜீவா ,பிறகு சம்மதித்து ஊதியம் பெறாமல் கோட்டோவியங்களை உயிரோவியங்களாகத் தீட்டித்தந்தார்.நெருப்பு வரிகளுக்கு நெய் ஊற்றியதைப் போல ஜீவாவின் கோட்டோவியங்கள் அடர்த்தியாகவும் அழுத்தமாகவும் வெளிப்பட்டிருந்தன. வானம்பாடிக்கவிஞர் புவியரசு அவர்கள் இந்நூலுக்கு அணித்துரையும் ,கவிக்கோ அப்துல் ரகுமான் இந்நூலுக்கு வாழ்த்துரையும் வழங்கி எங்கள் இருவரையும் சிறப்பித்திருந்தார்கள்.

என் ஆய்வு நூலான "இருபதாம் நூற்றாண்டு தமிழ்கவிதைகள்" என்ற நூலும் ஜீவாவின் ஓவியங்களோடு வெளிக்கொண்டுவரப்பட்டது. இலக்கிய காலகட்டங்களில் கவிதைகள் உணர்த்தும் கருப்பொருள்களை உருப்பொருள்களாக கண்ணுக்கு முன்னால் ஓவியர் ஜீவா அவர்கள் கொண்டுவந்து நிறுத்தினார்.இந்த நூல் கல்வியாளர்கள் மத்தியில் உலக அளவில் பெரிய வரவேற்பை எங்கள் இருவருக்கும் பெற்றுத்தந்தது.இப்படியாக எமது மூன்று நூல்களுக்கும் தேசிய விருதாளர் திருமிகு ஜீவா அவர்களே கோட்டோவியங்களை வரைந்து தந்தது எனக்கு தேசிய விருது கிடைத்ததைப் போன்ற இனிய மாயையை உருவாக்கவே செய்திருக்கிறது.ஒரு தேசிய விருதாளர் எனது நூல்களுக்கு கோட்டோவியங்களை வரைந்திருக்கிறார் என்ற பெருமிதம் எப்போதும் எனக்கு உண்டு.

ஒரு மனிதர் ஏதேனும் ஒரு களத்தில் சிறப்பு வாய்ந்தவராக இருப்பதுதான் இயல்பு,ஆனால் ஜீவா அதற்கு விதிவிலக்கு,ஜீவா ஒரு ஓவியர்,ஒரு திரை விமர்சகர்,ஒரு படைப்பாளி, ஒரு எழுத்தாளர்,ஒரு சினிமாகாரர், ஒரு புகைப்பட கலைஞர்,ஒரு கணினி வரைகலைஞர், ஒரு வாசகர், ஒரு தொழிலகத்தின் அதிபர்,ஒரு பன்மொழி வித்தகர், ஒரு பொதுவுடைமைவாதி,ஒரு திறனாய்வாளர்,ஒரு காலாரசிகர்,ஒரு கலைக்குடும்பத்தவர், ஒரு வழக்கறிஞர் ,ஓவியம் குறித்த பல நிலைகளில் சோதனை முயற்சிகள் செய்த தேர்ந்த ஞானி.சித்ரகலா அகாடமியின் நிறுவனர்,கோவை சினிமா குழுமத்தின் பிதாமகன் ,ஒரு வலைப்பதிவாளர், ............என்று இவரின் பன்முகம் விரிகிறது.

தனது கடந்த கால கலைதாகங்களை தன் நெஞ்சத்தில் நெடுநாட்கள் சுமந்து வந்த ஜீவா,தான் பார்த்த ரசித்த உள்ளூர் மற்றும் உலக சினிமாக்களைப்பற்றிய கட்டுரைகளை ரசனை என்ற இதழில் எழுத, அதன் தொகுப்பாய் நெய்யப்பட்டதுதான் அவருக்கு தேசிய விருதை பெற்றுத்தந்த "திரைச்சீலை"ஆகும்.நாஞ்சில் நாடுக்காரராக இருந்தாலும் கொங்கு நாட்டில் பிறந்து கிளைத்து வளர்ந்து ரசித்து ருசித்து வடித்துதந்த அந்த பொக்கிஷம் இன்று அவரை ஒரு தேசியவிருதாளராக அடையாளம் காட்டி இருக்கிறது.

யாரால் எதுவால் ஒரு நல்ல கலைஞர்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டு புறந்தள்ளப்பட்டாலும் காலம் அவர்களை அடையாளம் கண்டுகொண்டு சிம்மாசனம் அமைந்தது அந்த கலைஞனை அதில் அமரவைத்து அழகு பார்க்கும் என்பதற்கு ஜீவா ஒரு தித்திப்பான உதாரணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக