
கண்களை நனைத்த கண்ணீர்
என் கன்னம் நனைப்பதற்கு முன்
சுட்டுவிரல் தந்து தொட்டுத்துடைத்தாய் ...
க'வலை'யில் மூழ்கி நான்
முடிந்து போகும் முன்
அன்பின் வலைவிரித்து இதயக்கரை ஏற்றினாய்...
வருத்தங்களால் வாடிப்போயிருந்த
என் வதனபூங்காவில்
உன் புன்னகை விதைதூவி பூக்களை மலர்த்தினாய் ....
கோபங்களால் உன்னை காயப்படுத்தி
நான் காயப்பட்ட போதெல்லாம்
நீ மெளனங்களால் மருந்துபூசினாய்...
களைத்து சோர்ந்துவிட்ட பொழுதுகளில்
களிக்கும் சொல்லிசையால் உற்சாகம் ஊட்டினாய்...
நான் தேம்பித்துவண்ட நிமிடங்களில்
மார்பினில் சாய்த்து தோள்களைத் தட்டினாய்...
எதிர்ப்பார்த்திராத வேளைகளில்
தரிசனம் தந்து கரிசனம் காட்டினாய்...
கேட்டதும் தந்தாய் கேட்காததும் தந்தாய்
என் பசியறிந்து இறைபோட்டாய்.....
உன்னை நிறைக்கமறக்காமல் மறக்கநினைக்காமல்
ஒவ்வொரு வினாடியும் நினைவில் இருந்தாய்...
தூக்கம் தொலைத்து துவண்ட நிமிடங்களில்
உன் வார்த்தைதாலாட்டில் இமைமூடவைத்தாய்...
நான் புரிந்திராத என்னை
நீ நன்கு புரிந்திருந்து புரியவைத்தாய்...
என் துன்பங்களை வாங்கிக்கொண்டு
இன்பங்களை பரிசாக்கி மகிழ்ந்தாய்...
தகிக்கும் என் சகார இதயத்தை
உன் டார்ஜிலிங் சிரிப்புக்களால் சில்லிடவைத்தாய்....
கண்களை மூடி ஒருமித்த வேளைகளில்
நெற்றியின் நடுவில்நின்று தியானப் பொருளானாய்...
இவைகளில்
ஏதேனும் ஒன்றாய் இருந்தால் போதும்.
உங்களைக்கொண்டாடும்
அவன் தோழன்/அவள் தோழி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக