வியாழன், 7 ஜூலை, 2011


செம்மொழிமாநாட்டில் கபிலர் அரங்கிற்கு நான் பொறுப்பேற்றிருந்த போது இயற்கை எய்திய பின்பும் தமிழாகவே வாழ்ந்துகொண்டிருக்கும் இருக்கும் தமிழறிஞர் திரு சிவத்தம்பி அவர்களை நேரில் சந்திக்கிற உரையாடுகிற ஓர் அரிய
வாய்ப்பு எனக்கு கிடைத்தது.அவர் அமர்ந்திருந்த சக்கர நாற்காலியை என் திருக்கரங்களால் நகர்த்திச் செல்கிற பாக்கியமும் கிடைத்தது.அன்னாருக்கு என் ஞாபகக் கண்ணீரும் ஆன்மாவின் இரங்கலும்....

செவ்வாய், 5 ஜூலை, 2011


"ஜனகணமன" என்னும் நமது தேசிய கீதத்தை உலகத்தில் சிறந்த தேசிய கீதமாக UNESCO அறிவித்துள்ளது.நமது தேசிய கீதம் உலகம் பேசிய கீதமானதற்காக பெருமிதம் கொள்வோம்.இந்தியன் என்று இறுமாப்பு கொள்வோம்.வந்தே மாதரம்.(சுத்தமான சுதேசிகள் மட்டும் இங்கு உங்கள் வாழ்த்துக்களைப் பதிவு செய்யுங்கள்)

கட்டிப்புடி வைத்தியம்


அவள் கருங்கூந்தல் காட்டுக்குள்

என்விரல்கள் நுழைந்து

அலைந்து களைத்து களிக்கின்றன....



கருத்த பூமியாய் சுழலும்

கண்மணியை

பார்த்ததால் பரவசப்பட்டதால் வேர்த்ததால்

இமைகள் கவறிகள் வீசுகின்றன...



மதுக்கோப்பைகளாய்

செக்கச்சிவந்த உதடுகள் நான்கும்

இதழ்மாறி பரிமாறி தேனூறி தளும்புகின்றன...



பத்துப்பத்தாய் கொத்துக்கொத்தாய்

இருபதுவிரல்கள் பின்னிய புள்ளியில்

மின்சாரம் பாய்கின்றன...



பேசியவார்த்தையில் நாசியில்

பாலைவன வெப்பம் தகிக்கிறது...



எது உடல்? எது உயிர்? என்றறியாமல்

ஆன்மா தவிக்கிறது...



வரம்பையும் மீறி நரம்பின் நாளங்களில்

குருதியும் நிறைகிறது ...



எண்ணையும் ஊற்றவில்லை

தீக்குச்சி கிழிக்கவில்லை

எப்படியோ என்னுடல்

பனியிலும் எரிகிறது ...



அணைக்கிறேன் அணைக்கிறேன்

அணைக்க அணைக்க

இன்னும் கொழுந்துவிடுகிறது...



அவள் மொழி

காற்றில் மிதந்து காதில் நுழைந்து

உயிர்எல்லாம் இனிக்கிறது...



மயிர்

கூச்செறிய

காமன் பூச்சொரிய

உடலெல்லாம் மலர்கிறது...



தாள்களா? தோள்களா?

என்றறியாமல் அதில்

கவிதை நிறைகிறது ...



தூக்கத்தை தகர்த்து

ஏக்கத்தை உதிர்த்து

நிகழ்வில் நிலைக்கிறது...



எல்லா நிலங்களையும்

எனது ஜீவநதி

ஓடி நனைக்கிறது..

.

காமமும் கடவுளும்

ஒன்றுதான் என்றுதான்

இயற்கை சொல்கிறது.

திங்கள், 27 ஜூன், 2011

தேசிய விருதாளர் ஜீவாவும் நானும்


மனதின் திரைசீலையை விலக்கிப்பார்த்தால் நட்பின் காட்சிகள் விரிகின்றன.ஜீவாவும் நானும் நீண்டகால நண்பர்கள் அல்ல.ஜீவாவைப் பற்றி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்,ஆனால் ஜீவாவுடனான நேரடி தோழமைக்கு உண்மையில் ஒரு ஐந்து வயதுதான் ஆகிறது.இருந்த போதிலும் ஜீவா ஒரு இனிய நண்பர்.இலக்கியக் கூட்டங்கள் திரையிடல் நிகழ்வுகள் ஓவியக்கண்காட்சிகள் என்று மொழியும் கலையும் சார்ந்தவற்றில் மட்டுமே சந்தித்து சிந்தனைகளைப் பரிமாறிக்கொண்டிருக்கிறோம்.என் எழுத்திற்கு இவரது ஓவியத்திற்கும் இடையேயான தொடர்புதான் என்னையும் அவரையும் ஒன்று சேர்த்திருக்கிறது.

மனிதக்குலத்திற்கான மகத்தான வேதமாக விளங்கும் திருக்குறளை இன்னும் புதிய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கவில்லையே என்ற ஏக்கத்தில் நான் எழுதிய நூல்தான் "காதல் குறட்பாக்கள்" ஆகும். இன்பத்துப்பாலை இன்றைய தலைமுறை படிக்கும் விதத்தில் கவிதைப்பாலாக மாற்றிய அந்த நூலுக்கு தேவையான கோட்டோவியங்களுக்காக பிரத்யேகமான ஒரு கலைஞரைத் தேடிய போதுதான் எனக்கு ஜீவா அறிமுகத்திற்குப் பிறகு நெருக்கமானார். மிக மிக குறுகிய காலக்கட்டத்தில் அழகாய் அர்த்தப்பாடுடைய வள்ளுவக் கவிதைகளை ஓவியங்களாகத் தீட்டி தந்தது பிரமிப்பை ஏற்படுத்தியது திருவாளர் ஜீவா அவர்கள். காதலின் எல்லா உணர்வுகளையும் பிசகாமல் என் கவிதையையும் தாண்டி ஜீவாவின் ஓவியங்களே ஆத்மார்த்தமாய் பேசின.ஜீவாவின் இந்த பங்களிப்பு ஜீவாவிற்குள் இருக்கும் ஒரு நேர்த்தியான இலக்கிய வாதியை எனக்கு அடையாளம் காட்டியது.வள்ளுவன் சங்ககாலத்தமிழில் சொன்னதை சிரத்தைஎடுத்து நான் சமகாலத் தமிழில் சொல்லிமுடித்தேன்.ஜீவாவோ மிகவும் இலகுவாக ஒவ்வொரு ஓவியத்திலும் நூறு நூறு செய்திகளை அழகாக உச்சரிக்க வைத்தார்.இந்நூலுக்கு அணிந்துரை எழுதிய வானம்பாடிக் கவிஞர் 'சிற்பி' பாலசுப்ரமணியன் அவர்கள் கவிதை குறித்தும் ஜெவாவின் படங்கள் குறித்தும் சிலாகித்துக்கொண்டது இன்னும் கெளரவம்.

புலம் பெயர்ந்த தமிழர்களின் உச்சபட்ச துயரங்களை ஒரு அரை நூற்றாண்டிக்கு முன் பேசிய படம் தான் 'பராசக்தி".என் நெஞ்சில் பசுமரத்தாணி போல ஆழப்பதிந்த இந்த உலகத்திரைப்படத்தை திரைக்கவிதையாக வடிக்கவேண்டும் என்ற வேட்கையில் நான் படைத்த முதல் நூல்தான் "பராசக்த்தி திரைக்கவிதை" என்ற ஆகும்.ஒரு பகலில் படம் கண்டு ஓரிரவில் எழுதி முடிக்கப்பட்ட நூல்தான் இந்த பராசக்தி திரைக்க்கவிதை ஆகும்.தலைப்புகள் கொடுத்து காட்சி காட்சிகளாக எழுதப்பட்ட இந்நூல் பழைய திரைப்படத்தில் சின்ன சின்ன அடையாளத்தைத் தாங்கிவரவேண்டும் என்ற எண்ணத்தில் முதன் முதலில் ஓவியர் ஜீவாவை அணுகி என் திட்டத்தை வெளியிட்டேன். முதலில் யோசித்த ஜீவா ,பிறகு சம்மதித்து ஊதியம் பெறாமல் கோட்டோவியங்களை உயிரோவியங்களாகத் தீட்டித்தந்தார்.நெருப்பு வரிகளுக்கு நெய் ஊற்றியதைப் போல ஜீவாவின் கோட்டோவியங்கள் அடர்த்தியாகவும் அழுத்தமாகவும் வெளிப்பட்டிருந்தன. வானம்பாடிக்கவிஞர் புவியரசு அவர்கள் இந்நூலுக்கு அணித்துரையும் ,கவிக்கோ அப்துல் ரகுமான் இந்நூலுக்கு வாழ்த்துரையும் வழங்கி எங்கள் இருவரையும் சிறப்பித்திருந்தார்கள்.

என் ஆய்வு நூலான "இருபதாம் நூற்றாண்டு தமிழ்கவிதைகள்" என்ற நூலும் ஜீவாவின் ஓவியங்களோடு வெளிக்கொண்டுவரப்பட்டது. இலக்கிய காலகட்டங்களில் கவிதைகள் உணர்த்தும் கருப்பொருள்களை உருப்பொருள்களாக கண்ணுக்கு முன்னால் ஓவியர் ஜீவா அவர்கள் கொண்டுவந்து நிறுத்தினார்.இந்த நூல் கல்வியாளர்கள் மத்தியில் உலக அளவில் பெரிய வரவேற்பை எங்கள் இருவருக்கும் பெற்றுத்தந்தது.இப்படியாக எமது மூன்று நூல்களுக்கும் தேசிய விருதாளர் திருமிகு ஜீவா அவர்களே கோட்டோவியங்களை வரைந்து தந்தது எனக்கு தேசிய விருது கிடைத்ததைப் போன்ற இனிய மாயையை உருவாக்கவே செய்திருக்கிறது.ஒரு தேசிய விருதாளர் எனது நூல்களுக்கு கோட்டோவியங்களை வரைந்திருக்கிறார் என்ற பெருமிதம் எப்போதும் எனக்கு உண்டு.

ஒரு மனிதர் ஏதேனும் ஒரு களத்தில் சிறப்பு வாய்ந்தவராக இருப்பதுதான் இயல்பு,ஆனால் ஜீவா அதற்கு விதிவிலக்கு,ஜீவா ஒரு ஓவியர்,ஒரு திரை விமர்சகர்,ஒரு படைப்பாளி, ஒரு எழுத்தாளர்,ஒரு சினிமாகாரர், ஒரு புகைப்பட கலைஞர்,ஒரு கணினி வரைகலைஞர், ஒரு வாசகர், ஒரு தொழிலகத்தின் அதிபர்,ஒரு பன்மொழி வித்தகர், ஒரு பொதுவுடைமைவாதி,ஒரு திறனாய்வாளர்,ஒரு காலாரசிகர்,ஒரு கலைக்குடும்பத்தவர், ஒரு வழக்கறிஞர் ,ஓவியம் குறித்த பல நிலைகளில் சோதனை முயற்சிகள் செய்த தேர்ந்த ஞானி.சித்ரகலா அகாடமியின் நிறுவனர்,கோவை சினிமா குழுமத்தின் பிதாமகன் ,ஒரு வலைப்பதிவாளர், ............என்று இவரின் பன்முகம் விரிகிறது.

தனது கடந்த கால கலைதாகங்களை தன் நெஞ்சத்தில் நெடுநாட்கள் சுமந்து வந்த ஜீவா,தான் பார்த்த ரசித்த உள்ளூர் மற்றும் உலக சினிமாக்களைப்பற்றிய கட்டுரைகளை ரசனை என்ற இதழில் எழுத, அதன் தொகுப்பாய் நெய்யப்பட்டதுதான் அவருக்கு தேசிய விருதை பெற்றுத்தந்த "திரைச்சீலை"ஆகும்.நாஞ்சில் நாடுக்காரராக இருந்தாலும் கொங்கு நாட்டில் பிறந்து கிளைத்து வளர்ந்து ரசித்து ருசித்து வடித்துதந்த அந்த பொக்கிஷம் இன்று அவரை ஒரு தேசியவிருதாளராக அடையாளம் காட்டி இருக்கிறது.

யாரால் எதுவால் ஒரு நல்ல கலைஞர்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டு புறந்தள்ளப்பட்டாலும் காலம் அவர்களை அடையாளம் கண்டுகொண்டு சிம்மாசனம் அமைந்தது அந்த கலைஞனை அதில் அமரவைத்து அழகு பார்க்கும் என்பதற்கு ஜீவா ஒரு தித்திப்பான உதாரணம்.

சனி, 25 ஜூன், 2011

'தகிதா ஊடகக் களம்' -தயாரித்த "பூமித் தொட்டில்" என்னும் சூழலியல் சார்ந்த ஆவணகுறும்படம்

தகிதா-வின் புதிய கிளையான 'தகிதா ஊடகக் களம்' -தின் சார்பாக தயாராகியுள்ள நிழற்படங்களால் உருவாக்கப்பட்ட "பூமித் தொட்டில்" என்னும் சூழலியல் சார்ந்த ஆவணகுறும்படம் விரைவில் முகநூல் தோழர்களின் பார்வைக்கு வரவிருக்கிறது.
காத்திருங்கள்.

பெயர்:

"பூமித் தொட்டில்"


வகை:

நிழற்பட ஆவணம்


காலம்:

பத்து நிமிடங்கள்

கரு:

சூழலியல் சார்ந்தது


ஒலிக்கலவை

மாண்டேஜ் மீடியா ப்ரொடக்சன்


நிழற்படம் மற்றும் நிழற்படத்தொகுப்பு:

நடராஜன் ஆதிலட்சுமி( மலேசியா)



எண்ணம் - எழுத்து - குரல் - தயாரிப்பு

போ. மணிவண்ணன்(இந்தியா)

திங்கள், 20 ஜூன், 2011


"எனக்கும் ஒரு புத்தகம்கொடுங்க பெரியப்பா....!
எனக்கும் ஒரு புத்தகம்கொடுங்க பெரியப்பா.....!"
என்று
நான் படிக்கும்போதெல்லாம்
இடைவிடாது கேட்கும்
இரண்டு வயதாகும்
என் தம்பிமகளின் நச்சரிப்பு
என் பால்யகால மக்குத்தனத்தை
நினைவூட்டி
வெட்கப்பட வைக்கிறது என்னை

ஞாயிறு, 12 ஜூன், 2011

திரைத் திமிங்கிலங்களிடம் சிக்கிக்கொள்ளும் நல்ல மீன்களில் ஒன்று "ஆண்மைத்தவறேல்


மக்களிடம் மசாலாக்களை விற்பனை செய்யும் சினிமா திமிகிலங்கள் நல்ல மீன்களை உயிரோடு வாழவிடுவதே இல்லை.சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் "ஆண்மைத்தவறேல்' திரைப்படம் நல்ல மீன்களின் ஒரு மீன். வெளியான நாளிலிருந்து திரை வணிகக்கடலில் சர்வாதிகார புயல்களுக்கு இடையில் தன்னை தக்கவைத்துக்கொண்டே இருக்கிறது.நல்ல படங்கள் திரையரங்கிலிருந்து விரட்டப்படும் முன்னதாக பார்த்துவிடுவது அந்த நல்ல படைப்புக்கு நாம் கொடுக்கிற