சனி, 5 பிப்ரவரி, 2011


முகம் பூத்து பேசிய
ஆயிரம் ஆயிரம்
அழகிய வார்த்தைகளை
உன்
ஒற்றை கடுஞ்சொல்
உதிர்த்துப் போட்டது.

விடியலில்
கருத்து மெத்தையிலிருந்து
எழுத்துப் போர்வையை விலக்கி
எழுந்திருந்த போதுதான்
தெரிந்துகொண்டேன்
நேற்றைய நடுநிசியில்
புத்தகங்களைப் படித்தபடியே
தூங்கிப்போயிருந்ததை

சிங்களனைத் தின்ற
தமிழமீன் சிங்களக்கரையில்
தமிழனைத் தின்ற
சிங்களமீன்
தமிழக் கரையில் .
பெருமிதம் பேசுகின்றன
சர்வதேச
அரக்க மீன்களுக்கு
ஆகாரமாகப் போவதை
உணராமல்

வியாழன், 3 பிப்ரவரி, 2011


யாரும் கலைக்கவில்லை
தானாகவும் கலையவில்லை
யுகங்கள் கடந்த
காத்திருப்பில்
உறைந்துகொண்டே இருக்கிறது
தனிமை

புதன், 2 பிப்ரவரி, 2011

மாண்புமிகு பேராசிரியர் க.அன்பழகன் ஐயா அவர்கள் தகிதா நூல்களைப் பெற்றுக்கொண்டார்



முக்கால் நூற்றாண்டுக்கும் (75-ஆண்டுகள் )மேலாக தமிழக அரசியலிலில் தொடர்ந்து பங்கெடுத்துக் கொண்டிருக்கிற தொண்ணூறு வயதாகிற (90) வணங்குதலுக்குரிய மாண்புமிகு பேராசிரியர் ஐயா அவர்களை நேற்று முன்தினம் சந்திக்கிற நல்ல வாய்ப்பு எனக்கு கிட்டியது.

அந்த சந்திப்பில் ஐயா அவர்களிடம் தகிதா பதிப்பகத்தில் வெளியாகியுள்ள பதினான்கு நூல்களையும் வழங்கி மகிழ்ந்தேன்.
வாழ்த்தினார் பாராட்டினார் ஆசிர்வதித்தார்



வாழ்த்தினார் பாராட்டினார் ஆசிர்வதித்தார்

எஸ்.வைதீஸ்வரன் என்றொரு கவிதை பறவை

தமிழ் புதுக்கவிதை உலகில் தனக்கென தனி அடையாளத்தை தன் படைப்புகளால் பெற்று , கவிதை இலக்கிய வரலாற்றில் கலந்து என்றென்றும் வற்றாத கவிதை நதியாக இன்றும் ஓடிக்கொண்டிருக்கும் மூத்த கவிதை படைப்பாளர் திரு எஸ்.வைத்தீஸ்வரன் அவர்களை சந்தித்து சுமார் ஒருமணிநேரம் உரையாடுகிற நல்ல வாசிப்பை இன்று பெற்றேன்.

சுமார் முக்கால் நூற்றாண்டைத் தாண்டி கவிதைக்காகவே இன்னும் வாழ்ந்துக்கொண்டிருக்கிற இந்த மூத்த படைப்பாளியை சந்தித்து தகிதா மொத்த வெளியீடுகளான பதினான்கு நூல்களை அவரிடம் வழங்கி பெருமிதப்பட்டுக்கொண்டேன்.ஆச்சரியமும் மகிழ்ச்சியும் பொங்க சிரிக்கும் புன்னகை விழிகளோடு அவைகளை காதலோடு பார்த்தார்.மகிழ்தார் பாராட்டினார்

தனது பத்தொன்பது வயதிலிருந்து கவிதை எழுதத் தொடங்கி தனது முப்பத்தி நான்காவது வயதில் தனது கவிதை நூலான 'உதய நிழல்' -ஐ 1970௦ இல் வெளியிட்டார் .சுமார் நூற்று நாற்பத்தைந்து (rs.145) ரூபாய் ஊதியம் பெற்றுக்கொண்டிருந்த அன்றைய சூழலில் ரூ.முன்னூற்று பதினைந்து (rs.315)ரூபாய் செலவில் தொள்ளாயிரம் பிரதிகள் தயார் செய்திருக்கும் இவரது துணிச்சலுக்கு மனதிற்குள் தலைவணங்கினேன் கடந்த ஐம்பது வருடங்களில் அந்த தொள்ளாயிரம் நூல்களில் ஐநூறு நூல்கள் மட்டுமே விற்றிருக்கின்றன. நாற்பது வயதாகும் அந்த நூலில் ஆறு பிரதிகளை ஐயா அவர்களின் திருக்கரங்களால் பெற்றுக்கொண்டேன்.இன்னும் அந்த நூல்களின் முகப்பிற்கு முத்தம் வைக்கலாம்

அந்த காலத்தில் ஒரு படைப்பாளன் நூல் வெளியிட வேண்டும் என்றால் சுமார் பன்னிரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்தது என்று ஆதங்கப்பட்ட போது அவரது கவிதைப் பசியை என்னால் நன்கு உணர முடிந்தது.'எழுத்து','கலையாழி','நடை','ஞானரதம்','குமுதம்', போன்ற பத்திரிக்கைகளில் இவரது படைப்புகள் தொடர்ந்து பிரசுரமாகி இருக்கின்றன. அடர்த்தியான சிற்றிதழ்களில் வெளியான கவிதைகளைத் தொகுத்து இந்த நூல் உருவாவதற்கு காரணமாக இருந்த சுதேசமித்திரனை உள்ளன்போடு நினைத்துப் பார்க்கிறார்.கசடதபற ,வானம்பாடி,ழ,மணிக்கோடு,எழுத்து போன்ற கவிதைக்கான குழுக்களின் நெகிழ்ச்சியான நினைவுகளை எல்லாம் மலர்த்தினார்.

தனக்கு எழுபத்தைந்து வயதாகிறது என்று ஐயா பேசும் போது எதேச்சையாக குறிப்பிட்ட போது நான் மலைத்தேன்.அவரது உற்சாகமும் துடிப்பும் தெளிவும் நிறைவும் கூர்மையும் நினைவாற்றலும் ஞானமும் என்னை மெய்சிலிர்க்க வைத்தன.இவை எல்லாவற்றிர்க்கும் காரணமாக இருப்பது தமிழ் என்பதை புரிந்துகொண்டேன். தகிதா எப்படி குறுகிய காலத்தில் இத்தனை நூல்களை கொண்டு வந்திருப்பது தனக்கு ஆச்சர்யத்தை ஏற்ப்படுத்துகிறது என்று அவர் குறிப்பிடும் போது நான் உள்ளூர மகிழ்தேன். இன்றைக்கு நல்ல கவிதைகளைவிட விளம்பரமான கவிதைகள் தான் அதிகம் விற்கப்படுகின்றன என்று அவர் வருத்தப்பட்டுக்கொண்டது எனக்குள்ளும் வலியை எற்படுத்தவே செய்தது.


நல்ல கவிதை எனபது விசாரத் தன்மை உடையதாகவும் நுண்மையானதாகவும் இருத்தல் வேண்டும்.கோட்பாடுகளை தீர்மானம் செய்துகொண்டு .கவிதைப் படைக்கும் தன்மை ஜீவனில்லாதது. கவிதைதான் கோட்பாடுகளைக் கொண்டிருக்கலாம். கோட்பாடுகளால் கவிதை உருவாக்கம் ஆகக்கூடாது. ஒரு நல்ல படைப்பலனுக்கு அவனது மொழி அவனுக்கு வேலைக்காரனாக இருக்கவேண்டும்.

கோவையில் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கிற வானம்பாடி கவிஞர்களான சிற்பி,ஞானி,முல்லை ஆதவன்,சிதம்பரநாதன்,அக்னிபுத்திரன்,மற்றும் பலரைப் பற்றியும் கேட்டறிந்துகொண்டார். நமது 'புதிய ழ'கவிதை சிற்றிதழ் கொங்கில் இருந்து வருகிறது ,என்று கேட்டறிந்துவிட்டு நானும் ஒரு வகையில் கொங்கு நாட்டுக்காரன்தான் என்று தன் உறவு மண்ணை நினைவுகூர்ந்து நெகிழ்ந்தார்.

நடப்பு தமிழ் இலக்கிய சூழலில் மேற்க்கத்திய கோட்பாடுகளை உள்வாங்கிக்கொண்டு தமிழ் வாழ்வியல் சூழலை மறந்து படைப்பை உருவாக்குகிற குருட்டுத்தனமான அணுகுமுறையை அவர் சாடினார்.காலத்தின் போக்கிற்கேற்ப கவிதை மாறினாலும் அது நிலைபெருடையதாக விளங்கும் பாக்கியத்தை இழந்துவிடுகின்றது என்று தெரிவித்தார்.திரை இசை பாடல்களை மட்டுமே கவிதை என்று சிலாகித்துக் கொள்கிற மலட்டுத்தனமான வாசிப்புத்தன்மைக்கு தமிழர்கள் உலகெங்கிலும் ஆளாகி இருப்பது கவலை அளிக்கிறது என்று வேதனைப் பட்டார். படைப்பாளனை ஊடுருவிப்பார்த்து படைப்பின் மீது பொத்தம் பொதுவான விமர்சனங்களை வைக்கிற பிற்போக்கு தனமும் வளர்ந்துள்ளதை சுட்டிக்காட்டினார்.

சென்னை இலக்கியச் சந்திப்பில் - தகிதா வெளியீட்டு விழா 








சென்னை இலக்கியச் சந்திப்பில் - தகிதா வெளியீட்டு விழா 


தகிதா பதிப்பகத்தின் இரண்டு புதிய நூல்களான எழுத்தாளர் திரு கங்கைமகனின் 'ஆத்மாலயம்' மற்றும் கவிஞர் வைரசின் 'நிறைய அமுதம் ஒருதுளி விஷம்' ஆகிய இரண்டு நூல்கள் நேற்று தகிதா பதிப்பகமும் டிச்கவேரி புக் ஹவுசும் இணைந்து நடத்திய முதல் இலக்கிய சந்திப்பில் வெளியிடப்பட்டன.



மேலும் சென்ற ஆண்டில் வெளியிடப்பட்ட தகிதாவின் பன்னிரண்டு நூல்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன. இந்த விழாவில் தமிழ் இலக்கியம் கல்வி மற்றும் கலைத்துறையைச் சார்ந்த பலரும் கலந்துகொண்டார்கள்.

இந்த விழாவில் யுகமாயினி சித்தன் அவர்கள் தலைமை தாங்க ,பேராசிரியர் ராம குருநாதன் அவர்களின் முன்னிலை வகிக்க வெளி ரங்கராஜன் அவர்கள் வாழ்த்துரை வழங்க இறுதியில் பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.



'தலைப்பு இழந்தவை' என்ற கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் கவிதாயினி ஈழவாணி கலந்துகொண்டு நன்றி கூறினார்.தேனம்மை லக்ஷ்மணன் நூல்கள் குறித்த விமர்சனங்களையும் முன் வைத்தார்.உடன் பாகி, செல்வகுமார்,வசுமதிவாசன்,கயல்விழி லக்ஷ்மணன்,அன்பு அழகன்,அந்தோனி அர்னால்ட்,ஜெயராஜ் பாண்டியன்,கவிஞர் வைரஸ் இன்னும் பல முகநூல் நண்பர்கள் கலந்துகொண்டார்கள்.



மேலும் இந்த விழாவில் 'ஆண்மைத்தவறேல் 'திரைப்படத்தின் இயக்குஞர் திரு குழந்தைவேலப்பன் கலந்துகொண்டு தன் தமிழ் ஊடக அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.நாடகக் கலைஞர் பாபு அவர்களும் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்தார்.



தகிதாவில் வெளியீட்டில் கலந்து கொண்டு வாழ்த்திய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்கிகொள்கிறேன்.



தமிழ் மரியாதை

1.உலகத் தமிழர்களை எல்லாம் தேடித்தேடி கண்டெடுத்து அவரிகளை யுகமாயினியில் கவிஞர்களாய், கட்டுரையாளர்களாய் , கதாசிரியர்களாய், விமர்சகர்களாய் தொடர்ந்து அடையாளப்படுத்திவரும் இலக்கிய பிதாமகன் வணக்கத்திற்குரிய திரு சித்தன் ஐயா அவர்களுக்கு என் பணிவான நன்றிகள்.எங்களைப் போன்ற தமிழ் களத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் பலருக்கு தன் அடர்த்தியான விமர்சனங்களால் நல்வழிப்படுத்திக்கொண்டிருக்கும் எழுத்துப் போராளி திரு சித்தன் அவர்கள்களுக்கு என் வணக்கங்கள் உரித்தாகிறது.



2.தமிழர்களின் கூத்துக்கலையாக இருந்து நாடகக்கலையாக வளர்ந்திருக்கும் மூன்றாம் தமிழுக்காக தன்னையே அர்ப்பணித்த நாடதத்தமிழர்தான் வெளி ரங்கராஜன் அவர்கள்.நாடகக் கலையை வளர்த்தேடுப்பதற்காகவே 'வெளி' என்ற நாடகமும் நாடகம் சார்ந்த இதழைத் தொடங்கி அதை சிறப்பான முறையில் நடத்தி வெற்றி கண்டவர் இவர். நாடக ஆசிரியராகவும் நாடக நடிகராகவும் நாடக இயக்குனராகவும் நாடக இதழாசிரியராகவும் இப்படியாய் நாடகத்திற்காகவே தனது தொடர் பங்களிப்பை வழங்கிக்கொண்டிருக்கும் திரு வெளி ரங்கராஜன் அவர்களுக்கு தகிதாவின் சிரம் தாழ்ந்த வணக்கங்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.



3.பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றி எண்ணற்ற படிப்பாளிகளையும் ,படைப்பாளிகளையும் உருவாக்கிய வணக்கத்திற்குரிய முனைவர் திரு இராம குருநாதன் அவர்கள் இந்த விழாவில் முன்னிலைவகித்து விழாவை சிறப்பித்தார் .சாகித்திய அகாடமி,கன்னிமர பொது நூலகம்,புது டில்லி ,கொல்கட்டா ,கும்பகோணம், சிவகுருநாதன் பொது நூலகம், வாசிப்பாளர்கள் சங்கம், மற்றும் தமிழ் ஆலோசனைக் குழு போன்ற பலவற்றிலும் தனது சிறப்பான பங்களிப்பை ஆற்றிக்கொண்டிருக்கும் பேராசிரியரின் வருகை விழாவிற்கு பெருமிதத்தையும் கெளரவத்தையும் தந்தது.அவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.



4.அடர்த்தியாகவும் செறிவாகவும் பேசக்கூடிய தமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளரும், 'கும்பகோணம்' ,'வெண்மணி' -ஆகியவற்றைப் பற்றிய ஊடகப்பதிவுகளை சிறப்பாக செய்து முத்திரைப் பதித்த ஆவணப்பட இயக்குஞரும் .சிறந்த நூல் விமர்சகரும்,நல்ல நாடகம் மற்றும் திரை நடிகரும் இயக்குஞருமான அருமைத் தோழர் பாரதி கிருஷ்ணகுமார் நேற்று கலந்து கொண்டு விழாவை தன் நல்ல தமிழால் சிறப்பித்தார்.தொடர்ந்து மக்களுக்காக மக்களின் சிக்கல்களை மக்களின் ஊடகங்களில் வழங்கிக்கொண்டிருக்கிற அருமை நண்பர் திரு பாரதி கிருஷ்ணகுமார் அவர்களுக்கு என் வணக்கங்களும் நன்றிகளும் உரித்தாகிறது.