வியாழன், 17 மார்ச், 2011


இந்திய வீட்டில்

இன்னும் இருக்கும்

எல்லா பிள்ளைகளுக்கும்

தனம்தந்து பால்வார்க்கும்

இயற்கை தாய்க்கு

மார்பக புற்று

சரிந்து விழுபவர்களை
எச்சரிப்பதற்கும்
குறட்டைவிடுபவர்களை
சப்தம் கலைப்பதற்கும்
நேரம் சரியாகிவிடுவதால்..
...நானும் பயணங்களை அனுபவிப்பதில்லை....

எல்லா பயணங்களிலும்
பயணிகள்
உறங்கித் தொலைக்கிறார்கள்

பயணத்தில்

இன்று தோள் கொடுத்தேன்

எனது தோளை
...
யாரோ ஒருவருடைய

எச்சில் ஈரமாக்கியிருந்ததை

விழிப்பில் உணர்ந்தவனாய்

கோபத்துடன் திரும்பினேன்

பக்கத்து இருக்கை

காலியாக இருந்தது

(யாரோ ஒருவர் இறங்கி இருக்கக்கூடும்)

நகரும் அரண்மனை
நிறைய சிம்மாசனங்கள்
எதில் வேண்டுமானாலும்
நான் அமர்ந்து கொள்கிறேன்.

எனக்காக இருவரை
அரசு
ஊதியத்திற்கு
வைத்திருக்கிறது...
ஒருவர் ஓட்டுனர்
இன்னொருவர் நடத்துனர்.

தினம் தோறும்
நான்
அரச மரியாதையுடன்
பயணம் போகிறேன்.
(அரசு பேருந்து )

சுட்டெரிக்கும் வெயிலில் மலர்கள்
கலர்குடை பிடிக்கின்றன
வண்ணத்துப்பூச்சிகள்

நகராத பேருந்து வீடு
நகரும் வீடு பேருந்து.
இரண்டிலும்
யாரும் யாரோடும்
பேசுவதே இல்லை.
...கனத்த மெளனம்
மனதை கனக்கச் செய்கிறது.

இளைப்பாறல் அவசியமாகிறது.
நிறுத்தமில்லா பயணத்தில் கூட...

வெள்ளி, 11 மார்ச், 2011

ரோபோக்கள் வைத்த ஒப்பாரி

எரிமலைகள்

எரிந்துகொண்டிருக்கும்

இருபத்தினாங்குமணிநேர

மின்மயானம்தான்

ஜப்பான்...



அந்த

பூமியின் வெப்பத்தை

கடலின் முத்தங்கள்

ஈரப்படுத்தி இன்று ஆறவைத்தனவோ ?



எப்போதும்

அஸ்தியைக் கரைக்க

கடலைத் தேடி போவார்கள்

இன்று கடலே

அவர்களைத் தேடி வந்திருக்கிறது.



உயர்ந்த அலைகள்

நிமிர்ந்து நிமிர்ந்து

அறைகின்றன-அந்த

குள்ள மனிதர்களை...



'பட்ட காலிலே படும்

கெட்ட குடியே கெடும்'

என்பதற்கு

உதாரணமான இவர்கள்

இன்று ரணமாகிப் போனார்கள்...



பூமியின் தாலாட்டில்

நான்கு லட்ச குடும்பங்கள்

பகலில் கண்ணுறங்கிப் போயின ...



இறந்த மனிதர்களை

ஆற்றில் கரைப்பது வழக்கம்

இங்கே

இறவாத ஒரு தேசமே

கடலில் கரைந்து போனது....



தரையில் படகுகளும்

கடலில் மகிழுந்துகளும்

'பயணங்கள் தொடர்வதில்லை'



நேற்று

இவர்களுக்கு இறையாய் மீன்கள்

இன்று

மீன்களுக்கு இறையாய் இவர்கள்..



நீண்ட நாட்களாகவே

பூமி மாத்திரையை

விழுங்க

பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறது

கடல்...



நேற்று

நதியோடு விளையாடி வந்த

மானுடம் - இன்று

விதியோடு விளையாடிக் கொண்டிருக்கிறது



எந்தவேலையையும் செய்யும்

இவர்களால்

கண்டுபிடிக்கப்பட்ட ரோபோக்கள்

இறுதியாய் இந்தவேலையையும்

செய்யும்...

'....................ஒப்பாரி'