வெள்ளி, 14 ஜனவரி, 2011

பொங்கலோ பொங்கல்

'பொங்கல்' உலகத் தமிழர்களின் உன்னதத் திருவிழா. இயற்கையை நேசித்து, இயற்கையை சுவாசித்து இயற்கையோடு இரண்டறக் கலந்த இனிய தமிழர்களின் இல்லப் பெருவிழா. படைத்த இயற்கைக்கும், இயற்கை படைத்த உணவிற்கும் நன்றி தெரிவிக்கும் இல்லத் திருவிழா. பாட்டாளிகள் விதைத்த வியர்வைகள் விளைச்சல்கள் காணும் அறுவடைத் திருவிழா. உழைப்பாளிகள் ஓயாமல் உழைத்த உழைப்பின் உன்னதங்களைச் சந்தைக்குக் கொண்டு வந்த சத்தியத் திருவிழா."மண் என்பது மண்ணல்ல, மண் எனபது மனிதர்கள்" என்ற கவிதைக்கேற்ப புழுதிக்காட்டு மண்ணைத் திருநீராகவும், சுடர்விட்டு எரியும் சூரியனைத் திருவிளக்காகவும் வழிபட்ட வண்ணத் தமிழனின் வரலாற்று பெருவிழா.பூமி தந்த அன்னத்தையும் , அன்னத்தைத் தந்த விவசாயிகளையும் மரியாதை செய்யும் ஒரு நாள் பொங்கல் திரு நாள். இந்த இனிய திரு நாளில் தமிழ் உணவு, தமிழ் உடை, தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, தமிழ் பழக்கவழக்கம், தமிழ் கல்வி போன்ற தமிழ் அடையாளங்களைப் பாதுகாப்போம்.பொங்கலோ பொங்கல்.பொங்கலோ பொங்கல்.பொங்கலோ பொங்கல்

வியாழன், 13 ஜனவரி, 2011

ஒரு ஓடையின் கதை

ஒரு ஓடை

ஒத்தையடிப் பாதையில்

நனைந்தும் நனைத்தும்

நடந்து களைத்த

பயணத்தின் முடிவில்

எதிர்ப்பட்டது பெருவெள்ளம் .



இரண்டின் நகர்தலும்

அதனதன் போக்கில்



ஒருபுள்ளியின் சந்திப்பில்

ஓடை

தன் அடையாளத்தைத்

தொலைத்திருந்தது



ஆரவாரங்களோடு

ஓடிக்கொண்டிருந்த வெள்ளம்

ஓடைகளைப்பற்றி

சிலாகித்துக் கொண்டதேயில்லை



இருந்தபோதிலும்

ஓடிக்கொண்டேதான் இருக்கின்றன

ஒவ்வொரு பெருவெள்ளங்களுக்குள்ளும்

பலநூறு ஓடைகள்

புதன், 12 ஜனவரி, 2011

நேற்று போனதற்காய்
இரங்கல் இல்லை
இன்று முடிந்ததற்காய்
இரங்கல் இல்லை
இப்பொழுது கடந்ததற்காய்
இரங்கல் இல்லை.

ஆனால்
எப்போதும்
இருந்துகொண்டே இருக்கிறது
இரங்கல்

செவ்வாய், 11 ஜனவரி, 2011


தகிதா பதிப்பகத்தில் புதிய படைப்பாளர்கள் பலரது நூல்கள் எதிர்வரும் மார்ச்மாத வெளியீட்டுக்காக தயாராகிக்கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் உங்கள் படைப்பும் இடம்பெற விரும்பினால் உடனே தொடர்பு கொள்ளுங்கள்.காவியங்கள் பூக்கும் காகிதச் சோலையில் உங்கள் படைப்புகளும் மலரட்டும் என்று வாழ்த்துகிறேன்.

என்றும் தமிழாய் தமிழுக்காய்
மணிவண்ணன்

திங்கள், 10 ஜனவரி, 2011

தரையில் கரி ஓவியம்

நகரத்தின் சாலைகடக்கும்போது
விலைகொடுக்காமல்
விழிகளால் அள்ளிக்கொண்டு வந்த
குற்றவுணர்ச்சி
மனதையும் மூளையையும்
அரித்துக்கொண்டே இருக்கிறது

"சாக்பீஸ் சாம்பலில்". கவிதைநூல் தேனம்மை லஷ்மணன் பார்வையில்

தகிதா பதிப்பகம் சென்ற மாதம் 10 புத்தகங்கள் ஒன்றாக வெளியிட்டது;.. அதில் ஒன்று நாணற்காடனின் சாக்பீஸ் சாம்பலில்... இவருடைய கவிதைகளை தகிதா பதிப்பகம் மூன்று மாதத்துக்கு ஒரு முறை வெளியிடும் புதிய ,”ழ” வில் படித்திருக்கிறேன்.. பத்து கவிதைத்தொகுதிகளையும் மேற்கு வங்க நூலகத்திற்காக மொத்தமாக கேட்டதாக தகிதா பதிப்பகம் மணிவண்ணன் கூறினார்.. எல்லா கவிஞர்களையு்ம் ஊக்குவிக்கும் இவர் முயற்சி பாராட்டற்குரியது.. விலை ரூ 50.



புதுக்கவிதை ., நவீன கவிதை எழுதி வரும் நாணற்காடனின் ஹைக்கூக்களும் அருமையாய் இருக்கின்றன. இந்தி அசிரியரான இவர் இந்தியிலிருந்து தமிழுக்கு கணிசமான மொழிபெயர்ப்புகளும் செய்துள்ளார்.. தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் நாமக்கல் மாவட்ட செயலாளராக விளங்கும் இவர் எட்டு ஆண்டுகளாக எழுதி வருகிறார்.. ”கூப்பிடு தொலைவில்.” , “ பிரியும் நேரம்.,” ஆகிய இரு கவிதைத் தொகுதிகளும் வெளியிட்டு உள்ளார்.. சாக்பீஸ் சாம்பல் இவரது மூன்றாவது கவிதைத் தொகுதி..





பள்ளிக் கூடம் என்றால் நமக்கு கரும்பலகையும் கலர் கரலராய் சாக்பீஸ்களும் ஞாபகம் வரும்.. டஸ்டரால் அழிக்கும் போது வி்ழும் துகள்கள்.. வெறும் துகள்களாக நமக்கு தென்படும் போது இவர் கண்ணில் மட்டும் சாம்பலாய் .. ஒரு பொருள் எரிந்தால்தான் சாம்பல்.. சாக்பீஸ் கரும்பலகையில் மக்களுக்கு கல்வி புகட்ட தன்னைக் கரைத்து சாம்பலாய் விழுவது அழகுதான்..



ஆனந்த விகடன்., கல்கி., புதிய ,”ழ”., கருக்கல்., அகம்புறம்., கவிதைச்சிறகு., மதுமலர்., என இவர் கவிதைகள் வெளிவந்த புத்தகங்கள் அனேகம்.



தலைப்புகளற்ற கவிதைகள்.. இன்றைய இரவு கூட தனக்கான கடைசி இலையாய் இருக்கலாம் என ஆரம்பிக்கிறது கவிதைத் தொகுதி..



அலைபேசியின் குறுஞ்செய்தி ., காற்றில் நீந்திச் செல்வதும்., மழை வேலிக்குள் மலரெனப் பூத்திருக்கும் காதலியும் பூச்சியொன்றினை குறி வைக்கும் பல்லி பார்த்து., பசிக்கும் மரணத்துக்கும் நடுவில் நான் எனவும்., இரவெனும் மயானற் காட்டில் பிணமாய் நிலவு எரிவதும்.. பாம்புகள் அண்டுவது கருதி பிடுங்கிப் போடப்பட்ட செடிகளில் வாழும் பூக்கள் தேடி பட்டாம் பூச்சிகள் ஏமாறக் கூடும் எ்னவும் ஒன்றையொன்று சுழற்சியிட்டு அழகாயும் அவலமாயும் இருக்கிறது..





கழுகுகள்., பாம்பு., தவளை., பூச்சிகள்., . என எக்கோ சிஸ்டமாய் ஒரு கவிதை அருமையாய் இருக்கு..



தலைப்பின் கவிதைதான் மிக அருமை..



வகுப்பறை தோறும்

கரும்பலகையின் கீழே

சாக்பீஸ் சாம்பலாய்

உதிர்ந்து கிடக்கிறது..

பாடங்களால் எரிக்கப்பட்ட

குழந்தைகளின் வாழ்க்கை..





ஆம் நாம் வைத்துள்ள கல்வித் திட்டங்களை எல்லாம் தோலுரிக்கிறது இக்கவிதை.. மனனம் செய்து கக்குவதுதான் இன்றைய முறையாய் இருக்கிறது.. கல்வி என்பது எளிதாய்., ஆசையோடு கற்பதாய் இருக்க வேண்டும்.. மதிப்பெண்கள்தான் கணக்கிடும் அளவுகோல்களாய் இல்லாமல்..



மழை ., வெய்யில்., காற்று., மரம்., குடிசை., கோயில்., தனிமை., காதல்., இரவு., மரணம்., சிகரெட்., சொற்கள்., குருதி., ஆணாதிக்கம்., மீன்., தூண்டில்., என பலவும் கலந்து கிடக்கிறது கவிதைகளில்.. அதிகம் சொல்லமுடியாமல் ஊவா முள்ளாய் நெஞ்சில் உறுத்திக் கொண்டிருக்கும் ஒற்றைச் சொல் பற்றியதான கவிதைகள் அநேகம்., பிரசவ வலி போல்..வெளியேறத் தவித்து..



வேலையற்றவனின் துயரம்., குழந்தையற்றவள்., முதிர்கன்னி., முள்வேலி மக்களின் வாழ்வு., வேண்டுதல்கள்., பேச்சில் ஆங்கிலக் கலப்பின் அங்கதம்., குழந்தையின் விளையாட்டு., இலவச தொலைக்காட்சி பார்த்து மகிழும் விவசாயி., குழந்தை வளரும் வீடு., கொத்தாய் பூத்திருக்கும் பஞ்சு மிட்டாய் விற்பவன்., பார்வையற்றவர்கள்.,, இறந்தபின்னும் செத்துப் போகாத நிழல்., காலிக் குடங்களோடு லாரிக்காக காத்திருப்பு, சொல்லப்படாத உண்மையின் நீர்த்தல்., என பல்வேறு தளங்களில் இயங்குகிறது கவிதை.





இந்த ஹைக்கூ அருமை..



கிளைகள்தோறும் அமர்ந்தெழும் பறவை

இலைகளில் தங்கிய மழைத்துளிகளை

பொழியச் செய்கிறது..





நீராய் நிரம்பியிருக்கும்

காற்றில்..



தத்தளித்துக் கொண்டிருக்கும்

கற்பிதங்களோடு

நீந்திக் கொண்டிருக்கும் நாம் .. என்ற கவிதையிலும் நாம் எவ்வாறு கற்பிதங்களால் ஆளப்படுகிறோம் என கூறுவது சிறப்பு. பொறி போடவோ ., தூண்டில் போடவோ யாராவது வரும்போது ஒன்று அதிலேயே கிடக்கலாம் அல்லது மீளலாம் ,.. என முடித்திருக்கிறார்..



எண்ணங்களைத் தூண்டிவிட்டு சிந்திக்கச் செய்யுமளவு சிறப்பாய் இருக்கிறது கவிதைத் தொகுதி

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

கொழும்பு தமிழ் சங்கத்தில் தகிதாவின் நூல் வெளியிடப்படுகிறது


தகிதா பதிப்பகத்தில் வெளியான கவிஞர் ஆதித்தன் அவர்களின் "பொய்யும் பழங்கதையும் வெறுங்கனவும்" என்ற கவிதைத் தொகுப்பு இலங்கையில் இரண்டாவது முறையாக அறிமுகவிழா காணுகிறது.கவிஞர் ஆதித்தன் அவர்களை வாழ்த்தி வரவேற்போம்