ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

'ஜே.கே'.யாக வாழ்ந்த சேரன் "ரெளத்திரம் பழகு"

திரையில் நடிப்பது என்பது ஒரு ராகம்.திரையில் கதாபத்திரமாகவே வாழ்வது என்பது இன்னொரு ராகம். சேரன் எப்போதும் இரண்டாவது ரகம்தான். சேரன் ஜே.கே ஆக வாழ்கிறார். ஆரவார இசைக்குப் பின்னும் அணு அணுவான கேமரா நகர்வுகளுக்கு பின்னும் வழக்கமாக காட்டப்படும் கதாநாயகன் அறிமுக இலக்கணத்தை மிஸ்கின் உடைத்திருக்க,அகத்தின் சோகங்களையும் ,

இயலாமைகளையும் முகத்தில் காட்டியபடி சேரனும் இயல்பாய் தோற்றம் பெருகிற காட்சி தமிழுக்கு புதிது.

மனித வேட்டைக்காரர்களிடம் தன் தங்கையை இழந்த சோகத்தையும்,அடுத்ததாய் செய்தாகவேண்டிய காணாமல் போன இந்த சமூகத்து சகோதரிகளுக்கான தேடலையும் நெஞ்சில் ஏந்திக் கொண்டிருப்பதன் கனம் ஜே கே யின் முகத்தில் தெரிகிறது.பணிக்கும் பாசத்திற்கும் இடையே பரிதவிக்கும் பரிதவிப்பு தேவையான அளவிற்கு துல்லியமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.ஜே கே யின் மெளனம் இன்னும் இன்னும் நிறைய செய்திகளை ஒவ்வொரு காட்சியிலும் சொல்லிக்கொண்டே இருக்கின்றது.

பிணவறைக்குள் நுழையும் போது ஜே கே உடன்வரும் புலனாய்வு உதவி அலுவலர்கள் கைக்குட்டையை அவசர அவசரமாக எடுத்து மூக்கை பொத்திக்கொள்வதையும் அவர்களுக்கு முன்னாள் நடந்துவரும் ஜே கே நாற்றத்தின் எந்த முகபாவத்தையும் வெளிப்படுத்தாமல்

இயல்பாக நடந்து வருவது எதிர்ப்பாராதது.தாங்க முடியாத சோகத்தை நெஞ்சில் சுமந்து இருக்கும் அந்த ஜே கே வை இந்த சின்ன விஷயம் ஏதும் செய்துவிடவில்லை என்பதை இந்த காட்சி முன்மொழிகிறது. அந்த அசட்டை செய்யாத முகபாவம் அசாதாரமானது.

இயல்பான திரைப்படங்களை தந்து இயல்பான கதாபாத்திரங்களையும் ஏற்று தனித்த அடையாளத்தைப் பெற்ற சேரனை சில கதாபத்திரங்களில் கற்பனை செய்துபார்த்தால் பொருந்தாத தன்மையை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தும். அதில் ஒரு முக்கியமான பாத்திரம் காவல்துறை பாத்திரம். இந்த படத்தில் ஒரு காவல் துறை அதிகாரியாக சீருடையுடன் வந்திருந்தால் மனதிலும் கதையிலும் ஒட்டாமல் போயிருப்பார்.

ஒரு புலனாய்வு அதிகாரியாக 'யுத்தம் செய்' -யில் அடையாளப்பட்ட போது நூறு சதவிகிதம் அந்த கதா பாத்திரத்தோடு பொருந்தி விட்டார்.கண்ணை உறுத்தும் ஆடை தவிர்க்கப்பட்டிருப்பதும் அளவான அரிதாரங்கள் பூசப்பட்டிருப்பது சினிமாவிற்கான உயிர்த் தன்மையை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது. இந்த கதைக்கு சேரனைத் தவிர்த்து வேறு இந்த கதா பாத்திரங்களை கற்பனை செய்து பார்த்தாலும் அபத்தமாகத்தான் இருக்கும்.ஜே கே கதாபாத்திரத்தை முழுமையாக சேரன் உள்வாங்கிக்கொண்டதை திரையில் பளிச்சிட வைத்திருக்கிறார்.

கதவை தட்டும் சத்தம்கேட்டு வெளியில் வந்து பார்க்கும் சேரன், முதல் யாரும் இல்லாததை உணர்ந்தாலும் பின்னர் தன்னை வன்முறையாளர்கள் சூழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்த பின்னர்.பாதுகாப்பாக வீட்டிற்குள் சென்று கதவுகளை தாழிட்டிவிடுவார் என நினைக்கும் போது ஜே கே வேட்டைக்கு தயாராகும் ஆயத்தம் வழக்கத்திற்கு மாறான புதிய சினிமாத்தனம்.அங்கே இசை எதிர்த்தாக்குதலுக்கு கதாநாயகன் தயாராகி விட்டான் என்பதை அறிவிக்கவில்லை. கேமராக்களும் விரைந்து விரைந்து சுழன்று சுழன்று பதியவில்லை.படத்தொகுப்பிலும் கத்திரிகளை வெட்டுதலும் ஒட்டுதலும் நடக்கவில்லை.இந்த எல்லா 'இல்லைகளும்' மாற்று சினிமாவிற்கான அழகிய அடையாளம்.இங்கு ஜே கே தென்றலாகவும் தெரிகிறார் புயலாகவும் தெறிக்கிறார்.

கருத்த இடுட்டில் ரகசியமாய் நடக்க இருக்கும் வன்முறை வியூகத்தை ஜே கே மாற்றிக்கொண்டே இருப்பதும் இறுதியில் உயரமும் வெளிச்சமும் இருக்கும் பாலத்தில் ஒற்றையாய் நின்று கொண்டு தன் தன்னம்பிக்கையையும் துணிச்சலையும் நிரூபிக்க எதிர்கொள்ளும் காட்சியிலும் கைத்தட்டலைப் பெறுகிறார்.

தடித்த கூர் ஆயுதங்களோடு எம தூதர்கள் சூழ்ந்து கொண்டு ஆயத்தமாகும் போது கால்சட்டைப் பைக்குள் கையைத் திணித்து விரலளவு கத்தியை எடுக்கும் போது புத்திசாலித்தனமான தாக்குதலுக்கு தயாராவதை ஓரளவிற்கு உணரமுடிந்தாலும், ஜே கே கட்டாயம் வதைபடுவார் என உதயமாகும் நமது எண்ணத்தை அவரின் முதல் தாக்குதல் உடைத்து சுக்கு நூறாக்குகிறது.

நிதானமாய் பொறுமையாய் புத்திசாலித்தனமாய் தடுப்பதும் தாக்குதலை தொடரும் ஜே கே பாராட்டை அள்ளிக்கொள்கிறார்.தான் கற்ற கலையை எப்போதும் வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருந்து தேவைப்படும் இடத்தில் வெளிப்படுத்தும் ஒரு இளைய தற்காப்பு கலைஞனாய் அடையாளப்படுகிறார்.கட்டான உடல் வாகும் வைரம் பாய்ந்த புஜங்களும் அவரை நியாயப்படுத்துகிறது.


படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரையில் அந்த கதைக்குரிய உணர்வோட்டத்திலேயே ஜே கே தொடர்ந்திருப்பது சாமர்த்தியமான பங்களிப்பு.உறவுகள் இல்லாத ஒற்றை பறவையாய் இருக்கும் ஜே கே தன் தங்கை பறவையை இழந்த வேதைனையை மனதில் பூட்டி வைத்து விட்டு தன் பணியில் கவனம் சிதறாமல் நேர்மையுடன் இருப்பதான காட்சியில் பணிக்குத் தேவையான பொறுப்புணர்வையும் , தன் சோதரியை தேடும்போது ரத்த பந்தந்திற்கான பாச உணர்வையும் மிகச்சரியாக வெளிப்படுத்தியுள்ளார். இந்த இருமுனை தாக்குதல்களில் சிக்கிக்கொள்ளும் போதெல்லாம் அத்தனைப் பேரின் பரிதாபத்தை வாரிக்கொள்கிறார்.



(ஜே கே யின் தேடல் நாளையும் தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக