புதன், 9 பிப்ரவரி, 2011

சித்தன் வழிகாட்டலில் 'தகிதா' கவிதைச்சிற்றிதழ்

வணக்கம்

மணிவண்ணன் தகிதா – கவிதையும், கவிதைச் சார்ந்தும் இதழை புதியப் பொலிவுடன் வெளிக்கொண்டுவர இருப்பதாக எழுதியிருந்தார். உண்மைதான்! அதற்கான அடித்தளப் பணிகள் குறித்தானப் பேச்சு வார்த்தையில் மணிவண்ணனுடன் நானும் கலந்து முடிவெடுத்தாகும். சீரிய முறையில், ஊரறிந்த படைப்பாளிகளுடன் புதிய அறிமுக படைப்பாளிகளையும் ஒருங்கிணைத்துக் கொண்டு, ஆகச் சிறந்த கவியாக்கங்களுடன், ஒரு கவிஞரின் நேர்காணல், கவிதைக் குறித்தான ஒரு கட்டுரை, கவிதை நூல் அறிமுகம், விமர்சனம், அதன் மீதான ஆரோக்கியமான விவாதம் இவை இடம்பெறும். இலக்கியப்பாட்டையில் இன்னுமொரு மைல்கல்லை பிடுங்கி முன்னால் நட்டுவிட வேண்டும் என்கிற முனைப்போடு முன்னோக்கி நடந்து கொண்டிருக்கும் நாம், நமக்குப் பின்புறம் நாம் சுகமாக நடந்து வருவதற்குப் பலரும் போட்டுக் கொடுத்தப் பாதையைத் திரும்பிப் பார்த்தேயிராத, பார்த்தாலும் பார்வை எட்டும் வரையிலேயான புரிதலுடன் மட்டுமே உள்ள நமக்கு, ” புதையல்” என்கிற, 1935ல் க.நா.சு , ந. பிச்சமூர்த்தி துவங்கி பல முன்னோடிகளின் படைப்புகளை இடம்பெறச்செய்யும் பகுதியும் இதழில் அடங்கும்.

எல்லாம் சரி!வெறும் வார்த்தைகளில் வாழ்த்துக்கள் சொல்லி ஒதுங்கி நின்றுவிடாமல், படைப்புகளை அனுப்புவதோடு, இதழுக்கான சந்தாவையும் செலுத்தி ஊக்கப்படுத்தினால்தான் இது போன்ற இதழ் முயற்சிகள் தொடர்ந்து உயிரோடு இருக்க முடியும் என்பதையும் தயவுசெய்து உணர்ந்து கொள்ளுங்கள். சந்தா செலுத்தி தகிதாவுக்கு ஆதரவு அளியுங்கள். அதற்காக, சந்தா செலுத்திவிட்டோம்....படைப்புகளை பிரசுரிப்பார்கள் என்று மட்டும் நம்பி இருந்துவிட வேண்டாம். ஏனென்றால், தகிதாவுக்கான கவிதை ஆக்கங்களை தேர்வு செய்யவிருப்பவர் கவிஞர் அன்பாதவன். அதே நேரம், ஒரு படைப்பில் ஒரு வரியில் ஒரு வார்த்தையில் மட்டுமே ஒரு பொறி இருந்தால்கூட அப்படைப்பாளியை ஊக்கப்படுத்துவோம் என்பதையும் தெரியப்படுத்துகிறோம்.

மற்றபடி நிர்வாக, வடிவமைப்பு, அச்சாக்கம் சார்ந்த பணிகளையும், ஒட்டுமொத்த இதழாக்க மேற்பார்வையும் நான் ஏற்றுக் கொண்டுள்ளேன் என்பதையும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன், இதழை அரசு செய்தித்துறையில் முறைப்படி பதிவு செய்வதோடு, நூலக ஆணை பெறவும் முயற்சிகள் எடுக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

புதிய வடிவில் புதுப்பொலிவுடன் வெளிவரும் இதழ் குறித்தான ஏனையத் தகவல்களை அடுத்தக் கடிதத்தில் அளிக்கிறோம்

அன்புடன் சித்தன்

--

9382708030

yugamayini,blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக