வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

"மீண்டும் ஒரு வீரயுகக் கனவு" -சபாஷ் மிஸ்கின்

மீண்டும் ஒரு வீரயுகக் காலத்திற்கான விதையை நம் மனதில் ஆழப்பதித்திருக்கிறார் இயக்குஞர் மிஸ்கின் . அந்த விதை நிச்சயம் முளைவிடும் அளவிற்கு திரைக்கதை மூலம் நீர் வார்த்திருக்கிறார். அந்த வீர மரம் வளர்ந்து விருட்சங்கள் விடுவதற்கு ரெளத்திரம் என்ற சூரிய ஒளியைப் பாய்ச்சி இருக்கிறார்.

எது நடந்தாலும் வேடிக்கைப் பார்க்கும் மனோபாவத்தில் இருக்கிற ஒவ்வொருவரின் கன்னத்தில் இந்த கதை பளார் பளார் என்று அறைகிறது.கொடுமைகளுக்கு எதிராக வீறுகொள்ள வைக்கிறது. ஒரு கன்னத்தில் அறைந்தால் அறைந்தவனின் இரு கன்னங்களையும் சிதைக்கும் வன்மத்திற்கு எல்லோரையும் தயார் செய்கிறது.

எல்லா வன்முறைக்கும் காரணமானவன் ஒரு ஆண் , எல்லா வன்முறைகளிலும் பலிகடா அவது ஒரு பெண் என்ற சமகால ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பை தோலுரித்து காட்டியுள்ள இயக்குஞர் 'பாதகம் செய்பவரைக்கண்டால் பயங்கொள்ளல் ஆகாது பாப்பா மோதி மிதித்து விடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா' என்று எட்டியபுறத்தான் சொன்னது போலவே திரைக் கிரணங்களின் மூலம் சூடேற்றி இருக்கிறார்.

சுரணை கேட்டுப் போல தமிழர்களிடம் இந்த படம் அவர்களது எதிர்ப்புணர்வையும், போர்க் குணத்தையையும் மீட்டுருவாக்கம் செய்கிறது.

இந்த படத்தில் தொடக்க காட்சி மழையில் தொடங்கி கடைசி காட்சி கழலில் முடிகிறது. தொடக்க காட்சியில் பெய்யும் மழை ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கு நடந்திருக்கும் சோகங்களை சொல்லி அழுவதாக காட்சியில் விரிகிறது.

இத்திரைப் படத்தில் நிறைய காட்சிகள் ஏரியல் வியூவிலும் லாங் சாட்டிலும் படமாக்கப்பட்டுள்ளன. ஒரு சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை ஒரு பருந்து பார்வையைப் போல மேலிருந்து கவனித்தல் உற்றுப்பார்த்தல் முக்கியமானது என்பதை இப்படம் கற்றுத்தருகிறது.மேலும் நடக்கும் நிகழ்வுகள் தமக்கு அந்நியமானவை என்பது போல எட்ட இருந்து வேற்று காட்சியானனாகவே பார்க்கிற ஒவ்வொருவரின் கன்னத்திலும் இந்த நுட்பங்கள் அறைகின்றன.

விழிகளையும் மனதையும் பரபரக்க வைக்காத அளவில் காட்சியமைப்புகள் நிதானிக்க வைக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் உண்மையாகவே இந்த படத்தில் காட்சிகள் பேசுகின்றன.சினிமா என்பது ஒரு திரை மொழி என்பதை தமிழ் சூழலில் மிஸ்கின் திருத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.இது ஒரு திரைப்புதினமாக கதை நிகழும் எல்லா இடங்களுக்கும் நம்மை அழைத்துக்கொண்டு போகிறது.

பார்க்கும் பார்வையானனுக்கும் கதையில் அடுத்த நகர்வு என்னவாக இருக்க முடியும் என்ற யூகத்தை படம் தொடங்கி இறுதி வரையில் வழங்காதது இயக்குஞர் சாமர்த்தியத்தை காட்டுகிறது. நேர்த்தியான திரைக்கதை.கோவை கனகதாராவில் பார்த்தேன் ,படம் தொடங்கி முடியும் வரை ஒரு சின்ன சலசலப்பு கூட இல்லை. இடையிடையே நாகரீகமான கைத்தட்டல்கள். படம் பார்த்த ஒவ்வொருவரும் உறைந்துபோய் இருந்தார்கள்

ஆதிசமூகமான தமிழர்களின் தொடக்க சமூகத்தை 'தாய் வழிச்சமூகம்' என்று அழைப்பர். ஒரு வீரத்தாய் வேட்டையாடி இறைதந்து ,கொடிய மிருகங்களிடமிருந்து தன் கணவனையும் தன பிள்ளைகளையும் தன் சமூகத்தையும் பாதுகாத்திருக்கிறாள்.அதன் அடையாளமாய் இந்த படத்தில் அந்த தாய் கதாபாத்திரம்.அந்த தாய் முருகங்களிடமிருந்து காத்தாள் இந்த தாய் மனித மிருகங்களிடமிருந்து காக்க போராடினாள் .

அன்று காமுகர்களின் துரத்துதல்களிலிருந்து விலகவும் பெண் அடையாளத்தை மறுதலிக்கவும் மணிமேகலை மொட்டையடித்துக்கொண்டு துறவு போனதை காவியத்தில் பார்த்தோம். பாஞ்சாலி எதிரிகளை கொன்ற பிறகே தன் கூந்தலை முடிப்பேன் என்று சபதம் செய்ததையும் பாரதத்தில் பார்த்திருக்கிறோம். இவளோ மொட்டையடித்து பெண்ணின் பிம்பத்தை உடைத்தெறிந்தாள். .எதிரிகளையும் புடைத்து எறிந்தாள். ஒரு போராளிக்கான அத்தனை அடையாளங்களோடு அந்த பெண்பாத்திரம் வெளிப்பட்டுள்ளது. பதுமைப் பெண்களை புதுமைப் பெண்களாக காட்டிய மிச்கினுக்கு சபாஷ்

வலிய பாரத கோபுரத்தை தங்கிப் பிடிக்கும் இளைய இரும்புதூங்கலான இளைஞர்கள் வெள்ளைக்காரனின் புத்தாண்டை நள்ளிரவில் ஊர்கூடி கொண்டாடும் அந்த காட்சியில் வைக்கப்பட்ட தொடர் பட்டாசில் தமிழனின் பெருமைகள், கலாச்சார அடையாளங்கள், மரபுக் கூறுகள், சுதேச உணர்வுகள், என்று இன்னபிறவும் வெடித்து சின்னாபின்னமாகின்றன.

நுகர்வுக் கலாச்சாரங்களால் மூளை சலவை செய்யப்பட்ட இளைஞர்களின் நடவடிக்கைகள்
வெக்கப்பட வைக்கின்றன. துருப்பிடித்துப் போன இளையத் தூண்கள் நாளும் பலவீனப்பட்டுக்கொண்டே வந்தால் இந்த தேசம் .....?என்ற கேள்வியை இயக்குஞர் மறைமுகமாக வைக்கிறார்.


இளைய பெண்களும் கண்ணை மறைக்கும் போலிக்கவர்ச்சிக்கு மதிமயங்கி விடுகிற பிற்போக்குத்தனங்களையும் இயக்குஞர் குறிப்பிடத் தவறியதில்லை. விலையுயர்ந்த வார்த்தைகளை நம்பி ஏமாறும் வெள்ளந்தித்தனமான இளைய பெண்களின் வாழ்க்கை சின்னபின்னமாவதை எச்சரிக்கையோடு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் ஆள் கடத்தில் வன்முறையில் இறங்கும் அத்தனை பேரில் ஒரு பிரிவு பணக்கார முதலாளிகள்,இரண்டாவது பிரிவு பணக்கார இளைஞர்கள், மூன்றாவது பிரிவு கூலிக்கு கொலை செய்யும் நடுத்தர அடியாட்கள்.இவர்கள் அத்தனை பேரின் சமூக விரோதத்திற்கு காரணமாக இருப்பது காவலிருக்கும் ஒரு காவல்துறை என்ற இந்த தேசத்தில் கேவலத்தை இந்த படத்தின் கதைப்பின்னல் ஏக்கம் தொனிக்க எத்தனிப்போடு சொல்கிறது.

ஒரு தேசத்தின் ஒட்டுமொத்த சோகத்தையும் ,சமூக அவலங்களையும் ,சட்ட ஒழுங்கின்மையையும், நேரடியாக அறிந்து உணர்ந்தவர்கள் அரசுமருத்துவ மனைகளில் பணியாற்றும் பிணவறை பொறுப்பாளர்கள்தான். அந்நிலையில் அந்த கதாபாத்திரம் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்ட ஒன்று.சோகம் விரக்தி வெறுமை ஏக்கம் கோபம் இயலாமை ஆகிய உணர்வழுத்தங்களின் சேர்க்கையாக அந்த காதாபாத்திரம் வாழ்கிறது.

அங்கு குடலைப் பிடுங்கும் அளவிற்கு நாற்றம் எடுப்பது ஒரு தேசத்தின் ஜனநாயகம், ஒரு தேசத்தின் நீதி, ஒரு தேசத்தின் சட்டம் ஒழுங்கு.குளிரூட்டப்பட்ட அறைகளில் பாதுகாக்கப்பட்டு விரைத்திருப்பவை பிணங்கள் அல்ல.பிணவறையின் காட்சியமைப்புகள் எதார்த்தம்.

பெண்களை மாமிசத் தின்பண்டங்களாக கருதி பசிதீர்த்துக்கொள்ளும் அபத்தத்திற்கு எதிராக வெளிப்படுகிற முதல் கோபம் ஒரு பெண்ணின் கோபமாக இருப்பதை மிஸ்கின் அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டுள்ளார்.

தலித்துக்கள் தங்கள் மீதான ஆதிக்கத்திற்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராக போராடியதைப் போலவே, பெண்கள் தங்கள் ஆதிக்கத்திற்கும் வன்மங்களுக்கும் எதிராக பெண்களே போராட வேண்டும் என்ற இயக்கப் போராட்டம் தேவையாக இருக்கிறது என்பதுதான் கதை சொல்லும் வாதம்.

நாம் வேடிக்கை பார்க்கிறவர்களாகவே இருக்கும் பட்சத்தில் உலகெங்கிலும் நடக்கும் கொலைகளுக்கும் கொள்ளைகளுக்கும் நாமும் ஒரு வகையில் காரணமானவர்கள்தான்.என்னும் குற்ற உணர்ச்சிக்கு படம் பார்க்கிற ஒவ்வொருவரையும் ஆளாக்குகிறது. நியாயம்தான்

அடியாட்களையும் கைக்கூலிகளையும் குண்டர்களையும் இந்த சமூகத்தின் சில தீய சக்திகள் கண்மூடித் தனமாக சோறுபோட்டு வளர்த்தெடுத்துக்கொண்டிருக்கின்றன என்பதை கண்ணில்லாத கறுப்புக் கண்ணாடி அணிந்த அந்த தோசைசுடும் பெரியவர் காதாபாத்திரத்தில் மூலம் சொல்லி இருப்பது கவனிக்க வேண்டிய குறியீடு.

ஒரு பள்ளமான வட்டவடிவ குழியில் நிரப்பப்பட்டிருக்கும் திராச்சைப் பழங்களின் கருத்த குவியலில் வெள்ளை அழகி ஒருத்தியை கிடத்தி உயரமான மதில்களின் மீது அமர்ந்து கொண்டு மேல்தட்டு செல்வந்த காமுகர்கள் அவளை ரசித்தப்படி மது அறுத்தும் அந்த காட்சி, பெண் என்பவளை இந்த ஆண் சமூகம் ஒரு போதை வஷ்துவாக பாவிக்கிற போக்கை சுட்டிக்காட்டுகிறது.

ஒரு பெண்மானை பாலியல் வேட்டையாடத்துடிக்கும் பத்திற்கும் மேற்பட்ட நாக்கை தொங்கவிட்டு நகைக்கும் காட்டு நாய்களாகத்தான் அவர்கள் காட்சிப்படுகிறார்கள். முதலில் திராட்சை குவியலின் மீதும் பிறகு மண் குவியலில் மீதும் அவள்கள் அடக்கம் செய்யப்படுகிறார்கள் என்ற கருத்து மறைமுகமாக வலியுறுத்தப்படுகிறது.

ரஷ்யப் புரட்சிக்கு 'வாய்மொழி இலக்கியம்' என்று அழைக்கப்படும் ஒரு நாட்டுப்புறப் பாடல் காரணமாக இருந்திருக்கிறது என்பதை அறிவோம்.அதேபோல இந்த சக்திவாய்ந்த திரை ஊடகம் ஏன் ஒரு இன்னொரு சுதேச புரட்சிக்கு வழிவகுக்காது.கலிகளுக்கு எதிரான கலியுக போர்

இது தீப்பந்தத்தின் சூடல்ல தணிந்து போவதற்கு. மிகச்சிறிய தீப்பொறியின் சூடுதான். இந்த சின்ன திரியில் இருக்கும் சின்ன நெருப்பை வைத்துக்கொண்டு தீப்பந்தத்திற்கான பற்றவைத்தலை செய்கிறது...

தவறு செய்யாத நிரபராதியாக இருந்தாலும் திருப்பி அடிக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையில்தான் எல்லா வீடுகளிலும் உள்ள மனைவிமார்களை கணவன்மார்கள் அடிக்கிறார்கள்.

அதே போலத்தான் சமூகத்திலும்.நாம் வேடிக்கை பார்க்கிறவரை நாம் உதைபடுவோம் நாம் தாக்கத் தொ...டங்கும் போதுதான் நம் மீதான தாக்குதல்கள் குறையும்.

இசை என்கிற பெயரில் சில இசையமைப்பாளர்கள் காட்சிகளை மனதில் பதியாமல் செய்துவிடுவார்கள். இயல்பான உணர்வுகளுக்கு உயர்வு நவிற்சியை வழங்கி அதன் உயிரை சாகடித்துவிடுவார்கள் l . படத்திலிருந்து விலகி இசையை மட்டும் தங்களின் அடையாளமாக துருத்திக்கொண்டு இருக்குமாறு பார்த்துக்கொள்ளும் சர்வாதிகார தன்மையை தமிழ் சினிமாக்களில் பார்க்க முடிகிறது.ஒரு நல்ல இசை என்பது தனித்து தெரியக்கூடாது. கதையின் போக்கையும் காட்சியில் உணர்வையும் சுமந்துகொண்டு பயணிக்கவேண்டும்.


அத்தகைய நல்ல இசையின் அடையாளமாக 'கே' திகழ்கிறார். தேவையான இடத்தில் ஒலித்தும் தேவையில்லாத இடத்தில் மெளனித்தும் இருக்கும் கே அவர்களுக்கு பெரிய கைத்தட்டல்கள்.பயம் ,சந்தேகம்,குழப்பம்,சோகம்,ரகசியம்,ஆச்சர்யம்,திருப்பம்,அதிர்ச்சி, எரிச்சல், ஆதங்கம்,இயலாமை, பாய்ச்சல், அத்தனை உணர்வுகளையும் சரியான விகிதாசாரத்தில் கலந்து விருந்துவைத்திருக்கிறார் 'கே'. உங்களுக்கும் ஒரு சபாஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக