சனி, 9 ஜூலை, 2011

மோர் மேரே-(சிறுகதை)


"பஸ்ஸு ஒரு பத்து நிமிஷம் நிக்கும் ,டீ காப்பி சாப்புடறவங்க சாப்புட்டுவரலா "

கண்டக்டரின் உரத்த குரலின் சில வார்த்தைகள் மட்டுமே உறக்கத்திலிருந்த என் செவிகளுக்குள் நுழைந்து,கிசு கிசுத்தது.பயணத்தின் களைப்பில் லேசாக நினைவு வந்தவனாய் விழித்தேன் .மூக்கின் நுனிவரையில் வந்து கீழே விழுந்து தற்கொலைக்கு முயன்றிருந்த மூக்குக் கண்ணாடியை சுட்டுவிரலால் மேலே உயர்த்தி கண்ணுக்கு நெருக்கமாக பொருத்தினேன்.

சன்னலோரத்து காற்று கலைத்துப் போட்டிருந்த என் முடியை விரல்களை சீப்பாக்கி இடதும் வலதுமாய் சீவிமுடித்தேன். காண்டாமிருகத்தின் தோலைப் போல போர்த்தியிருந்த ஜர்க்கினை என் உடலிலிருந்து உரித்தேன்.இடது சட்டைப் பாக்கெட்டில் இருந்த செல் போனை எடுத்து ஏதேனும் அழைப்புகள் வந்திருக்கிறதா என்பதை உறுதி செய்துகொண்டேன்.

அடி வயிற்றுப் பகுதி முட்டிக்கொண்டு வரவே இயற்கை அழைப்பிற்கு இசைவு தெரிவித்தவனாய் பேருந்திலிருந்து கீழே இறங்கினேன். ராணுவ வீரர்களைப் போல வரிசையாகவும் ஒழுங்காகவும் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பத்திற்கும் மேற்பட்ட பேருந்துகளை நோட்டமிட்டவனாய் நகர்ந்தேன்.

கடைகளை சுவர்களாக கொண்டிருந்த பெரிய மைதானமாய் அந்த பேருந்து நிலையம் காட்சியளித்தது.பேருந்துகள் வருகிற நேரங்களில் மட்டுமே வர்த்தகம் அங்கு சூடுபிடிக்கும்.மற்ற நேரங்களில் ஈ ஆடிக்கொண்டிருக்கும்.பெருத்த ஆரவாரங்கள் இல்லையாயினும் வியாபாரம் இயல்பாகவே நடந்துகொண்டிருந்ததை கடைகளுக்கு முன் வாசலை அடைத்து நின்றுகொண்டே பொருட்களை வங்கிக் தின்று குடித்து செரித்துக்கொண்டிருக்கும் கூட்டம் சொல்லாமல் சொல்கிறது.

"ஐஸ் சர்பத் ஐஸ்"

"மல்லிகப்பூ மோளம் பத்துரூபா'

"தேங்கா பரப்பி தேங்கா பரப்பி"

"ஆரஞ் ஆரஞ் நாட்டுப்பளம் நாட்டுப்பளம்"

எல்லா பேருந்துகளின் சன்னங்களில் யாரவது வாங்கமாட்டர்களா என்று ஏக்கத்தோடு எட்டிப்பார்த்தபடி அந்த கிராமத்து மனிதர்கள் நம்பிக்கையோடு விற்பனைக்குரிய பொருட்களை கைகளில் நீண்ட நேரம் ஏந்திக்கொண்டு வலிகளை முகத்தில் காட்டிக்கொள்ளாமல் நகர்ந்தவண்ணமாகவே இருந்தார்கள்.

ஒருவர் இருவரைத் தவிர யாரும் அவற்றை சீண்டவே இல்லை.நகரும் அந்த மனித அங்காடிகளை சட்டை செய்யாமல், அசையாத நிலை அங்காடிகளை நோக்கி விரைந்து மொய்த்துக்கொண்டார்கள்.

"அண்ணே ஒரு பெண்டா கொடுங்க"

"பெப்சி டின் ஒன்னு தாங்க"

"மாசா ஜில்லுன்னு இருக்கா"

"கோலா ஒருலிட்டர் பாட்டில் இருக்கா"

கேட்கிறார்கள்.... பெறுகிறார்கள்..... வருகிறார்கள்.பேருந்து கிளம்புவதற்கு இன்னும் ஐந்து நிமிடம் இருக்கிறது.இந்த கசப்பான அனுபவத்தை இன்னும் பார்க்க சகிக்காத நான் பேருந்துக்குள் வந்து அமர்ந்துகொண்டேன்.இடதுபுற சன்னலுக்குள் நுழைந்த மாலை நேர நெருப்பு வெயில் என்னை வருக்கத் தொடங்கியது.புழுக்கம் தாங்காமல் என் உதடுகளைக் குவித்து நானே பெருமூச்சு விட்டுக்கொண்டேன்.சட்டைக் காலரை என் இரண்டு கைகளால் கொஞ்சம் தூக்கிவிட்டபடி பறவை பறப்பதைப் போல சிறகடிக்கச் செய்தேன்.

சிறுநீர்க்கழித்தவர்கள்,நொறுக்குத்தீனி தின்றவர்கள்,உணவருந்தி முடித்தவர்கள், இளைப்பாறிக்கொண்டவர்கள் என்று ஒவ்வொருவராக கிளம்ப இருந்த பேருந்தை நோக்கி படையெடுத்தார்கள்.

மை பூசியதைப் போல கருத்த மெலிந்த தேகம், பழைய அழுக்குப்படிந்த பருத்தி சேலை,ஒடுங்கிய கன்னம்,செருப்பில்லாத நரம்பு புடைத்த சூம்பிய கால்கள்,நெற்றியில் அழிந்தும் அழியாமலும் இருந்த திருநீரு,கலைந்த பரட்டைத் தலையில் சும்மாடு,அதன் மேலே குடத்தின் வடிவத்தில் ஒரு அலுமினிய பாத்திரம் மூடியுடன் இருந்தது.அதன் மீது ஒரு அலுமினிய டம்ளர் மற்றும் ஒரு லோட்டா.எழுபது வயதை தண்டி இருக்கக்கூடு அந்த மூதாட்டி, பேருந்தை நோக்கி நெருங்கினாள் .முதலில் அவரை ஒரு பயணி என்றுதான் நினைத்தேன்.நேராக இடதுபுற சன்னலோரமாக அமர்ந்திருந்த எனது இருக்கைக்கு கீழே நின்றுகொண்ட அவர் தன் தலைச்சுமையை கீழே இறக்கிவைத்தாள்.

.

"மோர் மோரே" " மோர் மோரே"

என்று கூவிக்கொண்டே அலுமினியப் பாத்திரத்திற்குள் லோட்டாவை விட்டு ஒரு லோட்டா மோரை அள்ளி மீண்டும் அந்த பாத்திரத்திற்குள் கைகளை உயரே வைத்துக்கொண்டு டீ ஆத்துவதைப் போல திருப்பி ஊற்றினாள். மோரும் நீரும் கலந்து கறிவேப்பிலை மல்லிதழை இஞ்சி போன்றவை மேல் சுழற்சியில் வட்டமடித்தன.

ஒரு லோட்டாவில் வழிய வழிய நிரப்பிக்கொண்டு "கண்ணு மோர் சாப்புடு கண்ணு" "லோட்டா அஞ்சு ரூபாதா" "வீட்லே வளக்குற கரவெ மட்டு பால்லே செஞ்ச மோரு" என்று கேட்டபடியே ஒவ்வொரு ஜன்னலாக பயணிகளின் கைகள் எட்டும் உயரத்திற்கு பிடித்துக்கொண்டு அங்கும் இங்கும் நடக்கிறாள்."மோர் மோரே... மோர் மோரே" என்ற அசட்டுத்தனமான அந்த கிராமத்து வயதான தேவதையின் குரல் பேருந்து நிறுத்தம் முழுக்க கேட்டுக்கொண்டே இருந்தது.

வட்டமடித்து மீண்டும் எப்படியோ நான் அமர்ந்திருந்த ஜன்னலருகில் வந்து நின்றால்.

"கண்ணு வாங்கி சாப்புடு கண்ணு...நல்லா ஜில்லுன்னு இருக்கு ..வீடு போயி செர்ர வரைக்கும் தாகமே எடுக்காது ....வயித்துப் புண்ணுக்கு ரொம்ப நல்லது... நல்லா இல்லாட்டி நீ காசுதர வேணாம்" என்று அவர் சொல்லு முடிப்பதற்குள் பத்து ரூபாயை எடுத்து நீட்டினேன்."முதல்லே குடி கண்ணு ...அப்பறம் காசு வாங்கிக்கறே" என்று பதிலளித்தபடியே கம்பிகளுக்குள் நுழைத்த லோட்டா மோரை ரசித்து ருசித்து பருகினேன்.ஒரே மூச்சில் பருகியதால் கொஞ்சம் மூர்ச்சையாகி இளைப்பாறிக்கொண்டேன்.

பத்து ரூபாய் தாளை மகிழ்ச்சியோடு நீட்டிய போதுதான் பேருந்து கிளம்பத்தொடங்கிவிட்டது.மூதாட்டிக்கும் எனக்குமான இடைவெளியை நகர்ந்த பேருந்து நீட்டித்துக்கொள்ள சன்னல் வழியாக கழுத்தை நுழைத்து பின்பக்கமாக திரும்பிப்பார்த்து மூதாட்டியை அழைத்தேன்.

"கண்ணு நாளைக்கு வாங்கிக்கறேன்...நீங்க போங்க...பஸ்ஸு கிளம்பிடுச்சு..." என்று என்னிடம் காசுவாங்காமலேயே வழியனுப்பிவிடுகிறாள்.'நாளைக்கு நான் வரமாட்டேன் பாட்டியம்மா...இதோ வாங்கிக்கோங்க " என்று ஒரு பொய்யைச் சொல்லி பத்து ரூபாய் தாளை மூதாட்டி பார்க்கும் படியாக கீழே போட்டேன்.அந்த தாள் காற்றில் பறந்து அவளருகில் போய்சேருகிறது.

கைகளில் எடுத்துக்கொண்ட அந்த மூதாட்டி ஐந்த ரூபாய் நாணயத்தை எடுத்துக்கொண்டு பேருந்துக்கு பின்னாலே ஓடிவருகிறாள்.

"கண்ணு இந்தாங்க உங்க அஞ்சு ரூபா" ...." எங்க பச்சே கொஞ்சம் நிறுத்த சொல்லுங்க" ...இப்படியாய் திரும்பத் திரும்ப .சொன்னபடியே பேருந்துக்கு பின்னால் ஓடி அலைபறக்க பின்தொடர்கிறாள். காசை சேர்க்கமுடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சியோடு ஓடிவரும் அவளின் பின்தொடரல் நிற்கவில்லை என்பதை கவனித்தவனாய் வரும் என்னையும் அந்த மூதாட்டியையும் ஒரு திருப்பம் பிரித்துப்போடுகிறது.

பல நாட்கள் ஆகியும் இன்னமும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது "மோர் மோரே மோர் மோரே".

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக