திங்கள், 11 ஜூலை, 2011

பேருந்தில் அழுத வீணை( சிறுகதை )


பயணத்தின் ஒரு சாலையில் எனக்கு லேசாக விழிப்புவந்தது.தூங்கி வழிந்த கண்களை விரல்களால் நன்றாக கசக்கி இரட்டைப் பிறவிகளைப் போலிருக்கும் என் உள்ளங்கைகள் இரண்டையும் ஒன்றாக சேர்த்து சூடு பறக்க தேய்த்து அந்த கதகதப்பை குளிர் காற்றால் சில்லிட்டிருக்கும் முகத்தில் அடைகாப்பதைப்போல பரவவிட்டேன்.

பேருந்து மலைப்பாதையில் மெதுவாகவும் நிதானத்தோடும் நகர்ந்து கொண்டிருந்தது..என் கழுத்தோடு விழிகளையும் முடிந்த வரை திருப்பி கலங்கரைவிளக்க விளக்கைப் போல பேருந்துக்குள் நாலா புறமும் நோட்டமிட்டேன்.எல்லோரும் தூங்குகிறார்கள். கடைசி இருக்கையில் கதவருகில் பணப்பையை சட்டைக்கு வெளியில் பூணூலைப் போட்டுக்கொண்டதைப் போல தொங்கவிட்டிருந்த நடத்துநரும் உறக்கத்தில் இருந்தார்.சுமார் ஐம்பத்தேழு இறந்த பிணங்களை சுமந்துகொண்டு ஒரு இயந்திரபல்லாக்கு நகந்துகொண்டிருந்ததைப் போல நான் உணர்ந்தேன்.ஒட்டுஞர் மட்டும் உயிரோடிருந்தார்.

கம்பீரமான மலைகளையும் ,மரகதம் பாவிய இயற்கை எழில்களையும் ரசித்தப்படி சிலாகித்துக்கொண்டிருந்த அந்த ஒரு தருணத்தில் எனக்கு வலது புற இருக்கையில் குழந்தை அழும் சத்தம் வரவே திரும்பிப்பார்த்தேன்.

அப்பாவின் தோளில் அம்மா சாய்ந்தபடி உறங்கிக்கொண்டிருக்கிறாள்.மனைவியை தன் தோள்களில் உறங்க வசதியாய் தாங்கிக்கொண்ட அந்த நபர் தன் மகள் அழுவது தெரியாமல் அதேசமயத்தில் உறக்கத்தில் கூட இரு கைகளை அணைப்போல வளைத்து வைத்துக்கொண்டு இருந்தது எனக்கு சற்று ஆறுதல் அளித்தது.

முகாரி மெல்லிசையாகத் தொடங்கிய அந்த குழந்தையின் அழுகை பேருந்து முழுக்க பரவத்தொடங்கியது.மனதைப் பிழியத்தொடங்கிய அந்த மழலையில் அழுகையை நிறுத்த வேண்டுவதற்கான முயற்சியில் நான் ஈடுபடலானேன்.

பெருவிரலையும் நடுவிரலையும் ஒன்றாக அழுத்தி உதறி சொடுக்கில் "டிக் டிக் டிக் டிக்" என்று பலமுறை சப்தங்களை எழுப்பியபடி அந்த குழந்தையைப் பார்த்து செய்யத் தொடங்கினேன். அந்த புதுவித சப்தத்தை கேட்டு திருப்பிப்பார்த்த அந்த குழந்தை சொடுக்கை நிறுத்தியதும்,தான் நிறுத்திய தன் அழுகையை மீண்டும் இசைக்கத் தொடங்கிவிட்டது.

குவளை மலர்க்கண்கள் இரண்டும் கண்ணீரில் நனைந்து குளிர்ந்திருந்தன. .கண்களில் ஊற்றெடுத்த அந்த முகாரி வெள்ளம் கன்னப்பாறைகளில் பெருக்கெடுத்து மலர்ப் போன்ற உதடு தொட்டு உடைகளையும் ஈரப்படுத்தி இருந்தது.உதட்டை மேல்பக்கமாய் உயர்த்தி பக்க வாட்டில் இழுத்து இடைவிடாது அழும் அந்த மழலையின் அழுகையை என்னால் பார்க்கமுடியவே இல்லை.

கட்டை விரலை என் காதிற்கு சற்று மேல் முட்டுக்கொடுத்தபடி இருநான்கு விரல்களையும் சிறகடிப்பதைப் போல பாவனை செய்துப்பார்த்தேன்.பல் மருத்துவரிடம் கூட காட்டாத எனது முப்பது சில்லறை பற்களை முதல் முறையாக அந்த குழத்தைக்கு காண்பித்து சிரிப்பை மூட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு தோற்றேன்.புருவங்கள் இரண்டையும் நெற்றி தொடும் அளவிற்கு உயர்த்தி விழிகளின் திரையை சற்றே அகலப்படுத்தி ஆனந்தமும் ஆக்ரோஷமும் கலந்த ஒரு கலவைப்பார்வையில் பார்த்தேன்.திகைத்து நிறுத்திய அந்த குழந்தை மீண்டும் தன் அழுகை வீணையை மீட்டத்தொடங்கியது.

கங்காரைப் போல தன் மடியில் உறுதியாய் தாங்கியப்படி தூங்கிக்கொண்டிருந்த அந்த மழலையின் தந்தையை எழுப்பிவிடுவதே சரியாது என்று முடிவெடுத்தேன்.

"சார்" "சார்" என்று மெதுவான குரல் எழுப்பி என் விரல்களால் அவரது இடது தோள்பட்டையை லேசாக தொட்டெடுத்தேன். தவம் கலைந்ததைப் போல விழித்துக்கொண்ட அந்த நபர் ஏதோ ஆபத்து நேர்ந்ததாய் உணர்ந்து எழுந்தததும் தன் மழலையைப் பார்த்தார்,பிறகுதான் என்னைப் பார்த்தார்.புன்னகையால் ஒரு நன்றியை சொல்லிவிட்டு திரும்பிக்கொண்டார்.

கணவனின் தோள் தலையணை நகர்ந்த நிலையில் அவளும் உறக்கம் கலைந்து ."என்ன ஆச்சுங்க" என்ற கேள்வியை எழுப்பிய படியே தன் குழந்தையை "நீ வாடா செல்லம்" என்று வேகமாய் புயல் பறிக்கும் பூவைப்போல கணவனின் கைகளிலிருந்து அன்பின் மிகுதியால் வாங்கிக்கொண்டாள்.இப்போது அழுகைக்கு ஒரு தீர்வு கிடைத்துவிடும் என்று நம்பிக்கை பெருமூச்சு விட்ட தந்தைக்கு தன் மழலை ஏமாற்றத்தையே தந்தது.

லேசாக அழுதுகொண்டிருந்த அந்த மழலை இப்போது உச்சதாயத்தில் .வீறிட்டு அழத்தொடங்கிவிட்டது மனதை ஏதோ பிசைவதைப் போல இருந்தது.எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த பாட்டியம்மா ஒருத்தி உறக்கம் தொலைத்து திருப்பிப்பார்த்து."இங்கே பாரும்மா...குழந்தைக்கு வெக்கை அதிகமா இருக்கும் ,அதான் உப்பசம் தாங்காமல் அழுதிருக்கு,மேல் சட்டையை எடுத்துடுங்க" என்று தன் அனுபவத்தை பகிர்ந்துகொண்டதைப் போல நடந்தேறியது.குழந்தை அழுகையை நிறுத்திய பாடில்லை.

பக்கத்து இருக்கையில் இருந்த வயதான தாத்தா ஒருவர்."இன்னமும் அழுதுன்னா பூச்சி கீச்சி கடிச்சிருக்கும்,கொஞ்சம் நல்ல பாருங்க" என்று மழலையில் அழுகை தாங்கமுடியாமல் நல்ல ஆலோசனை ஒன்றை உதிர்த்தார்.அப்போதே குழந்தை முழு உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.தலை கழுத்து கக்கம் கால் இடுக்கு விரல்கள் என்று எல்லா பாகங்களிலும் தேடுதல் வேட்டையை தாயும் தந்தையும் நடத்தி தோற்றார்கள்.மீண்டும் குழந்தை கதறத் தொடங்கி விட்டது.

இப்போது பேருந்தில் இருந்தவர்களில் பெரும்பான்மையோர் விழித்துக்கொண்டார்கள்.மழலையின் அழுகை பீறிட்ட திசையைப் பார்த்து விழிகளால் மொழிகளில்லாமல் ஆறுதல் சொன்னார்கள்.ஒரு கட்டத்தில் விழித்துக்கொண்ட நடத்துனர்."ஏம்மா குழந்தை காளு காளுன்னு இப்படி அழுது ..சும்மா இருக்கீங்க" என்று தனக்கே உரிய பாணியில் கடிந்துகொண்டார்.அந்த கோபத்தில் எரிச்சலும் அக்கறையும் இருப்பதை உணர்ந்த அவர்கள் எதிர்வினைப் புரியவில்லை.

நடத்துனர் போட்ட சத்தத்தில் ஓட்டுனர் தனது பங்கிற்கு செவ்வகக் கண்ணாடி வழியாக நிகழ்வுகளைப் பார்த்தபடியே பேருந்து ஓட்டுவதில் கவனமாய் இருந்தார்.ஒரு திருப்பத்தில் பேருந்தை ஓரங்கட்டிவிட்டார்.எல்லோரும் என்னவோ ஏதோ என்று முழிக்கத் தொடங்கினர்.அந்த மழலையை பேருந்திலிருந்து கீழே சுமந்த படி வந்த தந்தை இயற்கையின் காற்று பட அனுமதித்துவிட்டு லேசாக மழலையின் முகத்தை ஈராமாக்கப்பட்ட தன் மெல்லிய கைக்குட்டையால் ஒற்றி ஒற்றி எடுத்தார்.இந்த இதத்தில் சொக்கிப்போயிருந்த மழலை முற்றிலுமாக அழுகையை நிறுத்தி இருந்தது, பேருந்தில் இருந்த அனைவருக்கும் பெரிய நிறைவை ஏற்படுத்தியது.

பேருந்து அந்த மலைப்பாதையில் கிளம்பத்தொடங்கிய சில வினாடிப்பொழுதுகளில் குழந்தை இதுவரையில் இல்லாத அளவிற்கு ஏகமாய் வீறிட்டு அழத்தொடங்கியது.இறக்கமில்லாதவர்களையும் கூட அழவைத்துவிடும் அளவிற்கு அந்த குழந்தையின் அழுகையில் ஒரு அடர்த்தியான சோகம் நிழலாடிக்கொன்றுதான் இருந்தது..பயணம் முடியும் வரையில் அந்த மழலையில் அழுகைக்கான காரணத்தை யாராலும் அறியமுடியவில்லை எனபது அவைவருக்கும் ஏமாற்றமாகவே இருந்தது.

ஒவ்வொரு நிறுத்தமாக மனிதவெள்ளம் வழியத்தொடங்கியது.

அழுத குழந்தையோடு அதன் பெற்றோர்கள் இறங்கிய பின்னர் அந்த இடத்தை இயல்பாக நோட்டமிட்ட போதுதான் உரையுடன் கால்களில் மிதிபட்டு சப்பையைக் கிடந்தது ஒரு சாக்கலேட்.இறுதியாக மழலையின் அழுகைக்கான காரணத்தை கண்டறிந்த மகிழ்ச்சி ஒரு புறம் இருந்தாலும் ,ஒரு மணி நேரத்திற்கு மேலாக கதறி கதறி அழுத மழலையின் அழுகை வெகு நாட்களாக எனது செவியில் முகாரி ராகமாய் ஒலித்துக்கொண்டே இருந்தது.

அன்றிலிருந்து இப்போதெல்லாம் பேருந்து பயணத்தில் மிட்டாய்கள் இல்லாமல் நான் பயணிப்பதே இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக