சனி, 23 ஜூலை, 2011

"தெய்வத்திருமகள்,மகன்" - திரைவிமர்சனம்


.23 ஜூலை 2011, 22:04 க்கு Mani Vannanஆல்.தாயுமானவனுக்கும் தந்தையானவளுக்கும் இடையேயான மெல்லிய உறவின் உணர்வே 'தெய்வத்திருமகள்'.நிலாவும் கிருஷ்ணாவும் நிஜத்தில் நமக்கு நெருக்கமானவர்கள் ஆகிவிட்டார்கள்.உடல் மொழி பாவனை அசட்டு மொழிநடை புதுமாதிரியான மெளனம் போன்ற பலவற்றால் கிருஷ்ணா தொடக்க காட்சி முதலே உன்னிப்பாக கவனிக்க வைக்கிறார்.தித்திப்பான சாக்லேட் கூடத்தில் உவர்ப்பான சோகத்தின் கலவை சரிவிகிதம்.



தனக்கு மனைவி இல்லையே இன்று ஏங்குவதை விட தன் நிலாவிற்கு தாய் இல்லையே என்று ஏங்கும் ஏக்கம் கிருஷ்ணாவின் தூய ஆன்மாவின் அடையாளம். 'அம்மா எங்கப்பா' என்று மகள் கேட்கும் கேள்விக்கு 'சாமிகிட்டே போயிட்டாங்க' என்று சம்மளிக்கும் கிருஷ்ணாவை 'ஏன் சாமிகிட்டே போனாங்க' என்று கிளர்ந்தெழும் நிலாவின் இரண்டாவது கேள்வி 'நல்லவங்களை எப்போதும் சாமி தன் கூடவே வச்சிக்கும்'என்ற பதிலை கிரிஷ்ணாவிடமிருந்து கொண்டுவருகிறது. 'அப்ப நாம நல்லவங்க இல்லையாப்பா?' என்ற எதிர்வினா ஒவ்வொரு பார்வையாளனின் தொண்டைப்பகுதியை கனக்கவைத்து விழிகள் இரண்டையும் பனிக்கவைக்கவே செய்கிறது.இப்படி ஒரு கேள்வியை கிருஷ்ணாவும் எதிர்ப்பார்க்கவே இல்லை.சிறார்களின் சில வினாக்களுக்கு பெரியவர்களாலும் பதிலளிக்க முடியாது எனபது நிதர்சனம்



ஒரு சமூக சேவகியாக இருந்து நிஜமாகவே மனநிலை பாதிக்கப்பட்டவரான கிருஷ்ணாவை மணந்து ஒரு குழந்தைக்கு தாயாகி தெய்வமான நிலாவின் தாயும், தன் மகளின் அன்பிற்கு கட்டுப்பட்டு தன் செல்வாக்கு அந்தஸ்த்து இவைகளைப்பற்றி கவலைப்படாமல் தன் மகளின் விருப்பமே தன் விருப்பம் என்று நெகிழ்ந்துகொடுத்த நிலாவின் தாத்தாவும்,கிருஷ்ணாவின் குழந்தைக்கு கள்ளம்கபடமில்லா நிழல் தாயாக வாழ்ந்த கிருஷ்ணாவின் நண்பரின் மனைவியும்,கிருஷ்ணாவிற்கு எந்த ஒரு சூழலிலும் தினையளவேனும் துரோகம் நினைக்காத தன்னொத்த தூய தோழமைகளும்,தன் சகோதரியின் மகளான நிலாவிற்காக தன் காதலையும் கூட தூக்கி எரியத் துணிந்த நிலாவின் சித்தியும்,சிக்கல்களோடு நீதிமன்றத்தில் படி ஏறுகிறவர்களை வலிந்து அணுகும் வழக்கு இளவல் வினுவும் ,தெளிவும் துணிவும் கனிவும் இரக்கமும் கொண்ட வினுவின் வழக்கு தலைவியாக வந்து வழக்கறிஞர் என்பதையும் தாண்டி நல்ல சமூக அக்கறைகொண்ட மனுசியாகவரும் அனுராதாவும், சாக்லேட் நிறுவத்தில் பணியாற்றும் கிருஷ்ணாவின் ஒவ்வொரு நகர்விலும் அக்கறை எடுத்து உறுதுணையாக இருக்கும் உற்ற நண்பராக வாழ்ந்திருக்கும் அந்த முதலாளியும் என்று படம் முழுக்க இப்படியான நல்ல கதாபாத்திரங்களால் 'தெய்வத் திருமகள்' பின்னப்பட்டிருக்கிறது.





தன் மனைவியின் மரணத்திற்கு பிறகு திருமணம் என்பதைப் பற்றியே சிந்தனை இல்லாமல் தன் நிலாவையே உலகமாக பார்த்து பரவசப்பட்டு சுகிக்கும் ஒரு நல்ல தந்தையின் முத்திரை கிருஷ்ணாவின் மீது அழுத்தமாக பதிந்திருக்கிறது.உள்ளங்கைகளை மடக்கி அதற்கு உதட்டுச்சாயம் பூசி கிருஷ்ணாவும் நிலாவும் கைகளால் பேசிக்கொள்ளும் காட்சிகள் பாசத்தின் பரவசச் சாரல்.கண்களிலிருந்தும் விரல்களிளிருந்தும் முகபாவனைகளிளிருந்தும் இத்தனை அடத்தியான நேசத்தின் பாசைகளை ஒரு நிலாவால் வெளிப்படுத்த முடிந்ததற்கு

நிலாவிற்கு பாராட்டு,அந்த மழலையிடமிருந்து மகத்தான அந்த வெளிப்பாட்டினை வெளிக்கொண்டு வந்தமைக்கு இயக்குஞர் விஜய் அவர்களுக்கு கைத்தட்டல்கள்.





நீதிமன்ற காட்சிகளை தமிழ் சினிமாக்கள் தள்ளிவைத்து பத்துவருடங்களுக்கு மேலாகும் சூழலில் ஒரு பாதி திரைப்படத்தை நீதிமன்றத்திற்குள் நகத்தி பார்வையாளர்களை கூர்ந்து கவனிக்கவும், மெளனமாக அழவும்,ரகசியமாய் கண்ணீரைத் துடைத்துக்கொள்ளவும்,மனது இளகவும் செய்திருந்தது அற்புதம்.மேலும் தேவையான இடத்தில் இசை,பளிச்சென்ற எதார்த்தத்தின் பிரதிபலிப்பாய் வசனங்கள் இயல்பான காட்சியமைப்புகள் இவை அனைத்துமே தெய்வத்திருமகளுக்கு சூட்டப்பட்ட கிரீடங்கள்.நகைச்சுவைக்கு தனியாக தடம் அமைக்காமல் கதையின் ஓட்டத்தில் நகைச்சுவை உணர்வை குபீரென்று வெடிக்கச் செய்திருப்பது திரைக்கதையின் புத்திசாலித்தனத்திற்கு சிறந்த உதாரணமாகிறது



பசுமையான வனங்கள்,உயரமான மலைகள், செழிப்பான தேயிலைத் தோட்டங்கள்,வளைந்து நெளிந்த சாலைகள்,மரவீடுகள், ஜில்லென்ற மேகங்கள் மற்றும் குறிப்பாக கள்ளம்கபடமில்லாத மனிதர்கள் என்று அத்தனை அழகின் சிரிப்புக்களையும் நீலகிரிமாவட்டத்தின் பின்னணியோடு இணைத்திருப்பது படத்திற்கு மேலும் பலம் சேர்க்கிறது.ஜில்லென்ற தேசத்தில் வாழ்ந்த கிருஷ்ணாவின் தகிக்கும் வாழ்க்கை பாடுகள் வெப்பம் தணியாமல் பதிவு செய்யப்பட்டுள்ளன . நல்ல களம் நல்ல கதை நல்ல கதாபாத்திரங்கள் நல்ல படிப்பினை என்று பல்ல நல்லவைகளை அடுக்கிக்கொண்டே போகமால்.



உண்மையாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களால் கூட கிருஷ்ணா அளவிற்கு எதார்த்தமான உடல்மொழி வெளிப்பாடுகளை தரமுடியும்என்பது சந்தேகம்.மேனி இளைத்து ,கன்னம் வற்றி, உடல் கோணி,மொழி குழறி, மழலையாய் வாழ்ந்திருக்கும் கிருஷ்ணாவிற்கு பாராட்டுக்களை சொல்லாமல் இருக்கமுடியவில்லை.படத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை பிசகாமல் அந்த அசட்டுத்தனமான மழலை உணர்வை பரிமாறி இருப்பது கிருஷ்ணாவை அடுத்த நிலைக்கு உயர்த்தவே செய்கிறது.தெய்வத்திருமகளாக நிலாவும் தெய்வத்திருமகனாக கிருஷ்ணாவும் தேவ பாசை பேசுகிறார்கள்.நல்ல அன்மாக்களால் மட்டுமே அந்த பரி பாசைகளை செவிமடுக்கமுடியும்.



படம் முடிந்ததும் படித்தவர்கள் நிறைந்த ஒரு கருத்தரங்க அறையில் ஒரு நல்ல நிகழ்வு நடந்துமுடிந்த பிறகு ஆரவாரமில்லாமல் மனது நிறைந்து ஒரே சீராக தட்டிய கைத்தட்டல் இன்னமும் ஏன் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.அந்த கைத்தட்டல் இயக்குஞர் விஜய்க்கு உரியது என்பது ஏன் கருத்து.உங்கள் கருத்தும் அதுவாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன்





இயக்குஞரிடம் சில கேள்விகள்

1 . பிறந்ததிலிருந்து ஐந்து வயதுவரை சீரோடும் சிறப்போடும் நிலாவை வளர்க்கத் தெரிந்த கிருஷ்ணாவிற்கு அதற்குமேல் வளர்க்கமுடியாது என்ற உணர்வு ஏற்பட்டு நிலாவின் சித்தியிடம் அவளை ஒப்படைப்பது ஒத்துக்கொள்ள முடியவில்லை.

2 . நிலாவின் சித்தி தன் வருங்கால துணியை கரம்பிடித்தாளா? இல்லையா?

3 .கிருஷ்ணாவின் மீது பரிதாபம் கலந்த உணர்வை ஒரு கட்டத்தில் காதல் கொள்ளத் தொடங்கும் அனுராதாவின் முடிவுதான் என்ன?

4 .மதுவிற்கும் மாதுவிற்கும் தன் சட்டத்தை அடகுவைக்க தயாராக இருக்கும் வழக்கறிஞர்களை குத்திக்காட்டி இன்னொரு வழக்கறிஞரை கண்ணியமாகக் காட்டி இருப்பது சப்பைக்கட்டுதானே.

5 .சாக்லேட் நிறுவனம் அமைக்கப்பட்டது செயற்கையாக தெரிகிறது.குறிப்பாக மரவிசிரி கண்களை உறுத்துகிறது.இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.

6 .'விழிகளில் ஒரு வானவில்' என்ற பாடல் கதையின் ஓட்டத்தில் மிகப்பெரிய வேகத்தடையாகவே இருக்கிறது.நேரத்தை நிரப்புவதற்காக இந்த முயற்சியா? அந்த ஐந்து நிமிடங்களில் நிலாவை காட்டி இருந்தால் இன்னும் அதிகமாக ரசித்திருப்போம்

7 .வழக்கில் வெற்றிபெற வேறு விதமான வியூகங்களை இளைய வழக்கறிஞர்கள் மேற்கொள்ள வேண்டும் என்ற உங்களின் வழிகாட்டல் நியாயம்தானா?

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக