செவ்வாய், 1 ஜூன், 2010

தொடர்வண்டி குறிப்புகள்

இருவரிக்குள் ஒருவரிக்கவிதையை
எழுதிச்செல்கிறது தொடர்வண்டி.

தண்டவாளங்களோடு
இடைவிடாமல் இங்கிலீஸ்முத்தம்
கொடுக்கின்றன
இரும்புச்சக்கரங்கள்.

'தண்டவாளங்கள்'
இந்திய மண்ணின் அந்நியன் எழுதிய
உலோக வரலாறுகள்.

எல்லா மனிதர்களையும்
சுமந்தபடி நகர்கிறது
ஒரு ஜனநாயகவீதி.

தூங்கும்
ஸ்டேஷன் மாஸ்டர்களை
சங்கொலியில் எழுப்பியபடி
மின்னதிர்ச்சியில்
கதறிக்கொண்டே ஓடுகிறது
தொடர்வண்டி.

வழிநெடுக
சிலுவை மரங்களாய்
மின்சாரம் சுமக்கும்
கம்பங்கள்.

உறவுக்காரர்களை
வழியனுப்பி வைப்பதுபோல
கையசைத்து புன்னகைக்கும்
சிறார்கள்.

லட்சக்கனக்கில்
நிழல் சிதைந்த
குடைகளைப் பிடித்திருக்கும்
முட்புதர்கள்.

கைகளில்
காயக் கவிதைகளை
முட்கள் கிறுக்க
சுள்ளி பொறுக்கும் பெண்கள்.

கொள்ளை வெயிலில்
வெள்ளைக்காரன் விளையாட்டை
விளையாடும்
கறுப்புக் குழந்தைகள்.

தியானிக்கும்
மலைகள்.

இரையைத் தேடிக்கொண்டே
நகரும் ஆடுகள்.

வறண்ட தரிசுகளில்
நம்பிக்கையை விதைக்கும்
உழவர்கள்.

தூரத்தில்
தண்டவாளத்தை தாண்டும்
பள்ளித்தாமரைகள்.

எல்லோரும் குளிக்கும்
ஒரு
கிராமத்தின் பாத்ரூமாய்
தெப்பக்குளம்.

ஊர் எல்லையில்
தெருமுனையில்
கொட்டமடிக்கும் சுந்தரபுருசர்கள்.

ஆலமரத்தடியில்
அசைவற்று ஓய்வெடுக்கும்
தெய்வங்கள்.

வண்ணங்கள் தொலைத்த
புழுதிபடிந்த சோலைகள்.

கழுத்து வலிகளைத்
தங்களுக்குள்ளேயே
பரிமாறிக்கொள்ளும்
பாரம்சுமக்கும் வண்டிமாடுகள்.

ஆளரவமில்லாத
அனாதைச்சாலைகள்.

சன்னலுக்குள்ளே
கைகளை நிரப்பும்
இயலாத...
பெண்கள்-குழந்தைகள்-பெரியவர்கள்.

மனிதர்களை வள்ளலாக்க
முயற்சிசெய்து
தோற்றுப்போன பிச்சைக்காரர்கள்.

மானிடர்களின் கருணையுள்ளத்தை
சோதனைச்செய்து பார்க்கும்
குரங்குகள்.

அமுதமோ ஆலகாலமோ
உணவுப்பொட்டலங்களை விற்று
விருந்தோம்பும் சீருடைமனிதர்கள்.

வயிற்றில் கலவரம்;
இரப்பையில்
உள்ளிருப்பு போராட்டம்.

பூட்ஸ் கால்களுக்கிடையில்
தவழ்ந்தபடி
தரையைக் கூட்டிச்செல்லும்
ஊனமுற்ற சிறார்கள்.

இப்படியாய் ...
டயர் பஞ்சராகாமல்
ஓடும் தொடர்வண்டியில்
எனக்கு பிடித்தது...
தீண்டாமையை கடைப்பிடிக்காத
ஜெனரல் கம்பார்மென்ட் தான்.

சனி, 29 மே, 2010

தோற்றுப் பழகு

யாரேனும்
உள்ளுறுத்தும் படியாய்
ஈனப்பார்வை பார்த்தால்
பதிலுக்கு
ஈரப்பார்வை பாருங்கள்.

வெடிக்க ஒலிக்கும் - பிறரின்
எக்காளச் சிரிப்பைவிட
சலனமற்ற
அடர்த்தியான மெளனம்
சக்தி வாய்ந்தது.

முத்துத் தண்டுவடத்தை - யாரும்
முறித்துப் போடவில்லை.
நிமிர்ந்து பாருங்கள்
தாழ்வு மனப்பான்மை
குனிந்துகொள்ளட்டும்.

நேற்று விழவைத்தவர்களை
இன்று அழவைப்பவர்களைத்
தொழுது வையுங்கள்.
விழவைத்து அழவைத்து - உங்களை
எழவைப்பவர்கள்
அவர்கள்தான்.

செந்தணலாய் எரியும்
அவமானச் சிவப்பை - உன்
கன்னங்களில்
காணத் துடிப்பவர்களுக்குக்
குளிர்நிலவாய் காட்சிகொடுங்கள்.

பள்ளம் பறித்தால்
இரண்டையும் கற்றுக்கொள்ளுங்கள்
விழுவதையும் எழுவதையும்.

சரமாரியாய் - உங்களை
குறிவைத்துப் பாயும்
சரங்களை சேமித்து
செய்துகொள்ளுங்கள்
உங்களுக்கான வலிய கேடயம்.

உங்கள் மீது
கல்லெறிகிறவர்களைக் கைத்தொழுங்கள் - அந்த
கற்களை அடுக்கிவைத்தால்
இமயம் செய்யலாம்.

யாரேனும்
சொற்களை முள்ளாக்கி
கீறினால் - இதயத்தில்
உழவு நடப்பதை
வலியுடன் மகிழுங்கள்.

நகுதல் ஒலிகளை
நாத கீதமாய்
நுகர்ந்து பாருங்கள்.
திட்டுமொழிகள் கூட
தித்திக்கும் மொழியாய் இனிக்கும்.

பொடிவைத்து பேசினால்
படி வைத்து பேசுங்கள்.

உளைச்சல்களே
விளைச்சல்கள் தரும்
வருத்தங்களே
திருத்தங்களைத் தரும்.

கை கொட்டிச்சிரித்தால்
கெட்டிச்சிரிப்பை கொடுங்கள் .

எல்லோருக்கும் பிடிக்காத சனம்
பிடித்தசனம் ஆகட்டும்
'விமர்சனம்'.

சிக்கிக் கொள்ளாதீர்கள்
கவலைகள்
வலைகள் வைத்திருக்கின்றன.

வலியோனாய் வாழ்ந்து
எளியோனாய் காட்சிக்கொடு

வாழ்க்கையில் பயணப்படுகிறபோது
பாதங்களைப் பதம்பார்க்கும்
கூரிய முட்களை
ஊசியாக்கிக் கொண்டால்
உதிரிப்பூக்கள்
மாலையாகிக்கொள்ளும்.

தோற்பதும் வெல்வதும்
வீரனுக்கு அழகு.
முதலில்
தோற்றுப்பழகு.

சனி, 8 மே, 2010

காதல் குறட்பாக்கள்: 27

மாந்தளிர் நிறம்கொண்ட
பூந்தளிர் பூவையைத்
தழுவும் இன்பம்
உன்னத உழைப்பில்
கிடைத்த உணவைப்
பிறருக்கும் கொடுத்து
தானும் சுவைக்கும்
இன்பத்திற்கு இணையானது.

இனிய உணவு
இரைப்பை நிரப்பும்
இனிய உணர்வு
இதயப்பை நிரப்பும்
--------------------------------------
குறள்: 1107
தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு

காதல் குறட்பாக்கள்:26

உயிராற்றல் பாய்கிற
உன் மூங்கில் தோள்களை
தொடும்போதெல்லாம்
என் விரல்
புல்லாங்குழல் ஆகிறதே.
எதனால் செய்யப்பட்டிருக்கின்றன
உன் தோள்கள் ?

அழகினாலா ?
அமிழ்தினாலா?
--------------------------------------------
குறள்:1106
உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.

காதல் குறட்பாக்கள்:25

உன்
ஆடை நழுவுகையில்
உன்
தோளை தழுவுகையில்
நான்
நினைக்க விரும்புகிற
பொருளாக நீ!
நான்
விரும்பி நினைக்கிற
பொருளாகவும் நீ!
---------------------------------------
குறள்:1105
வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்

காதல் குறட்பாக்கள்:24

அன்பே!
நீயொரு அதிசயத் தீ!
நெருங்கினால் பனிக்கிறாய்
விலகினால் எரிக்கிறாய்.
-------------------------------------------
குறள்:1104
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றால் இவள்

காதல் குறட்பாக்கள்:23

காதலியே !
உன் மெல்லிய தோள்தழுவி
பஞ்சணையிலும் நெஞ்சணையிலும்
பள்ளிகொள்ளும் துயிலின்பம்
சொர்கத்தின் சுகத்தைக்காட்டிலும்
சுகமானது.

எத்தனை கோடி
இன்பம்வைத்தாய் இறைவா !
இவளிடம்.
---------------------------------------------
குறள்:1103
தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு