ஞாயிறு, 4 ஜூலை, 2010

காதல் குறட்பாக்கள்

அவள்
காம்பு கிள்ளாமல்
அனிச்சப்பூ சூடினாள்.

அந்தோ..!
முறிந்தே போனது
அவளின்
மெல்லிய நூலிடை.
--------------------------------------------
குறள்:1115
அனிச்சபூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஆ பறை

காதல் குறட்பாக்கள்

எல்லோரும்
குவளையில் மலர்வளர்ப்பார்கள்
அன்பே
நீ மட்டும் எப்படி
குவளை மலர்களையே
உன் கண்களில் வளர்க்கிறாய்.

அந்தோ...
உன் கருவிழிகளுக்கு
ஈடுகொடுக்கவியலாமல்
தலைக் கவிழ்ந்தன
குவளைமலர்கள்.
---------------------------------------------------
குறள்:1114
காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று

சனி, 3 ஜூலை, 2010

காதல் குறட்பாக்கள்

மைதீட்டிய வேல்கள்
உன் விழிகள் !
இதழ்ப்பெட்டி முத்துக்கள்
உன் பற்கள் !
இனிய மூங்கில்கள்
உன் முதுகுபுறங்கள் !
மொத்தத்தில்
குளிர்கொண்ட தளிர்களால் ஆனது
அவளது மேனி.
----------------------------------------------------
குறள்:1113
முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோள் அவட்கு

வெள்ளி, 2 ஜூலை, 2010

காதல் குறட்பாக்கள்

பூக்களில் மென்மை
அனிச்சம்.
ஓ அனிச்சமே !
உன்னிலும் மென்மை
என் காதல் பெண்மை.
..................................
1111
நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்நீரள் யாம்வீழ பவள்

தீராநதி

உவர்ப்பின் சுவையை
உதடுகளுக்குச் சொல்லி
ஊமையாய்
மெளனத்தைப் பேசியபடி
சத்தமில்லாமல்
ஓடிக்கொண்டே இருந்தது
தீராநதி.

யாருமற்ற
தாழிடப்படாத அறையில்
என்னை அறியாமலேயே
விழிகளில் வளர்ந்திருந்த
பனிமலை
உருகிக்கொண்டே இருந்தது
உருவம் சிதையாமலேயே.

விரலொன்று
கதவைத் தட்டவும்
காணாமல் போயிருந்தன
விழியில் முளைத்த மலையும்
நிறைந்து வழிந்த நதியும்.

எப்போதும்
புயலோடு கலந்தடிக்கும்
என் கார்காலத்தின் சாரல்
யார்மீதும்
தெரித்துவிடக்கூடாது என்பதில்
உறுதியாய்...நான்.

வியாழன், 1 ஜூலை, 2010

காதல் குறட்பாக்கள்

புத்தகத்தை
வாசிக்க வாசிக்க
அறியாமையை உணர்ந்ததுபோல்
உன்னை
நேசிக்க நேசிக்க
உணர்கிறேன்
புதிய எழுச்சிகளை.

அன்பே!
அணைக்க அணைக்க
இனிக்கிறாய்.
இனிக்க அணைக்க
சுகிக்கிறாய்.

குறள்:
அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு (1110)

இரண்டாவது முறையாக கொல்லப்பட்ட கணியன்பூங்குன்றன்

"செம்மொழியான தமிழ் மொழியாம்" என்ற பாடலை உலகத் தமிழர்கள் ஒவ்வொருவரும் உச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள் . அந்த செம்மொழி அடையாள பாடலில் "யாதும் ஊரே யாவரும் கேளிர் "எனபது கணியன் பூங்குன்றனாரின் வரிகள். அதை பாடும்போது இசைக்காக அப்படி பாடினாரா? அல்லது அதன் பொருள் தெரியாமல் பாடினாரா? என்று தெரியவில்லை. ஆனால் ரகுமான் பெரிய பிழை செய்திருக்கிறார்.'கேளிர்' என்றால் 'உறவினர்கள்' என்று பொருள்.ஆனால் 'கேளுங்கள்' என்று பொருள் பட 'கேளீர்' என்று நீட்டி முழக்கி பாடியிருக்கிறார். பாடலில் உயிரை கொல்லும் இசை ஆதிக்கத்திற்கு கடுமையான கண்டனங்கள்.ரகுமான் அர்த்தம் தெரியாமல் பாடி கணியன் பூங்குன்றனின் வரிகளில் உள்ள 'மானுட நேயத்தை' கொன்று புதைத்திருக்கிறார். ரகுமானுக்குதான் பொருள் தெரியவில்லை என்றால் தமிழ் வளர்ச்சித் துறைக்குமா தமிழ் தெரியவில்லை? அபத்தமான பொருளுடைய அந்த பாடலுக்கு ஒப்புதல் வழக்கியது செவிலக்கியத்திற்கு அவமானம்.