வெள்ளி, 2 ஜூலை, 2010

தீராநதி

உவர்ப்பின் சுவையை
உதடுகளுக்குச் சொல்லி
ஊமையாய்
மெளனத்தைப் பேசியபடி
சத்தமில்லாமல்
ஓடிக்கொண்டே இருந்தது
தீராநதி.

யாருமற்ற
தாழிடப்படாத அறையில்
என்னை அறியாமலேயே
விழிகளில் வளர்ந்திருந்த
பனிமலை
உருகிக்கொண்டே இருந்தது
உருவம் சிதையாமலேயே.

விரலொன்று
கதவைத் தட்டவும்
காணாமல் போயிருந்தன
விழியில் முளைத்த மலையும்
நிறைந்து வழிந்த நதியும்.

எப்போதும்
புயலோடு கலந்தடிக்கும்
என் கார்காலத்தின் சாரல்
யார்மீதும்
தெரித்துவிடக்கூடாது என்பதில்
உறுதியாய்...நான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக