செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

பளார் பளார்

தண்ணீரை
கொஞ்சம் கொஞ்சமாய்
வீசம்வைத்து கொன்றதால்
எதிர்படுகிற
அனைவரின் கன்னங்களில்
ஓங்கி அறைந்தபடி
கொலை வெறிபிடித்து
ஓடிக்கொண்டே இருக்கிறது...

அதன் தோழனான
ஆடிக்காற்று.

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

விசிறிகள்

வளிமண்டலத்தை
தூசி தட்டுகின்றன
ஆகாயத்தில் சிறகடித்தபடி
பறவைகள்.

தேனுறக்கம்

வழக்கத்திற்கு மாறாய்
முகம் புதைத்து படுத்தபோதுதான்
உணர்ந்துகொண்டேன்
தித்திப்பை

பூவின் எச்சிலும்
பூவையின் எச்சிலும்
படிந்திருக்கக்கூடும்
அந்த
தலையணையில்

தண்ணீரும் கண்ணீரும்

தண்ணீர் வற்றி
வெறுமையாய் மீன்தொட்டி
அதனுள்
நீந்திக்கொண்டே இருக்கிறது
மனம்.

சாளரம்

உள்நுழைந்த சூறைக்காற்று
திறந்துவிடுகிறது
மேற்கூரையை

அடடா
வானில் அழகாய்
விண்மீன்கள்.

திக்குத்தெரியாத காட்டில்

நுழைந்த பின்
வழிதெரியாமல் முழிக்கின்றன
என் விழிகள்.

உன்
கன்னங்கரேலென்ற
கூந்தல் வனத்தினுள்...

மெய்யெழுத்து

காகிதமும் கிடைக்கவில்லை
எழுதுகோலும் இருக்கவில்லை
கவிதை வர எத்தனித்த நேரம்...
இருந்தபோதும்
ஒரு வழியாக
கவிதை எழுதி முடித்தேன்.

அவள் விழிகளின் மைதொட்டேன்
என் விரல்களை தூரிகையானது .

அவளது தோள்கள்
கவிதை காகிதமாகியபோது.