வெள்ளி, 17 டிசம்பர், 2010

சேரன் என்றொரு "கதைப் பொக்கிஷம் "-2

ஒரே பிரசவத்தில் பன்னிரு மழலைகளை அறுவைசிகிச்சை செய்யாமல் சுகப்பிரசவமாக புறம்தந்த தாயைப்போல் தொண்ணூறு நாட்களில் பன்னிரு நூல்களை தயாரித்த நிறைவிலும் மகிழ்விலும் ஆழ்மனம் இருந்திருந்தாலும் , பன்னிரு படைப்பாளர்களின் குடும்பம் புடைசூழ்ந்த வருகையையும் , சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொள்ளும் சிறப்பாளர்களையும் , .கோவை மற்றும் தமிழகம் முழுதிலுமிருந்து வருகப்புரியும் இலக்கிய அன்பர்களையும், புதிய ழ சிற்றிதழின் ஆசிரியர் குழுவினரையும், முறையாக ஒருங்கிணைக்க வேண்டுமே என்ற அச்சமே அதிகமாகவே பற்றிக்கொண்டிருந்தது. இதற்கிடையில் இயக்குஞர் சேரன் அவர்களின் வருகை ஏற்பாடுகள் குறித்து நானே எனக்குள் கலந்தாலோசித்துக்கொண்டேன்.பரவசமும் பரபரப்பும் கலந்த அந்த வினாடியில் மீண்டும் என் அலைபேசி இயக்குஞரை தொடர்புகொண்டது.

'வணக்கம் சொல்லுங்கள் தோழர்' என்று எதிர்முனையில் இயக்குஞர் ஒலித்ததும்,'வணக்கம் தோழர், உங்கள் பயணம் குறித்த கேட்டு தெளிவுப்படுத்திக்கொள்ளலாம்
என்றுதான் அழைத்தேன். உங்களுக்கு விமானத்திற்கான பயணச்சீட்டு பெறவேண்டும் ,எப்போது வருகிறீர்கள் ?நாளையும் நேரத்தையும் சொன்னால் எதுவாக இருக்கும் ' என்று முடிப்பதற்கு முன்பதாக 'இதோ பாருங்க மணிவண்ணன் 'சேரன்' விமானத்தில் எல்லாம் இல்லை, விமானம் வேண்டாம் நீங்கள் தொடர்வண்டியில் பதியுங்கள். முடிந்தால் முதல் வகுப்பு இல்லையென்றால் இரண்டாம்வகுப்பு போதுமானது ' என்ற பதிலில் அவரின் கர்வம் தொலைத்த எளிமையும், விழாவிற்கு கூடுதலாக செலவு வைக்ககூடாது என்ற நல்லெண்ணமும் கலந்திருந்ததை நன்கு உணர்ந்தவனாகி மகிழ்ந்தேன்.மனதிற்கும் வாழ்த்திக்கொண்டேன்.சொன்னது போலவே பதினான்காம் தேதி காலை கோடம் பாக்கத்திலிருந்து கோவைப் பாக்கத்திற்கு அந்த பொக்கிஷம் வந்து சேர்ந்தது.

தகிதா பதிப்பகத்தின் அறிமுக விழாவிற்கான இறுதிகட்ட வேலைகள் நிறைவுக்கு வந்த அந்த பொன்மாலைப் பொழுதில் தொலைதூரத்திலிருந்து வருகை தந்த கவிதைத் தோழமைகளின் வருகையை கஸ்தூரி ஸ்ரீனிவாசா கலையரங்கம் வரவுவைக்க தொடங்கியது. பெற்றோர்களோடும் குழந்தைகளோடும் நண்பர்களோடும் பயணக் களைப்பின் அடையாள ரேகை சிறிதும் தெரியாத அளவிற்கு இனிய சந்திப்பு எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சிப்பூக்களை மலர்த்திக்
கொண்டிருந்தது.எப்போதும் ஆரவாரங்களுக்கு பஞ்சமில்லாத அந்த பீளமேடு சாலையின் ஒருபுறத்தில் விழா நடப்பதற்கான எந்த அடையாளங்களையும் புறத்தே
காண்பித்துக்கொள்லாமல் குளிரூட்டப்பட்ட உள்ளரங்கில் விழா தொடங்கியது..

சேரன் பேசுகிறார்:ஜோடனைகளோடு வாழ்வது எனக்குப் பிடிக்காது

எல்லோருக்கும் வணக்கம்.புத்தக வெளியீட்டு விழா. பன்னிரண்டு புத்தகங்களை ஒரே நேரத்தில் அச்சடித்து பதிப்பகமாக அறிமுகமாகிற விழா என்று தான் இதுவரை நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.இதற்கு முன்னால் நடந்த , அரங்கம் முழுவதும் கைதட்டிய விசயங்களையும் என்னைப்பற்றி மணிவண்ணன் அவர்கள் பேசிய விசயங்களையும் நான் மறந்துவிட்டேன்.ஆகவே அதைப்பற்றி பேசப்போவதில்லை.ஏன்னா அதுலே நெறைய முரண்பாடுகளும் இருக்கு.அதே அப்புறம் பேசறேன்.

முதலில் எனக்கு மணிவண்ணன் என்ற பேராசிரியர், இந்த தமிழ் ஆர்வலர், தமிழின்மேல் ஒரு பற்றோடு இருக்கிறார் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.ஆனால் இங்கு பார்த்த போதுதான் தெரிகிறது,கண்களிலிருந்து வந்த கண்ணீர் அவர் வெறியோடு இருக்கிறார் என்பதை எனக்குக் காட்டியது. அந்த ஆர்வலரை, ,அந்த தமிழ்ப் பற்றாளரை எனக்கு முகப்புத்தகத்தின் மூலமாகத்தான் பழக்கம்.இந்த முகப்புத்தகம் என்று சொல்லக்கூடிய தளம் நிறைய நண்பர்களை , நிறைய ஆற்றல்மிகுந்தவர்களை ,வேறு வேறு விதமான சிந்தனையாளர்களை எனக்கு அறிமுகப்படுத்தியது.அதில் முக்கியமான சிந்தனையாளர் திரு மணிவண்ணன் அவர்கள்.

நான் முகப்புத்தகத்தில் தினசரி எனது புகைப்படத்தை வெளியிடுவதுண்டு,நான் எடுத்த புகைப்படத்தை. சின்னச் சின்ன ஆசைகள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தனித்தனியா இருக்கும்.ஒரு சில பேர் என்னதா நல்ல ஆளா இருந்தாலும் வீட்டுக்குள்ளே பாத்ரூமில் பாடிப்பாப்பாங்க,நம்மளும் ஒரு பாடகர்னு நெனச்சிகிட்டு.இப்ப நிறை பேர் நல்ல கவிஞர்களா இருந்தால் கூட சில ஆசையாலே பேனா எடுத்து நானும் எழுதினதுண்டு கவிதைன்னு. அப்படி சின்ன சின்ன ஆசைகள் இருக்கிறது மாதிரி இந்த போட்டோ எடுத்து பார்ப்பேன் நான். எனக்கு நிறைய போடோ எடுக்குற ஆர்வம் உண்டு,சின்னவயசிலிருந்தே அந்த ஆர்வம் நிறைய இருந்தததனாலே .ஆனா எனக்கு கேமரா இப்பதா கிடைச்சுச்சு டைரக்டர் ஆனதுக்கப்புறம்.

ஆதனாலே இப்ப எடுத்து எடுத்து பழகுன அதுலே நல்ல இருக்கிற போடோடோக்களை முகநூலில் போடுவேன். போட்டுட்டு அதுக்கு கீழே சில வரிகளை எழுதுவேன்; தமிழ்லே எழுதுவேன். எனக்கு அந்த போட்டோ எந்த மாதிரி பாதிக்குது அப்படின்னு. அப்படி அந்த போடோ பாதிக்கிற வரிகளை போடுவேன். சும்மா சாதாரணமாத்தா ஆரம்பிச்சே ஒரு போட்டோ போட்டுட்டு அந்த போட்டோவுக்கு நாலு வரிவேணுமேன்னு போட ஆரம்பிச்சேன்.ஆனா அது வந்து தினசரி ஐம்பது ஐம்பத்தைந்து அறுபது பேர் கருத்துக்களை பதிவு செய்ய ஆரம்பிச்சாங்க.ஆனா அறுபத்த்தஞ்சி பேரோட கருத்துக்களும் வேறுவேறான பார்வையில் இருந்தது. அது ரெம்ப அற்புதமான விஷயம்.

இந்த உலகத்திலே ஒரே மாதிரியான தாக்கம் எங்கேயும் இருக்க முடியாது. வேறுமாதிரியான தாக்கம், வேறே மாதிரியான பார்வை,ஓவொரு இடத்திற்கும் வித்தியாசப்படும். நம்ம வீட்லே பொறந்த அண்ணன் தம்வி அஞ்சு பேரும் வித்தியாசம். பின்னே எங்கிருந்து வெளியிலிருந்து வர்ற மருமக நமக்கு ஒத்துபோற ஆசைப்படற மாமியார நாம இருக்க முடியும் . அதுபோலதான்.அந்த வரிகள் அறுபத்தைத்து பேர் வித்தியாசமா இருக்கும் போது அதுலே எனக்கு அறிமுகம் ஆனவர்தான் மணிவண்ணன் சார்.அதுலே என்னோட போடோகளுக்கு அழகான கவிதைகளை எழுதிகிட்டே இருந்தார். எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. நா அவருக்கு பதிலளிச்சே .பதிலளிச்சபோது அவர் அவரது கவிதை பற்றிய ஆர்வங்களை அவர் வெளியிட்ட போது. அப்படித்தான் எங்களுக்கு பழக்கமானது.ஒரு முறை என்னை வந்து அலுவலகத்தில் சந்திக்கலாமா என்று கேட்டார்.தாராளமாக வாங்க நா உங்களை சந்திக்கிறேன்னு சொன்னப்ப,வந்து என்னை அலுவலகத்தில் சந்தித்தார்

அப்புறம் அதைக்கூட முகப்புத்தகத்திலே வந்து மூணு நாட்கள் மூன்று பகுதிகள் எழுதினார் . என்னை சந்தித்த விஷயத்தை.எனக்கே தெரியாது அவர் அப்படி எல்லா என்னை பாத்தாங்கறது.நா சாதாரணமான மனுசனாத்தா அவரிட்டே பேசிக்கிட்டிருந்தே ,அவரு என்னியே ஒவ்வொரு அங்குலம் அங்குலமா அளந்து அளந்து எழுதி இருந்தார். அது எனக்கு தெரியலே,அவரு எழுதுனதுக்கப்புரம் நா கொஞ்சம் உசாராயிட்டே. இனிமே வந்து பாக்கரவங்ககிட்டே நாம சரியா இருக்கனும்ன்னு.அவ்வளவு பாத்து இதுபண்ணி எழுதினார். எனக்கு அதெல்லா தெரியலே. ஜோடனைகளோடு வாழ்வது எனக்குப் பிடிக்காத் விஷயம். இயல்பான மனுசனா இரு.அவ்வளவுதா .உனக்கு கோபம்வந்தா காட்டிடு,சந்தோசம் வந்தா சிரிச்சிறு, அழுகைவந்தா அழுதிடு.அவ்வளவுதான் ,அப்படியே ஒரு மனுஷன் வாழ்ந்துட்டாலே நிம்மதியா வாழ்க்கை இருக்குமுன்னு நெனக்கிறேன். எல்லாத்தையும் அடக்கிகிட்டு நேயாளியா வாழ நான் தாயாரா இல்லை.

(சேரன் நாளையும் பேசுவார்

சேரன் பேசுகிறார்: யாழ் நூலக எரிப்பின் சாம்பல் மீண்டும் தமிழுக்கே உரமாகும்

மணிவண்ணன் தமிழ் பற்றி பேசும்பொழுது ,இலங்கையைப் பற்றி பேசும்பொழுது, அந்த நூலகங்களில் தமிழ்ப் புத்தகங்கள் எரித்தது தொடர்பாக பேசும் பொழுது , அவர் கண்களில் கண்ணீர் பொங்கி வழிந்தது. ஆனா கவலை படாதீங்க மணிவண்ணன். எரிக்கப்பட்டது பிரதிகள்தான் உண்மை வந்து வெளியிலே கெடக்கு. உண்மையான பிரதிகள் உண்மையான எழுத்து இங்கே கெடக்கு. அப்புறம் நீங்க வந்து அது எரிக்கப்பட்டதா ஏன் நெனச்சி அழுகிறீங்க .அந்த சாம்பல் நமது விதைகளுக்கு உரமாகப் பயன்படப் போகிறது. அதன் மூலம் நூற்றுக்கணக்கான பிரதிகள் நூற்றுக்கணக்கான புதிய புதிய சரித்திரத் நூல்களை இளைஞர்கள் எழுதத்தான் போகிறார்கள் என்று நினையுங்கள்..அதற்கு நீங்கள் விதைச்சிருக்கிற இந்த விஷயம் ,அந்த ஒரே ஒரு காரணத்திற்க்காக ஆரம்பிச்சிருக்கீங்க என்ற விஷயம் என்னை ரொம்ப வெகுவா பாதிச்சிருச்சி.

நான் தெரிஞ்சோ தெரியாமலோ தான் கேட்டே உங்ககிட்டே,என்னோட புத்தகத்தை தகிதா பதிப்பகம் வெளியிடுமான்னு? ஆனா சத்தியமா சொல்றே உங்களுக்காக ஒரு புத்தகம் எழுதப்போறே. அந்த புத்தகத்தே தகிதா பதிப்பகம் தான் வெளியிடப்போகுது . அதே கண்டிப்பா நான் எழுதுவேன். ஏன்னா எனக்கு நெறைய ஆசைகள் இருக்கு எழுதணும்னு .ஏன்னா சினிமாவுலே எல்லாத்தையும் சொல்ல முடியலே. ஏன்னா சினிமா இப்ப சிக்கி சீரழிஞ்சி இருக்கு. எந்தப் படத்தை எடுக்கணும்னு கொழப்பமா இருக்கு. எல்லா நல்ல படம்றீங்க பொக்கிசத்தே. ஆனா ஓடலே.மாயக்கண்ணாடி எடுத்ததிலேயே பிரமாண்டமான படம் என்று அவரு மைக்கே பிடிச்சி பேசுறாரு.ஆனா ஒருத்தன் வரலே திரையரங்கத்துக்கு.

நீங்க பாத்தீங்களா? நீங்க மட்டும் பாத்தா! கோயமுத்தூரே பாத்த்தாதானே அடுத்த படம் எடுக்க முடியும். அதனாலே எடுக்கமுடியாத விஷயங்கள் நிறைய இருக்கு. நம்ம வாழ்க்கையைப் பற்றி திரைப்படத்தில் சொல்லமுடியாத விஷயங்கள் நிறைய இருக்கு. நம்ம வாழ்க்கை பற்றிய நிறைய கேள்விகள் இருக்கு . இதெல்லா புத்தகங்களா வெளிவரணும். இன்னைக்கு நெறைய வழி இருக்கே, நிறைய பேசுறாங்க நிறைய சொல்றாங்க அப்புறம் ஏன் எழுதனும்மு கேட்கலாம் .காலத்தால் அழியாத பதிவுகள் புத்தகங்கள் மட்டும்தான்.

(சேரன் நாளையும் பேசுவார்...)

சேரன் பேசுகிறார் :"புத்தகங்கள் காலத்தின் விலாசங்கள்"

புத்தகங்கள்தான் நமது பதிவுகள். நமக்கு எப்படி தெரியும் நம் முன்னோர்கள் பற்றி? முன்னோர்கள் வாழ்க்கையைப் பற்றி? தமிழ்கள் வரலாறு பற்றி? எப்படி நாம் தோன்றினோம் என்பது பற்றி, எப்படி தெரியும்? பதிவுகள் வேணும்,பதிவுகள் எழுத்துக்கள் மூலமாகத்தான் கொண்டுவர முடியும்.நீங்க படம்புடுச்சி காட்டுனா கூட எங்கேயோ துருபுடுச்சி அழிஞ்சி போயிடும். பதிவுகள் எழுத்துக்கள் மூலமாக நூலகங்களில் பாதுகாக்கப்படவேண்டும்.

எனக்கு எப்படி சொன்றதுன்னு தெரியாது. ஆனா சில ஆட்சியாளர்கள் சில நேரங்கள்லே மிக நல்ல விசயங்களை செஞ்சிருவாங்க .அதுலே ஒண்ணு வந்து, சென்னையில் கட்டியிருக்கக்கூடிய நூலகம். மிகப் பெரிய நூலகம் அது. அது பாதுகாக்கப்பட வேண்டிய நூலகம். மலேசியாவில் பாத்தப்ப நெனச்சே ,இந்த மாதிரி நூலகம் வந்து நம்ம நாட்டுக்கு தேவையாச்சேன்னு. நெஜமாவே அப்படி ஒரு நல்ல விஷயம் நடந்துருச்சி. அதன்மூலம் நல்ல புத்தகங்கள் பாதுகாக்கப்படும் பொழுது பழைய விஷயங்கள் நம் முன்னோர் வாழ்ந்த வாழ்க்கையை ஞாபகப்படுத்தும்.

நாம பின்னாடி வர்ற சந்ததிக்கு என்னத்தே விட்டு போறோ ? நம்முடைய அடையாளத்தைதானே. ஒரு அப்பன் நல்லவனா நடந்திருந்தானா அது பின்னாடி வர்ற பிள்ளைகளுக்கு அடையாளம். கெட்டவனா நடந்த தந்தையின் பெருமையை பிள்ளைகள் பேசமாட்டார்கள்.எங்கப்பா எங்களுக்காக கஷ்டப்பட்டர்ர்.எங்கப்பா வந்து எங்களுக்காக வருத்திகிட்டார்,என்று சொல்லும் போதுதான் அது வரலாறாகவும் அடையாளமாகவும் மாறுது. அதன் வழியில் தான் இந்த புத்தகங்கள் தான் நாம விட்டுச் செல்ற விஷயம்.

இன்னிக்கு இருக்குற இளைஞர்களுக்கு நெறைய பிரசர், நிறைய கேள்விகள்,நெறைய டென்சன் ,அவர்களுக்கு ஒரு காலத்திலே வெறும் கேள்விகள் மட்டுமே விஞ்சி நிற்கும். விடைகளே இருக்காது. அந்த விடைகளை இந்தப் புத்தகங்கள்தான் தீர்த்து வைக்கும் .ஒரு நாளைக்கு திரும்ப இந்த இளைஞர் கூட்டம் முழுக்க பழைய வாழ்க்கை எப்படிடா வாழ்ந்தாங்க? , அவ்வளவு நிம்மதியா அந்த காலத்துலே எப்படிடா வாழ்ந்தாங்க? இப்ப எல்லா பிரசர்லே செத்துகிட்டிருக்கமேன்னு தேடி அலைவாங்க.அப்படி அலையும் போது அவர்களுக்கு விடைசொல்லப் போவது முன்னோர்கள் எழுதிய puththagankal தான். அவர்களது வாழ்க்கை முறை சார்ந்த புத்தகமாகத்தான் இருக்கும்.

அன்னைக்கு இந்த சினிமாவில் கூட நீங்கள் ரசிக்கிற, நீங்க ஓட்டிக்கிடிருக்கிற, நீங்கள் ஆயிரம் ரூபாய் டிக்கெட் கொடுத்து பாக்குற படங்கள் எந்த விடையையும் தமிழ் நாட்டு மக்களுக்குச் சொல்லாது. தமிழகளின் வாழ்க்கையைப் பற்றி பேசிய திரைப்படங்கள்தான் நமக்கான பதிலைத்ததரும்.
சேரன் நாளையும் தொடர்வார்.

சேரன் பேசுகிறார்: நல்ல ரசனையை உருவாக்க தவறிவிட்டோம்

தவமாய் தவமிருந்து பாத்து எங்க அப்பாவை பாத்தேன், நா இப்படிப்பட்ட அப்பாவா வாழலையேன்னு வெக்கப்படறேன், .எங்கப்பா இப்படி இல்லையே ,இப்படிஎல்லா நிறைய கேள்விகளோடு வந்தவங்க நெறைய பேர் .ஒவ்வொரு படங்களும்,என் படங்கள் மட்டும் கெடையாது.ஒவ்வொருத்தரோட படங்களும் இருக்கு.பருத்தி வீரன் எடுத்துக்கிட்டாலும், சுப்ரமணியபுரம் எடுத்துகிட்டாலும் வன்முறை எதற்கு ?வன்முறையினாலே
ஒருத்தரோட வாழ்க்கை எப்படி வீணாகுது? .ஏதாவது ஒரு வகையில் ஒண்ணு சொல்லணும் .ஏதோ ஒரு வகையில் நம்ம சித்தன் ஐயா சொன்ன மாதிரி நின்னு ப்ரோசிங் மாதிரி கேமராவே பாத்து பாத்து பேசக்கூடாதே ஒழிய ஆனா அந்த திரைப்படம் வீட்லே போயி உங்களை பேசவைக்கணும் .ஏதாவது யோசிக்க வைக்கணும் .

ஆனா அதுலே ஒரு ஆபத்து இருக்கு.சித்தன் ஐயா நீங்க கொஞ்சம் கவனிக்கணும்.நானும் உங்கள் மாதிரி மக்கள் பேசட்டுமே , திரைப்படத்திலே நா ஏன் பேசணும் ,மக்கள் போயி யோசிக்கட்டும்.நான் பிரச்சனையே மட்டுமே சொல்லுவேன் , முடிவு ,கருத்து எல்லா சொல்லமாட்டேன்னு சொல்லிட்டுத்தா ரெண்டு படம் எடுத்தேன்.ஒண்ணு மாயக்கண்ணாடி,இன்னொன்னு பொக்கிஷம் .ரெண்டுலயும் அவ்வளவு கருத்துக்கள் அடங்கி இருக்கு.ஒரு இளைஞனை ஒரு சமூகம் எப்படி சீரழிக்கிறது.எந்தெந்த வழியிலெல்ல சீரழிக்குது,அது மனசுக்குள்ளே பேராசை என்ற விதையை எப்படி விதிக்குது,அந்த விதை அவனிடம் எவ்வளவு பெரிய கிளர்ச்சியை உருவாக்கி எத்தகையை சீரழிப்பை அவனது வாழ்வின் வழித்தடங்களில் நிகழ்த்துகிறது என்று சொன்னே.சுற்றுப்புறம் பூரா பாருங்க நெறைய விளம்பர போர்டுகள் ,நெறைய நிறுவனங்கள்,ஆசைக் காட்டும் அழகிகளோடு உள்ள விளம்பர பதாகைகள்.இதெல்லா வச்சிக்கிட்டு நீ டிவி வாங்கு, நீ பைக் வாங்கு,..இப்படி எல்லாத்துக்கு பத்தாயிரம் இருபதனாயிரம் கட்டுனா போதும்.அதுக்கப்புறம் கடன் கட்டறது பத்தின வழியை சொல்லித்தர மாட்டான். ஆனா கடன் கொடுக்கறதுக்கு உங்கள் ஈசியா கூப்பிடுது .நாமும் கடனே உடனே வாங்கி அப்பா இருக்குற தாலியே அடகு வச்சி பைக் வாங்கிர்ரோ. ஆனா மாசம் மாசம் டியூ கட்டும்போது மனசு வலிக்குதில்லே,அதே பத்தி யாரும் யோசிக்கிரதில்லே.

ஆனா அந்த விளம்பரத்துக்கு மயங்குதனாலே அந்த நிறுவனம் நம்ம வீட்டுக்குள்ளே வந்து விழுந்திருச்சி .டிவி மூலமாவும் செல்போன் மூலமாகவும். .செல்போனே எடுத்துகிட்டீகன்னா அவ்வளவு மெசேஜ் நாம்ம அனுமதி இல்லாமே வருது. இதே வாங்கு அதே வாங்கு அது வாங்குன்னு.அப்படி ஆசைப்பட்டவன் என்ன பண்றான்,தான் பார்க்கிற வேலையிலே,தான் நேர்மையாகப்ப்பார்த்த வேலைக்கான சம்பளம் கிடைக்கும் பொழுது, அதை மீறி வாழும் வாழ்க்கையை உருவாக்கிக்கொள்கிறான். அந்த வாழ்க்கையை உருவாக்கும் போது .அதற்கான பணத்தை தேடுவதற்கு தான் பார்க்கும் வேலையிலோ,அவன் இருக்கும் இடத்திலோ ஒருவன் தப்பு செய்யா ஆரம்பிக்கிறான். அப்படித்தான் லஞ்சம் வாங்க ஆரம்பிக்கிறான்,அப்படித்தான் தப்பு பண்ண ஆரம்பிக்கிறார், அப்படித்தான் கையூட்டு நடக்குது; அப்படிதா எல்லாமே நடக்குது.ஆகவே ஒரு இளைஞனை அவை சிதைக்கின்றன. ஒரு நேர்மையான வாழ்க்கைக்கு அவன் தாயாராக இல்லை. ஓவர் நைட்லே ஹீரோவாக நினைக்கிறான்.சினிமாவுலே மூணு நிமிசப்பாடல்லே பணக்காரனானமாதிரி.அஞ்சி நிமிச போட்ட பாட்டோட மாண்டேஜ் முடியறதுக்குள்ளே வாழ்க்கையில் எவனாலயும் முடியாது. ஒருவன் ஒரு வருசத்துலே முன்னேரினான்ன அடுத்த வருஷம் ஜெயிலுக்குள்ளே இருப்பன்.அதெ அவனாலே தக்க வைக்க முடியாது. அது சீட்டு கம்பெனி நடத்துறவங்க நிலைமையெல்லா. இல்லையா? அப்பேற்பட்ட விஷயத்தை வெறும் காட்சிகளா சொல்லிட்டு எந்த கருத்தையும் கேமராவே பார்த்து சொல்லலே. மாயக்க்கண்ணாடியில் எந்த கருத்தையும் நேரடிய மக்கள் கிட்டே சொல்லலே. ஆனா காட்சிகளுக்குள் அடக்கி வச்சி நீ வீட்லே போயி புரிஞ்சிக்கடானு சொன்னே அவனுக்கு படமே புரியலே.


உங்கள் மாதிரி முன்னோர்கள், பெரிய டைரக்டர்ஸ் எனக்கு உலகத்திரைப்பட விழாவிலே சொன்னாங்க ." மக்கள் கிட்டே புரட்சி பண்ணக்கூடாது .அவங்ககிட்டே பேசக் கூடாது. படத்தில் பிரச்சனைகளை சொல்ல வேண்டும் தீர்வை சொல்லாதே" என்று சொன்னாங்க. அட நல்ல விசயமா இருக்கே. ஆவனவன் கருத்துக்கு விட்டுவிடுதல் அதுதானே நியாயம் அதுவும் சரியாகப்பட்டது.என்னன்னா தீர்வு சொன்ன அது என்னுடைய கருத்து தீர்வு சொல்லாமே விட்டுட்டேன்ன நீ அதே யோசிச்சி உனக்கான கருத்தே நீ தேடிக்குவே. அதான் நியாயமான விஷயம் .

இப்ப எங்கே தப்பு நடக்குதுன்னா.அது போல திரைப்படங்களைப் பார்த்து அதை அலுசுவதாய் நாங்கள் உங்களை வளர்க்க வில்லை. உங்களை நாங்கள் அப்படி உருவாக்கவில்லை. அந்த ரசனை மாற்றத்தையும் அந்த ரசனை உருவாக்க நாங்கள்தவறி இருக்கிறோம்

தேசிய நூலகங்களில் தகிதாவின் நூல்கள் & நூல் கிடைக்கும் இடங்கள்

1.The Librarian,National Library,Belvadere,Kolkatta - 27
2. The Librarian,Central Library,Town Hall, Mumbai - 1
3. The librarian,Connemara Public Library,Egmore,Chennai - 8
4. The Kirector,Legal Deposit Division,Delhi Public Library,
Sarojini Nagar,,New Delhi -23
5. Deputy Director,Parliament Library,Parliament House Annex,
New Delhi -110001
6.The Registrar of Books,Office of the Director of information and Public Relation,
Fort St George,Chennai -9

மேற்காணும் தேசிய நூலகங்களில் தகிதாவின் நூல்கள்
இந்திய நூல் வெளியிடும் சட்டத்தின்படி (Act 1954) முறைப்படி அனுப்பப்பட்டுள்ளன

தகிதா நூல்கள் கிடைக்கும் இடம்:

கோவை: 1.விஜயா பதிப்பகம்
2.சேரன் புக் ஹவுஸ்
3. என் சி பி எச்
4. ஹிக்கின் போத்தம்

மதுரை: 1.மல்லிகை புத்தக நிலையம்

(விரைவில் சென்னை மற்றும் பிற நகரங்களில் தகிதாவின் வெளியீடுகள் கிடைக்கும். )

கோவை வாசகர்களின் கவனத்திற்கு

தகிதா பதிப்பகத்தின் நூல்கள்

1.விஜயா பதிப்பகம்
2.சேரன் புக் ஹவுஸ்
3. என் சி பி ஹெச்
4. ஹிக்கின்ஸ் போத்தம்ஸ்

ஆகிய பதிப்பகங்கள் மற்றும் நூல் அங்காடிகளில் விற்பனைக்கு கிடைக்கின்றன.

மேலும் நாளைமுதல் ஒருமாதம்வரை (READERS PARK)ரீடர்ஸ் பார்க்கில் நடைபெற இருக்கும் புத்தகக் கண்காட்சியில் தகிதா நூல்கள் இடம்பெறுகின்றன