வெள்ளி, 17 டிசம்பர், 2010

சேரன் என்றொரு "கதைப் பொக்கிஷம் "-2

ஒரே பிரசவத்தில் பன்னிரு மழலைகளை அறுவைசிகிச்சை செய்யாமல் சுகப்பிரசவமாக புறம்தந்த தாயைப்போல் தொண்ணூறு நாட்களில் பன்னிரு நூல்களை தயாரித்த நிறைவிலும் மகிழ்விலும் ஆழ்மனம் இருந்திருந்தாலும் , பன்னிரு படைப்பாளர்களின் குடும்பம் புடைசூழ்ந்த வருகையையும் , சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொள்ளும் சிறப்பாளர்களையும் , .கோவை மற்றும் தமிழகம் முழுதிலுமிருந்து வருகப்புரியும் இலக்கிய அன்பர்களையும், புதிய ழ சிற்றிதழின் ஆசிரியர் குழுவினரையும், முறையாக ஒருங்கிணைக்க வேண்டுமே என்ற அச்சமே அதிகமாகவே பற்றிக்கொண்டிருந்தது. இதற்கிடையில் இயக்குஞர் சேரன் அவர்களின் வருகை ஏற்பாடுகள் குறித்து நானே எனக்குள் கலந்தாலோசித்துக்கொண்டேன்.பரவசமும் பரபரப்பும் கலந்த அந்த வினாடியில் மீண்டும் என் அலைபேசி இயக்குஞரை தொடர்புகொண்டது.

'வணக்கம் சொல்லுங்கள் தோழர்' என்று எதிர்முனையில் இயக்குஞர் ஒலித்ததும்,'வணக்கம் தோழர், உங்கள் பயணம் குறித்த கேட்டு தெளிவுப்படுத்திக்கொள்ளலாம்
என்றுதான் அழைத்தேன். உங்களுக்கு விமானத்திற்கான பயணச்சீட்டு பெறவேண்டும் ,எப்போது வருகிறீர்கள் ?நாளையும் நேரத்தையும் சொன்னால் எதுவாக இருக்கும் ' என்று முடிப்பதற்கு முன்பதாக 'இதோ பாருங்க மணிவண்ணன் 'சேரன்' விமானத்தில் எல்லாம் இல்லை, விமானம் வேண்டாம் நீங்கள் தொடர்வண்டியில் பதியுங்கள். முடிந்தால் முதல் வகுப்பு இல்லையென்றால் இரண்டாம்வகுப்பு போதுமானது ' என்ற பதிலில் அவரின் கர்வம் தொலைத்த எளிமையும், விழாவிற்கு கூடுதலாக செலவு வைக்ககூடாது என்ற நல்லெண்ணமும் கலந்திருந்ததை நன்கு உணர்ந்தவனாகி மகிழ்ந்தேன்.மனதிற்கும் வாழ்த்திக்கொண்டேன்.சொன்னது போலவே பதினான்காம் தேதி காலை கோடம் பாக்கத்திலிருந்து கோவைப் பாக்கத்திற்கு அந்த பொக்கிஷம் வந்து சேர்ந்தது.

தகிதா பதிப்பகத்தின் அறிமுக விழாவிற்கான இறுதிகட்ட வேலைகள் நிறைவுக்கு வந்த அந்த பொன்மாலைப் பொழுதில் தொலைதூரத்திலிருந்து வருகை தந்த கவிதைத் தோழமைகளின் வருகையை கஸ்தூரி ஸ்ரீனிவாசா கலையரங்கம் வரவுவைக்க தொடங்கியது. பெற்றோர்களோடும் குழந்தைகளோடும் நண்பர்களோடும் பயணக் களைப்பின் அடையாள ரேகை சிறிதும் தெரியாத அளவிற்கு இனிய சந்திப்பு எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சிப்பூக்களை மலர்த்திக்
கொண்டிருந்தது.எப்போதும் ஆரவாரங்களுக்கு பஞ்சமில்லாத அந்த பீளமேடு சாலையின் ஒருபுறத்தில் விழா நடப்பதற்கான எந்த அடையாளங்களையும் புறத்தே
காண்பித்துக்கொள்லாமல் குளிரூட்டப்பட்ட உள்ளரங்கில் விழா தொடங்கியது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக