புதன், 25 மே, 2011

அறை எண் 17 -சிறுகதை

படித்துவிட்டு வேலைதேடும் ஓர் இளம் பட்டதாரி ஆன கண்ணனுக்கு சென்னை என்றாலே அலர்ஜி . கண்ணன் சென்னையைத் தவிர்ப்பதற்கு வெயில்,பரபரப்பு,நெரிசல்,வாகனங்கள்,புகை என்று பலவும் காரணம். .ஆனால் சென்னையை நோக்கி ஓடிவரவேண்டிய நல்ல திருப்பம் கண்ணனது வாழ்வில் நிகழ்ந்தது.



அதிலிருந்து கடந்த ஒருவருடமாக கண்ணன் ஒரு முழுமையான சென்னை வாசி.தனியார் நிறுவனத்தில் சின்ன சம்பளத்திற்கு பெரிய வேலைக்கிடைத்ததில் கண்ணனுக்கு நிறைவுதான்.கண்ணனுக்கு ஊதாரித்தனங்கள் இல்லாததால் அளவான ஊதியம் அவனுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தவில்லை. ஒருவருடம் முடிந்திருந்த போதிலும் கண்ணனுக்கு நன்கு பரிச்சயம் ஆகாத நகரமாகத்தான் சென்னை இருந்தது.காலையில் வேலைக்கு கிளம்பினால் மாலை நேராக மேன்சனுக்கு திரும்பிவிடும் அவனுக்கு இந்த சகமான வாழ்க்கை பிடித்திருந்தது.



மாத வாடகைக்கு தங்கி இருக்கும் அந்த மேன்சனில் தரைத்தளத்தில் அறை எண் 18 -தான் கண்ணன் தங்கி இருந்தான்.எல்லோரும் மாத வாடகைக்கு இருப்பவர்கள் எல்லா முகங்களும் தினந்தோறும் பார்த்து பழக்கப்பட்ட முகங்களாகிவிட்டிருன்தது கண்ணனுக்கு.ஆனால் யாரிடமும் அதிகம் பேசும் பழக்கம் இல்லாத கண்ணன் எல்லோரிடமும் புன்னகைத்து மெளனமாக வணக்கம் சொல்லிவிடுவது வழக்கம்.



காலையில் எல்லா அறைகளும் பூட்டியே இருக்கும் என்பதை தான் கிளம்பும் நேரத்தில் கதவு தாழிடும் சத்தத்தை வைத்து கண்ணன் உறுதி செய்துகொண்டான்.மாலை திரும்பும்போது சில கதவுகள் திறந்தும் பல கதவுகள் மூடியும் இருக்கும்.இப்படியாக நாட்கள் நகர்ந்த அந்த மேன்சனில் அறை எண் 17 மட்டும் மூடப்படாமல் இருப்பதையை அறிந்த கண்ணுக்கு யார் அங்கு நாள் முழுக்க இருக்கிறார்கள் என்று அறிய ஆர்வம் மேலிட்டது.



மேன்சன் பணியாளர் ஒருவரிடம் அந்த குறிப்பிட்ட அறையில் இருப்பது யார் என்று ஒரு நாள் ஆர்வம் தாங்காமல் கேட்டேவிட்டான்.அவரும் பதிலளிக்கவே ட கண்ணனுக்கு அவரை சந்திக்க வேண்டும் பேசவேண்டும் என்ற விருப்பம் எத்தனித்தது.அன்றிலிருந்து மேன்சனுக்குள் நுழையும்போதெல்லாம் அந்த அறையில் இருப்பவரை பார்த்தும் பார்க்காததைப் போல பார்த்துக்கொண்டே செல்வது வழக்கம்.காலையில் ஒருமுறையும் மாலையில் மறுமுறையும் என்று ஒருநாளிற்கு இருமுறை அந்த அறையை நோட்டமிடுவது கண்ணனுக்கு வழக்கமாய் இருந்தது.



மேன்சனின் வரவேற்பு அறையை கடக்கும்போது நடை பாதையின் இடது புறமாக இருக்கும் முதல் அறைதான் அது.எப்போதும் குழல்விளக்கின் வெளிச்சத்தின் பளிச்சிடும்.இருவர் தாங்கும் அறைக்கு பொருத்தமான அகலமான வெண்ணிறப் படுக்கை. மெத்தை முழுக்க துவைக்கப்பட்ட துணிகளில் அடுக்கு,ஒரு பிளாஸ்டிக் தட்டில் குவியல் குவியலாய் மாத்திரைகள்,ஒரு தமிழ் மற்றும் மற்றொரு ஆங்கில நாள் இதழ் , என்று இன்ன பிறவும் மெத்தையை ஆக்கிரமித்து இருக்கும்.கட்டிலின் அருகில் சின்னதாய் ஒரு குட்டி மேசை.அந்த மேசையில் டீ பிளாஸ்க் ஒன்றும் இரு ஸ்டீல் டம்ளர்களும் சில பழத்தோல்களும் கட்சிப் பொருளாக இருக்கும்.டீபாயிக்கு முன்பாக ஒரு பிரத்யேக நாற்காலி.அதை முழுக்க நிரப்பியதைப்போல தன் பருத்த உடம்பை பொருத்தி கட்சிதமாக அவர் காட்சித்தருவார்.



சற்று அகலமாக ஏற்றம் கொண்ட நெற்றி,கூர்மையான நீளமான மூக்கு, அங்கொன்றும் இங்கொன்றுமாக தலைக்காட்டும் நரைத்த முடிக்கற்றைகள் ,சதைப்பிடிப்பான உப்பிய கன்னங்கள்,எடையில் சதத்தைத் தாண்டும் பருமனான உடல்கட்டு , அகன்ற தேகத்தில் முன்னுக்கு எட்டிப்பார்க்கும் லேசான தொப்பை,மார்பும் வயிறும் சந்திக்கும் இடுப்பிற்கு சற்று மேல்பகுதியில் தன் வெள்ளை வேட்டியை முட்டுக்கொடுத்ததைப் போல கட்டி இருந்தார் அவர் .வேட்டிக்குள் வெள்ளை நிற கை பனியன் நுழைந்திருக்கும்.அவ்வப்போது கண்கண்ணாடி அவரின் மூக்கின் மேல் ஓய்வெடுக்கும்,பின்னர் இறங்கிக்கொள்ளும்.கூர்மையான கவனிப்பை வெளிப்படுத்தும் வகையில் அகலமான கண்கள் சுவற்றைப் பார்த்து வேறிப்பதைப் போல வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு தெரியும் .ஆனால் அவர் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் டிவியைத் தான் அப்படி பார்த்துக்கொண்டிருப்பார்.



அவரிடம் பேசவேண்டும் என்ற என்னத்தை கண்ணனது உள்ளுணர்வு அடிக்கடி ஏற்படுத்திக் கொண்டே இருந்ததை கண்ணன் உணரத் தவறவில்லை.ஒரு மாலை பொழுதில் வேலைமுடித்து திரும்பிய போது வரவேற்பரையில் சிறிதுநேரம் மின்விசிறியின் காற்றை கடன்வாங்கியப்படி கண்ணன் அமர்ந்திருந்தான். 'என்ன சார் வேலைக்கு போயி வந்துட்டீங்களா' என்று ரிஷிப்ஷநிஸ்ட் கேட்ட கேள்வி கண்ணனுக்கு ஆறுதலாக இருந்தது.'ம்ம் முடிஞ்சது.. என்னா வெயில் ' என்று கண்ணன் பதிலுடன் தன் அலுப்பையும் தெரிவித்தான்.''ரூம் நண்பர் 17 லே இருக்கும் சாருகிட்டே பேசினீங்களா' என்று மறுகேள்வி கேட்டான்.' நானு பேசணும் பேசணும்னு இருக்கே, சந்தர்ப்பமே அமையலே' என்று தன் விருப்பை தெரிவித்தான் கண்ணன். கண்ணனின் ஆர்வத்தை புரிந்துகொண்ட அந்த மேன்சன் பொறுப்பாளன் 'வாங்க சார் நா அறிமுகப்படுத்தி வைக்கிறேன்' என்று முன்னோக்கி நடந்து என்னை அந்த அறை அருகில் அழைத்துச் சென்றார்.சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் ஒரு வித சங்கோஜம் கண்ணனை தொற்றிக்கொண்டிருந்தது.



கண்ணனை அழைத்துக்கொண்டு போனவர் அந்த அறையின் வாசலில் நின்றதும் 'வாங்க வருசை ' என்று அவரை அழைத்தார்.தனக்கு பின்னால் நிற்கும் கண்ணனை வருசை திரும்பி பாத்துவிட்டு 'வாங்க சார்' என்று கண்ணனை முன்னிறுத்தினார்.சுமார் எழுபது வயது மதிக்கத்தக்க அவரை கண்ணன் தன் இரு கைகளையும் கூப்பி 'வணக்கம்' என்றான். அந்த அறிமுகத்தில் சுவாரஸ்யப் பட்டவராய் முகம் மலர்ந்து 'வணக்கம் உள்ளே வாங்க ..உக்காருங்க' என்று மிக சகஜமாக அழைக்கத் தொடங்கியது கண்ணனுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.



கொஞ்சமாக இடமிருந்த அந்த மெத்தையில் ஒரு மூலையில் அமர்ந்து அமராததைப் போல கண்ணன் அமர்ந்துகொண்டான்.அறிமுதத்தை முடித்துவிட்டது வருசை தான் அலுவல்களுக்கு திரும்பிவிட்டார்.இப்போது அந்த அறையில் கண்ணனும் அவரும் மட்டும்தான்.பேராசிரியர் என்பதை அறிந்த கண்ணனுக்கு அவர்மீது இன்னும் மரியாதை அதிகமானது. அந்த பேராசிரியரிடமிருந்து அழகாய் சுவாரஷ்யங்களோடு உரையாடல்கள் தொடங்க மரியாதையும் அக்கறையும் கலந்த பதில்களால் கண்ணன் எதிர்வினை புரிந்துகொண்டிருந்தான். மெய்மறந்த இவர்களின் உரையாடல்களில் நேரம் முன்னிரவை தொடங்கிவைத்திருந்தது.முதல் சந்திப்பு போன பிறவியில் உறவின் தொடர்ச்சியைப் போல இருவரையும் உணரவைத்திருந்தது.



உரையாடிய அந்த பொழுதுகளில் என் கண்களை அதிகம் உறுத்தியவை வகை வகையான மிகுந்திருந்த வண்ண வண்ண மாத்திரைகள், இடத்துபுரத்து சுவற்றின் மூலையில் கொஞ்சம் சாய்ந்தபடி நின்றிருந்த மரத்தால் செய்யப்பட்டிருந்த ஒற்றை கைத்தடி,இன்னும் சிலவும் எனக்கு அவர்மீது இனம்புரியாத இரக்க உணர்ச்சியையும் அன்பின் மிகுதியையும் கண்ணனிடம் ஏற்படுத்தின.எப்போதும் தனிமையில் மருந்துகளோடு வாழும் அவரோடு நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஆறுதலாய் சில வார்த்தைகள் பேசவேண்டும் என்று கண்ணன் முடிவெடுத்தவனாய் அவரிடமிருந்து அன்று விடைப்பெற்றிருந்தான்.இந்த சந்திப்பும் உரையாடல்களும் அவருக்கு மட்டுமல்ல தனியாக இருக்கும் கண்ணனுக்கும் ஒரு நிறைவைத் தந்திருந்தது.தன் தந்தையை விட்டு தொலைவில் இருக்கும் கண்ணனுக்கு அவருடனான தொடர்பு இல்லத்தில் இருப்பதைப் போன்ற ஆறுதலை ஏற்படுத்தியது.



காலையில் அவசரமாக வேலைக்கு கிளம்பும் வேகத்தில் அந்த அறையை கடக்கும்போது அவரின் முகம்பார்த்து 'வணக்கம்' சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவான்.மாலையிலும் அதேதான். இரவில் உணவு அருந்தியபிறகுதான் பதினேழில் கண்ணன் வருகைப்பதிவைக்கொடுப்பான்.



கண்ணனைப்பற்றி நிறைய கேட்டு தெரிந்துகொண்ட அவர் தன்னைப்பற்றியே சொன்னதில்லை என்பது கண்ணனுக்கு ஒரு வெறுமையாக இருந்தது.பிறகு ஒரு சந்திப்பில் கண்ணன் அவரைப் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் இயல்பான கேள்விகளில் இயல்பான பதில்களை கேட்டுப்பெற்றுக்கொண்டான்.பேராசிரியர் கண்ணனின் நல்ல குணத்தை அறிந்து திறந்த புத்தகமாகவே தன் மனம் திறந்தார்.பேராசிரியருக்கு திருமணமானது ,துணைவியார் உடல்நலமில்லாமல் உறவினர்வீட்டில் பாதுகாப்பாக இருப்பது, தான் சிகிச்சைக் காரணமாக சென்னையில் தங்கி ஓய்வூதியத்தில் மருத்துவம் பார்ப்பது என்று பலவும் கண்ணனுக்கு தெரிய வந்தன.கண்ணன் அவரில் நிலைக்கு தன்னுள்ளேயே வருந்திக்கொண்டான். அவரது பிள்ளைகளைப்பற்றி கேட்கவேண்டும் என்று ஆவல்கொண்டிருந்த கண்ணன் மருநாளைக்காக காத்திருந்தான்.



மற்றொருநாள் மாலைப் பொழுதில் நேரே பேராசிரியரின் அறைக்கு செல்லவேண்டும் என்ற எண்ணத்தோடு மேன்சனில் நுழைந்த கண்ணனுக்கு ஏமாற்றம் காத்திருந்தது.அந்த குறிப்பிட்ட அறை வழக்கத்திற்கு மாறாக பூட்டப்பட்டிருந்தது. அந்த அறையைத் தாண்டி கண்ணனுக்கு செல்வதற்கும் கூட மனதுவரவில்லை. தளர்ந்துபோய் தனது அறையில் அடைந்துகொண்டான் கண்ணன்.இரவு முழுக்க அவரின் நினைவாகவேன் இருந்தான். விடிந்ததும் சற்று முன்னரே கிளம்பி நகர்ந்த கண்ணனுக்கு ஒரு ஆச்சரியமும் காத்திருந்தது. அந்த அறை திறந்த நிலையில் விளக்கின் வெளிச்சத்தில் நிறைந்து வழிவதைப் பார்த்து மகிழ்ச்சி உற்றவனாய் நெருங்கினான்.வேறுயாராவது இருக்கப்போகிறார்களோ என்ற சந்தேகமும் கண்ணனுக்கு வந்தது.கடக்கும் சாக்கில் வாசலை லேசாக நோட்டமிட்டபோது வழக்கமாக பார்ப்பதைப்போல பேராசிரியர் அமர்ந்திருந்தார்.நான் வினாவை எழுப்புவதற்கு முன்னதாகவே அவர் முந்திக்கொண்டு' ''நேத்தைக்கு எம் பையனே பாக்கலான்னு போயிருந்தே.வர்றதுக்கு ரொம்பவும் நேரமாயிடுச்சு'என்றார். கண்ணனது கேள்விக்கு பதில் கிடைத்த சந்தோசத்தில் கண்ணனது மனம் நிறைத்தது .



மறுநாள் வேலைக்காக வேகமாக போய்க்கொண்டிருக்கும்போது மேன்சன் பொறுப்பாளர் வருசை என்னை பார்த்து வணக்கம் சொன்னார்.'வாத்தியாரே பாத்தீங்களா' என்று கேட்க 'ஆமா பாத்தே ..பேசினேன்' என்று பதிலளித்த கண்ணனுக்கு 'பிள்ளையைப் பார்க்க போனதா சொன்னாரா'என்று மீண்டும் வினாவினால் தொடர்ந்தார்.'ஆமாம்'.'இப்படி ஒரு வயசுலே இருக்குற தகப்பனே இந்த காலத்து பிள்ளைங்க பாத்துக்கறது பெரிய புண்ணியம்தானே' என்று கண்ணன் நிறைவோடு பதிலளித்ததும்.'இல்லே சார் , நேத்திக்கு அவரு டாக்டர்கிட்டே போனாங்க,பையனே பாக்க போகலே'என்று வருசை சொன்ன பதில் கண்ணனுக்கு ஆச்சர்யத்தை ஏற்ப்படுத்தியது.'அப்பா ஏ அவர் அப்படியொரு பொய்யே சொல்லணும்'என்று கண்ணன் திருப்பிக்கேட்டான்.வருசை உண்மையைத் திறக்கிறான் 'அவருக்கு உண்மையில் புள்ளங்க இல்லே சார்,வயசான காலத்துலே யாருக்கும் உபத்திரமா இருக்ககூடாதுன்னுட்டு இப்படி வந்து தங்கி இருக்காரு, பென்சன் பணத்தை வாங்கிக்கிட்டு உடம்புக்கு தானே மருத்துவம் பாத்துகிட்டு வாழ்க்கையே ஒட்டிக்கிட்டு இருக்காரு' என்றதும் கண்ணனுக்கு மனதில் அதிர்ச்சியும் கண்ணில் துளிகளும் நிறைந்துகொண்டன.



அன்றிலிருந்து இப்போதெல்லாம் கண்ணன் அந்த அறைக்கு அடிக்கடி சென்று அதிக நேரம் செலவழித்து ஆறுதல் மொழி பேசி சின்ன சின்ன உதவிகள் செய்து வருகிறான் .தனக்கு பிள்ளை இல்லை என்பது கண்ணனுக்கு தெரியாது என்று அந்த பேராசிரியர் இன்னமும் நினைத்துக்கொண்டார். ஆனால் கண்ணனோ காலப்போக்கில் முழுமையான பிள்ளையாகவே மாறிப்போயிருந்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக