சனி, 14 மே, 2011

பூவலூராருடன் ஒரு நாள் - பகுதி 3

சின்னச் சின்ன உரையாடல்களால் கோடி தீக்குச்சிகள் கிழித்த மருந்துகிடங்கைப் போல குளிரூட்டப்பட்ட அந்த உணவு அறை சூடாகிக்கொண்டிருந்தது. இரைப்பை நிரப்புவதும் இதயம் நிரப்புவதும் ஒரு சேர நிகழ்ந்துகொண்டிருந்த அந்த விருந்தில் முதன்மை உணவை ஆர்டர் செய்யும் தருணத்தில் வெள்ளைச் சிரிப்போடும் குழிவுழுந்த கன்னத்தொடும் கனத்த கண்ணாடியின் வழியாக எங்களை உன்னிப்பாய் ஊடுருவி பார்த்தபடி உள்ளே நுழைகிறார் செல்வா.



நான் அங்கு இருப்பதை எதிர்ப்பார்த்திருக்கவில்லை என்பதை அவரின் விழியுயர்த்திய விசாரிப்பிலிருந்து தெரிந்துகொண்டேன்.உடன் அன்பும் கயலும் இணைகிறார்கள்.இப்போது எங்கள் அனைவரது மொய்த்தலும் ஸ்ரீஜியை மையமிட்டே இருந்தது.



சைவக்காரர்களும் அசைவக்காரர்களும் உணவுக்கலவரங்கள் நேராமல் விருப்பம்போல ஆர்டர் செய்கிறார்கள்.பசியோடும் விவாத ருசியோடும் நேரம் வழிந்துகொண்டே இருந்தது. வெளிச்ச உலகத்தில் இருப்பதால் கருத்த இரவை மறந்து போயிருந்தார்கள் ஒவ்வொருவரும் .பிரியமான நண்பர்களோடு இணைந்திருக்கும் பொழுதுகள் ஒரு இனிய தியானவகுப்புகள் தான்.அந்த விருந்து உணவை எடுத்து சுவைக்க ஐந்துவிரல்களும் உள்ளங்கையும் யாருக்கும் பயன்படவில்லையே என்று நான் எண்ணிப் பார்க்கிறேன்.



மனித விரல்களோடு உலோக விரல்களை இணைத்துக்கொண்டு கலியுக ரோபோக்களாக நாங்கள் கருவிகளின் துணையோடு அசைபோட்டோம். உணவின் சுற்று முடிந்தும் முடியாமல் மேசையை நோக்கி வண்ணவண்ண ஆடையணிந்து அலங்காரங்கள் ஆயிரம் செய்து ஐஸ்கிரீம் தேவதைகள் படையெடுக்கிறார்கள்.அதில் ஒரு கோப்பையில் வானத்து 'வெண்ணிலாவும்' வழுக்கி விழுந்திருந்தது.



இந்த எல்லா நிகழ்வுகளையும் கோணங்களுக்கு தகுந்தாற்போல இடம்மாறிக்கொண்டு கேமராவின் ஆடியை தன் இடது விழியோடு முத்தம் வைத்துக்கொண்டு .கேமராவின் உடல் பாகம் அவரது கன்னத்தில் மெல்ல பதிய அடிக்கடி ஜூம் லென்சை மாற்றி பிளாசில் வெளிச்சம் விதைத்து படங்களை அறுவடை செய்துகொள்கிறார் பதட்டமில்லாமல் ஒரு படக்கலைஞர்.அவர்தான் ஜெயராஜ் .



அந்த உணவகத்தில் இருக்கும் அத்தனை பேரும் சுவைமறந்து எங்களை நோக்கி விழி திருப்புகிறார்கள்.நிஜ நாயகன் ஸ்ரீஜி நடுவில் நிற்கிறார்.அனைவரும் இணைந்து இணைந்து சிரித்து பெருமிதம்கொண்டு நெகிழ்ந்து படங்களை பதிகிறார்கள்.எல்லோரையும் பதிந்த ஜெயராஜை இறுதியாய் நான் வாங்கி பதிந்தேன். அது சரியான பதிவுதான என்று டிஜிட்டல் தோற்றத்தை பார்த்து விட்டு தலையாட்டினார்.சரியாக எடுத்திருக்கிறேன் என்று நான் சந்தோசப்பட்டுக்கொண்டேன்.



இப்போது பில் கட்டும் ஓலை வருகிறது..அன்பு முந்துகிறார் ..நானும் என் விருப்பத்தை தெரிவிக்கிறேன்..பிறரும் முன்வருகிறார்கள்.இறுதியில் ஸ்ரீஜி மட்டுமே வள்ளலாகிறார்.பைஜாமாவின் இடது பைக்குள் தன் வலது கையைத் திணித்து கத்தியை மடித்துவைத்திருந்த பணத்தை சிதறாமல் அள்ளுகிறார். அத்தனையும் ஐநூறு ரூபாய் நோட்டுகள்.அதில் பலவற்றை அந்த வசூல் குறிப்பேட்டுக்குள் திணித்து விருந்தை முடித்துவைக்கிறார்.

.

உணவு முடித்து பல்குத்தி தீர்த்திருந்த அந்த கிளைமாக்சில் ஸ்ரீஜியின் சந்திப்பிற்காக விரைந்து தன் குறும்படத்தை முடித்து அதை வெளி இடுவதற்காக டிவிடி யாக செல்வா கொண்டுவந்திருப்பதை அறிந்து அனைவரும் ஆனந்தப்பட்டோம்.அதை வெளி இடுவதற்கு அந்த இடம் பொருத்தமில்லை என்று சொல்ல அனைவரும் வரவேற்பு அறையை நோக்கி நகர்கிறோம்.



ஸ்ரீஜி வலதுபுற வண்ணச்சுவரின் நடுவில் நிற்கிறார் செல்வா தன் முத்திரைப் படைப்பான 'யாதுமானவள்' என்ற குறும்படத்தை நிறைவோடு வெளியிடுகிறார்.ஸ்ரீஜி புன்னகையோடு பெற்றுக்கொள்கிறார்.பிறகு அனைவரும் கேமராவின் செவ்வகத்திற்குள் வந்துவிடுகிறோம் ,இப்போது ஜெயராஜ் ஒரே தோட்டாவில் அனைவரையும் சுட்டுமுடிக்கிறார்.



முகநூல் தோழமைகளின் கூட்டம் கண்ணாடி வாசலைத் தாண்டி சப்த உலகத்திற்குள் சங்கமிக்க வெளியேறுவதற்கு முன்பாக அனல்காற்று அனைவரையும் இன்னொருமுறை வரவேற்க அனைவரும் முகம் சுளிக்கிறார்கள்.களிப்பும் கதகதப்பும் தொற்றிக்கொண்ட அந்த தருணத்தில் விடை பெறலுக்கான அனைத்து முகாந்தரங்களும் தொடங்குகின்றன.



மீண்டும் சிந்திப்போம் என்ற நம்பிக்கையோடு வேறுவேறு எல்லைகளை நோக்கி நகர்கிற ராணுவ வீரர்களைப் போல தோழமைகள் பிரிகிறார்கள்.கலகலத்த அந்த கடையில் வாசல் வெறுச்சிடுகிறது. எல்லோருக்கும் கையசைத்து அவர்கள் போகும்வரை காத்திருக்கிறார் ஸ்ரீஜி. இறுதியாய் அந்த முகப்பில் நானும் அவரும் மட்டுமே.



ஸ்ரீஜி என்னை அழைத்துக்கொண்டு அவருக்காக நான்கு மணிநேரத்திற்கும் மேலாக நின்றுகொண்டிருந்த ஆட்டோவை நோக்கி அழைத்துக்கொண்டு போகிறார்.'இவரை சேப்பாக்கத்தில் இறக்கிவிட்டுட்டு அப்படியே நாம் மைலாபூர் போயிறலாம்'என்று தனது ஆடோ ஓட்டுஞருக்கு கட்டளையைப் பாய்ச்சுகிறார்.டிரைவர் பாபு பதிலுக்கு தலையசைத்தபடி முறுக்குகிறார்.



இப்போது இருபுறத்து குளிர்காற்று அருகிலிருக்கும் சங்கீத சுரத்திற்கும் (ஸ்ரீஜி) அவரின் அருகிலிருக்கும் ஒரு தப்புத் தாளத்திற்கும் (நான்) பாரபட்சமிலாமல் வீசுகிறது. நன்றி அன்பு பாசம் பகிர்வு ....இவைகளோடு அந்த நீண்ட பயணம் விரைவாய் முடிந்தது ஏக்கத்தை மிச்சம் வைத்தது.இருகரம் கூப்பி வணங்குகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக