திங்கள், 2 மே, 2011

துணிப்பந்து -சிறுகதை

புத்தகச் சிலுவைகளை வாரம்தோறும் தூக்கி தூக்கி ரணமாகிப்போன பள்ளி செல்லும் பிள்ளை ஏசுகள், ஞாயிற்றுக் கிழமை ஒன்றில் தங்கள் பாரங்களை எல்லாம் தற்காலிகமாய் இறக்கிவைத்துவிட்டு கல்வி கிரகத்திலிருந்து விளையாட்டு கிரகத்திற்குள் ஒருவர் பின் ஒருவராக கால்பதித்துக்கொண்டிருந்தனர். அந்த குழந்தைகளின் பாதம் பட்டதும் பூமாதேவி சந்தோசத்தில் சிலிர்த்துக்கொண்ட ஈரம் முற்றிலுமாக காயாமல் இருந்த அந்த ஒரு பொழுதில் விளையாட்டுக்கான ஏற்பாடுகள் நடந்தேறிக்கொண்டிருந்தன.

திருநீரை முகப்பவுடராக பூசிக்கொண்டு ஒரு சிறுவன்; கால் சட்டையில் தபால் ஆபீஸ் வைத்துக்கொண்டு வந்த இன்னொருவன்; இளவரசன் மணிமுடி சூடியதைப் போல இலவம் பஞ்சு குல்லாய் அணிந்துகொண்டு வந்த மற்றொருவன்;சட்டையில் மேல் பொத்தானுக்கு பதிலாக குத்தப்பட்டிருந்த பின்னூசியை கைகளால் மறைத்தபடி ஒருவன்;இப்படியாய் ஒவ்வொருவரும் அந்த மலைகளின் தேசத்தில் வனங்களுக்குள் ஒளிந்துகொண்டிருந்த அந்த சிற்றூரில் எல்லா வீடுகளுக்கும் ஒரே முற்றமாக இருந்த வீதியில் திரண்டிருந்தனர்.

மட்டைப்பந்து விளையாட்டுக்கு அந்த வீதி தயாராக இருந்தது. இவர்களும் விளையாட்டுக்கு தயாராய்.ஆனால் மட்டையும் பந்தும் இன்னும் தயாராகவில்லை.

நேற்றைய விளையாட்டில் மட்டை முறிந்து போனதற்கு மாற்றாக புதிய மட்டையை தேடிக்கொண்டிருந்தனர். 'எல்லா சரிடா, இப்ப பேட்டுக்கு என்ன பண்றது' என்று கேட்ட அந்த சிறுவனின் குரலில் விளையாடப்போகிறோம் என்ற குஷியும் மட்டை இல்லையே என்ற ஏக்கமும் நன்றாக தெரிந்தது.'டே எங்க வீட்டுலே ஒரு பேட்டு இருக்குதுடா ,நா எடுத்துட்டு வர்றே 'என்று அங்கிருந்து அகன்ற அந்த சிறுவன் அவர்கள் உள்ளத்திலும் உற்சாக நெருப்பை பற்றவைத்தான்.

பேட்டுடன் வரவிருக்கும் அவனது வருகையை ஆவலுடன் வீதியில் கடைசியில் உள்ள செமெண்டு திண்ணையில் அவர்கள் அமர்ந்திருந்தனர். 'டே இவனே ,அவங்க வீட்லே பேட் உண்மையிலே இருக்கா' என்று ஒருவன் சந்தேகத்தை எழுப்பினான்.'இப்ப பாரு ,இத்தனே நாளா ஒளிச்சி வச்சிருந்த புது பேட்டிலே நம்ம விளையாடத்த போறோம்' 'ஹையா..ஜாலி..இன்னிக்கு கடலைமிட்டாய் பெட்டு கட்டி விளையாடுவோமா... ?என்கிட்டே இருபத்தஞ்சி பைசா இருக்கு' இப்படியாய் இவர்களின் கேள்விகளும் பதில்களும் எதிர்ப்பார்ப்புகளும் சந்தோஷ நெருப்பை கொழுந்துவிட்டு எரியவைத்த அந்த உற்சாக தருணத்தில் தான் அவர்களுக்கான அதிர்ச்சி காத்திருந்ததை யாரும் எதிர்ப்பார்த்திருக்க வாய்ப்பில்லை.

மட்டை கொண்டுவரச் சென்ற சிறுவனின் வீட்டு வாசலை இவர்கள் அனைவரின் கண்களும் மொய்த்துக்கொண்டிருந்தன.முதுகிற்குப் பின்னால் ஒளித்துவைத்துக்கொண்டு ஏதோ கொண்டுவந்தான் அந்த சிறுவன் .'டே அவே வராண்டா' 'சட்டைக்குப் பின்னாலே ஒளிச்சிகொண்டுவரா பாத்தியா' மற்ற பலரும் ஆளுக்கொரு யூகங்களை அவரவர்கள் போக்கில் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.இவர்களின் உரையாடல் முடிவதற்கு முன்பாகவே புன்னகையுடனும் பெருமிதத்துடனும் அவர்களின் முன்னே வந்து நின்றான் போர்முடித்து வென்ற மாவீரனாய்.

'டே காட்டுடா.' 'ஏண்டா ஒளிக்கிரே' 'வா உடனே விளையாடுவோம்' 'என்று பலரும் பலவாறு கேட்க அதிலொருவன் அவனது முதுகிற்குப் பின்னால் ரகசியமாய் சென்று அவனுக்கு அறியாமலேயே பார்த்துவிட்டு கிண்டலாய் கேலியாய் சிரிப்பிற்கு பதிலாக காற்றைமட்டுமே வெளியேற்றி 'கெக்கே கெக்கே உஷ் உஷஸ் புஷ் புஷ் ' என்று சிரித்தது அனைவருக்கும் புதிரை ஏற்படுத்தினான் .சிலிண்டர் வடிவிலான மரத்துண்டை கோடரியால் நான்காக பிளந்ததில் ஒரு பகுதியை பேட்டுக்கு பதிலாக அவன் கொண்டு வந்ததை அனைவரும் உறுதி செய்தார்கள்.கிண்டலில் அந்த இடம் அதிர்ந்தது.

'ஏண்டா கிண்டல் பண்றீங்க,இது எங்கம்மா சமைக்கறதுக்காக எடுத்து வச்ச காஞ்ச மரக்கட்டை ,விளையாடனும்னு உங்களுக்காகத்தான் தெரியாமே கொண்டு வந்தே' என்று அவன் நியாயப்படுத்தியதில் இருக்கும் அன்பையும் நட்பையும் புரிந்துகொண்ட ஒருவன் உடனே ஓடி ஒரு அரிவாளை கொண்டுவந்தான்' இதோ பாருங்கடா...இந்த மரக்கட்டையை அப்படியே புடிச்சு விளையாடுறதுக்கு கைப்பிடி இல்லே, இந்த கத்தியாலே முதல்லே கொஞ்சகொஞ்சமா சீவி கைப்பிடி செய்வோம்,பிறகு குத்தாத மாதிரி நைசா சீவி பேட் பண்ணிரலாம் ' என்று நம்பிக்கை தெரிவிக்க அதற்கான முயற்சியில் அனைவரும் இறங்கினார்கள்.

சில நிமிடங்களுக்குள் குத்திக் கிழிக்கும் மரச் செதில்கள் நிறைந்த அந்த மரக்கட்டை வழுவழுப்பாக மாறியிருந்தது,கூடவே கைப்பிடியும்.' விளையாடறதுக்கு பேட்டு ரெடியாயிடுச்சு பந்துக்கு எங்கடா போறது?' என்று மற்றொருவன் கேள்வி கேட்க ,துணிப்பந்து செய்யலாம் என்று முடிவு செய்தார்கள்.அதற்க்கு ஒவ்வொருவரும் அவரவர்கள் வீட்டிலிருந்து சின்ன சின்ன துணிகளை கொண்டுவரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர்.



கேரட் தோட்டத்திற்குள் விலங்குகள் நுழையாத படி வேலியில் கட்டப்பட்டு வெயிலிலும் மழையிலும் பனியிலும் இற்றுப் போயிருந்த துணியும் , சூடான பாத்திரங்களை இறக்கிவைப்பதற்காக சமையல் கட்டில் பயன்படுத்தும் கரிபடிந்த துணியும்,சமைத்த சமையல் பாத்திரத்திற்கும் வடிக்கும் கஞ்சிப்பாத்திரத்திர்க்கும் இடையில் முட்டுக்கொடுக்கும் ஈரம் தோய்ந்த துணியும், தினைக்கொல்லை பொம்மையை நிர்வாணமாக்கி கிழித்து கொண்டுவந்த துணியும், கிழிந்த சில சீருடை கால்சட்டைத் துணிகளும்,...என்று இன்ன பிற துணிகளும் வகை வகையாய் விதவிதமாய் வண்ண வண்ணமாய் பந்திற்காக வரிசையாக சேர்ந்துகொண்டே இருந்தன.

சிறார்களில் அழகாக துணிப்பந்தை வழக்கமாக செய்யும் அந்த சிறுவன் தொடக்கமாக கோலிகுண்டு ஒன்றை இடதுகை பெருவிரலிலும் ஆள்காட்டி விரலிலும் பிடித்திருந்தான். துணிகளில் பலவற்றை சிலர் பல்லைக் கடித்துக்கொண்டு பட்டை பட்டையாக கிழித்துக்கொண்டுத்துக்கொண்டிருன்தனர்.கெட்டியான துணிகளை சில குண்டு பையன்கள் நார் நாராக எடுத்துக்கொண்டிருந்தனர். ஒருவன் எடுத்துக்கொடுக்க துணிப்பந்து வல்லுஞன் கோலி குண்டுக்கு மேல் சுருள்விழாதவாறு வட்டவட்டமாய் சுற்றிக்கொண்டே இருந்தான்.இப்போது பந்து எலுமிச்சை பழ வடிவிற்கு வந்திருந்தது.

'டே இன்னு சுத்தணும்,பந்து பொடிசா இருக்கு' என்று ஒருவன் தங்களின் தகுதியை தரம் உயர்த்தவே,மீண்டும் துணி அந்த சிறு பந்தை பருக்கவைத்துக்கொண்டே வந்தது. மெதுமெதுவென்று இருந்த அந்த துணிப்பந்து இப்போது கெட்டியான ஒரு கிரிக்கெட் பந்தைப் போல மாறியிருந்தது.துணி தைக்கும் ஊசிநூலுடன் வந்த ஒரு சிறுவன் அந்த பந்திற்கு காப்பீடு செய்வதைப் போல ஒரு நல்ல காரியத்தை இறுதியாய் செய்து முடித்தான்.இப்போது பந்து தயார்.

இரண்டுமணிநேர ஆயத்தத்திற்கு பின் ஆரவாரமாக தொடங்கிய அந்த விளையாட்டின் முதல் பந்து வீசுவதற்கு முன்பாக விளையாட்டு முடிவிற்கு வந்ததுதான் சோகம்.அப்படி ஒரு அசம்பாவிதம் அங்கு நிகழும் என்று ஒருவரும் எதிர்ப்பார்த்திருக்கவில்லை. பந்து வீசுவதற்காக ஓடிவந்த அந்த வேளையில்தான் ஆலங்கட்டி மழையுடன் தொடங்கிய அடைமழை இவர்களை விளையாட விடாமல் அவரவர்களது வீட்டில் அனைவரையும் சிறை வைத்தது. தங்களை விளையாட விடாமல் இடையூறு செய்த மழையை அவர்கள் நொந்துகொண்டிருக்கக்கூடும் .கதவு திறந்திருக்க வாசலில் நின்று அவரவார்களது வீட்டு வாசலில் நின்று மழையை வேறு வழியின்றி வெகுநேரமாய் வேடிக்கைப் பார்த்துக்கொண்டே இருந்தனர் நனைந்தபடி.

மழை நின்றபின்னும் சேற்றை அள்ளிக்கொண்டு ஆறாக ஓடிக்கொண்டிருந்த அந்த வீதியில் கிரிக்கெட் விளையாடாமல் தவித்த அந்த சிறுவர்களின் நினைவில் அந்த இனிய மழை ஒரு விளையாட்டை ஞாபகப்படுத்தவே செய்தது.

சிறிது நேரம் கழித்து எல்லோரும் விளையாடிக்கொண்டுதான் இருந்தார்கள் காதிதத்தில் கப்பல் செய்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக