சனி, 14 மே, 2011

பூவலூராருடன் ஒருநாள் -பகுதி 4

சேப்பாக்கத்தில் கடந்த ஒருவாரகாலம் வாங்கிய உப்புக்காற்றின் எதிரொலி என் நுரையீரலுக்குள் இருமல் எதிரொலியாக இடைவிடாமல் கேட்கிறது.எரியும் வெயிலுக்கு ஆறுதல் சொல்ல குடித்து தீர்த்த பலநூறு லிட்டர் தண்ணீர் மேனியெங்கும் வியர்வையாய் வழிகிறது.கனவுகளைக் காயப்படுத்தி தவணை முறையில் தூக்கம் வந்துவந்து போகிறது. மின்விசிறி என்னை ஆசுவாசப்படுத்த இரவெல்லாம் முயற்சித்து தோற்று களைத்துப் போயிருக்கிறது.லேசாக விழிக்கிறேன்,மைக்ரோ ஓவனிலிருந்து எடுக்கப்பட்ட ரொட்டித் துண்டைப்போல நான் சூடாக இருப்பதை உணர்கிறேன்.



இன்று ஸ்ரீஜியுடன் சந்திப்பு இருக்கிறது என்று மூளை எனக்கு அறிவுறுத்தும் அந்த நொடியில் தான் செல்வாவின் அலைபேசி அழைக்கிறது.'வணக்கம் மணி,நாங்க வந்தாச்சு' ,இதோ கிளம்புகிறேன்'என்று பதில்சொல்லிவிட்டு ஆயத்தமாகிறேன். இப்போது நான் பயணித்துக்கொண்டிருக்கும் ஆட்டோ மைலாபூரை நோக்கி பறக்கிறது.என்னை வெளியூர்க்காரன் என்று தெரிந்திருந்த ஒரு டிரைவர் பேசிய கட்டணத்தை பேரம் பேசாமல் நான் குறிப்பிட்ட ஸ்ரீஜி தங்கி இருக்கும் கட்டிடத்தின் வாசலில் வந்து நிறுத்தி இருக்கிறார்.தூக்கம் தெளிந்து பெயரை உறுதிப்படுத்திக்கொண்டு இறங்குகிறேன் அவருக்கும் மனத்தால் நன்றி சொல்லிக்கொண்டே.



நிமிர்ந்து பார்க்கச் செய்கிற கம்பீரமான கட்டடம்.வெளியில் பகட்டும் ஆரவாரமும் இல்லாத சாந்தம்.முகம்மட்டும் தெரியும் அளவிற்கு ஆடைகளால் தன்னை மூடியிருந்த வாயில் காப்போன் என்னை வரவேற்கும் விதமாக மூன்று அங்குலம் கனமுள்ள கண்ணாடி கதவை இதமாய் திறந்துவிடுகிறார். ஒரு பனி பிரதேசத்திற்குள் திடீரென நுழைவதைப் போன்ற உணர்வை பெற்றவனாய் வரவேற்பினரிடம் நெருங்குகிறேன் .



ஸ்ரீஜி எந்த அறையில் தங்கி இருக்கிறார் என்று கேட்கிறேன்.சற்று யோசித்துவிட்டு 'பூவலூரார்' என்று திரும்பவும் என்னை கேட்டு நான் தேடிவந்த நபர் அவர்தானா என்று உறுதிப்படுத்திக்கொள்கிறார்.ஆம் என்பது போல தலை அசைக்கிறேன்.அவர் நினைவில் வைத்து கூறிய அந்த அறையைநோக்கி செல்வதற்கு லிப்டை தேடுகிறேன்.ஒரு சமயத்தில் நான்குபேர் ஏறிக்கொள்ளும் அளவிற்கு சின்னதான அந்த நகரும் அறைக்குள் நான் நுழைகிறேன் ,எல்லா தளங்களிலும் நின்று நின்று ஏறும் லிப்ட் என்னையும் மூன்றாவது தளத்தில் வந்து விட்டுவிட்டு போகிறது.



அழைப்பு மணிக்கான எந்த கருவிகளும் அந்த அறைக்கதவருகில் தென்படவில்லை.சில வினாடிகள் யோசித்த படி முழிக்கிறேன்.இறுதியாய் வலிக்காமல் என் வலதுகை நடுவிரலின் கணுக்களால் லேசாக சிலமுறை தட்டுகிறேன்.தட்டிமுடிப்பதர்க்கும் கதவு திறக்கிறது.உள்ளே ஸ்ரீஜியை சுற்றி வட்டமாய் நமது முகநூல் தோழமைகள்.



இள நிறத்தில் முழுக்கை சட்டையும் கருநீல நிறத்தில் பேண்டும் அணிந்து ஒரு தேர்ந்த அதிகாரியின் தோற்றத்தின் கிளீன் சேவுடன் ஒருவர் மெல்லிய குரலில் இனிதாய் வரவேற்று ஸ்ரீஜியில் அருகிலேயே அமர்ந்திருந்தார்.என் யூகம் சரியாக இருந்திருக்கிறது என்பதை அவரை எனக்கு ஸ்ரீஜி அறிமுகம் செய்துவைக்கும் போது அறியமுடிந்தது. செல்வா,ஜெயராஜ்,அன்பு, கயல், என்று நால்வரும் சுற்றிலும் அமர்ந்திருந்து கலகலத்தார்கள்.



அவரோடு உரையாடவேண்டும் என்ற ஆசையால் ஸ்ரீஜியிடம் நான் சின்ன சின்ன விதைகளை வீசுகிறேன்.அவர் அந்த விதைகளை மனதில் போட்டுக்கொண்டு மலரும் நினைவுகளை ஆலமரம் அளவிற்கும் அழகழகாய் மலர்த்துகிறார்.



கல்லூரி படிக்கும் காலத்தில் அருகிலிருந்த குப்பத்திற்குள் சென்று இரவு வெகுநேரம் வரை நாடகம் கூத்து பார்த்த ஞாபகங்களை கிளறுகிறார்.நான்கைந்து நண்பர்கள் கைலி கட்டிக்கொண்டு சுவாச மண்டலங்களில் புகை மண்டலங்களை விட்டுக்கொண்டும் வண்ண வண்ண சீரியல் விளக்குகளால் களைகட்டி இருக்கும் குப்பத்திற்க்குள் சென்று நிகழ்த்துக்கலைகள் பார்ப்பது ஒரு வேலையாக கொண்டிருந்திருன்தார்களாம் .அதை சொல்லிவிட்டு இப்போது தெருக்கூத்து என்ற தமிழர்களின் நாடக பிரச்சார வடிவமே கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துபோயவிட்டதை சொல்லி வருத்தப்படுகிறார்.தெருக்கூத்து என்ற ஆதி கலையை எந்த அளவிற்கு ஸ்ரீஜி நேசிக்கிறார் என்பதை அந்த நினைவுகூறலில் முலமாக தெரிந்துகொண்டேன்.அந்த நாடகக் கலையின் நவீன வடிவமாக இருக்கும் திரைக்கலையில் இருக்கும் எதார்த்தமற்ற போக்குகள் குறித்தும் வருத்தமும் தெரிவித்தார்.



மேலைநாடுகளில் இருக்கும் ஒவொருவரும் தங்கள் நாட்டு நடனம் இசை வாத்தியம் வாய்பாட்டு ஏதாவது ஒரு கலையையை தங்கள் பிள்ளைகள் கற்றுக்கொள்ளவேண்டும் என்று விரும்புவதும்,அதற்காக அதிகப்படியான தொகையையும் நேரத்தையும் செலவிடுவதையை சுட்டிக்காட்டிய ஸ்ரீஜி ,தமிழகத்தில் அந்த அடையாளம் தகர்ந்துவருவதை வருத்தம் தொனிக்க வாதமாக முன்வைக்கிறார்.ஊடகங்களின் பாதிப்புகளால் பழைய கலை அடையாளங்களை பாதுகாக்க முடியாதவர்களாகவும் அவைகளை தொடரும் திராணி அற்றவர்களாகவும் மாறிப்போயிருக்கும் அபத்தத்தை தனக்கே உரிய பாணியில் ஜில்லென விவாதப் பொருளாக்குகிறார்.



மைலாப்பூரில் ஒரு உணவகம் இருக்கிறதாம் ,இளம் வயதில் அங்கு சென்றுதான் ஸ்ரீஜி உணவருந்துவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்.சின்ன சிம்மினி விளக்கில் காய்கறிகளை நறுக்குவார்கலாம் தூக்ககலக்கத்தில் அந்த உணவகத்தின் பணியாளர்கள்.அவர்களின் விடியற்காலையில் பணிகள் முடியும்போதுதான் முற்றிலுமாக அவர்கள் தூக்கத்திலிருந்து விடுபட்டிருப்பார்கலாம். நண்பர் ஒருவர் ஒரு நாள் ஸ்ரீஜியைப் பார்த்து கேட்டிருக்கிறார்.ஸ்ரீஜி நீ சைவமா இல்லை அசைவமா? அதற்க்கு சைவம்தான் பதிலளித்திருக்கிறார்.அப்படிஎன்றால் இத்தனை நாட்கள் ஏன் அசைவம் சாப்பிட்டு வந்திருக்கிறார் என்று அதிரவைத்திருக்கிறார். ஸ்ரீஜிக்கு ஒன்றுமே புரியவில்லை.'பின்னே என்ன காய் கறியிலே இருக்கிற பூச்சி எல்லாத்தையும் வெட்டி வேட்டிதான் போடுறாங்களே ஒழிய வெட்டி எங்கே வெளியிலே போட்டாங்க.அந்த தூங்கு மூஞ்சி பசங்க'என்று சொன்னபிறகுதான் சுதாரித்துக் கொண்டிருக்கிறார்.அன்றிலிருந்து அந்த உணவகத்திற்கு ஸ்ரீஜி சென்றதே இல்லையாம்



இன்னொரு உணவகம் 1980௦-களிலிருந்து இன்று வரையில் ஒரே எண்ணையில்தான் பலகாரங்களை சுடுவார்களாம்.அப்படியான ஒரு ஏற்பாட்டை ஒரு உணவகம் கொண்டிருக்கிறதாம். அவர்கள் பழயதை மறக்கும் கெட்டகுணம் இல்லாதவர்கள் என்று நகைக்கவைக்கிறார்.அதில் பலகாரங்கள் சுவையாக இருப்பதாகவும் தன சம்மதத்தையும் சொல்கிறார்.சுட்ட என்னையையே சுடும் கலையை அவர்கள் மட்டுமே தெரிந்திருந்தார்கள்.



இப்படியாக பலவற்றைப்பற்றியும் விவாதிக்கிறோம் ...பலமணி நேரங்கள் அவரது பசுமையான அனுபவங்களால் களவு போயிருந்ததை கடிகாரத்தைப் பார்த்த பிறகே தெரிந்துகொண்டோம்.என் இறுதி கேள்வி மனதில் தோன்றி மறைந்துகொண்டே இருக்கிறது ...சின்ன இடைவெளி கிடைக்குமா என்று காத்திருக்கிறேன்.சமயமும் அமைகிறது...



ஸ்ரீஜி எங்களுக்காக நீங்கள் உங்கள் மிருதங்கத்தை வாசித்து காட்ட வேண்டும் என்கிறேன்.சம்மதத்தை புன்னகையோடு சொல்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக