வியாழன், 26 மே, 2011

சாம்பார் - சிறுகதை

கலையும் கருணும் சகோதரர்கள்.இருவரும் பக்கத்திலிருக்கும் அரசுப்பள்ளிக்கு போகிறவர்கள் .கலை ஏழாம் வகுப்பு கருண் ஆறாம் வகுப்பு.தினமும் பேருந்தில் பயணப்படும் இவர்களது பெற்றோர்கள் இருவரும் ஆசிரியர்கள்.வழக்கமாக அவர்கள் இருவரும் வீடுவந்து சேர்வதற்குள் மாலை ஆறரைமணி ஆகும். அதுவரையிலும் வீட்டுப்பயிற்சி முடித்து கைகால் அலம்பி பூசைமுடித்து விளையாடத் தொடங்கிவிடுவதர்க்கும் பெற்றோர்கள் வீடுவந்து சேர்வதற்கும் சரியாக இருக்கும். இடையில் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் இருவரும் துணிகளை மடித்து வைத்தல் , வீட்டை பெருக்குதல்,எச்சில் பாத்திரங்களை கழுவுதல் , என்று என்ன எல்லாம் தங்கள் சக்திக்கு செய்ய முடிகிறதோ அவை அனைத்தையும் முடித்துவைப்பார்கள்.ஒருநாள் தவறாமல் அந்த பணிகள் அனைத்தையும் பெற்றோர்களின் சிரமம் அறிந்து மனமுவந்து செய்துவருவதுதான் ஆச்சர்யம்.

ஒரு மாலைப் பொழுதில் எல்லா வேலைகளையும் முடித்துவைத்திருந்த அவர்கள் இருவரும் அடுப்பை பற்றவைப்பது என்று முடிவெடுத்தார்கள்.அண்ணன் சொன்னதைப் போல தம்பி கருண் வெட்டப்பட்டு காய்ந்து போயிருந்த தேயிலைச் செடியின் ஒரு சின்ன பாகத்தை வீட்டின் முன் வாசல் பகுதியில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த விறகடுக்கிலிருந்து எடுத்து வந்தான்.இலைகளற்று எலும்புக்கூடாக போயிருந்த அந்த காய்ந்து சுருங்கிப் போயிருந்த செடியின் பிஞ்சுக்கிளைகளை கலை தன கை விரல்களால் 'டக் டக்' என்று முறித்து முறித்து போட்டான். கருண் அதை சேகரித்தவனாய் உள்ளங்கை நிரம்பிய விறகு சில்லுகளை அண்ணனின் கைகளில் சேர்த்தான்.கலை அதை மெதுவாக உலையினுள் பாதி நுழைத்து பழைய செய்தித்தாள் ஒன்றை நன்றாக சுருட்டி அதன் கீழ்ப்பகுதியில் இடம்பெறுமாறு திணித்தான்.இப்போது அடுப்பு பற்றவைப்பதற்கு தயார் நிலையில் இருந்தது.'அண்ணா நா பத்தவைக்கிறேன்' என்று முந்திக்கொண்டு தீப்பெட்டியுடன் கருணும் வந்து சேர்ந்தான்.மெளனமாக இருந்த கலையின் சம்மதத்தை பெற்ற ஆனந்தத்தில் தன் ஆள்காட்டி விரல்களால் பெற்றியின் உள்புறம் இருந்த பாகத்தை வேகமாக தள்ளினான்.தீப்பெட்டியின் திறப்பு கீழ்ப்பக்கமாக இருந்ததால் இருந்த நான்கைந்து குச்சிகளும் தரையில் சிதறின. கோபித்துக் கொள்ளாமல் கலை குனித்து இத்தோட்டத்தில் முகம் சிவக்க நிமிர்கிறான். முதல் தீக்குச்சியை எடுத்த கலை கருணை ஒருமுறை பார்த்து லேசாக புன்னகைத்து விட்டு உரசுகிறார்.பற்றவில்லை.இன்னொருமுறை முயற்சி செய்கிறார்.பற்றவில்லை. மூன்றாவது முறை முயலும்போதுதான் அந்த தீக்குச்சியில் இருக்கும் மருந்து உதிரி இருந்ததை அறிந்துகொண்டான்.இப்படியாக தொடர் முயற்சியில் எல்லா குச்சிகளும் உதவாமல் போயின.மார்கழி மாசத்து பிசு பிசுப்பில் நமநமத்து போயிருந்த அந்த தீப்பெட்டியை வாசல் கதவை திறந்து தூர எறிந்தான். அந்த எறிதலில் கலையின் வெறுப்பும் கோபமும் கொஞ்சம் கலந்திருந்தது.



பின் சமையல் கட்டை நோக்கி நகர்ந்ததும் மஞ்சள் ஒளிவீச ஏரியும் காகிதத்தைத் துண்டையும் அது கருணின் கைகளில் இருப்பதையும் அறிந்து ஆபத்தை தவிர்க்க தன் கைக்கு பத்திரமாக மாற்றிக்கொண்டான்.'தீப்பெட்டிதான் யால்லையே அப்புறம் எப்படி இந்த காகிதத்தே பத்த வச்சே'என்ற கேள்வியைக் கேட்ட கருணிற்கு தான் சாதனை நிகழ்த்திவிட்டதாக பெருமிதம் ஏற்ப்பட்டது.அந்த முடிக்கிலேயே 'அண்ணா நாம இப்பதானே சாமி கும்பிட்டோ ,அதுக்குள்ளே மறந்துட்டியா ...விளக்கிலிருந்து பத்தவச்சிகிட்டேன்'என்று தெளிவாக பதிலளித்தான்.அவனின் அந்த சமாயோசித்த ஞானத்தை மனதிற்குள் பாராட்டியதைப் போல கண்களை விரித்து ஆச்சர்யப்பட்டுவிட்டு அந்த காகித நெருப்பைக் கொண்டு ஏற்கனவே உள்ளே வைக்கப்பட்டிருந்த காகிதத்தோடு சேர்த்து அது பற்றி எரியுமவரை அதன் அருகிலேயே கைகளால் பிடித்துக்கொண்டு நின்றான்.

மேட்டுச்சாலையில் வாகன சத்தம் கேட்டு கருணும் அடிக்கொருதரம் வீட்டிற்கு வெளியில் பொய் முகட்டில் தெரிகிற முதன்மைச் சாலையில் வாகனங்கள் போகிறதா என்று பார்ப்பதும் வருவதுமாக இருந்தான்.வாகனமும் பெற்றோர்களும் வந்ததாக தெரியவில்லை.'அண்ணா இன்னும் அம்மாவையும் அப்பாவையும் காணோமே' என்று ஏக்கத்தோடு கேள்விகேட்ட கருணிற்கு 'இப்ப வர்ற நேரமாச்சு'என்று அடுப்பை பற்றவைத்துக்கொண்டே பதிலளித்தான் கலை.

காகிதம் எரிந்து மேலிருந்த தேயிலை செடியின் சில்லுகளை எரித்து கொழுந்துவிடத் தொடங்கிய அந்த அக்கினியோடு புகையும் திடீர் கக்கிவிட, கருணும் கலையும் செய்வதறியாது புகையில் மாட்டிக்கொண்டு 'லோக் லோக் ' என்று இருவரும் மாறிமாறி இருமித் தள்ளினார்கள்.

இதற்கிடையில் கலை சமையலறை சன்னலை திறந்துவிட அடைந்திருந்த புகையில் ஒரு கால் பகுதி மட்டுமே வெளியேறி இருந்தது.கருண் ஐந்தாம் வகுப்பில் படித்த நோட்டு புத்தகத்தின் அட்டையை கிழித்து கொண்டுவந்திருந்தான்.'என்னடா இது , என்ன பண்றே' கலை கேட்டுமுடிப்பதற்கு முன்னதாகவே கருண் நோட்டு அட்டையால் இடத்தும் புறமும் வலது புறமும் மேலும் கீழும் அசைத்து புகையை வெளியேற்றும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டான்.இந்த இருவரின் பிரயத்தனத்தால் புகை ஓரளவிற்கு வெளிநடப்பு செய்திருந்தது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஊதுகுழலை எடுத்து கலை புகையும் உலைக்குள் தான் உயிர்க்காற்றை சிதறாமல் கவனமாக செலுத்தினான்.மரணத்தோடு போராடிக்கொண்டிருந்த நெருப்பு லேசாக உயிர்ப்பெற்று சுடர்விட்டு சுவாலையாய் மேலெழுந்தது.அந்த சில கணங்களில் புகை எங்கோ காணாமலே போயிருந்தது.

பாத்திரம் வைக்கும் வாய்ப்பகுதியில் வழியாக நெருப்பு நாக்கை நீட்டி தனக்கான உணவை கேட்டு நின்றதைப் போல நீண்டு எரிந்தது.இப்போது கலை சோறு சமைக்கும் பாத்திரத்தை அதன் மீது வைத்தான்.கருண் அதற்குள்ளாக தன்னேர்கொண்டு வந்திருந்தான்.கலை கருண் கொண்டுவந்த தண்ணீரை பத்திரமாக பத்திரத்தில் வாய்ப் பகுதியின் வழியாக மிகுந்த எச்சிரிக்கையோடு கவனமாக ஊற்றினால்.தண்ணீரில் நெருப்பை அணைந்தால் மீண்டும் பற்றவைக்க முடியாது என்ற பயம் கலையை விட்டு அகன்றிருக்கவில்லை.அலுமினியப்பத்திரத்தின் முதலடுக்கு வளைவு வரையில் தண்ணீர் ஊற்றப்பட்டிருந்தது.அப்போதுதான் இதுவரையிலும் இவர்கள் சோதனை முயற்சி செய்திராத நிலையில் கருண் ஒரு யோசனை சொன்னான்.'அண்ணா தினமும் சாதம் வைப்போம் , அதுக்குள்ளே அம்மா அப்பா வந்திடுவாங்க ,இன்னிக்கு இன்னும் வரலே ,பேசாமே சாம்பார் வைச்சு பாக்கலாமா' என்ற யோசனையை முதலில் பெரிய வேலையாக கலை நினைத்திருந்தாலும் பிறகு , சரி செய்து பார்த்தால்தான் என்ன என்று சோதனை முயற்ச்சியில் இருவரும் களமிறங்கி விட்டார்கள்.

இவர்கள் இருவருக்கும் சமையல் குறித்த பார்த்த அனுபவம் மிகவும் அதிகம்.அந்த அனுபவம் அவர்களுக்குள் ஒரு நம்பிக்கையை விதைத்திருக்க வேண்டும்.

அதற்குள்ளாக அடுப்பில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பித்து விட்டிருந்தது.'கருண் பருப்பு சாம்பார் செய்ய எல்லா பொருளும் இருக்கா, எதுக்கும் போயி கொஞ்சம் பாத்துட்டுவா'என்று கலை கட்டளை இட்டான் . எல்லாம் இருக்கிறது என்பதை அறிவுறுத்தும் வண்ணமாக தலையை ஆட்டிக்கொண்டு வாத கருண்,'அண்ணா முதல்லெ ஒரு டம்ளர் துவரம் பருப்பை இதுலே போட்டு கொதிக்கவைக்கணும்' ' ம்ம் சரியாதா சொல்றே, சரி ஒரு டம்ளர் பருப்பு எடுத்தா' கருண் தரையில் ஒரு பழைய பேப்பரை விரித்து அதன் மீது சில்வர் டம்ளரை வைத்து கவனமாக பிளாஸ்டிக் டின்னில் இருந்த பருப்பை கவனமாக சைத்தான்.பருப்பு அந்த டம்ளரை பிரமிடைப்போல நிறைத்து கொஞ்சம் உதிரிகளை தரையில் சிதறவிட்டது.கருணிடமிருந்த கலை அந்த பருப்பை வங்கி அதை அப்படியே கொதிக்கும் பாத்திரத்திற்குள் போட்டுவிட்டான். வேகும் பருப்பை கவனமாக உளவுபார்த்த படியே இருந்தான் கலை. அதற்குள் கருண் சிதறிய பருப்பு சிதறல்களை சேமித்துவிட்டிருந்தான்.அடுத்த ஐந்து நிமிடத்தில் பருப்பின் வாசனை ஆவியின் வழியே நாசியை வந்தடைந்தது,இந்த வாசனைக்கே பாதி சாம்பார் செய்து முடித்துவிட்டதாக இருவரும் திருப்தி பட்டுக்கொண்டார்கள்.ஒரு கட்டத்தில் கலை பருப்பு எந்த அளவிற்கு வந்திருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள சாம்பார் கரண்டி ஒன்றை உள்ளே நுழைத்தான். நீராவியில் அனல் கலையில் வலது முன்னங்கைகளை பதம் பார்த்தன.விரைந்து எடுத்த அந்த கரண்டியில் ஒட்டி இருந்த சில பருப்பு துண்டங்களை தொட்டு அழுத்திப்பார்த்தான், பருப்பு வந்தபாடில்லை.

' கருண் , பருப்பு வேந்துகிட்டிருக்கு அடுத்து என்ன போடணும்' என்று அடுத்த சமையல் குறிப்பை கருனிடம் கேட்க 'பருப்பு வெந்ததும் கிழங்குதான் போடணும்,என்னண்ணே இதுகூட தெரியாதா?'கருணின் வினா கலையை சமையல் கத்துக்குட்டி என்று குறிப்பிட்டதைப் போல உணர்த்தியது.'அது சரி ஒரு நாலு கெழங்கு கொண்டா'என்றான் கலை.கூடைக்குள் கைகளைத் துழாவி விட்டு என்மாந்தவனாய் நிமிர்ந்த கருண் 'அண்ணா நாம பருப்பு சாம்பார் வைக்க முடியாது 'என்று பேரதிர்வு குண்டை கலையின் முன்னாள் வீசினான்.ஒன்றும் புரியாதவனாய் நின்ற கலை'என்னடா சொன்றே'என்று கேட்டான்.'இல்லண்ணே பருப்பு சாம்பாருளே அம்மா எப்போதும் கிழங்கு போட்டுதா செய்யும், அது இல்லாமே சமைக்கவே முடியாது' என்று சமையல் வல்லுஞனைப் போல திட்டவட்டமாக அறிவித்ததும்,தங்கள் திட்டம் தொல்வியடைத்து விட்டதைப் போல வருத்தமுற்ற கலை 'சரி இப்ப என்னதா செய்யறதா?'மீண்டும் கேள்விகளாய் கருணை துளைத்தான்.'அண்ணா பேசாமே அந்த செம்புலே இருக்குற தண்ணியே வடிச்சி பருப்பே தனியா எடுத்து கொஞ்சம் காய வச்சி அம்மா வர்றதுக்குள்ளே அந்த தப்பியிலேயே போட்டுடலாமா' என்று சொன்னது கலைக்கு நல்ல யோசனையாகப் பட்டது.

குளிக்கும் போது துடைப்பதற்காக கதவில் தொங்க வைக்கப்பட்டிருந்த டவலை எடுத்து வந்த கலை கொதிக்கும் அந்த பாத்திரத்தின் வாய்ப்பகுதியைச் சுற்றி அரைவட்டவடிவில் பிடித்து மெதுவாக இறக்கிவைத்தான்.பிறகு வீட்டின் பின்பகுதிக்கு ரகசியமாக சென்று கொதிக்கும் பாத்திரத்தை தரையோடு வைத்து சாய்த்து சுடும் நீரை கால்களில் தெரித்துவிடாதபடி மெதுவாக வெளியேற்றி முடித்தான்.ஈரம் உலராமலும் லேசாக வெந்த நிலையிலும் இருந்த பருப்பு சிதறல்களை சேகரித்துக்கொண்டு அவைகளை பழைய செய்தித்தாள்களுக்குள் வைத்து ஈரம் உரியில் அளவிற்கு சுருட்டிக்கொண்டான்.ஒரு வழியாக பருப்பு பழைய நிலைக்கு இவர்களது முயற்ச்சியால் வந்திருந்ததில் இருவருக்கும் திருப்தி.இதை எங்கு வைப்பது என்று இடம்தேடும் போதுதான் வாசலில் அம்மா அப்பாவின் அரவம் கேட்டது.கருண் ஓடிப்போய் அவர்களை வரவேற்க போயிருந்த அந்த இடைவெளியில் கலை அந்த பருப்புகளை எடுக்கப்பட்ட பாத்திரத்தில் ஏற்கனவே இருந்த பருப்புகளோடு போட்டுவைத்துவிட்டான்.ஏதும் நடக்கவில்லை என்பதைப் போல இருவரும் நடந்துகொண்டார்கள். இருந்தாலும் அம்மா கண்டுபிடித்து விடுவார்களோ என்று பயமும் மனதின் ஓரத்தில் இருக்கத்தான் செய்தது.வந்து செய்ததும் அம்மா முதல் வேலையாக அடுப்படிக்குள் நுழைந்து சமையலில் இறங்கி விட்டால். அன்று சுண்டல் கொழம்புதயாரிக்கப்பட்டதால் இருவரும் தப்பித்துக்கொண்டார்கள்.

மறுநாள் அம்மா சமைப்பதற்காக தானியப்பத்திரங்களை எடுத்தபோது பருப்பு டின் பூஞ்சை பிடித்திருந்ததை நோட்டமிட்டாள்.பருப்பை சுற்றிலும் பச்சை பசேலென ஏதோ படர்ந்திருந்தது.அம்மாவால் அதற்கான காரணத்தை அறிந்துகொள்ள முடியவில்லை.கருணும் கலையும் வாய்த்திறக்கவில்லை.அம்மா அந்த பருப்பை சமைக்காமல் விட்டுவிட்டாள்.மறுநாள் மாலையில் அவர்கள் வீடு திரும்புவதற்கு முன்னதாகவே அந்த ஈரம்படிந்து கெட்டியாய் இருந்த பருப்புதுண்டத்தை மெதுவாக வெளியில் எடுத்து வீசிவிட்டு.சுவையான கமகமக்கும் பருப்பு சாம்பார் வைத்திருந்தார்கள்.பிள்ளைகளில் சாமர்த்தியத்தைப் பற்றி அம்மா அப்பாவிடம் அன்றைய தினம் முழுக்க பெருமை பேசிக்கொண்டே இருந்தாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக