சனி, 14 மே, 2011

குளிர் - சிறுகதை

கரும்பலகையை வாத்தியார் அழித்துக் கொண்டிருந்தார். பள்ளி முடிவதற்கு இன்னும் சிலவினாடிகள் இருக்கக்கூடும் என்பதை யூகம் செய்தவர்களாய் சிறுவர்கள் தங்கள் புத்தகங்களை சரி செய்து துணிப்பைக்குள் அடுக்கடுக்காய் திணித்துக் கொண்டார்கள்.சிலர் கடன் கொடுக்கப்பட்ட வெள்ளைநிற சிலேட்டு குச்சிகளை திரும்பப் பெற்றுக்கொண்டிருந்தார்கள்.சிலர் நிலாவிற்கு செல்வதற்கு சிலிண்டர் மாட்டுவதைப் போல தங்கள் பைகளுக்குள் இரண்டு கைகளை திணித்து முதுகில் தொங்கவிட்டிருந்தார்கள். வகுப்பு ஓய்ந்ததால் பள்ளிச்சிறார்களின் சின்ன சின்ன உரையாடல்கள் பேரிரைச்சலாக அந்த அமைதியான மலைகிராமத்து காற்றில்கலந்துகொண்டிருந்தது.



நான்காம் வகுப்பில் எழுந்த விடைபெறும் சத்தம் பக்கத்து வகுப்புகளுக்கும் பரவுகிறது ,இப்போது அந்த கிராமத்துப் பள்ளி முற்றிலுமாக தன் அமைதியை இழந்திருந்தது . நூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் கடைசி வினாடிகளுக்காக விழிப்போடிருக்கும் வீரர்களைப் போல மாணவர்களும் காத்திருந்த வேலை 'டிங் டிங் டிங் டங் டங் டங்' என்று ஒலிக்கும் பள்ளியின் மணியோசை அந்த பள்ளியை சுற்றியுள்ள பத்து மலைகிராமங்களுக்கு கேட்கிறது .இந்த மணியோசைக்கேட்டு சில பெற்றோர்கள் அவரவர்களது வீட்டில் தயாராகி இருக்கக்கூடும்.சில மாணவர்கள் காத்திருப்பார்கள் பலரும் நடையைக் கட்டிவிடுவார்கள்.அந்த பள்ளியிலிருந்து ஒவ்வொரு ஊரும் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்றன.



வெள்ளை சட்டை காக்கி கால்சட்டை அணிந்த சிறுவர்களும் வெள்ளை மேலாடை பச்சை பாவாடை அணிந்து சிறுமிகளும் கூட்டமாக பள்ளி வளாகத்திலிருந்து நழுவும் பாதரசத்தைப் போல மெல்லென வழிகிறார்கள் .பள்ளி வெறுமையாகிறது.ஒரு கிலோமீட்டர் தூரம் மலை சரிவிலும் ஒரு கிலோமீட்டர் தூரம் சமதளத்திலும் இவர்கள் நடந்தாகவேண்டிய தொலைவில் ஊர் இருக்கிறது.



நான்காம் வகுப்பு படிக்கும் மகேஷ் வெற்றி குமார் ஆகியோர் இணைபிரியாத தோழர்கள்.வெற்றி எப்போது ஒரு அவாய் அணிந்துவருவான், மகேசும் குமாரும் வெறும் காலுடன்தான் வருவது வழக்கம்.அது அவர்களுக்கு பழகிப் போய் இருந்தது.வெயில் காலம் ஆனாலும் பனிக்காலம் ஆனாலும்.



டிசம்பர் மாதம் பனி என்றால் அந்த பனிக்கே குளிரெடுக்கும். காலை நேரத்து விடியலில் பனிக்கட்டிகளை பொடித்து வைத்ததைப் போல புல்லெங்கும் பனித் துளிகள் உறங்கிக்கொண்டிருக்கும்.மதிய வேளைகளில் அடிக்கும் பனி வெயில் சருமத்தை குதறிவிட்டுப் போகும்.சிலரின் உதடுகளுக்கு வெடிவைத்து ரத்தக் கசிவை ஏற்ப்படுத்தி இருக்கும்.இந்த பூமியில் அந்த மாதத்தில் பெரிய பயங்கரவாதி பனிதான்.



வெற்றி எப்போதும் இளவரசனைப் போல இந்த பனிக்காலத்தில் தன் தலைமீது பஞ்சு கிரீடம் வைத்துவருவான்.மகேஷிடம் எப்போது ஒரு பருத்தி பனியன் இருக்கும். குமார் ஒற்றை சட்டையும் வெறும் காலுமாக வருவதுதான் வழக்கம்.



ஈரப் பனிக்காற்று பட்டு இவர்களின் கைகளின் ரோமங்கள் எழுந்துநின்று கொண்டன.குமாரின் மேற்பல்லும் கீழ்ப் பல்லும் .குளிர்தாக்குப் பிடிக்கமுடியாமல் 'கட் கட் கட கட ' என்று இடைவிடாமல் அடிக்க தொடங்கி விட்டன. நிலநடுக்கம் பூமிக்கு வந்ததைப் போல குமாருக்கு உடம்பெல்லாம் நடுங்கத் தொடங்க , உள்ளங்கை இரண்டையும் அழுத்தி தேய்த்து உஷ்ணத்தை லேசாக பற்ற வைக்க முயற்சி செய்கிறான். .அப்போதைக்கு வெப்பம் எரிகிறது உடனே அணைந்துபோகிறது . சில்லிட்ட தனது உடலை இன்னும் ஒரு கிலோமீட்டர் தூரம் கொண்டு சென்றாக வேண்டுமே என்ற சவால் இப்போது மூவருக்கும் ஏற்பட்டிருக்கிறது.



ஒரு கிலோ மீட்டர் தூரம் கடந்து விட்ட சரிவு, இவர்கள் நடக்க முயற்சி செய்தும் அது உந்தி ஓடவைத்திருக்கிறது.சரிவின் கீழிலிருந்து சமவெளி தொடங்கும் பாதையெங்கும் அடர்ந்த மரங்கள் சாலைகளை வணங்குவதைப் போல அடர்ந்து படர்ந்து நிழலை இருட்டாகவே அப்பச் செய்திருக்கிறது.மலைகிராமங்களில் மாலை ஐந்துமணி ஆனாலே அமைதியும் வெளிச்சமும் ஓய்வெடுத்துக்கொள்ள தொடங்கிவிடுகிறது.அதிலும் பனிக்காலம் என்றால் கேட்கவா வேண்டும்.அந்த மூவரில் குமாருக்கு சவாலான நேரம்தான்.இரண்டு புறமும் நண்பர்கள் வர நடுவில் குளிரிலிருந்து தன்னை ஒளித்துக்கொண்டே நடந்தான்.ஒரு கட்டத்தில் மூமரும் கைகளை ஒன்றாக பிடித்துக்கொண்டு ஒருவரது வெப்பத்தை அடுத்தவர்களுக்கு பரிமாறிக்கொண்டார்கள்.



நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ஓடையை கடந்து போவதற்குள் ஐந்துநிமிடம் ஆகும்.இப்போது அந்த சூழ்நிலை மூவருக்கும் சவாலாகிவிட்டிருந்தது.வேறு வழியின்றி மூவரும் முழங்காலளவு வரும் அந்த ஓடைக்குள் லேசாக கால் நனைத்தார்கள்.ரத்தம் உறையும் அளவிற்கு பனியை உணர்ந்து பின்வாங்கினார்கள்.வெற்றி அணிந்திருந்த செருப்பும் இப்போது பயன்படவில்லை என்ற ஏக்கம் அவனையும் தொற்றிக்கொண்டது.எப்படியோ கண்களை மூடிஉடலை இறுக்கமாக வைத்துக்கொண்டு இறங்கி ஓடினார்கள்.அதுவரையில் ஏற்படாத பனியில் வலியை அப்போது உணரத்தொடங்கினார்கள். முழங்காலுக்கு கீழே உணர்வை இழந்து நின்றார்கள்.அந்த பனியின் வலி அவர்களை இன்னும் படுத்ததொடங்குகிறது.



நீரில் நனைத்ததன் எதிர்வினையாய் வெற்றி பாதையின் ஓரத்தில் ஒதுங்கினான்.'டே வெற்றி ' 'இருடா உச்சா வருது' 'எனக்கு தண்டா' 'ஆமாட எனக்கு வருது' வெற்றியைத் தொடர்ந்து அனைவரும் சிருநீர்க்கழிக்க எத்தனித்த நேரத்தில். பனியில் விரித்துப் போயிருந்த மரத்த அந்த குமாரின் காலில் கழித்த சிறுநீர் தெறித்தது . மற்றவர்களுக்கும் அந்த அனுபவத்தை தந்திருக்கக் கூடும்.



'டே உச்சாவே காலிலே விடுடா,,,எப்படி சூடா இருக்கு தெரியுமா' குமார் தொடங்கி வைத்தான், மற்றவர்களும் பரிசோதனைக்கு இறங்கிவிட்டார்கள்.ஆவி பறக்க ஊற்றெடுத்த அந்த சிறுநீரின் வெப்பம் குமாரை மட்டுமல்ல அனைவருக்கும் புதிய ஆறுதலாக இருந்திருக்கக்கூடும்.இப்போது எல்லோரும் கீழி சிறுநீர்க்கழிப்பதை நிறுத்தி விட்டு மூவரும் அவரவர்களின் கால்களில் பீச்சினார்கள்.



அந்த பிஞ்சுக்கால்களில் ஊறிப்போயிருந்த குளிர் கொஞ்சம் கொஞ்சமாக விடைபெற்றுக்கொண்டிருப்பதை அவர்கள் உணரத்தலைப்பட்டார்கள்.வியர்க்காத பொழுதானதால் சிலநிமிடங்கள் தொடர்ந்து பாய்ந்த சிறுநீரில் வெப்ப ஒத்தடத்தை வாங்கிக்கொண்டார்கள் . சிறுநீரின் ஆவி வெள்ளை வெள்ளையாய் மேலேழுந்துகொண்டிருந்தது. நன்கு குளிர்ந்துபோய் இருந்த குமார் கால் விரலில் தொடங்கி அரைக்கால் சட்டை படும் அளவிற்கு முழங்கால் வரையில் நனைத்தான்.மற்றவர்களும் வேப்பநீரில் நனைகிறார்கள்.இதமாகவும் சுகமாகவும் இருக்க இப்படியாக அந்த பனிக்காலம் முடிய .அடுத்த பனிக்காலங்கள் தொடர்ந்தன .



பிறகெல்லாம் இவர்கள் பள்ளிநேரங்களில் ரீசஸ் பீரியடில் இவர்கள் ரீசஸ் போவதே இல்லை. மாலைப் பனிக்கு சேமித்துக் கொள்கிறார்கள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக