புதன், 25 மே, 2011

குச்சி ஐஸ் -சிறுகதை

வீதிகள் விழாக்கோலமாக களைக் கட்டி இருந்தன அந்த விடுமுறை நாளில்.அகலமும் நீளமும் மிகுந்த அந்த வீதியை மழலைகள் குட்டி மைதானமாகவே கருதி ஓய்வே இல்லாமல் விளையாடுவது வழக்கம்.கோலூன்றும் பெரியவர்களும் தண்ணீர் குடம் சுமக்கும் பெண்களும் இயங்க முடியாத அளவிற்கு விளையாட்டுப் பிள்ளைகள் அந்த வீதியை அடைத்திருப்பார்கள். அவர்களுக்கான உலகத்தை உருவாக்கிக்கொண்டு விளையாடும் அந்த மழலைகளை யாரும் எதுவும் சொல்வதே இல்லை.கோடைக்கால விடுமுறை வெளியிலில் விளையாடும் அந்த பிள்ளைகளின் கவனத்தை ஈர்க்கும் ஒலிகள் இரண்டு.வெயிலின் கூச்சத்தைக் கூட பொறுத்துக்கொண்டு வானத்தின் திசையெங்கும் மின்னலடிக்கும் தங்களின் சின்ன விழிகளால் துழாவும் ,வெள்ளை கோட்டை கிழித்தபடி செல்லும் விமானத்தின் ஓசை.மற்றொன்று நாக்கில் எச்சிலையும் மனதில் சில்லிடலையும் உருவாக்கும் குச்சி ஐஸ் காரன் எழுப்பும் 'பொய்ங்... பொய்ங்...' என்னும் ஹாரன் சத்தம்.



இவர்கள் எப்போதும் கூட்டாக விளையாடுவதுதான் வழக்கம்.அப்படி அவர்கள் என்ன விளையாட்டு விளையாடினாலும் அவர்களுக்குள் பந்தய 'பெட்' கட்டாயம் இருக்கும்.இதற்காகவே ஐந்து பைசா பத்து பைசா என்று ஆளாளுக்கு கொண்டு வந்து எப்போதும் விளையாடாத ஒரு பையனிடம் பத்திரப்படுத்திவிட்டு களம் இறங்கிவிடுவார்கள்.காட்டப்படும் மொத்த பைசா தொகையில் பிரமாண்டமான தின்பண்டங்களை வாங்கி தோற்றவர்களும் ஜெயித்தவர்களும் சேர்ந்தே உண்பதுதான் சுவாரஸ்யம்.தேன்மிட்டாய்,கம்பர்கட்,கடலைமிட்டாய்,ஆரஞ்சுமிட்டாய்,சீரம் மிட்டாய்,என்று இவையும் இன்னபிறவும் இவர்களை உற்சாகப்படுத்தும்.



மழைத் தாயின் இடுப்பில் பிள்ளை இருப்பதைப் போல அந்த கிராமம் ஒரு மலையின் பாதிபள்ளத்தாக்கில் இருக்கும்.முதன்மை சாலைக்கு செல்லவேண்டும் என்றால் ஒரு அரை பர்லாங் தூரம் குத்துமேட்டில் மூச்சுவாங்க நடந்தாகவேண்டும்.இருந்தாலும் வெற்றிக்கொண்டாட்டங்களுக்காக இவர்கள் இந்த மலைஏற்றத்தை சிமமாகவே கருதுவதில்லை.எப்போதும் சில்லிடும் அந்த மலையூரின் தப்பத்தை தாண்டி விளையாட்டில் எல்லோரும் வியர்த்து வழிந்துகொண்டிருந்த ஒரு பகல் பொழுது. விளையாட்டும் இன்னும் முடிந்தபாடில்லை.அந்த மும்முரமான பரபரத்த நேரத்தில் தான் அவர்களை எப்போதும் ஈர்க்கும் அந்த ஒலி அவர்களின் காதுகளுக்குள் வந்து நுழைந்தது.ஐஸ் கிரீம் காரனின் ஹாரன் சத்தம் எல்லோருடைய வாயிலும் எச்சில் ஊறவைத்தது.



அந்த சத்தம் எல்ல்லோருடைய கவனத்தை சிதைக்கவே அன்று விளையாட்டை பாதியிலே நிறுத்திவிட்டு சேர்ந்த பைசாக்களுக்கு ஐஸ் வாங்குவது என்று முடிவெடுத்து , இறைக்கும் மூச்சுடன் முதன்மைச் சாலையை ஒருவழியாக அடைந்தார்கள்.சதுரவடிவ பேட்டியின் நடுப்பகுதியில் இருக்கும் திறப்பு கட்டையை ஐஸ் காரார் 'டப் டப்' என்று அடித்துக்கொண்டிருந்தார்.எல்லோரும் அவரை சூழ்ந்துகொண்டார்கள்.'அண்ணே மொத்தமா நாலு ரூபா இருக்கு ,எங்க எல்லோருக்கும் குச்சி ஐஸ் தாங்க 'என்று அவர்களின் பிரதிநிதியாய் ஒருவன் ஆரம்பித்தான்.பன்னிரண்டு பேர்களுக்கு இந்த தொகை போதாது என்று அறிந்தபோதிலும் இவர்களுக்கு ஐஸ் கொடுப்பது என்று தீர்மானித்த ஐஸ் காரர் மேல் கட்டையை விளக்கினார்,உள்ளுக்குள்ளிருந்து வெள்ளை வெளேரென நீராவு அலை அலையாய் மேல்நோக்கி எழுந்ததை எல்லோரும் வேடிக்கைப் பார்க்க தவறவில்லை.சிவப்பு,நீளம், மஞ்சள்,ஊதா ,இப்படி பலநிறத்தில் குச்சி ஐஸ்களை ஒவ்வொன்றாக எடுக்கிறார்.உனக்கு எனக்கு என்று அல்லலுக்கு முட்டிக்கொண்டு அனைவருமே வாங்கிக்கொண்டார்கள்.



வாய்க்குள் வைத்து வெளியில் எடுக்காமல் கையிலும் பிடிக்காமல் வேடிக்கை காண்பித்தான் ஒருவன் ,சிந்தாமல் உருகும் கீழ முனைப்பகுதியை மேலாக உயர்த்தி சொட்டும் துளிகளை சுவைத்தான் மற்றுவன்.இவர்களில் ஒருவன் மட்டும் தன தம்பிக்காக வேகவேகமாக ஓடி கொண்டுவந்தான். உருகும் ஐசிற்கு ஈடுகொடுத்து ஓடினான்.அந்த ஞாபகத்திலேயே வந்ததால் அவர் ஐஸை கவனிக்கவில்லை வீடு வந்ததும் குச்சியில் கொஞ்சமாக ஐஸ் ஒட்டிக்கொண்டிருந்தது.



தம்பியிடம் சாரி சொல்வதைப்போல ஒரு சைகை செய்துவிட்டு அவன் கையில் கொடுத்தான்.தம்பி மீதமிருந்த ஐஸ் துண்டை சுவைத்தான்.அண்ணன் தன்னையே பார்ப்பதை கவனித்தவன் அவனுக்கும் ஒரு வாய் கொடுத்தான். சிலவினாடிகள் தான் அவர்கள் சுவைத்தார்கள் ஆனால் நீண்டநேரம் இனித்திருக்க கூடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக