சனி, 21 மே, 2011

அப்பாவும் கதிரும் -சிறுகதை

ஒன்றாம் வகுப்பு படிக்கும் கதிருக்கு ஞாயிற்றுக் கிழமை ஆகிவிட்டாலே ஒரே கொண்டாட்டம் தான். வார விடுமுறை நாட்களில் ஓய்வாக வீட்டில் இருக்கும் அப்பாவை விட்டு அகலுவதே இல்லை.தன் குழந்தைக்கு ஈடு கொடுத்து விளையாட முடியாவிட்டாலும் சின்ன சின்ன ரசனைகளில் கதிரை ஆர்வப்படுத்தி அவனுடன் இணைந்திருப்பார். அலுவலக அலுவல்கள் மீதப்பட்டு இருந்தாலும் வீட்டில் அதை கடைவிரித்து யாரிடமிருந்தும் அவர் எப்போதும் அன்னியப்பட்டதில்லை .அவரது மனைவிக்கு வார இறுதி நாட்கள் வீட்டு வேலைகளுக்கு சரியாக இருக்கும். அதனால் இவர்கள் இருவரையும் அவர் தொல்லை கொடுப்பதேயில்லை .அப்பா- பிள்ளை விளையாட்டுகளை ரசித்துக்கொண்டே தன் வேளைகளில் மும்முரமாக இருப்பாள்.



காலை சிற்றுண்டி முடிந்ததும் அப்பா கதிரை அழைத்து வைத்துக்கொண்டு ஏதாவது அவனுக்கு பிடித்தமாதிரியான செயல்களில் ஈடுபடவைப்பது வழக்கம்.அப்படி ஒரு ஞாயிற்றுக் கிழமையில் , 'கதிர் கண்ணா! இங்கே வா' என்று அழைத்ததும் ஒரே பாய்ச்சலாய் பாய்ந்து சம்மனக் கால் போட்டு அமர்ந்திருந்த அப்பாவில் வலது தொடைப்பகுதியில் ஏறி அமர்ந்துகொண்டான்.' கதிர் இப்படியே அப்பா மடியிலே ஜம்முன்னு ராசா மாதிரி உக்காந்துகிட்டு அப்பாவோட தலையெ சீப்பு வச்சி சீவிவிடுவீங்களா, சரியா' அப்பா கதிரை அன்பால் வேண்டுகிறார்.சொன்னதும் தான் மிச்சம், குன்றிலிருந்து தாவிய ஆட்டுக் குட்டியாய் தன் மடியிலிருந்து பாய்ந்து முதலறைக்கு ஓடி ,முகம் பார்க்கும் கண்ணாடி அருகில் வைக்கப்பட்டிருந்து சீப்பு,பவுடர் தப்பா,எண்ணை, போன்ற பலவற்றையும் தன் சட்டையில் கீழ்ப்பகுதியில் வைத்து அவை தவறி கீழே விழுந்துவிடாதபடி இரண்டுகைகளால் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு மெல்ல மெல்ல அடிவைத்து வந்து சேர்ந்தான்.



கொண்டு வந்த பொருட்களை தன் பிஞ்சுக்கைக்கு எட்டும் தூரத்தில் பரவலாக வைத்துவிட்டு, 'இப்ப நான் தான் பார்பர்' என்று சொல்லி 'அப்பா நீங்க நேரா உக்காருங்க,ஆடக்கூடாது,கண்ணே திறக்க கூடாது ...அப்பத்தா நான் தலை சீவிவிடுவேன்'என்று ஆணையிட்டு தன் பணியில் மும்முரமாகிவிட்டான்.இப்போது அப்பா தன் பிள்ளையின் கட்டளைக்கு இசைந்து ஆடாமல் அசையாமல் தன் ஒத்துழைப்பை வழங்கத் தொடங்கிவிட்டார்.ஆப்பிள் பழ வடிவத்தில் இருந்த நீலநிற எண்ணை பிளாஸ்டிக் டப்பாவிற்குள் தன் பிஞ்சுக் கைகளை விட்டு விரல்களால் இறுகிப் போயிருந்த தேங்காய் எண்ணையை சிரமப்பட்டு விரல்கள் நொண்டியும் தோண்டியும் எடுத்தான்.உள்ளங்கை வெப்பத்தில் எண்ணை உருகி முழங்கை வரையில் வந்திருந்ததை அவன் கவனிக்கவே இல்லை.எண்ணை பரவி இருந்த வலது கையையோடு இடது கையையும் சேர்த்து முன்னும் பின்னும் மேலும் கீழுமாக தேய்க்கத் தொடங்கினான்.'அப்பா !இப்ப நா எண்ணை தேய்க்கப்போறேன்', என்று சொல்லி கண்களை மூடி இருந்த அப்பாவின் முகத்தருகே நெருங்கினான்.தந்தை பிள்ளையின் அன்பின் அதிர்வில் நெகிழத் தொடங்கினார்.



அப்பாவின் தலைக்கு மேல் கைகளை வைத்துக்கொண்டு தன் இஷ்டம் போல கதிர் தேக்க தொடங்க அவருக்கு கொஞ்சம் சிரமமாகவே இருந்திருக்க கூடும் .இருந்த போதிலும் அந்த உணர்வை அவர் வெளிப்படுத்தவே இல்லை.மனது நோகாதபடி 'அருமையா இருக்கே, நல்லா எண்ணை தேய்க்கிறீங்களே !'என்று முதல் கட்டமாக பாராட்டவே கதிருக்கு குஷி தாங்கமுடியவில்லை.



'இப்ப கதிர் தம்பி பத்து விரலையும் விரிச்சி வச்சிட்டு அப்பாவோட தலைக்குள்ளே நுளைச்சி நுளைச்சி எடுப்பீங்களா அதுக்கப்புறம் சீப்பே வச்சி சீவிவிடு வீங்களா சரியா ', சொல்லிவிட்டு மீண்டும் கண்களை மூடிக்கொண்டார் அப்பா .கதிர் அப்படியே தொடங்கினான். அந்த தீண்டல் அப்பாவை கொஞ்சம் கொஞ்சமாக சொக்கவைத்திருக்கக் கூடும்..ஒரு அசைவில் லேசாக சொக்கித் தெளிந்த அப்பா ' கதிர் தம்பி அப்பாவுக்கு எப்படி எண்ணை தெயச்சீங்கன்னு பாக்கணும் கண்ணாடி கொண்டுவருவீங்களா 'என்றார்.குதித்தான் எடுத்தான் ஓடினான் மீண்டும் முன்புபோல அமர்ந்து கொண்டு கண்ணாடியை அப்பாவின் முகம் தெரியும் படியாக வைத்தான் .கதிரின் பிடித்தலுக்கு சரியாக தனது முகத்தையும் ஆடிக்குள் கொண்டு வந்து கதிரின் பணிக்கு பாராட்டு தெரிவிப்பதைப் போல பற்கள் தெரிய சிரித்தார். 'அப்பா !எப்படி இருக்கு... நல்லா இருக்கில்லே... இன்னு கொஞ்சம் எண்ணை போடட்டுமா? என்று கேட்டார்.



'எண்ணை போட்டது போதும் ,இதுக்கு மேலே எண்ணை போட்டா அம்மா திட்டும்' என்று மெல்லிய குரலில் ரகசியமாக சொல்லி மறைமுகமாக கதிரின் முதல் கட்ட பணிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.'இதோ இந்த செவப்பு கலர் சீப்புலே அப்பா தலையே கதிர் தம்பி சீவுவீங்களா..அப்பா ஆடாமே இருப்பேனா சரியா..?'என்றார். பதிலுக்கு தலையை ஆட்டிவிட்டு கதிர் சீப்பை எடுத்து சீவத் தொடங்கினான் .இப்போது சீப்பு முன்னந்தலையில் இருந்து தொடங்காமல் பாதி நெற்றியிலிருந்து தொடங்கியது.சுமார் எழுபது பற்கள் இருக்கும் அந்த சீப்பு அப்பாவின் கபாலத்தை கீறிவிட்டுக்கொண்டே இருந்தது.'அப்படி செய்யாதே' என்று சொல்லாமல் வலிகளை பொறுத்துக்கொண்டு சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார்.



அழுத்தி சீவும்போதெல்லாம் வலியை கண்களை சுருக்கி வெளிப்படுத்திய அப்பா இப்போது எந்த பாவத்தையும் காண்பிக்க முடியாதவாறு தூங்கிப் போய் இருந்தார் .அப்பா தன் தீண்டலில் சொகிப்போயிருந்ததை அறியாத கதிர் .வலது இடது புறத்து பக்கவாட்டுகளில் சீவ இறங்க காதுகளில் மேல் பகுதியை சீப்பின் கூர்முனைகளால் குதற இப்போது அப்பா விழித்துக்கொண்டார்.



'இதோ பாரு கதிர் லேசா சீவுவீங்களா...இங்கே பாரு அப்பா எப்படி சீவறேனு...இப்படீ... இப்படி ...'என்று செய்துகாண்பித்தார்.பின் சீப்பை கதிரின் உள்ளங்கைக்குள் திணித்துவிட்டு பழையபடி கண்களை மூடிகொண்டார்.அப்பாவின் குறிப்புக்களை உள்வாங்கிக்கொண்ட கைகள் அப்படியே இயங்கின.'கதிர் ...இப்ப அப்பாவோட தலையிலே இடதுபுறம் அழகா ஒரு வகிடு போடு ..சரியா?' அப்பா சொன்ன இடதுபுறத்தை தவறாக புரிந்துகொண்ட கதிர் வலது புறத்தில் வகிடேடுக்கத் தொடங்கினான்.வகிடு நேராக வரவில்லை.பலமுறை முயற்சித்தும் வகிடுக்கு வழிவிடாமல் அப்பாவின் தலைமுடி கதிரை வென்றுகொண்டே இருந்தது. அப்பா எப்போதுமே வகிதேடுக்காமல் மேல்புறமாக சீவுவதுதான் இந்த தோல்விக்கு காரணம் காரணம்.



வலதுபுறம் முடித்து இடதுபுறம் வந்த கதிரின் விரல்கள் இன்னும் பக்குவமாய் இயங்கின.அப்பா எதுவுமே சொல்லவில்லை என்ற விஷயம் கதிருக்கு சந்தோசத்தை அளித்தது.இப்படியாய் அப்பாவும் கதிரும் ஒருமணிநேரத்தை முடித்திருந்தார்கள். கைகள் வலியெடுக்க எல்லாம் முடிந்துவிட்டு மெளனமாக அப்பாவைப் பார்க்கிறான் கதிர்.அப்பாவின் தலை லேசாக கீழ்புறமாக விழுந்து விழுது நிமிர்ந்தது. அப்பா தூங்கி விட்டார் என்பதை உறுதிசெய்துகொண்ட கதிர் ஓடிப்போய் தெருவில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்த அம்மாவை கையேடு வலுக்கட்டாயமாக அழைத்து வந்தான்.இப்போது அம்மாவும் கதிரும் அப்பாவின் முகத்தருகே வந்து பார்த்தபடியே இருக்கிறார்கள். அம்மா புன்னகைக்க கதிர் சிரிக்கிறான்,இருவரும் சிரிக்கிறார்கள் சிரிப்பு பெரும் சத்தமாய் வெடிக்கிறது.ஏதோ சத்தம் கேட்ட பரப்பரப்பில் தூக்கம் கலைந்தவராய் லேசாக கண்களை திறக்கிறார் அப்பா. இப்போது மூவரும் சேர்ந்து சிரிக்கிறார்கள்.



தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கதிருக்கும் அப்பாவிற்கும் இப்படியான இனிய அனுபவங்களோடு கழித்தன.அப்பா ஒருநாள் உடல் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடப்பதை பள்ளியிலிருந்து திரும்பிய கதிர் பார்த்து அதிர்ந்தான். இதுவரையில் அவன் அப்பாவை அப்படி பார்த்ததே இல்லை.வழக்கத்திற்கு மாறாக சோர்வாக படுத்திருந்த அப்பாவைப் பார்க்க கதிருக்கு ரொம்பவும் கஷ்டமாக இருந்தது.'அப்பா ஏம்பா படுத்திருக்கீங்க ..என்னாச்சுப்பா...எந்திரிங்கப்பா...' என்று பாசம் பொழிய அழைத்தான்.'கதிர் கண்ணா பள்ளிக்கூடம் போயி வந்துட்டீங்களா? சமத்து. அப்பாவுக்கு கொஞ்சம் அசதியா இருக்கு. நீங்க போயி கைகால் கழுவிட்டு சட்டே துணி மாத்திட்டு இங்க வா நா உனக்கு ஒரு கதே சொல்றே' என்று மனநிலையை மாற்றி அவன் சங்கடப்படாதவாறு பதலளித்தார்.



அந்த மாலை பொழுது முடித்து இரவு படரத்தொடங்கிவிட்டிருந்தது . அம்மாவும் வேலைமுடித்து உறங்க வந்திருந்தாள்.அப்பாவின் தலையில் தலைலம் போட்டிருந்ததை நாசியில் நுகர்ந்து உணர்ந்துகொண்ட கதிர் அப்பாவையே பார்த்தான்.அப்பாவிற்கு அருகில் படுத்திருந்த கதிருக்கு தூக்கமே வரவில்லை. வெகுநேரம் கண்கள் கொட்ட கொட்ட தூங்காமல் யோசித்துக்கொண்டே இருந்தான். வழக்கத்திற்கு மாறாக அப்பா பலவீனப்பட்டிருந்தது அவனுக்கு என்னமோ மாதிரி இருந்தது. அப்பாவுடன் ஆறுதலாக ஏதாவது பேசவேண்டும் போலிருந்தது அவனுக்கு. அம்மாவின் தூங்கி விட்டிருந்ததை உறுதிபடுத்துக்கொண்ட கதிர் அப்பா தூங்காமல் இருப்பதையும் அறிந்தவனாய், அப்பாவின் பக்கமாக நெருங்கி வந்தான்.



அப்பா லேசான அசதியிலும் லேசான காய்ச்சலிலும் உறங்கியும் உறங்காமலும் இருக்கிறார் என்பதை அவரின் நெஞ்சில் கைவைத்து எப்படியோ ஊகித்துக் கொண்ட கதிர் இப்போது தனது ஞாயிற்றுக்கிழமைகளை நினைத்துப்பார்த்தான்.சட்டென அவனுக்கு ஏதோ ஞாபகத்திற்கு வந்தது. இப்போது கதிர் தன் தந்தையின் தலைமுடியை தன் பிஞ்சு விரல்களால் கோதிவிட தொடங்கினான். மெதுவாக மெதுவாக.மிருதுவாக மிருதுவாக. அறிந்தும் அறியாத அரைத்தூக்கத்தில் இருந்த அந்த அப்பா முழுதுமாக தூங்கியே விட்டார் என்பதை அப்பாவின் குறட்டை சத்தத்தை வைத்து உருதிபடுத்திக்கொண்டான். இப்போதுதான் கதிருக்கு ஆறுதலாக இருந்தது. கோதி கோதி களைத்த அசதியில் கதிரின் குறட்டையும் தந்தையின் குறட்டை சத்தத்தோடு சிலவினாடிகளில் ஒத்திசைத்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக