சனி, 14 மே, 2011

பூவலூராருடன் ஒருநாள் - பகுதி 2

சகாராவிலிருந்து காஸ்மீரம் வந்து சேர்ந்ததைப் போன்ற உணர்வை ஏசியின் குளிர் ஒத்தடம் ஏற்படுத்த தொடங்கி விட்ட அந்த நேரம்,தொண்டை கரகரத்து பேசமுடியாமல் போயிருந்ததை யாருக்கும் காட்டிக்கொள்ளாமல் என் சக்திக்கு ஏற்றார்போல இரண்டுமூன்று வார்த்தைகளில் அனைவரிடமும் அறிமுகத்தை மரியாதை நிமித்தமாய் முடித்துக்கொண்டு புதிதாக அன்று சந்திக்கும் தமிழிடம் சிறப்பு விசாரிப்புகளை வைத்துவிட்டு சிலபடங்களில் நடித்திருந்தாலும் கச்சிதமான கதாபாத்திரங்களில் தோன்றி முத்திரைப் பதித்த நிகோலஸ் அவர்களை நெஞ்சார வாழ்த்திவிட்டு முடிக்கிறேன்.பின் மனமும் கண்களும் ஸ்ரீஜி இருக்கும் திசையில் நிலை குத்துகிறது.



அவர் மொழிகளற்ற மேலான புன்னகையால் என்னை விசாரிப்பதை நான் கூர்ந்து கவனிக்கிறேன்.முகத்தின் இரண்டு புறமும் காதோரம் தொடங்கி கன்னத்தின் கீழ் தாடைப்பகுதிவரை நீண்டிருந்த கிர்தாவை வீச்சரிவாளாய் முருக்கிவிடப்பட்டிருந்த மீசையின் நுனிப்பகுதிகள் தொட்டுவிளையாடிக்கொண்டிருந்தன.அகலவிரித்து இந்த பூமி கிரகத்தை விழுகுவதைப் போல பார்க்கும் இருவிழிகளில் வெளிச்சம் வழிந்துகொண்டிருந்தது.அகன்று பரந்திருந்தது ஒளிவீசும் நெற்றி.இப்படியான தோற்றத்தில் கம்பீரமாக காட்சித்தரும் ஸ்ரீஜியில் முகத்தில் இடைவிடாமல் தவழும் புன்னகை அவரது மெல்லிதயத்தை பிரதிபளித்துக்கொண்டிருன்தது .மாலைநேரத்து மஞ்சள் நிலா நிறத்தில் ஒரு அழகான குர்தா முழங்காலை முத்தமிட்டுக்கொண்டிருந்தது ,உடன் நீலம் பாரித்த வெள்ளைநிறத்தில் வேட்டி.



ஆள் பாதி ஆடை பாதி என்று சொல்லத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம்.இங்கு மொத்த அடையாளங்களோடு ஒரு முழுமையான தமிழனாய் ஸ்ரீஜி அமர்ந்திருந்தது, ஆச்சர்யத்தை அனைவரிடமும் பற்றவைக்கவே செய்திருந்தது.



மேலை மண்ணில் இசைத்தமிழனாக,எழுசுர பிரியர்களின் நாயகனாக நீண்ட வருடங்களாக கோலோச்சிக்கொண்டிருக்கும் ஸ்ரீஜியின் ஆடையிலும் மொழியிலும் பச்சைத் தமிழனின் பாசமுகவரி இருந்ததை பார்த்து பார்த்து பூரித்தேன். அவசரகதியில் ஜீன்ஸ் அணித்து சென்றிருந்த என்னை பார்த்து அவர் பேசும்போதெல்லாம் மனதிற்குள் சுருக்கென்று வலிகொண்டேன். ஆடை என்பதை வெறும் உடல் மறக்கும் நாகரீகத்தின் பொருளாக சமூக விஞ்ஞானிகள் கருதுவது எவ்வளவு அபத்தமானது என்பதை அன்று உணரலானேன்.ஒரு இனத்தின் பண்பாட்டு ,கலாசாரம்,சுற்றுச்சூழல்,தொழில்முறை,உற்பத்தி போன்ற பலவற்றோடும் நாம் அணியும் ஆடை சம்மந்தப்பட்டிருக்கிறது என்கிற ஞானம் அன்று உதயமானது.



பேசும்போது இடையில் ஆங்கில வார்த்தைகளை குழைத்து ஒரு கலவைமொழியாக எப்படி பேசப்போகிறார் என்ற என் எதிர்ப்பார்ப்பிற்கு ஸ்ரீஜியில் எதார்த்த தமிழ் ஆப்பு வைத்தது. லேசான சென்னை செந்தமிழின் உச்சரிப்போடு இயல்பான தமிழ் விவாதத்தை இன்னும் இலகுவாக்கியது.கர்வம் தொலைத்த ஒரு கம்பீரமான மனிதரை அன்றுதான் முதல்முறையாக பார்க்கிறேன்.



முகநூலில் அறிவார்ந்த தகவல்களையும் பதிவதிலும் ,நடப்பு நிகழ்வுகளை சுடச்சுட முன்வைப்பதிலும்,இந்திய தேசத்தின் சமூக அரசியல் நிலைகளை அலசுவதிலும் ,நகைச்சுவை உணர்விலும் ,சமயோசிதத அறிவிலும் வல்லமையைக் காட்டிய அந்த பேராளுமையை நேரில் பார்க்கிற காட்சி இன்னும் எனக்குள் நம்பமறுக்கும் நினைவுச் சூறாவளியை ஏற்படுத்துகிறது.ஸ்ரீஜியைப் பார்த்து நானும் புன்னகைக்கிறேன்.



'இவர்த எனக்கு ,முகநூலில் நல்ல தமிழில் சிறப்பான பதிவுகளை பதிய தூண்டுதலாக இருந்தவர்' என்று அருகிலிருந்த தோழமைகளிடம் என்னை பற்றி பெருந்தகைமையோடு எடுத்துச் சொல்லி என்னை கெளரவித்தார்.ஏசியின் அளவு திடீரென அடர்த்தியானத்தை அந்த வினாடியில் உணரலானேன்.அந்த பாதிப்பிற்கு உங்கள் பதிவுகளே காரணம் என்று நான் அவரது பாராட்டை அவரிடமே திருப்பித்தர முயற்சிக்கிறேன்.மறுக்கிறார்.நெகிழ்கிறேன்..மற்றவர்களும்.



மிருதங்கத்தில் உலகறிந்த கலைஞராக உச்சாணிக்கொம்பில் ஏறி அமர்ந்து ஆசிய நாட்டில் பெருமையை அகில உலகிற்கே உணர்த்திக்கொண்டிருக்கும் ஸ்ரீஜியின் கலைஞானமும், செழிப்பான செல்வமும், மெத்தப்படித்த மேதமையும் கொண்ட ஒரு பேராளுமை மிக சாதாரணமாக என் முன்னே அமர்ந்திருந்த காட்சி என்னை இன்னும் ஒருமுறை மெய்சிலிர்க்கவே செய்தது .ஒரு ஜென் துறவியைப் போல அமைதியாக காட்சியளித்துக்கொண்டே கடினமான ஞான பாடத்தை நடத்திக்கொண்டிருந்தார்.பார்க்கிறேன் படிக்கிறேன் கற்றுக்கொள்கிறேன் ...இப்படியாய் எல்லாம் நடக்கிறது.



வெளிச்சங்களால் நனைந்துகொண்டிருக்கும் அந்த ஆப்ப கடையின் எல்லா திசைகளிலும் சில மெளன இடைவெளிகளில் கண்களை வட்டமிடுகிறேன்.குடும்பத்துடன் கொத்துகொத்தாக வந்து அவரவர்களுக்கென மேசைகளை ஆக்கிரமித்துக்கொண்டு வகைவகையாய் சுவைத்துக்கொண்டிருக்கிறார்கள்.சிலர் ஆர்டர் செய்துவிட்டு வெகுநேரம் காத்திருப்பது விரக்தி வியாபித்த அவர்களின் முகத்தில் தெரிகிறது.



சிலர் அந்த காத்திருப்பில் கலகலப்பாய் ஏதோ பேசிக்கொள்கிறார்கள். இன்னும் சிலர் உள்ளே நுழைந்து காலி இருக்கைகளில் கண்களை ஓடவிட்டு ஏமாற்றத்தோடு வெளியேறுகிறார்கள்.பரிமாறுவதற்காகவும் ,ஆர்டர் எடுப்பதற்காகவும் வடக்கத்திய பெண்களும் ஆண்களும் எல்லா இருக்கைகளுக்கும் சென்று பணிவோடும் மரியாதையோடும் ஏதோ ரகசியம் பேசுவைதைப் போல பேசி நகர்கிறார்கள்.இறுதியாய் எங்கள் மேசை அவர்களால் உளவு பார்க்கப்படுகிறது.



இன்னும் வரவேண்டியவர்கள் வந்து இணைத்துகொள்ளட்டும் அதுவரையில் நாம் ஏதாவது ஆர்டர் செய்து தொடங்கலாமே என்று கூட்டத்தில் யாரோ ஒருவர் கேட்க ,ஸ்ரீஜியில் விருந்தோம்பல் தொடங்குகிறது.அவர் கேட்ட முதல் கேள்வி வெகுநேரம் அங்கு பட்டிமன்றத்தை ஏற்படுத்தவில்லை.சைவமா? அசைவமா?என்பதுதான் அது.ஸ்ரீஜியில் தீர்ப்பு வாதம் தொடங்குவதற்கு முன்பே சொல்லப்பட்டதால் அந்த இரண்டும் கலந்த உணவுக்கலவைகள் மேசையை அலங்கரிக்கின்றன.டொமேடோ சூப்பில் தொடங்கி சில்லி கோபி பிஷ் பிரை மஸ்ரூம் பிரை வெஜிடபுள் கட்லெட் என்று முதல்கட்ட பதார்த்தங்கள் வந்து சேருகின்றன.இப்போது மேஜையில் கைவைப்பதற்கு இடமில்லை.



ஆனால் எனக்கு உணவைவிட உரையாடல் பிரதானமாக தெரிந்தது.பேசிக்கொண்டே அசைபோட்டோம் உணவையும் உணர்வையும்.ஒரு கேள்வியை ஸ்ரீஜியின் மீது வீசிவிட்டு அவரின் நூறு பதிலுக்காக எதிர்ப்பார்த்திருந்தேன். என் எதிர்ப்பார்ப்பை கொஞ்சம் கொஞ்சமாக பூர்த்தி செய்கிறார்.

சூடான சமையலையும் சுவையான விவாதத்தையும் கலந்தடித்துக்கொண்டிருந்த நேரத்தில் தான் எல்லோரும் கண்ணாடி சாளரத்தை திரும்பிப்பார்த்து விழியுயர்த்தி வரவேற்கிறார்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக