சனி, 30 ஏப்ரல், 2011

புலி மைதானம் (சிறுகதை )

வெயில் நுழைய முடியாத அளவிற்கு அடர்ந்து ஓங்கி வளர்ந்திருந்த மரகத சோலைகளுக்கு நடுவே அந்த அழகிய மலைகிராமம்.கண்ணுக்கு எட்டும் தொலைவெல்லாம் மலைகள் மலைகள் மலைகள். மலைகளைத் தவிர வேறு எதுவுமில்லை.எல்லோரும் மேகத்தை நிமிர்ந்து பார்ப்பார்கள் ஆனால் மேகங்கள் கழுத்து வலிக்க இவர்களை ஏறிட்டு பார்க்கும். அந்த அளவிற்கு இவர்கள் உயரத்தில் இருப்பது எப்போதும் இவர்களுக்கு ஆச்சர்யத்தையும் பெருமிதமுமான உணர்வையும் ஏற்படுத்திக் கொண்டே இருக்கும்.



நாகரீகங்களின் பாதிப்புகளிலிருந்தும் இந்த பிரதேசம் விலகியே இருந்திருக்கிறது.காரணம் சமவெளிக்கும் இவர்களுக்குமான தூரம் அதிகம். இயற்கையோடு இயற்கையாக கலந்த அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழும் அனைவருமே உழைப்பாளிகள். எல்லோரும் நாள் தவறாமல் வேலைக்கு சென்றுவிடுவதால் வாரத்தின் அனைத்து நாட்களும் வெறிச்சோடி அனாதையாய் கிடக்கும் அந்த தெருக்கள்.வாரத்தின் விடுமுறை நாட்கள் மட்டும் குழந்தைகளால் களைகட்டும்.



பெரியவர்கள் நோய்வாய்ப்பட்டவர்கள் பெண்கள் யாரும் சகஜமாய் உலவமுடியாதவாறு வாசல்களும் வீதியும் அடைக்க சிறுவர்கள் விளையாடுவது இயல்பானதுதான்.குழந்தைகள் தரும் இந்த இடையூறுகளை எப்போதும் இவர்கள் சுமையாக நினைத்ததே இல்லை.விதவிதமான விளையாட்டுக்களுக்கு பஞ்சமில்லை.



சிறார்களில் சிலர் பல் விளக்காமல் கோடாரியால் பிளக்கப்பட்ட மரக்கட்டை ஒன்றை பெட்டாக சுழற்றிக்கொண்டு வருவார்கள்.சிலர் பந்துகளுடன் ஆயத்தமாவார்கள்.ரப்பர் பந்து, பிளாஸ்டிக் பந்து,துணிப்பந்து,என்று இன்னும் நிறைய பந்துகள் சேர்ந்துவிடும்.



'டே இப்படியே ஓடிப்போனா ஒதேபடுவே,ஒழுங்கா சாபிட்டுட்டு போ' 'டே பல்லெ விளக்கிட்டு போடா, இல்லேன்னா பூச்சி ஊ வாயே தின்னுபோடும்' 'தம்பி..! முழு டவுசர் போட்டுட்டு போடா,முள்ளுச்செடி கீறும்' ' டே இவனே...! ஊ கால்சட்டை கிழிஞ்சிருக்குடா ,எல்லோரும் ஏசுவாங்க மாத்திட்டு போ' ' சாப்பிட்டு தண்ணி குடிக்காமே அப்படி என்ன அவசரம்,ஒழுங்கா தண்ணிகுடி' இப்படியாய் தங்கள் வேலைகளை செய்துகொண்டே பிள்ளைகளுக்கு தாயும் தந்தையும் படுத்தி படுத்தி சொன்ன எந்த குறிப்பையும் எந்த குழந்தையும் காதில் போட்டிருக்கொள்ளவில்லை.



நான்கைந்து பேராக இருந்தால் வீதியில்தான் தங்கள் விளையாட்டு சாகசத்தைக் காட்டுவார்கள். இப்போது சுமார் இருபது குழந்தைகள் குழுமிக்கொண்டார்கள். .கிழவிகளின் கூன் முதுகுகளை இவர்கள் அடித்த பல சிக்சர்கள் பதம் பார்க்க உதைவாங்கிய ஞாபகங்களும் பலமுறை.சன்னல் கண்ணாடிகளை உடைத்து வதைபட்ட நினைவுகளும் வர ஏகதேசமாய் முடிவுசெய்தார்கள்.இனி இவர்களின் விளையாக்கு களம் அந்த புலிமைதானம் என்று முடிவானது.



பெரிய அண்ணன்மார்கள் அந்த மைதானத்தில் விளையாடும் போதெல்லாம் தங்களை அங்கு வரக்கூடாது என்று ஏன் தவிர்த்தார்கள் என்ற ரகசியம் இவர்களைக் குடைந்துகொண்டே இருந்திருக்கக் கூடும். ஒருசமயம் அப்படி அவர்கள் விளையாடிக்கொண்டிருக்கும் போதே பாதியில் விளையாட்டை நிறுத்திவிட்டு ஓடிவந்தது இவர்களுக்குள் சில சந்தேகங்களையும் குழப்பங்களையும் எற்படுத்தியே இருக்கிறது.ஒரு சரிவில் இறங்கி ஒரு மேட்டில் ஏறினால்தான் அந்த மைதானத்திற்கு செல்லமுடியும்.சுற்றிலும் முட்புதர்களால் ஆனா ஒரு குட்டி மைதானம். அங்கு விளையாடியே ஆகவேண்டும் என்று தீர்மானமாய் முடிவெடுத்தார்கள்.பலமுறை முயற்சி செய்து முடியாத அந்த ஏக்கத்தை அன்று நிறைவேற்றவேண்டும் என்று முடிவெடுத்தார்கள்.



சிரிப்பும் கும்மாளமுமாக வீராவேசத்தோடு கிளம்பிய அந்த சிறார்பட்டாளம் அந்த பள்ளத்தாக்கில் பலவற்றையும் பேசிக்கொண்டே இறங்கியது.இனி மூச்சிரைக்க ஒரு மேட்டைக்கடக்கவேண்டும்.'ஊஸ் புஷ் ஊஸ் புஷ்' என்று நுரையீரல் சேர்ந்திசையை கேட்டுக்கொண்டே முன்னேறிக்கொண்டிருக்கும் போதுதான் கூட்டத்தில் ஒருவன் கிளியை கிளப்பினான்.



எத்தனை ஓவர் வீசவேண்டும்,யார் யார் எந்த அணியில் இருக்கவேண்டும் என்று அவர்களுக்குள்ளாக விவாதித்தபடி ஏறிக்கொண்டிருந்த அந்த நிமிடத்தில் 'டே என்னோட அண்ணே ஒருநாள் இங்கே விளையாட வந்தப்ப புலி வந்துருச்சாம்.' என்று ஒரு சிறுவன் சொன்னதும் கூட்டம் அதிர்ந்து அந்த இடத்திலேயே நின்றது. அதில் ஒருவன் 'ஐயோ புலியா.. நா வரலப்பா' தட்டுத் தடுமாறி செத்தே பொழசேன்னு ஓட்டமெடுத்தான்.அந்த அதிர்வில் மூன்று நான்கு சிறார்களும் அழுதபடியே சிதறி ஓடினார்கள்.



மீதம் இருப்பவர்கள் பீதியில் உறைந்துபோய் இருந்த போதுதான் 'டே அவன் புளுகுறாண்டா,பயந்தான்கொள்ளி,புளுகுமூட்டே'என்று ஒருவன் வசைபாடினான்.பயந்து போய் இருந்த அவர்களின் அச்சத்தை இந்த பதில் துடைத்தெறிந்தது.இப்போது அனைவருமே மனபயம் நீங்கி புலி மைதானம் முன்னேறினார்கள்.அந்த மேட்டில் இயற்கைக்கு வகிடு எடுத்தாற்போல ஒத்தையடி பாதையில் இருபுறமும் தங்களை கிள்ளி கீறிக்கொண்டிருந்த புதர் செடிகளை விலக்கிக்கொண்டு ஒரு வழியாக புலிமைதானத்தை வந்து சேர்ந்தார்கள்



இவர்கள் மைதானத்தில் கால்வைத்ததும் மகிழ்ச்சி ஊற்றேடுத்தாலும் உள்மனதில் பயம் லேசாக கசிந்துகொண்டுதான் இருந்தது.இருந்த போதிலும் திட்டமிட்டபடி விளையாட்டு தொடர்ந்தது.ஒரு குண்டு சிறுவன் அடித்த ஒரு பந்து ஆகாயத்தில் பறந்து சென்று புதருக்குள் விழ 'சிக்சர்' என்று ஆரவாரித்த கூட்டம் தொலைந்த பந்தை தேட ஆயத்தமானது.புதருக்குள் உடம்பை குறுக்கி குனிந்துகொண்டு நிழல்களில் இருட்டில் தேடும் போதுதான் எல்லோருக்கும் புலிஞாபகம் வந்தது.பந்து கிடைக்காத வெறுப்பும் புலியின் பயமும் கலவையாய்த் தொற்றிக்கொள்ள அந்த குளிர் உலகத்திலும் கூட எல்லா சிறுவர்களும் வியர்க்கத்தார்கள்.



தேடுதல் வேட்டையில், நிசப்தமாய் தேடிக்கொண்டிருக்கும் இடத்திற்கு அருகில் ஒரு குட்டைமரமொன்று அசையவே ரகசியமான மெல்லியகுரலில் 'டே...அங்கே பாருங்கடா...மரம் ஆடுது...புலியா இருக்குமோ...?பயமா இருக்குடா..அவன் சொன்னது உணமைதா போலிருக்கே.. இவனே நம்பி வந்தோம் பாரு...நீதா புளுகு மூட்டை ..' இப்படியாய் புலி இல்லை என்று ஆறுதல் சொல்லி அழைத்துவந்த அந்த சிறுவன் நன்றாக அனைவருது வசையை வாங்கிக்கொண்டிருந்த போதுதான் குபீரென புதருக்குள்ளிருந்து ஆவேசமாய் வெளிப்பட்டது ஒரு குரங்கு.ஒரு நிமிடம் இதயம் நின்று துடிக்க கண்களை பயத்தில் மூடிக்கொண்டிருந்த அனைவரும் மெதுவாக திறந்தபோது அந்த குரங்கினை அவர்களால் ஆறுதலாய் பார்க்கமுடிந்தது.



மீண்டும் விளையாட்டு களைகட்டியது. பாதியிலேயே பயந்து ஓடி வீட்டை அடைந்த அந்த சில சிறார்கள் இவர்கள் ஆனந்தமாய் விளையாடிக்கொண்டிருப்பதை ஏக்கமாய் மைதானத்தையே பார்த்துக்கொண்டிருப்பதை இவர்கள் கவனித்தார்கள். .'தேவையா...பேசாமே வந்திருக்கலாமில்லே..பயந்தாகொள்ளிங்கே' .கிண்டலடித்தார்கள். 'ஈ ஓ ஊ ஆ ...;என்று உச்சதாயத்தில் தங்களின் கேலியைத் தெரிவித்தார்கள்.



அன்றிலிருந்து பயமில்லாமல் அவர்களும் மற்ற சிறுவர்களும் அந்த புலிமைதானத்தில் பயம் இல்லாமல் வாரம் தோறும் தவறாமல் விளையாடிவருகிறார்கள்.ஆனால் உண்மையில் அந்த மைதானத்திற்கு புலி வந்து போவது வழக்கம் என்பதை அந்த சிறார்கள் அறியாமலே இருக்கட்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக