சனி, 30 ஏப்ரல், 2011

எண்ணைகட்டி(சிறுகதை)

இயற்கை சிம்மாசம் இட்டு மரியாதை செய்ததைப் போல எழிலாய் நிமிர்ந்து நிற்கும் அந்த மலை கிராமத்தில், ஒரு சிகரத்தின் இடுப்பில் குழந்தையாய் அந்த ஊர் பசுமைகளுக்கிடையே அழகாய் காட்சிதருகிறது. விடுமுறை வந்துவிட்டால் போதும் இனிய சிறார்களின் கள்ளம்கபடமில்லா விளையாட்டில் உள்ளம் மகிழ இன்னும் அழகாகத்தெரியும் அந்த ரம்மிய கிராமம்.



தொடர்வண்டியைப் போல நீளமான நகராத தெருக்கள்.எப்போதும் நகர்ந்துகொண்டே இருக்கும் பயணிகளைப் போல குழந்தைகள்.ஒரு ஞாயிறு ஒன்றில் விளையாடுவதற்கான திட்டங்களை தெருவின் மூலையில் ரகசியமாய் போட்டார்கள்.கூச்சல் குழப்பங்களுக்கிடையே சில முடிவுகளும் சில சூளுரைகளும் எழுந்து ஓய்ந்தன.எதோ முடிவுக்கு வந்ததாக கூட்டம் கலைந்தது.



சட்டென வீட்டிற்குள் தொலைந்தவர்கள் ஒருவர்பின் ஒருவராக வெளியேறினார்கள்.எம்பிக்கொண்டே இருக்கும் ரப்பர் பந்தை தரையில் மோதவிட்டுக்கொண்டே ஒருவன் வெளியில் வந்து தன் வேடிக்கையைக் காட்டினான்,மற்றொரு சிறுவன் பிளாஸ்ட்டிக் பந்து ஒன்றை ஆகாயத்திற்கும் தனக்குமாக விழாதவாறு கவனமாக தட்டிக்கொண்டே வந்து சேர்ந்தான்.இப்படியாய் ஒவ்வொருவரும் பல விளையாட்டு சாமான்களோடு வந்து குழுமினர்.இப்போது எந்த விளையாட்டை விளையாடுவது என்ற குழப்பம் ஆரவாரமாக எழுந்து ஓய்ந்தது.



அனல்பறக்கும் விவாதங்களுக்கு இறுதியில் , பள்ளத்தாக்கு புல்வெளியில் மரப்பலகையில் சருக்கிவிளையாடுவது என்ற முடிவுக்கு ஒருவழியாக வந்தார்கள்.ஊரின் எல்லையில் கோடை வெயிலில் காய்ந்து மஞ்சள் நிறமாய் இருக்கும் சரிவுப் புல்வெளிதான் அது. ஒவ்வொருவருடமும் பள்ளி விடுமுறை நாட்களில் குழந்தைகள் அனைவரும் அங்கு சறுக்கி விளையாடுவது வழக்கம்.



சருக்குவதற்கு பெரும்பாலும் வீட்டில் மரவேலை செய்து மீதமிருக்கும் பலகைகளை பயன்படுத்துவதுவார்கள். இந்த கோடையில் யாருடைய வீட்டிலும் மரவேலைப்பாடுகள் நடைபெறாததால் சறுக்கி விளையாட பலகைகளை தேடி அலைந்த நேரத்தில் ஒரு சிறுவன் கொடுத்த யோசனையின் பேரில் மாட்டுக் கொட்டகையில் நிலையில் கதவைப் போல அடைப்பதற்காக பயன்படுத்தும் பலகையை உபயோகிப்பது என்று முடிவுசெய்தார்கள்.



பசுமாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துப்போகும் நேரத்திற்காக காத்திருந்த அந்த சிறுவர்கள்,சரியான ஒரு சமயத்தில் உரிமையாளருக்குத் தெரியாமல் ஒன்றரையடி அகலமும் ஐந்தடி நீளமும் இரண்டு அங்குல தடிமனும் கொண்ட ஒரு பலகையை கொட்டகையிலிருந்து தங்கள் தலைக்குமேல் வைத்து கடத்திக்கொண்டு ஒருவழியாக சறுக்கும் சரிவுப்புல்வெளிக்கு வந்து சேர்ந்தார்கள்.



மலைபிரதேசத்தில் பனியில் ஈரம் காய்வதற்கு இன்னும் அரைமணிநேரம் இருந்தது.உணர்ச்சிவசப்பட்டிருந்தால் அந்த காலைநேர ஈரப்பனியில் சறுக்கும் முயற்சி அவர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்திருக்கும். எனவேதான் அனைவரும் பொறுமையோடு இருந்தார்கள். அந்த கூட்டத்தில் .'டே வெயிலுலே ஈரம் காஞ்சி புல்லு சூடானாதான் சறுக்குபலகை வேகமா போகும்.' என்று ஒருவன் ஒரு யோசனை சொன்னான். சற்று யோசித்துவிட்டு அனுபவசாலியைப்போல 'இன்னொரு இடியா சொல்லட்டா'என்று அனைவரையில் அவனே இன்ப அதர்ச்சியில் ஆழ்த்தினான்





'டே சறுக்கு பலகையோட அடியிலே தேங்கா எண்ணையே தேச்சென்னு வச்சுக்கோ சும்மா தீயா பறக்குமடா' யோசனை பலமாக இருந்ததை அறிந்து ஆதங்கத்தோடு இன்னொரு சிறுவன் கேட்டான்'சரி இப்ப எண்ணைக்கு எங்கே போறதுடா'என்ற கேள்வியை எழுப்பி எல்லோரையும் ஏங்க வைத்தான். எல்லோரும் வாயில் விரலைவைத்துக்கொண்டும் , பக்கவாட்டுத் தலையை சொரிந்துகொண்டும் யோசிப்பதற்கான குறிப்புகளைக் காட்டிக்கொண்டிருந்தார்கள்.



'இதோ பாருங்கடா! எங்க வீட்லே அப்பாவும் அம்மாவும் டவுனுக்கு போயிருக்காங்க.இப்ப நா போனா திட்டும் ஒதையும் விழாது . நா போயி கொண்டு வர்றேன்' என்று சொல்லிக்கொண்டே தன் நண்பன் ஒருவனையும் துணைக்கு அழைத்துக்கொண்டு ஓடினான்.





தாழிடப்பட்டு பூட்டப்படாமலே இருக்கும் வழக்கமான அவனது வீட்டுக்குள் நுழைந்து தேங்காய் எண்ணை டப்பியை எடுத்தான்.அதன் மேல் மூடியை ஒரு ஆணையின் துணைக்கொண்டு இரண்டுபேரின் பலத்தால் திறந்துவைத்தார்கள். வந்தவன் கண்களால் ஆச்சர்யப்பட்டு நாசியால் அந்த ரம்மிய நறுமணத்தை நுரையீரல் முழுக்க நிரப்பிக்கொண்டிருந்தான்.,இடதுபுறமாக அந்த சிலிண்டர் வடிவில் இருந்த கையடக்க அலுமினிய டின்னை சாய்த்து எண்ணை வழிகிறதா என்பதை உறுதி செய்வதற்காக அவனும் அவனது நண்பனும் காத்திருந்தனர்.எண்ணை வந்த பாடில்லை.லேசான வெளிச்சத்தில் பார்த்த அவர்களுக்கு திரவமாக இல்லாமல் உறைந்து வெள்ளை வெளேரென்று கட்டிப்பட்டபடி காட்சிதந்த அந்த பொருள் தேங்காய் எண்ணைதானா என்ற குழப்பத்தை எற்படுத்தவே செய்தது.





'டே இது எண்ணை இல்லேடா வேறே ஏதோ.எண்ணை தண்ணிமாதிரி தானே இருக்கும்.இது என்ன கெட்டியா வெள்ளையா இருக்கு,நீ ஏதோ ஒண்ணே தரந்துட்டே போலிருக்கு ,இப்ப என்னடா செய்றது ' துணைக்கு வந்த சிறுவனின் புலம்பல் அவனை இன்னும் சிந்திக்க வைத்தது.'அப்பா எப்பவும் குளிச்சிட்டு இதிலிருந்துதா எடுத்து தலையிலே போடுவாருடா,அம்மா கூட சனிக்கிழமே இதிலிருந்தா எடுக்கும், நா எத்தனையோ டைம் பாத்திருக்கேன்'



சோதனை முயற்சியில் முதல் நிலையாக அவன் தனது வலது கையை அந்த டப்பிக்குள் நுழைத்தான்,வழுவழுப்பாய் இருந்ததை உணர்ந்தபடியே கொஞ்சம் எடுத்தான் உள்ளங்கையில் அள்ளிய அந்த இறுகிப்போன எண்ணைக்கட்டி மெல்ல உருக ஆரம்பித்தது.அந்த அதிசயத்தை இருவரும் கண்கொட்டாமல் ரசித்தபடியே இருந்தனர்.இவருடைய புலனாய்வு வெற்றியை தந்த சந்தோசத்தில் ஆளுக்கு ஒரு கையாக அள்ளிக்கொண்டு ஓடினார்கள்.





அவ்வளவு கவனமாக எடுத்துவரப்பட்ட எண்ணைக்கட்டி சறுக்கு புல்வெளியை அடைந்ததும் அனைவரது மனதிலும் பரவசம் மலர்ந்தது.உடனே அந்த பலகை தலைக்கீழாய் கவிழ்க்கப்பட்டது.இரண்டு சிறுவர்களும் ஒழுகியது போக மீதமிருந்த எண்ணையை பலகையில் பக்கவாட்டு முழுக்க தேக்க ஆரம்பித்தார்கள். அனைவரும் ஆளுக்கு ஒரு கையை நீட்டி வலிக்கும் பலகைக்கு காலமுக்கி விடுவதைப்போல தடவிவிட்டார்கள்.



இப்பொழுது சறுக்கும் பலகை முழுக்க எண்ணைப்பரவி இருந்தது.வெயிலும் தன் வெப்பத்தால் புல்வெளியை மிருதுவாக்கி இருந்தது.அவர்களின் பயணம் தயாராகி விட்டது.மொத்தம் ஐந்துபேர்.ஒரு சமயத்தில் அந்த பலகையில் மூன்றுபேர் மட்டுமே பயணப்படமுடியும் என்பதால் முதலில் மூவர் ஏறிக்கொண்டனர்.முட்டிப்பகுதியை பிரமிடைப் போல மடக்கி குவியலாக வைத்துக்கொண்டு ஒருவர் பின் ஒருவராக அந்த சறுக்கும் பலகையில் அமர்ந்திருந்த வேளை அவர்களுக்குள் மகிழ்வையும் பயத்தையும் மாறிமாறி தந்துகொண்டே இருந்தது.





கீழ்நோக்கி சரிவில் பாய்வதற்கு மனத்தால் தங்களை தயார்செய்துகொண்ட சிறுவர்கள் மூவரும், ஒருவரது கால்களை மற்றவைகள் சங்கிலியாய் பிடித்துக்கொண்டு தயாராகிவிட்டனர்.அந்த சறுக்கு பலகை மிருதுவாய் நகரத்தொடங்கிய சிலவினாடிகளில் புதுவிதமான உணர்வை தங்கள் வயிற்றுப் பகுதியில் உணர்ந்தவர்களாய் ஆனந்தத்தையும் பயத்தையும் சரிவிகிதமாக கலந்த கலவையைப் போன்ற ஒரு விதமான சப்தத்தை நீள எழுப்பிக்கொண்டு 'ஆ ஆ ஊ ஊ ஈ ஈ ஏ ஏ' குதுகலித்த அந்த மூவரையும் அந்த சறுக்கு பலகை சரிவின் கீழ் தளத்திற்கு சிலநிமிடங்களில் அழைத்துச் சென்றது.



இப்போது அந்த பலகையை மீண்டும் தொடங்கிய மேல் முகட்டிற்கு கொண்டுவரவேண்டும். அந்த மூவரும் சுமைதாங்கியை தலையில் சுமப்பதைப் போல தங்கள் தலைக்குமேல் வைத்து நிழலையும் போர்த்திக்கொண்டு மூச்சிரைக்க மேலே வந்து சேர்த்தார்கள். அடுத்த பயணத்திற்காய் மீதமிருந்த இருவர் ஆனந்தத்தோடு ஆயத்தமானார்கள்.அதற்குள்ளாக இன்னொருவன் தனது பயணம் முந்தய பயணத்தைவிட வேகமா இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டு வீட்டிற்கு போய் இவனைப் போலவே தேங்காய் எண்ணையை உள்ளங்கைகளில் அள்ளிவராமல்,தன் தலைமுடியில் வழியவழிய தேய்த்துவந்திருக்கிறான்..



முகமெல்லாம் எண்ணை வடிய இப்படியாய் வெயில் சாயும் வரை அந்த சிறுவர்கள் சருக்கிவிளையாடிக்கொண்டே இருந்தார்கள். தேங்காய் எண்ணை விலை உயர்ந்தது என்பதை அவர்கள் அறியாமலே இருந்துவிட்டுபோகட்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக