சனி, 26 ஜூன், 2010

உலகத் தமிழர்களின் உன்னத திருவிழா -25 ஜூன்

நட்சத்திரங்கள் உதிர்ந்து விழுந்திருந்த பூமிக் கிரகமாய் இரவுநேரத்து சாலை விளக்குகள் வெளிச்சங்களை பூசிக்கொண்டே இருந்ததால் கருத்த இரவு கூட வெளுத்த பகலாகவே காட்சி தந்தது. தெய்வத் தமிழுக்கு கும்பாபிசேகம் நடைபெறுவதாகவே கருதி தாய்த் தமிழின் மீது பக்தி பரவசம் மேலிட்ட பக்தர்களை போல மக்கள் உணர்வு மேலிடப்பட்டதாய் உணர்ந்தேன். அரசியலுக்கு அப்பாற்பட்டு குடும்பம் குடும்பமாக கூட்டம் கூட்டமாக அணிதிரண்டு வந்தது மக்கள் மெய்சிலிர்ப்பை ஏற்படுத்தவே செய்தனர்.

எல்லோரின் முகத்திலும் சந்தேசமும் உற்சாகமும் மிகையாகவே தென்பட்டது. ஆர்வம் என்ற எண்ணை ஊற்றப்பட்டு மொழி உணர்வு என்னும் தீக்குச்சி கிழிக்கப்பட்டதால் ஒவ்வொரு தமிழனும் குன்றிலிட்ட விளக்காய்
மிளிர்வதை கண்களால் கண்டு களித்தேன்.இருட்டை கொன்ற வெளிச்ச வீரர்களாய் நெஞ்சை நிமிர்த்தி நின்றிருந்தன மின்கம்பங்கள் .பால் வெளிச்சத்தில் நனைத்த படி வீடு திரும்பினேன் .தமிழ் கனவுகள் விழித்திரையில் இரவுக்காட்சியாய் விரிந்தது விடிந்தது

சூரியன் எல்லைக்குள் நுழைவதற்கு முன்பாகவே மாநாட்டு பரபரப்பில் பீளமேடுசாலையில் காற்றை கிழித்தபடி இரண்டுசக்கரத்தில் பறந்தேன். கொடிசியா வளாகம் வழக்கம் போல வரவேற்று நின்றது. சாலையில் இருபுறமும் வியாபாரிகள் வழிநெடுக கடைவிரித்திருந்ததும் பல நூறு ஏக்கர் பரப்பிலான களத்தில் வெள்ளை வெள்ளையாய் ஆடையணிந்து கோடி புறாக்கள் குழுமியதைப் போல காட்சி தந்ததும் எனக்கு பட்டினப்பாலையில் கடற்கரை காட்சி நினைவிற்கு வந்தது.கொடுத்தலும் பெறுதலும் இடைவிடாது நடந்துகொண்டே இருந்தது

இரும்புத்தூண்கள் காக்கிசட்டை அணிதிருக்கின்றனவா? என்று சொல்லும் அளவிற்கு வாசலில் கண்ணியம் மிக்க காவல் துறை விழிப்பு நிலையில் இருந்தது. அதில் ஒரு கரம் எனது வாகனத்தை கைகளால் மறிக்கவே ஏன் அடையாள அட்டையை காட்டியது மரியாதையோடு நான் அனுமதிக்கப்பட்டேன்.இரு புறமும் மக்கள் நுழைந்த வாரும் விடைபெற்றவாரும் இருந்தனர்.முதல் பரிதனையில் இருந்து விடை பெற்ற எனக்கு அடுத்த பரிசோதனை காத்திருந்தது. அதையும் தாண்டி கம்பீரத்தோடு நடைபோட்டி கபிலர் அரங்கம் சென்று சேர்ந்த போது நேரம் எட்டு மணி ஆகியிருந்தது.

ஆய்வரங்கத்தின் கண்ணாடி வாசலில் என் முகத்தை பார்த்து முடி திருத்தியபடி நுழைய சில்லென்ற குளிரூட்டப்பட்ட செயற்கை காற்று பனிக்காலத்து பருவநிலையை நினைவுப்படுத்தியது. பத்து திரை அரங்குகளை சேர்த்தால் என்ன பரப்பு இருக்குமே அந்த அளவிற்கு விரிந்திருந்த அரங்கில் உள்ளூர் பேரறிஞர் பெருமக்களும் அயல் நாட்டு தமிழ் அறிஞர்களும் ஆங்காங்கே அமர்ந்தபடி மகிழ்வாய் மலர்ந்த முகத்துடன் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்வதும் அளவளாவுதலும் ஆக இருந்தனர்.ஒரு புறம் குடிநீர் தேநீர் தின்பண்ட பிரிவுகள் எல்லா நேரமும் விருந்தோம்பிக்கொண்டே இருந்தன.செவிக்குணவும் வயிற்றிற்கு உணவும் கணிசமாகவே கிடைக்கும் அன்னைத் தமிழின் அமுதத் திருவிழா கோலம் பரவசம் ஊட்டியது

இருபத்தி மூன்று ஆய்வரங்க அறைகளில் எங்கள் கபிலர் அறை மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று முன்னதாகவே அமைப்பாளர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். அதை நிரூபிக்கும் வகையில் தமிழிலக்கிய உலகில் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திய பேராளர்கள் ஒவ்வொரு அமர்வையும் அலங்கரித்தார்கள். இன்றைய அரங்கில் கல்வெட்டு குறித்த ஐந்து கட்டுரைகள் நோக்கர்களுக்கு புதிய விருந்தாக இருந்தது என்றால் அது மிகையல்ல ,நானும் தெரியாத நிறைய தகல்வல்களை தெரிந்துகொள்ள முடிந்தது. கல்வெட்டியலில் சிறந்த ஆய்வாளர்களாக திகழும் திரு ஐராவதம் மகாதேவன் அவர்கள் இந்த குறிப்பிட்ட அமர்வுக்கு தலைவராக இருந்து நல்ல பதிவை ஏற்படுத்தினார்.சூடான சுவையான விவாதங்கள் வரலாற்றுப் பின்னணியில் எழுந்தன எழுத அனைத்து வினாக்களுக்கும் சரியான பதில்கள் விழுந்தன.

இலக்கியம் சார்ந்த அமர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது சுகவீனப்பட்டிருப்பவர்கள் அழைத்து வரப்படும் தள்ளுந்தில் ஒருவர் அழைத்து வரப்பட்டார். அவசரத்தில் வரவேற்றுவிட்டு உற்று பார்த்தபோதுதான் தெரிந்தது. அவர் ஈழத் தமிழறிஞர் வணக்கத்திற்கும் மரியாதைக்கும் உரிய திரு சிவத்தம்பி அவர்கள். . அவர்மீதிருந்த அன்பின் காரணமாக அருகில் சென்று மீண்டும் ஒரு முறை வணங்கி மகிந்தேன். கைகள் குவிய அவரின் முகம் மலர்ந்தது.விழிகளில் இமைகளை பாதி கவிழ்த்து கருத்தரங்கில் தன கவனத்தை குவித்தார்.இப்படியாக இருவர் இருவரல்ல உலகெங்கிலும் இருக்கும் தமிழ் பேரறிஞர்களை ஒரே கூரையில் கீழ் பார்க்கும் பாக்கியத்தை இந்த பிறவியில் நான் கிடைக்கப் பெற்றதற்காக நான் எல்லாம் வல்ல இயற்க்கைக்கு நன்றி கூறிக்கொண்டேன்.பெயர் தெரிந்த அறிஞர்கள் சிலர் முகம் தெரிந்த அறிஞர்கள் சில என்று எல்ல அறிகர்களில் நல்ல இலக்கியம் மற்றும் மொழி அதிர்வுகளை பெரும் பேரு பெற்றேன்.பொங்கும் மகிழ்வு உற்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக