ஞாயிறு, 13 ஜூன், 2010

இயக்குனர் சேரனுடன் ஒருநாள் -(பகுதி- 4)

புன்னகையின் ரேகைகள் ஏகமாய் பரவி இருந்த சேரனின் முகத்தில் பரபரப்பின் சுவடுகளை பார்க்க முடிந்ததில்லை.தன ஆட்காட்டி விரலால் பொத்தான் ஒன்றை அழுத்தினார் .அதன் மணியோசை கரைந்துபோகும் முன் உதவியாளர் திடீரென அவதரித்திருந்தார்.யாரோ ஒருவரின் பெயரை உச்சரித்துவிட்டு 'எங்கே' என்று கேட்டார். இந்த வினாவிலிருந்து சேரன் அடுத்த அலுவலுக்கு தயாராக இருப்பதை நான் யூகித்துக்கொண்டபடியே 'உங்களுடைய அரிய திரை நேரத்தில் இரண்டு மணிநேரத்தை திருடிக்கொண்டேன், உங்களை சந்தித்ததில் மெத்த மகிழ்ச்சி' என்று நன்றியின் மூலம் விடைபெறுவதற்கு உரிய குறிப்பை முன்வைத்தேன்.எனக்கும் உங்கள் சந்திப்பு மகிழ்வை ஏற்படுத்தியது என்று பதிலளித்து சேரன் புன்னகைத்தபோது உதவியாளர் ஒருவர் விரைந்து வந்து 'வந்தாச்சு சார்' என்று தகவலை சொல்லிவிட்டு நகர்ந்தார். சேரன் அலுவல் காரணமாக வெளியே கிளம்புகிறார் ,வாகனம் வந்திருக்ககூடும் என்று ஊகித்துக்கொண்டேன். என் இரண்டு ஊகங்களும் தவறானவை என்பதை 'சாப்பிடலாம் வாங்க மணி' என்று சேரன் அழைத்த போது அறிந்துகொண்டேன். மரியாதைக்காக மறுத்தேன்.பின் அன்பிற்காக சம்மதித்தேன்.உடனே நாங்கள் அமர்ந்திருந்த அலுவலக சிம்மாசனங்கள் காலியாகின. அடுத்த அறைக்குள் நகர்ந்தோம்.அந்த அறையின் மேற்கு திசையில் வலதுபுறமாக இருந்த கை கால் தூய்மைப்படுத்தும் அறைக்குள் நான் வழிகாட்டப்பட்டேன்.வெளியில் வந்ததும்.ருசிகர சமையலை கமகம நறுமணம் அறிவித்தது. அந்த அறையில் மூவர் அமரும் இலவம்பஞ்சு சோபாவின் இடது ஓரத்தின் நான் அமர்ந்துகொண்டேன்.சேரன் அருகிலுள்ள ஒற்றை சிம்மாசனத்தில் அமர்ந்துகொண்டார்.சேரனின் கண்ணசைப்பை புரிந்து கொண்டு இயங்கும் இனிய உதவியாளரிடமிருந்து வெள்ளைநிற பீங்கன் தட்டினை நாங்கள் இருவரும் வாங்கிக்கொண்டோம். சைவ பிரியாணி பரிமாறப்பட்டது.அதில் கண்ணை உறுத்திக்கொண்டிருந்த காய்கறிகளில் வண்ணங்களும் ,நெய்யா எண்ணையா என்று ஐயப்பாட்டை ஏற்படுத்தும் அளவில் இருந்த அதன் நறுமணத்தை நுரையீரல் முழுக்க நான் நிரப்பிக்கொண்டேன். பசியின் ஆதிக்கம் அதிகமாகி இருந்ததை அந்த வினாடியில் உணரமுடிந்தது. பழுப்பு நிறத்தில் உருண்டை உருண்டையாய் வருவலும் வழங்கப்பட்டது. தட்டின் ஒருபுறம் வெங்காயப் பச்சிடி மறுபுறம் கிழங்கு குருமா இன்னொருபுறம் வாழைக்காய் வற்றல் என்று பீங்கான் தட்டின் மொத்த பரப்பையும் முழுக்க ஆக்கிரமித்துகொண்டன. பழுப்புநிற வறுவலை சுவைக்க தொடங்கியதிலிருந்து முடிக்கும் வரை சில்லி கோபியா சில்லி சிக்கனா என்ற ஐயப்பாடு எனக்கு இருந்துகொண்டே இருந்தது. அவ்வளவு சுவையாய் இதமாய் இருந்தது. சைவ பிரியாணி எனது தட்டில் தீர்ந்திருந்தபோது வெள்ளை சாதம் வழங்குமாறு சொன்ன சேரனின் ஆணைக்கு உதவியாளரும் நானும் சம்மதிக்கக இரண்டாம் சுற்று தொடங்கியது. அடிக்கடி எனக்கு தேவையானவற்றை வழங்குமாறு மகிழ்வாய் ஆணையிட்டுகொண்டே இருந்தார். இதயப்பையும் இரைப்பையும் நிரம்பி இருந்த இறுதிக்கட்டம். இரண்டொரு நிமிடங்களுக்கு முன்னதாக உணவருந்தி முடித்திருந்த சேரன் நான் சாப்பிடும் வரை காத்திருந்தது அவரின் விருந்தோம்பல் பண்பை வெளிப்படுத்தியது. கைகளை சுத்தம் செய்வதற்காக அந்த அறைக்குள் சென்று வெளியேறும் வாசலில் கைகளின் ஈரத்தை துடைப்பதற்கான துண்டை தருவதற்காக அதன் வாசலில் காத்திருந்தார். உணவு முடித்து தமிழ், இனம், மொழி, கலை சார்ந்த விவாதங்களை மெல்லத்தொடங்கி ஒரு கட்டத்தில் முடித்து வைத்தோம்.இருவரும் விடைபெறும் நேரம்.ஒரு உதவியாளரை அழைத்து ஆட்டோவில் என்னை வழியனுப்பி வைக்குமாறு சொல்லி அனுப்பினார். பொங்கும் மகிழ்வுடனும் நட்பின் சிலாகிப்புடனும் தோழமையின் பேரானந்தத்துடனும் நன்றி சொல்லி விடை பெற்றேன்.

'அதிதி தேவோ பவ' என்று சொல்லிக்கேள்விப் பட்டிருக்கிறேன்.
அதை சேரனிடம் பழகி தெரிந்துகொண்டேன்.

"நல்ல மனம் வாழ்க
நாடு போற்ற வாழ்க"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக