செம்மொழி மாநாட்டில் குறிப்பிடத்தக்க ஒன்று எல்லோரின் கவனிப்புக்கு உள்ளானது. கொடிசிய அரங்கத்தில் பேசும் பேர் அறிஞர்கள் , அதன் எதிர்ப்புறத்திலோ பேசாத அறிஞர்களின் பேசும் புத்தகங்கள். ஆம் சி ஐ டி கல்லூரியின் மைதானத்திடலில் வரலாற்று காணாத பிரமாண்டமான புத்தக கண்காட்சி வாசக அன்பர்களுக்காக காத்திருந்தது.இலக்கிய தாகமுள்ள ,மொழி ஆர்வம் மிக்க புதிய தலைமுறை இளைஞர்களும் பழுத்த அறிஞர் பெருமக்களும் படையெடுத்த அறிவும் போர்க்களமாக புழுதி பறக்க தன்னை அடையாளபடுத்திக்கொண்டே இருந்தது.
பகல் பொழுதெல்லாம் ஆய்வரங்கம், கலைக்கூடம், பொது அரங்கம் என்று பார்த்தும் கேட்டும் மகிழ்கிற அன்பர்கள் பொன்மாலைப் பொழுதில் எதிர்ப்புறத்தில் உள்ள புத்தக காட்சியகத்திற்கு சென்று ஓய்வாய் அறிவைப் பருகலாம் என்று செல்லும் பலரும் சிரமங்களைப் பார்க்காமல் சீறிவரும் அலைக்கு எதிராக நீச்சலிடும் தன்மையைப்போல இருபுறமும் சூழ வருகிற நெரிசலை எதிர்கொண்டபடி வளைந்து நெளிந்து குனிந்து புகுந்து கடந்து என்னென்ன உத்திகளைப் பயன் படுத்தி மக்கள் வெள்ளத்திலிருந்து மீள முடியுமோ அதையெல்லாம் மேற்கொண்டு விரைவார்கள்.
பார்த்தோம் கேட்டோம் ரசித்தோம் என்று கொடிசிய வளாகத்திலிருந்து வெளியேறுகிற கூட்டம் எதிர்ப்புறத்தில் இருக்கும் புத்தக அரங்கங்க வளாகத்தில் மக்கள் கூட்டம் குறைவாக இருக்கும் என்றும் அங்கு சென்று இளைப்பாறிக் கொள்ளலாம் என்றும் கற்பனையோடு வரத்தான் செய்கிறார்கள். உண்மையில் நிலைமை வேறு. மாறாக புத்தக வளாகத்தில்தான் மக்கள் வெள்ளம் வடியாமல் தீராநதியாகவே இருக்கிறது என்பது முற்றிலும் உண்மை. இளைஞர்கள் வேடிக்கை பார்ப்பதற்காக அங்கு செல்வார்கள் என்று தவறான அபிப்பிராயம் வைத்திருந்த என் கருதுகோளை தகர்த்து எரிந்தது அவர்கள் சுமந்துவந்த புத்தகப் பொதிகள். மனதிற்குள் அவர்களுக்கு வணக்கம் சொல்லிக்கொண்டேன்.
எனது மூன்று நூல்களை பதிப்பித்து தந்த சீதை பதிப்பகத்திற்கு செல்வதற்காக நான் திட்டமிடும்போது தான் அந்த தொலைபேசி அழைப்பு வந்தது. எதிர்முனையில் அஜயன் பாலா. இரைச்சலுக்கிடையே இசைபோல் மென்மையாய் பேசிய அவரின் உரையாடலை அரைகுறையாய் புரிந்த தைரியத்தில் அவர் நின்றுகொண்டிருக்கும் இடம் நோக்கி நகர்ந்தேன்.வணக்கங்களை பரிமாறிக்கொண்டு முகப்புத்தாக பதிவுக்காக என்னை வாழ்த்தினார்.நானும் வாழ்த்தினேன். இருவரும் திட்டமிட்டு அட்சய கலசத்தில் அறிவுலக அமுதம் உண்ண கிளம்பினோம்.எனது இரு சககர வாகனம் பின்னால் அஜயன்.எதிரில் இருபுறமும் மக்கள் இடைவெளி இல்லாமல் வந்தவண்ணமாய் இருந்தார்கள்.தன்னந்தனி காட்டில் ஆயிரம் ஆயிர வேங்கை கூட்டத்திற்கிடையில் இரண்டு புள்ளி மான்களை எங்கள் இருவரின் நிலை இருந்தது. கூட்டத்தை கடக்க எந்த வாகனமும் அனுமதிக்கப்படவில்லை என்பதை முன்னால் இருக்கும் கண்ணாடி வழியாக பார்த்து தெரிந்து உறுதிப்படுத்திக் கொண்டேன். கிட்டத்தட்ட மக்கள் கூட்டத்தில் மோட்டார் சைக்கிள் வித்தைக்காரனைப் போல கிளைச் ஒன்றிலும் இரண்டிலும் மாற்றி மாற்றி இடது கைவலிக்க பயணப்பட நேர்ந்தது.
இப்படியாய் கை வலிகளோடு இரண்டு கிலோ மீட்டரை கடந்த அனந்த மகிழ்ச்சியில் மீதமிருந்த ஒரு கிலோமீட்டர் இருப்பு இன்னும் வலியை தர காத்திருந்தது. நல்ல வேலையாக அங்கு குறுக்கே வந்து நகரத் தொடங்கிய தண்ணீர் வண்டியின் நிழலில் ஒளிந்தபடியே சென்றதால் எல்லை வந்து சேர்ந்தோம் .சாலையை கடந்து புத்தக சோலைக்குள் நுழைந்த எனக்கு ஒரு இனிப்பான செய்தி காத்திருக்கிறது என்று அஜயன் சொன்னார். காந்தத்தின் பின் செல்லும் உலோகமாய் பின் சென்றேன். ஒரு அரங்கத்தினுள் அழைத்து சென்று ஒரு பொக்கிச பெட்டி ஒன்றை காண்பித்தார். அதை மிக கவனத்தோடு கையில் எடுக்கவேண்டும் என்ற ஆணையை எனது மூளை எனக்கு கட்டளை இட்டது. அந்த அளவிற்கு அதன் தோற்றம் இருந்தது. ஒரு பால் பருவ மழலையை கையில் வாங்கும் தாயைப்போல் நான் அந்த நூலை எந்திக்கொண்டேன். தமிழ் இலக்கிய வரலாறு குறித்தும் தமிழ் அறிஞர்கள் குறித்தும் எண்ணற்ற நூல்கள் வெளிவந்துள்ள நிலையில் இந்த குறிப்பிட்ட நூல் நூற்று இருபத்தைந்து தமிழ் அறிஞர்கள் குறித்த வாழ்க்கை வரலாற்று குறிப்புகளை தாங்கி வெளிவந்துள்ளது. அட்டை தொடங்கி வண்ணம் தொடர அடர்த்தியான நல்ல தரவுகள் வரையில் கணிசமான வியர்வை இந்த நூலுக்காக செலவிடப்பட்டிருப்பது நன்றாக தெரிந்துகொள்ள முடிகிறது.
இந்த நூல் தமிழ் இலக்கிய வரலாற்றில் மாபெரும் மைல்கல்.பல் துறைகளில் முத்திரை பதித்த அஜயன் பலா அவர்களுக்கு இந்த நூல் மிகப்பெரிய அடையாளத்தை உலக அரங்கில் ஏற்படுத்தித்தரும் என்பதில் எள் அளவும் ஐயம் இல்லை.அஜயன் தொடர்ந்து இலக்கிய களத்தில் மட்டும் தீவிரமாய் இயங்குதல் நலம். வாழ்த்துக்கும் வரவேற்புக்கும் உரிய இந்த நூல் குறித்து பார்த்தவன் என்ற முறையில் என் பதிவு இது.வாங்கிப் படிப்பீர்கள் என்ற முறையில் உங்கள் பகிர்வையும் இந்த தமிழ் கூறும் நல்லுலகம் எதிர்ப்பார்க்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக