கிழக்கின் வெளிச்சவருகைக்குப் பிறகும் ஆரவாரங்களும் பரபரப்பும் இல்லாமலும் கருநாகத்தைப்போல பளபளத்து காட்சித்தரும் வளைந்து நெளிந்த கோவையின் சாலைகளை வாகனங்கள்தான் வருடம்தோறும் நிரப்பிச்செல்லும் ,வழக்கத்திற்கு மாறாக இன்று பெருந்திரளான மக்கள் சாரைசாரையாய் ஊர்ந்து நகர்ந்தவண்ணமாகவே இருந்தார்கள்.உள்ளபடியே அவரவர்களுடைய திருவிழாக்களை அவரவர்கள் கொண்டாடுவது வழக்கம்.இந்த திருவிழாவோ அனைவருக்குமான ஒருவிழாவாக இருந்ததுதான் தமிழுக்கு கிடைத்த மிகப்பெரிய பேரு.
லட்சோப லட்ச மக்கள் அலைகடலென திரண்டிருந்த கண்கொள்ளாத காட்சி இனம் மதம் மொழி கடந்து உலகத்தமிழர்களின் ஒருங்கிணைக்கும் தமிழால் நேர்ந்தகு குறித்து அனைவருக்குமே பேருவகை. வ. உ.சி .பூங்காவில் தொடங்கி விமான நிலையம் வரையில் விழாகோலம் பூண்டிருந்த கோவையின் சாலைகள் எங்கும் செம்மொழியின் அடையாளங்கள் பளிச்சென தெரிந்தன.சாலையை ஒட்டி குடியிருக்கிறவர்கள் ஏதோ தங்கள் குடும்பத்தில் விழா நடக்கிறது என்று அடையாளப்படுத்துவதுபோல தங்கள் முற்றங்களில் சாணத்தால் மெழுகி கோலம் இட்டிருந்தனர்.கட்சிக்கொடி, கட்சி பதாகை, கட்சி டிஜிட்டல் பேனர்கள் என்று எதையும் எங்கும் பார்க்கமுடியவில்லை எனபது வெளிப்படையான உண்மை. முழுக்க முழுக்க இந்த விழாவில் தமிழ் மொழி முன்னிலைப் படுத்தப் பட்டிருப்பது குறித்து மக்கள் விருப்பம் தெரிவிக்கிறார்கள். இவ்விழ தங்களை கௌரவித்ததாகவே உணர்கிறார்கள். குற்றம் சாற்றுவதற்கு கூட வாய்ப்பை வழங்காத அளவிற்கு விழா நிகழ்ந்திருப்பது மெய்யாலுமே மகிழ்வையும் பெருமிதத்தையும் எல்லோரிடமும் ஏற்படுத்தி உள்ளது.
தொடக்கவிழா திட்டமிட்டதைப் போல இயல்பாய் நடத்தி முடிக்கப்பட்டிருந்தது. மேடையில் இருப்பவர்கள் உள்ளிட்ட அனைவருமே தாங்கள் அமர்ந்திருப்பது வெறும் இருக்கைகள் என்று உணராமல் சிம்மாசனங்களாகவே எண்ணி கர்வப்பட்டுக்கொண்டார்கள். எளிமையாகவும் இயல்பாகவும் செயல்பட்ட பாதுகாப்பு குழுவினரின் உழைப்பு, மக்களை கனிவான முறையில் நல்வழிப்படுத்தியது. மக்களும் அவர்களுக்கு ஒத்துழைப்பை சிறப்பாக வழங்கி ஊர்கூடி தேர் இழுப்பதற்கு கரம் கொடுத்தார்கள்.
தொடக்கவிழாவைத் தொடர்ந்து அனைவரும் கொடிசியா வளாகம் முழுக்க வளம் வந்த வண்ணமாய் காட்சியளித்தார்கள்.வந்திருந்தோரின் முகத்திலிருந்த உற்சாகம் ,உதட்டிலிருந்த புன்னகை, கரம் குவித்த மரியாதை எல்லாம் இவர்களை சொர்கத்தின் புத்திரர்களாக முன்னிறுத்தியது. ஒவ்வொரு தமிழர்களும் தங்களுக்கே உரிய விருந் தோம்பலோடு அனைவரையும் வரவேற்க தவறியதில்லை.தமிழ் தாயின் ஆசிர்வாதத்தில் ஒருதாய் பிள்ளைகளாக அனைவருமே குழுமி அடர்த்தியான நல அதிர்வை ஏற்படுத்தினார்கள். கடல் கடந்தும் கண்டம் தாண்டியும் வருகை தந்திருக்கும் உலகத்தின் அறிவுஜீவிகளை பெருமிதத்தோடு வரவேற்று உபசரித்தார்கள்.
மொழி ஒவ்வொரு தமிழனையும் கட்டிப்போட்டிருந்ததை என்னால் நன்கு உணரமுடிந்தது. மொழிக்காக நாமும் நமக்கான பங்களிப்பை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கல்லாத பாமரர்கள் மத்தியிலும் இன்று பற்றவைக்கப்பட்டிருக்க வேண்டும்.
கோவை மாநகரில் பிற எல்லையிலிருந்து , குடும்பத்துடன் வேண்டுதலுக்காக பாத யாத்திரையாக நடந்து வருபவர்களைப் போல பல்லாயிரம் பேர் குதூகலம் போங்க வருகைபுரிந்த வண்ணம் இருந்தார்கள். 'தமிழ்' எல்லோரின் மனதிலும் வணக்கத்திற்கு உரியதாக இருப்பதை அப்போதுதான் அறிந்து கொள்ளமுடிந்தது.. சிலர்,இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கரவாகனத்தில் வந்திருந்தனர். தங்கள் வாகனங்களை அச்சமின்றி பல இடங்களிலும் நிறுத்துவதற்கு பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
விழிகளிளுக் செவிகளிலும் விருந்து உண்டவர்களுக்கு சரியாக ஒரு மணி அளவின் சூடாய் சுவையாய் கம கம பொட்டல் உணவுகள் காத்துக் கொண்டிருந்தன. நடந்த களைப்பையும் நின்றிருந்த களைப்பையும் தாண்டி மக்கள் அலங்கார ஊர்திகள் நகர்வலம் வரும் அந்த பொன்மாலை பொழுதுக்காக காத்திருந்தனர். மாலை பொழுதில் சாலையின் இரு புறங்களிலும் இடமாகவும் வளமாகவும் சென்றவர்கள் வென்றவர்கள் வந்தவர்கள் என்று சொல்லும் வண்ணம் மக்கள் வழியத்த் தொடங்கினர்.பெரியவர்கள் பெண்கள் குழந்தைகள் பள்ளி கல்லூரி மாணவர்கள் என்று பலரையும் இந்த கூட்டத்தில் பார்க்க முடிந்தது.
"ஊர்கூடி தேரிழுத்தால் வந்து சேரும் ஒரு மனதை நாம் இருந்தால் துன்பம் தீரும் ".என்ற வரிகளுக்கேற்ப தமிழினம் தன தாய்த்தமிழின் தொன்மைச்சிறப்புகளை கண்டு ரசிப்பதற்காக சாலையின் இரு மருங்கிலும் ஆவலுடன் திரண்டிருந்த நேரத்தில் அலங்கார ஊர்திகள் ஒவ்வொன்றாய் பவனி வந்தன.-வள்ளுவர் கோட்டத்து தேர்- குறிஞ்சி முல்லை மருதம் நெய்தான் பாலை ( ஐவகை நிலங்கள்) -கடையேழு வள்ளல்கள்- குற்றாலக் குறவஞ்சி- போர்க்கை பாண்டியன்- பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழன்- மனுநீதி சோழன்-கூத்தரும் பாணரும்-வேலு நாச்சியார்- கண்ணகி- மணிமேகலை- கட்டபொம்மன்- ஊமைத்துரை- மருது சகோதரர்கள்- மருத நாயகம் - ஆகிய தொன்ம இலக்கியங்களின் பிரதிபலிப்பை அலங்கார ஊர்திகளை மக்கள் கண்கள் குளிர கண்டு ரசித்தனர்.மேலும் பாரதியார்- சாதிகள் அற்ற சமூகம்- வண்ணங்கள் பல எண்ணங்கள் ஒன்று- சங்கே முழங்கு- கலை வளர்ச்சி- பகிர்ந்து உண்- என்று சுமார் பன்னிரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த கலை அலங்கார ஊர்திகள் வந்து அதே தொலைவிற்கு திரும்பின. அந்தனை தொலைவிலும் மக்கள் சங்கிலித் தொடர்போல் நீண்டிருந்தது தமிழினத்தின் பலத்தை அடர்த்தியாய் காட்டியது. நேற்று வெயிலில் ஆதிக்கம் அதிகமாக இருந்ததுகூட மக்களுக்கு தெரியாத அளவிற்கு அவர்களை ஆர்வம் குடைபிடிக்கவே செய்திருந்தது.
நாளை.....???
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக