திங்கள், 28 ஜூன், 2010

உலகத் தமிழர்களின் உன்னத திருவிழா -ஜூன் 26

உலகெங்கிலும் சிதறிக்கிடந்த தமிழ் தோழர்களை மொழியால் இணைத்து இனிக்கச்செய்த இந்த செம்மொழி திருவிழா அனைத்து தரப்பினரின் வரவேற்பை பெற்றுள்ளது.வாகனங்களில் வண்டி வண்டியாய் மக்களை விலைபேசி அழைத்து வந்து கூட்டம் நிரப்புதல், கட்சியின் அடையாளத்தை பறைசாற்றும் வகையில் குறித்த வண்ணங்களில் ஆடையணிந்து வருதல், 'தலைவர் வாழ்க' ..முதலான வாசகங்களை உரக்கச்சொல்லி கோஷமிடுதல் , கழகத்தின் கொடிகளை வானுயர பறக்கவிடுதல், வேற்று கிரகத்தை உரசும் வகையில் ஓங்கி உயர்ந்த கட் அவுட்களை நிறுவுதல் போன்ற எதுவுமே இல்லாமல் இருப்பது அதிசயம் ஆச்சர்யம்.


கனிவாக பேசும் காவல் நண்பர்கள், கைகள் நீட்டி வழிகாட்டும் போக்குவரத்து காவலர்கள்.புன்னகையோடு பதில் பகரும் அரசு அதிகாரிகள், ஓடியோடி பணியாற்றும் அரங்க பொறுப்பாளர்கள், இயல்பாகவே மக்களோடு மக்களாய் காட்சிதரும் அரசியல் தோழர்கள் என்று எல்ல அதிசயங்களையும் இந்த மாநாட்டில் கண் குளிர காணமுடிகிறது.இவர்கள் எல்லோரையும் மிஞ்சும் வகையில் பொது மக்கள் மிகப்பெரிய ஆதரவை தெரிவித்தது இந்த செம்மொழி மாநாட்டிற்கு மிகப் பெரிய வெற்றியை பெற்றுத் தந்துள்ளது.

மாநாட்டின் இதயப்பகுதியாய் மட்டுமல்லாமல் மூளையாகவும் இருப்பவை ஆய்வரங்கங்கள். இந்த மாநாட்டின் முக்கிய நோக்கத்தை இலக்காகக் கொண்டு அதனை வெளிக்கொண்டுவரும் முதன்மைப் பொறுப்பை தாங்கிக்கொண்டு செயல்பட்டுகொண்டிருக்கின்றன.பலப்பல தலைப்புகளில் புதுப்புது கோணங்களில் விவாதங்கள் சூடு பறக்க புதிய சிந்தனைகளுக்கு வழிபிறக்க விடைகள் விளைந்தன முடிவுகள் முடிவாயின.

இனி இந்த உலகத்தில் ஒற்றைத் தமிழனுக்கு சின்ன கீறல் விழுந்தால் மொத்த தமிழர்களும் களத்தில் நிற்பார்கள் என்கிற அளவில் தமிழர்களிடையே நல்ல அன்பையும் நல்லுறவையும் அடர்த்தியான புரிதலையும் இந்த மாநாடு ஏற்படுத்தி இருக்கிறது.உதைபடுகிற வதைபடுகிற தமிழர்களுக்காகவும் புறந்தள்ளப்படுகிற , தமிழுக்காகவும் தமிழர்கள் இனி போர்க்களம் புகும் அளவிற்கு உணர்வெழுச்சியை இந்த மாநாடு ஏற்படுத்த தவறவில்லை.


'இருப்பாய் தமிழா நெருப்பாய் நீ இருந்தது போதும் செருப்பாய்'என்னும் வரிகள் தரும் ஞானத்தை தெளிவை இந்த நிகழ்வும் தந்திருக்கிறது. இந்த ஒன்று பாடல் உலக அரங்கில் தமிழர்களின் பலத்தை உலக நாடுகளுக்கு மறைமுகமாக பறைசாற்றவே செய்கின்றன .அரக்க நாடுகள் இனி தமிழர்களுக்கு எதிராகவும் தமிழுக்கு எதிராகவும் வால் ஆட்டுவதற்கு யோசிக்கும் அளவிற்கு இந்த மாநாடு மிகப் பெரிய பாதிப்பை எற்படுத்தவே செய்திருக்கிறது.

ஆய்வரங்கம் முடிந்த பிறகு மாலை பொழுதில் 'பாஞ்சாலி சபதம்' நாடகத்திற்காக தொல்காப்பியர் அரங்கம் நோக்கி இருக்கையில் இடம் பிடிக்க வேக வேகமாக விரைந்தேன்.நாடகத்திற்கான ஏற்பாடுகள் முடிந்திருந்த நிலையில் விழா விருந்தினர்கள் வரும் வரையில் மண்ணிசையாக இப்பொழுது நாட்டுப்புற பாடல்கள் பாடும் என்ற அறிவிப்பை ஒலிபெருக்கி அறிவித்ததும் மேடையில் மூன்று மாணவர்கள் காட்சிப்பட்டார்கள். கிராமத்து சங்கதிகளோடு தமிழ் சங்கீதம் இசைக்கத் தொடங்கினார்கள் .அவர்களின் தெளிவான உச்சரிப்பு வெடித்த குரல் உணர்வோடு கலந்து மலரும் வரிகள் என்று எல்லாவற்றையும் உள்வாங்கிக்கொள்ளமுடிந்தது.அவர்கள் இசைக்கல்லூரி மானவர்களாகத்தான் இருக்கக்கூடும் என்று முடிவுக்கு வரும்போது இவர்கள் சென்னை சங்கமம் அமைப்பை சார்ந்த கலைஞர்கள் என்ற அறிவிப்பு என்னுள் பொங்கும் மகிழ்வை ஏற்படுத்தவே செய்தது.


விருந்தினர் வருகை தர , கிராமத்து மண்ணிசையும் உள்ளுணர்வை தூண்ட முடிந்து அவை நிசப்தத்தில் நிறைந்தது. விளக்குகள் தங்களின் விழிகளை சுருக்கிக் கொள்ள மேடையில் ரோகினி காட்சிப்பட்டார். சிறந்த குணசித்திர கலைஞராக திரைக்களத்தில் அடையாளப்பட்ட அவர்களே பாஞ்சாலியாக தோன்றி சுமார் முப்பது நிமிடங்களுக்கும் மேலாக உடல் மொழி ,கவிமொழி, விழிமொழி, மௌன மொழி, என்று எல்லா மொழிகளையும் பயன்படுத்தி நாடகத்தில் ஒற்றை கதாபாத்திரமாக நிறைந்திருந்து நிறைவான பங்களிப்பை தந்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார்.நீண்ட வசனங்கள், வகை வகையாய் கவிதைகள் என்று தங்கு தடை இல்லாமல் மனனமாய் கொட்டித் தீர்த்தார்.

இப்படியாக பல பல சுவையான தரமான அர்த்தமுள்ள நிகைவுகள் வளாகத்தின் அனைத்து அரங்கங்களிலும் நடை பெற்றுக்கொண்டே இருக்கத்தான் செய்கின்றன.அலுவல் காரணமாக எனது அரங்கத்திலிருந்து வெளியேற. முடியாமல் போனதால் அந்த அறிய வாய்ப்புக்களை இழந்தேன். நீங்கள் இத்தகைய வாய்ப்பை இழந்துவிடக்கூடாது என்பதற்க்காகத்தான் இந்த பதிவை அவசர அவசரமாக pathikiren .வாசியுங்கள் நண்பர்களுடன் பகிருங்கள். நன்றி வணக்கம்.

வெல்க தமிழ் வெல்க தமிழ் வெல்க தமிழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக