ஒரு விளக்கின் ஒளி மற்றொரு விளக்கை ஒளி ஏற்றுவதைப்போல சேரனின் புன்னகை என்னிடமும் மகிழ்ச்சியை மலர்த்தியத்தை என்னால் நன்கு உணரமுடிந்தது. சற்று சதை வற்றி இளைத்ததுபோல இருந்த சேரனைப் பார்த்து நேரில் வித்தியாசமாக காட்சி தருகிறீர்கள் என்று கேட்டதற்கு ,எட்டு கிலோ எடை குறைத்திருக்கிறேன் என்று சிரித்தபடியே சொல்லிஎன்னை உள்ளே அழைத்து சென்றவராய் தான் அமர்வதற்கு முன் என்னை அமரச்செய்தார்.அவரின் ஒவ்வொரு அசைவையும் கூர்ந்து கவனித்த அந்த நொடிகளில் விறைப்பும் கம்பீரமும் கலந்த புலனாய்வுத் துறையிடம் இருக்கவேண்டிய உடல்மொழியை அவருக்குத் தெரியாமல் நான் விழிகளால் வாசித்தேன். 'யுத்தம் செய்' திரைப்படத்திற்காக கனகச்சிதமான கதாபாத்திரமாக தன்னை உருமாற்றியிருந்த சேரனையும் மீறி அவருக்கே உரித்தான இயல்பான அன்பின் அடையாளங்களும் போலித்தனமற்ற உண்மையின் வெளிப்பாடுகள் பளிச்சிடவே செய்தன.பாண்டியநாட்டில் பிறந்திருந்த போதிலும் தன பெயரை சேரன் என்று வைத்துக்கொண்ட திரைராசன் சிம்மாசனத்தில் என்னெதிரே அமர்ந்துகொண்டார்.அவரது வரவேற்பிலும் விருந்தோம்பலிலும் லயித்து போன நான் சிலவினாடிகள் வாத்தைகள் தொலைத்து மெளனத்தில் சஞ்சாரித்தேன்.மொழி,
கலை,ஊடகம் சார்ந்த தோழர்களை இணைக்கும் முகநூலின் பங்களிப்பை குறிப்பிட்டபடி எங்களின் உரையாடல் வெதுவெதுப்பானது.வெகுநாள் நட்புக் கொண்டாடிய நண்பனுடன் பேசுவது போலவும் ; பாசத்தைப் பொழியும் சகோதரனுடன் சிலாகித்தது போலவுமான உணர்வை அவரது நடத்தை உருவாக்கியது. அணுக, பேச இத்தனை எளிதான மனிதரா என்ற ஆச்சர்யத்தை ஒவ்வொரு கணமும் ஏற்படுத்திக்கொண்டே இருந்தது.. பரிமாறலில் இடையிடையே அறைமுழுவதையும் அழகால் என் விழிகள் அளவெடுத்துக்கொண்டு இருந்தன.மேசைக்கு நேர் மேல்புறத்தில் தொங்கும் நிலையில் வாசிப்புக்காக வைக்கப்பட்டிருக்கும் அழகான மின்விளக்கு. இடது புறத்தில் உள்ள குட்டி மேசையில் நிரம்பி வழியும் வெற்றிப்பதக்கங்களும் வியர்வையின் விளைச்சலாய் கேடையங்களும். தன் நல்ல திரைப்படத்தின் மூலம் தேசிய விருதுகளை நெஞ்சின் பதியன் போட்டிருப்பதைப் போலவே சுவர்களும் அதன் விருதுகளை சுமந்தபடி கம்பீரமாய் காட்சியளித்தன.மேசையிலிருந்த பொத்தானை அழுத்தியது வழக்கமான இரைச்சலுக்கு பதிலாக இசையை ஒலித்தது.அரை லிட்டர் பிடிக்கும் சில்வர் டம்ளரில் குடிநீர் கிடைத்தது. மினரல் நீரின் ஆதிக்கத்தையும் ,பிளாஸ்டிக் அரக்கனையும் அங்கு பார்க்கமுடியாமல் போனதற்காய் அக்கணமே மகிழ்ந்தேன். சுமார் ஒருமணியளவில் தொடங்கிய அர்த்தமுள்ள உரையாடல் இரண்டை மணி வரையில் தொடர்ந்தது.ஒளிவு மறைவுகள் இன்றி இருவரின் இதயங்களும் திறந்த புத்தகமாய் மலர்ந்திருந்தன .இதற்கிடையில் நான் கொண்டு சென்ற 'புதிய ழ' கவிதை இதழை கையொப்பமிட்டு அன்பாய் அளித்தேன்.என் ஆர்வத்தை அறிந்தவராய் நூலுக்குள் உடனே பயணிக்கத் தொடங்கிவிட்டார்.இந்த நூலில் தயாரிப்பு குறித்தும் ,இந்த நூலுக்காக கவிஞர்களை ஒருங்கிணைக்கும் முறை குறித்தும் ஒவ்வொன்றாய் கேட்டு தெரிந்துகொண்டார்.இதற்கிடையில் அவரது அலைபேசியை ஒலிக்க செய்த அழைப்பை ஏற்றுக்கொள்ளாமல் அணைத்து வைத்துக்கொண்டது அவரின் நாகரீகத்தை எனக்கு கற்பிக்க வைத்தது. பூமியானது மழையின் முத்தங்களுக்காக காத்துக்கொண்டிருந்த அந்த ஈர நொடிகள் என்னுள் வெப்பத்தை பற்றவைத்தது. குளிரூட்டப்பட்ட அறை என்று யூகித்திருந்த நான் 'மின்வெட்டா' என்று வினவியதும் ,மின்விளக்கை எரியவிட்டு உறுதிப்படுத்திக்கொண்ட சேரன் மின்சாரன் இருக்கிறது .முடிந்தவரை மரங்களில் சுவாசங்களையே உள்வாங்கிக்கொள்கிறேன்,
மின்விசிறிகளுக்கு நான் என்றுமே அடிமையாய் இருந்ததில்லை என்று விளக்கினார் . அவரது வலதுபுறத்து சாளரம் பெரிதாய் அகலமாய் திறந்திருந்ததை அப்போதுதான் நான் கவனிக்க தொடங்கினேன்.அபிபுல்லா சாலையின் சிவசைலம் கண்ணில் காட்சிதந்தது.நான் பெரும்பாலும் மின்விசிறி உபயோகிப்பதில்லை என்று தொடங்கி,இயற்கையின் வெப்பநிலைக்கு ஏற்றவாறு நாம் நம் உடலை பழக்கப்படுத்திக்கொள்வது நல்லது என்று தன் அனுபவத்தை கலந்துகொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக