சனி, 12 ஜூன், 2010

இயக்குனர் சேரனுடன் ஒருநாள் -(பாகம் -3)

உங்கள் முகத்தில் முத்துமுத்தாய் வேர்த்திருக்கிறதே என்று மின்விசிறியை சுழல வைத்தார் எனக்காக.கைக்குட்டையை எடுத்து துடைத்துக்கொண்டே நான் குளிர்பிரதேசத்தில் பிறந்தவன்,மலைமாவட்டமான உதகை தான் என் பூர்வீகம் என்று சொல்லி தொடங்கினேன்.மதுரை மாவட்டம் மேலூரில் ஜனனமானேன் என்று தன் வேர்களைக் குறிப்பிட்டார் சேரன்.ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் பெற்றோர்கள்.,ஒரு குழந்தையின் இரண்டாவது பெற்றோர் ஆசிரியையர்கள் என்ற வாசகத்திற்கும் இவருக்கும் பொருத்தம் உள்ளது. காரணம் இவரது அன்னை ஒரு பள்ளி ஆசிரியை. இவர் சொந்த ஊரில் எந்த பள்ளியில் பணி அமர்த்தப்பட்டாரோ அதே பள்ளியிலிருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். கால் நூற்றாண்டைக் கடந்து சுமார் முப்பது ஆண்டுகள் கல்விக்காக தன்னை அர்பணித்திருப்பதை பெருமிதம் பொங்க சொன்னபோது நானும் பெருமிதப்பட்டுக் கொண்டேன். எனது அன்னையும் பள்ளி ஆசிரியைதான் என்று அவரின் பதிலுக்கு இடையே பொருத்தமாய் குறுக்கிட்டு நாம் இருவரும் ஆசிரியர் குடும்பத்தில் வந்தவர்கள் என்று சொன்னதும் அவரின் முகம் இன்னும் மலரத்தொடங்கியது.திரை மற்றும் திரையிடல் சார்ந்த பணியில் தனது தந்தை அனுபவம் பெற்றவர் என்று தந்தையை அறிமுகம் செய்து வைத்தபோது, தந்தையின் கலையுணர்வும் தாயின் கல்விஞானமும் சேர்ந்த சரிவிகித கலவையாக நீங்கள் இருக்கிறீர்கள் என்று நானும் சொல்லி மகிழ்ந்தேன்.உங்கள் திரைப்பயணம் எப்படி நேர்ந்தது என்று இயல்பாய் கேட்டு வைத்தேன்.திரை உலகில் கால் நூற்றாண்டை நோக்கி நெருங்கிக்கொண்டிருக்கிற கனத்த படைப்பாளி என்பதை அவரின் பதில் உறுதிப்படுத்தியது. யாருக்காகவும் எதற்காகவும் எந்த சூழ்நிலையிலும் நான் என் படைப்போடு சமரசம் செய்துகொள்ளமாட்டேன் என்று உறுதியோடு இருக்கிற சேரனின் பேச்சில் சமூக அக்கறையும் படைப்பு தர்மமும் பளிச்சிட்டது. சினிமா சார்ந்து உரையாடியவற்றில் ,சேரன் தன் வெற்றிபெற்ற படங்களைப்பற்றி சிலாகித்துக்கொண்டதே இல்லை.மாறாக தோல்வியைத் தழுவிய படங்கள் என்று சொல்லப்படுகிற குறைந்த நாட்கள் ஓடிய படங்கள் குறித்து வினாக்களை முன்வைத்தார். அதில் அவரது தன்னடக்கத்தையும் படைப்பை செழுமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற ஆவலையும் பார்க்கமுடிந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக