திங்கள், 28 ஜூன், 2010

ராவணன்-ஒரு கண்ணோட்டம்

'மனிதன் எல்லா அவலங்களோடும் அழகாகவே இருக்கிறான்' என்ற வாசங்கள் நினைவூட்டுகிற கதாபாத்திரம் தான் பிருத்துவி. 'நானோ புறத்தே குப்பைகளை சுமக்கிறேன் நீயோ அகத்தே சுமக்கிறாய்' என்ற கூற்றை மேனா மினுக்கி சமூகத்தை பார்த்து கேட்கும் கதாபாத்திரம் தான் ராவணன.

தாய் நாட்டில் பிறந்து இயற்கையோடு இரண்டறக் கலந்து வாழும் பூர்வக்குடி மனிதன் தான் ராவணன்.தமிழகத்தின் காட்டுப்பகுதியிலும் ,தமிழகத்தின் மலைப்பகுதிகளிலும் வாழும் ஆதிசமூகத்தாரையும், ஈழத்தில் பூர்வகுடிகளாக வேர்களை பதித்து விழுதினை இறக்கிய தமிழ் சமூகத்தையும், வட இந்தியாவின் பல மாநிலங்களில் தொல்குடிகளாக விளங்குபவர்களில் நிகழ்வு வலிகளை வெளிப்படுத்த ராவணன் கதாபாத்திரத்தினை மணிரத்னம் கருவியாக பயன்படுத்தி இருக்கிறார்.

மண்ணையும் மக்களையும் மெய்யாலுமே நேசிக்கிற அப்பாவி மனிதர்களை இந்த தேசம் அதிகாரத்தால் ஆயுதங்களால் சாதியத்தால் மத அடையாளங்களால் இன்னும் பலவற்றால் எப்படியெல்லாம் வேட்டையாடுகிறது என்பதையும்,அவர்களது வாழ்வாதார சிக்கல்களை இன்னும் மிகுவித்து அவர்களை விளிம்புநிலை மனிதர்களாக மாற்றிவிடுகிற அவலத்தை இந்த படம் அறிவிஜீவித் தனமாக சித்தரிக்க தவறவில்லை.


இந்த படம் நிகழ்காலத்தின் ஒட்டுமொத்த அவலங்களை குறியீடாக பேசும் அற்புத சித்திரம். ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரங்களை குறிவைத்து தங்கள் அதிகாரங்களால் மனித உரிமை மீறலை நாளும் மேற்கொண்டு போர்நியதிகளை கொன்று குவிக்கும் சிங்களர்களின் வன்மங்களுக்கு கிடைத்த சாட்டை அடி . சட்டீஸ்கரில் பூர்வகுடிகளை விரட்டி அந்த பசுமையும் கனிமங்களும் நிறைந்த அந்த பிரதேசங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் மத்திய அரசுக்கு எச்சரிக்கை .

ஆதிக்க சமூகத்தின் தவறான அதிகார பயன்பாட்டையும், ராட்சச ஆயுதங்களைக் கொண்டு சொந்த நாட்டு குடிகளை ஒடுக்கும் போக்கினையும் இந்த திரைப்படம் குத்திக்கிழிக்கிறது. குறிப்பாக இந்திய வனங்களும் இந்திய வளங்களும் மறைமுகமாக கொல்லைபோய்க் கொண்டிருக்கும் நடப்பு வலிகளை அழகியலை பதிவு செய்துள்ளது.


தீய அதிகார வர்க்கத்திடமிருந்து மண்ணையும் மக்களையும் காப்பாற்ற போராடுகிற போராளிகள் தங்கள் ஆயுதங்களை எந்த சூழ்நிலையிலும் கீழே போடக்கூடாது என்ற நவயுக போராட்ட சித்தாந்தம் புதிது.எந்த சமூகத்தில் பூர்வ குடிமக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுகிறதோ அந்த சமூகங்களில் புரட்சி வெடிக்கும்.இடைவிடாத போராட்டங்களே வெற்றிக்கு வித்தாகும் என்றும் ஒரு குறிப்பை விட்டு செல்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக