செவ்வாய், 4 ஜனவரி, 2011

பனி

அதிகாலையில்

வானமகள் பூசும்

பெளடரின் சேதாரமா?



இரவுக்காதலன்

மண்ணின்

சிவந்த உதடுகளுக்கு

வைக்கும்

வெள்ளைமுத்தமா?



சொர்கத்தின்

பருத்திக்காட்டிலிருந்து

பறந்துவந்த குளிர்பஞ்சா ?



பசுமைக் கணவன்

பரிதாப சாவினால்

பூமிப்பெண் கட்டிய

வெள்ளை சேலையா?



நிலாமகள்

குளித்ததில் தெறித்த

சோப்பு நுரைகளா?



வெள்ளைச் சிந்தனையோடு

தரை இறங்கிய

வேற்றுகிரகத்தின்

சமாதான தூதுவர்களா?



நிலவில் இருக்கும்பாட்டி

வெற்றிலை இடிக்கும்போது

சிதறிய

வெள்ளை சுண்ணாம்பா?



கொள்ளைக்கவிதைகளை எழுத

பிரமன் அனுப்பிய

வெள்ளை காகிதங்களா?


ஆகாயத்தின்

ஆயுதபூஜை கொண்டாட்டத்தில்

சிதறி விழுந்த

பொறிகளா?




வானக் கரும்பலகையில்

இறைவன் எழுதியபோது

உதிர்ந்த

சாக்பீஸ் சாம்பல்களா?




வானத்தில் யாரோ

வெள்ளை அவல்களை

தூற்றுகிறார்களா?


வானக் கூரைக்கு

பட்டிபோட்டு

தேய்க்கிறார்கள் போலும்.?


நட்சத்திர மழலைகளுக்கு

வானத்தாய் ஊட்டும்

பால் சிந்துகிறதோ ?

1 கருத்து: